
“சோறு போதும்மா. நான் இன்னைக்கு நிறைய சாப்பிட்டிருக்கேன். ஒரு படி அரிசி சாப்பிட்டிருப்பேன். அப்படித்தானேம்மா?”
“பேச்சைப் பாரு! நான் உனக்கு வச்சதே கொஞ்சம்தானே?”
மீண்டும் கிழவி தன் பேச்சைத் தொடர்ந்தாள்.
ராமன் நாயர் கேட்டான்: “அம்மா, அப்போ உங்களுக்குக் குழந்தை இல்லியா?”
ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு கிழவி சொன்னாள்: “ஒரு ஆண் குழந்தையை தெய்வம் தந்துச்சு. பிறகு அதை அதுவே கொண்டு போயிடுச்சு. இப்போ அவன் உயிரோட இருந்திருந்தா, அவனுக்கு இருபத்து மூணு வயசு நடக்கும். என் நாணிக்கு இளையவன். அவன் அவனைவிட அவளுக்கு ரெண்டு வயசு அதிகம்.”
கிழவி மேலும் கொஞ்சம் சாதத்தை பரிமாறினாள். வேண்டாம் என்று அவன் சொன்னதை அவள் பொருட்படுத்தவேயில்லை.
“நீ என் கையை விடு மகனே.”
“போதும்மா... எனக்கு மூச்சுவிட முடியல...”
வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு சுவையான உணவை அவன் சாப்பிட்டதேயில்லை. அவன் சரியாகச் சாப்பிடவில்லை என்று யாரும் இதுவரை சொன்னதில்லை.
அந்த இரவு அந்த சிறு வீட்டின் முற்றத்தில் எந்தவித கவலையுமில்லாமல் அவன் நடந்து கொண்டிருந்தான். எங்கோ ஒரு மூலையிலிருக்கும் அந்த வீட்டோடு அவனுக்கு வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு உறவு இப்படித்தான் உண்டானது. இப்போது மகிழ்ச்சியுடன் தன்னுடைய இதயம் துடித்துக் கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். மனதில் உண்டாகும் சிந்தனைகள் தெளிவாக இருக்கின்றன. அவனுக்கு ஒரு தாய் கிடைத்து விட்டாள்.
‘அம்மா! அம்மா! ஒரு கவளம் சோறு போடுங்க அம்மா. குழம்பை ஊற்றுங்க’- அவன் இப்படிச் சொல்லும்போது அந்த வயதான கிழவியின் உதட்டில் தெரியும் புன்னகையை அவனால் எப்போதும் மறக்க முடியாது. தான் நன்கு சாப்பிட வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். அவள் ஆசைப்படுவது மாதிரி அவன் உண்ணவில்லையென்றால்...? இரவில் தூக்கம் வராத அளவிற்கு அவளை அது நிம்மதியில்லாமல் ஆக்கிவிடும். சோற்றை ஆக்கி வைத்துக்கொண்டு விளக்கை அணைக்காமல் தனக்காக அந்த வயதான கிழவி காத்திருக்க வேண்டிய அவசியமென்ன? பிரசவ வலியை அனுபவித்து அவனைப் பெற்ற தாயா என்ன அவள்?
இல்லை... யாரும் யாருக்காகவும் காத்திருக்கக் கூடாது. கடல்களைத் தாண்டி போர்க்களத்தில் இந்த உடல் துண்டு துண்டாகச் சிதறிப் போனால், அதனால் யாருக்கும் எந்தவித இழப்பும் இருக்கப் போவதில்லை. அப்படி ஒரு சூழ்நிலை வராமல் இருக்க வேண்டும் என்று யாரும் அவனுக்காகக் கடவுளிடம் வேண்டப்போவதும் இல்லை.
மறுநாள் காலையில் அந்தக் கிழவியிடம் அவன் சொன்னான்: அம்மா, நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா?
“சொல்லு மகனே.”
“நான்... நான் ஒரு நாயர்ம்மா...”
“அதை நேற்றே நீ சொன்னியே மகனே!”
“எனக்குன்னு ஊரு... வீடு எதுவும் இல்ல. எனக்குன்னு சொந்தம்னு சொல்ல யாருமே இல்ல.”
“சாப்பிட்டுக்கிட்டு இருக்கறப்போ அதையும் நீ சொல்லிட்டியே!”
“எனக்குன்னு யாருமே இல்ல...” - அவன் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.
அந்தக் கிழவி திகைப்படைந்து நின்றுவிட்டாள்.
அன்று மதியம் ஒரு எளிமையான திருமணம் அந்த வீட்டில் நடந்தது. இப்படித்தான் தன்னுடைய இருபத்தைந்தாவது வயதில் நாணிக்கு ஒரு கணவன் கிடைத்தான்.
