குட்டிச்சாத்தானும் ரொட்டியும்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6639
ஒரு ஏழை விவசாயி ஒரு அதிகாலை நேரத்தில் உழுவதற்காக கிளம்பினான். போகும்போதே தன்னுடன் சாப்பிடுவதற்காக ஒரு ரொட்டியையும் எடுத்துச் சென்றான். உழுவதற்கான ஆயத்தங்களை அவன் செய்தான். ரொட்டியைத் தன் கோட்டிற்குள் சுருட்டி அதை ஒரு புதருக்குள் வைத்துவிட்டு, வேலை செய்ய ஆரம்பித்தான்.
சில மணி நேரம் கழித்து, உழுதுகொண்டிருந்த குதிரை மிகவும் களைப்படைந்து விட்டது. அவனுக்கும் பசி எடுக்கத் தொடங்கியது. கலப்பையை ஒரு இடத்தில் நிறுத்திய விவசாயி குதிரையை அவிழ்ந்து புல் மேயவிட்டான். தன் கோட்டை மறைத்து வைத்திருந்த இடத்தை நோக்கி அவன் சென்றான்.
அவன் கோட்டை எடுத்தான். ஆனால், அதற்குள் இருந்த ரொட்டியைக் காணவில்லை. அவன் கோட்டுக்குள் எல்லா இடங்களிலும் தேடினான். அதை நன்கு உதறினான். அப்போது கூட ரொட்டி அங்கு இல்லை. விவசாயியால் அதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
"என்னடா வியப்பா இருக்கு!"- அவன் தனக்குள் சொல்லிக் கொண்டார். "நான் யாரையும் பார்க்கல. ஆனா, யாரோ இங்கேயிருந்து நான் வச்சிருந்த ரொட்டியை எடுத்துட்டுப் போயிருக்காங்க."
விவசாயி நிலத்தில் உழுதுகொண்டிருந்த பொழுது, அந்த ரொட்டியை எடுத்துக்கொண்டு போனது ஒரு குட்டிச்சாத்தான். இப்போது அது புதருக்குப் பின்னால்தான் ஒளிந்து கொண்டிருந்தது. விவசாயி ரொட்டி காணாமல் போனதற்காக புலம்பப் போவதையும், சாத்தானை அழைக்கப் போவதையும் கேட்கும் ஆவலுடன் அங்கு அது உட்கார்ந்திருந்தது.
தன் உணவு காணாமல் போனதற்காக விவசாயி மிகவும் கவலைப்பட்டான். அதே நேரத்தில் "அதை ஒண்ணும் செய்ய முடியாது”- என்று அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். அவன் மேலும் சொன்னான்: "நான் சாப்பிடாம போனா, செத்தா போயிடப் போறேன்? யார் ரொட்டி வேணும்னு எடுத்தாங்களோ, அவங்களுக்கு அது தேவைப்பட்டிருக்கு. அந்த அளவுல ரொட்டி அவங்களுக்காவது பிரயோஜனமா இருக்கட்டும்!"
பிறகு அவன் கிணற்றை நோக்கிச் சென்றான். அங்கு கொஞ்சம் நீரைக் கையால் அள்ளிப் பருகிவிட்டு, சிறிது நேரம் ஒரு இடத்தில் உட்கார்ந்து ஓய்வு எடுத்தான். பின்னர் குதிரையை அழைத்துக் கொண்டு ஏரில் பூட்டி மீண்டும் அவன் உழ ஆரம்பித்தான்.
விவசாயியைப் பாவம் செய்யவைக்கலாம் என்று திட்டமிட்டிருந்த குட்டிச்சாத்தான் உண்மையிலேயே ஏமாற்றமடைந்துதான் விட்டது. அது நடந்த விஷயத்தை தன்னுடைய எஜமான் சாத்தானிடம் விவரிப்பதற்காகச் சென்றது.
அது சாத்தானிடம் சென்று தான் விவசாயியின் ரொட்டியைத் திருடியதையும், ரொட்டி காணாமல் போனதற்காக திட்டுவதற்குப் பிதலாக அந்த விவசாயி 'ரொட்டி அதை எடுத்தவங்களுக்குப் பிரயோஜனமா இருக்கட்டும்' என்று சொன்னதையும் சொன்னது.
அதைக் கேட்டு சாத்தான் பயங்கர கோபத்திற்கு ஆளாகி விட்டான். அவன் சொன்னான்: "அந்த மனிதன் நீ எதிர்பார்த்த மாதிரி நடக்காம, நல்ல மனிதனா நடந்திருந்தான்னா, அது உன் தப்புதான். நீ உன் வேலையை சரியா புரிஞ்சி செய்யல. விவசாயிகளும், அவங்களோட பொண்டாட்டிகளும் இந்த மாதிரி நல்லவங்களா நடந்தாங்கன்னா, நமக்கு என்ன வேலை? நாம இதை இப்படியே விட்டுடக் கூடாது. திரும்பவும் நீ அங்கே போ. நல்லா கவனிச்சு ஒவ்வொண்ணையும் செய். மூணு வருஷத்துக்குள்ள நீ அந்த விவசாயியை வேறமாதிரி நடக்க வைக்கல, நான் உன்னை ஒரேயடியா புனித நீர்ல மூழ்கடிக்கிறதைத் தவிர வேற வழியில்ல..."
அவ்வளவுதான். குட்டிச்சாத்தான் பயந்து நடுங்க ஆரம்பித்துவிட்டது. அது மீண்டும் பூமியை நோக்கி வந்தது. தன் தவறை எப்படி சரி பண்ணுவது என்று நீண்ட நேரம் ஆலோசித்தது. யோசித்து யோசித்து கடைசியில் ஒரு தெளிவான முடிவுக்கு வந்தது.
அந்தத் திட்டப்படி அது ஒரு தொழிலாளியாக வடிவமெடுத்து, அந்த ஏழை விவசாயியுடன் சேர்ந்து வேலை செய்தது. முதல் வருடம் புதிதாக வேலையில் சேர்ந்திருந்த மனிதன் விவசாயியிடம் சதுப்பு நிலத்தில் சோளக்கதிர்களை விதைக்கும்படி சொன்னான். விவசாயி அவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு அதன்படி சோளத்தை சதுப்பு நிலத்தில் விதைத்தான். அந்த வருடம் எங்கு பார்த்தாலும் ஒரே வறட்சியாக இருந்தது. மற்ற விவசாயிகளின் பயிர்கள் எல்லாம் சூரியனின் வெப்பம் தாங்காமல் கருகிப் போயின. ஆனால், அந்த ஏழை விவசாயியின் தானியக் கதிர்கள் மட்டும் அடர்த்தியாகவும் உயரமாகவும் நல்ல விளைச்சலுடனும் இருந்தன. அந்த வருடத்திற்குத் தேவையானது போக, மீதமாகவும் நிறைய இருந்தன.
அடுத்த வருடம் குட்டிச்சாத்தான் விவசாயியிடம் விதைகளை மலைப்பகுதியில் விதைக்கும்படி சொன்னது. அந்த வருடம் கோடை காலம் முழுவதும் பயங்கரமாக மழை பெய்ய ஆரம்பித்தது. மற்ற விவசாயிகளின் தானியக் கதிர்கள் மழையில் சாய்க்கப்பட்டு அழுகத் தொடங்கின. அதில் விளைச்சல் என்று எதுவுமே எடுக்க முடியாமற் போனது. ஆனால், அந்த விவசாயியின் தானியக் கதிர்களோ மலைப் பகுதியில் கம்பீரமாக வளர்ந்து நின்றன. முன்னால் இருந்ததை விட அவனிடம் நிறைய தானியங்கள் சேர்ந்தன. அவற்றை என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தான் அவன்.
குட்டிச்சாத்தான் விவசாயியிடம் தானியத்தைக் காய்ச்சி, அதிலிருந்து எப்படி மது தயாரிக்கலாம் என்பதைச் சொல்லித் தந்தது. அதன்படி விவசாயி போதை அதிகமாக இருக்கும் மதுவைத் தயாரித்தான். அதைத் தானும் பருகி, தன் நண்பர்களுக்கும் பருகத் தந்தான்.
இப்போது குட்டிச் சாத்தான் தன் எஜமானான சாத்தானிடம் சென்றது. தான் செய்த தவறை இப்போது சரி செய்துவிட்டதாக அது சொன்னது. எப்படி குட்டிச்சாத்தான் தன் வேலையைச் செய்திருக்கிறது என்பதை தானே நேரில் வந்து பார்க்கப் போவதாகச் சொன்னான் சாத்தான்.