அழகான ஒரு மாலை நேரமாக இருந்தது அது. அறுவடை முடிந்த அந்த வயல் மாலை நேர வெயில்பட்டு பொன்னென ஜொலித்துக் கொண்டிருந்தது. காற்று சுகமாக வீசிக் கொண்டிருந்தது. காளைகளை அடித்து விரட்டியவாறு ஏரைத் தோளில் வைத்துக் கொண்டு நன்கு பழக்கமான ஒரு விவசாயி நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் அந்த மனிதனைப் பார்த்துக் கேட்டான்: “என்ன இங்கே நிக்கிற?”
“சும்மாதான்...”- ராமன் நாயர் பதில் சொன்னான். அவனுக்கு உறவுகள் உண்டாயின!
“இன்னைக்கு ஏன் போகணும்?” - என்றொரு கேள்வியைக் கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். அவள் அவனுக்குப் பின்னால் நின்றிருந்தாள். அவளை அவன் உற்று பார்த்தான். அவள் ஒரு மாதிரி ஆகிவிட்டாள்.
“நான் உடனடியா போகணும். நான்... நான்... விதின்னு ஒண்ணு இருந்தா நாம மறுபடியும் பார்ப்போம். நீ கன்னியாவே இரு...”
அவளுக்குத் தொண்டை அடைப்பதைப்போல் இருந்தது.
“நான் இருப்பேன். இருந்தாலும் நாளைக்கு...”
அவன் ‘முடியாது’ என்பது மாதிரி இப்படியும் அப்படியுமாகத் தலையை ஆட்டினாள்.
இரவு வந்தது. முழு நிலவு உதித்து மேல்நோக்கி நகர்ந்தது. அந்த வயல் வழியாகப் பெட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நடந்து போகும் உருவத்தைப் பார்த்தவாறு அவள் நின்றிருந்தாள். அருவி தன்னுடைய வாழ்க்கைப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தது.
அங்கு ஒரு பட்டாளக்காரனின் குடும்பத்திற்காக வீடு கொடுக்கப்பட்டிருக்கிறது. மாதம் நாற்பது ரூபாய் மணியார்டர் வரும். ஒரு அண்டா, இரண்டு செப்புக் குடங்கள், மூன்று பாத்திரங்கள் ஆகியவற்றை அவள் வாங்கினாள். அவற்றில் அவள் தன்னுடைய பெயரைப் பொறித்தாள். அந்த வீட்டை மேலும் அவள் புதுப்பித்தாள். நிலத்தைச் சுற்றி வேலி போட்டாள். நிலம் முழுக்க நேந்திர வாழைதான். இப்போது அவள் அந்த ஊரில் மிகவும் முக்கியமானவள். தாய் கூட அவள் கூறுவதைத்தான் கேட்பாள்.
தினமும் கோவிலுக்குச் சென்று அவள் என்னென்னவோ சொல்லி பிரார்த்திப்பாள். அங்கு எப்போதும் ஒரு ஆள் உண்ணக்கூடிய சாதம் இருந்து கொண்டேயிருக்கும். இரவில் ஏதாவது சத்தம் கேட்டால் தாய் ‘யார் அது?’ என்று கேட்பாள். அதைக் கேட்டு அவள் அடித்து பிடித்துக்கொண்டு எழுந்திருப்பாள். ‘உன் நாயர் எப்போ வருவாரு?” என்று சினேகிதிகள் கேட்கும் பொழுது மட்டும் அவள் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் நின்றிருப்பாள்.
ஒருநாள் தபால்காரன் ஒரு பெரிய கவரைக் கொண்டு வந்து கொடுத்தான். அதற்கு அந்தப் பட்டாளக்காரனின் புகைப்படம் இருந்தது. அன்று முதல் அந்த வீட்டின் மண் சுவரை ஒரு படம் அலங்கரித்துக் கொண்டிருந்தது.
மூன்று மாதங்கள் கடந்த பிறகு ஒவ்வொரு மாதமும் நூறு ரூபாய் அவளுடைய முகவரிக்கு வந்து கொண்டிருந்தது. ஆறு மாதங்கள் ஆனவுடன், அது மேலும் கூடியது.
ஒருநாள், அந்த ஊரின் காவல் நிலையத்திலிருந்து மூன்று பெரிய இரும்புபு பெட்டிகளை வந்து வாங்கிக் கொள்ளும்படி தகவல் அனுப்பினார்கள். அந்தப் பெட்டிகள் நிறைய உயர்ந்த தரத்திலுள்ள பட்டாளக்காரனின் ஆடைகள் இருந்தன. ஒரு பெட்டியில் அவள் அவனுடைய கழுத்தில் அணிவித்த திருமண மாலை இருந்தது. அது கருகிப் போயிருந்தது.
நாணி காரணம் தெரியாமல் அழுதாள்.
ஒரு வாரத்திற்குப் பிறகு பத்தாயிரம் ரூபாய்க்கான ஒரு காசோலை அவளுக்குக் கிடைத்தது. பிறகு ஒவ்வொரு மாதமும் வந்து கொண்டிருந்த மணியார்டர்களும் வராமற் போயின.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook