
அருணாவிற்கு பைத்தியம் பிடிக்கத் தொடங்கியிருக்கிறது என்று பலரிடமிருந்தும் கேட்க நேர்ந்த பிறகுதான் நான் அந்தத் தகவலையே நம்பத் தயாரானேன். டில்லியிலிருந்து வந்த மறுநாளே நான் அவளுடைய வீட்டிற்குச் சென்றேன்.
அவளுடைய அழகான நேப்பாளி வேலைக்காரிதான் கதவைத் திறந்தாள். அவள் வெற்றிலைக் கறை படிந்த பற்களை வெளியே காட்டியவாறு சிரித்தாள்.
"உன் எஜமானியம்மா எங்கே?'' நான் கேட்டேன்.
"எஜமானியம்மா உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்திருக்காங்க.''
அவள் சொன்னாள்: "தொடங்கி ஐந்தாறு மாதங்களாகிவிட்டன.''
அவள் சுட்டிகாட்டிய அறைக்குச் சென்றபோது ஒரு அழுக்கடைந்த சிவப்பு நிறப் புடவையை அணிந்து சுவரைப் பார்த்தவாறு கட்டிலின் மீது உட்கார்ந்திருந்த அருணாவை நான் பார்த்தேன்.
"என்ன ஆச்சு அருண்?''
நான் கேட்டேன்:
"நீ எப்படி இந்த அளவிற்கு மெலிந்தாய்?''
அவள் எழுந்து என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். அவளுடைய தலை முடிக்கு வியர்வையின் நாற்றம் இருந்தது. அருணா என்னுடைய கழுத்தில் கைகளைச் சுற்றியவாறு என் முகத்தையே வெறித்துப் பார்த்தாள்.
"நீ ஏன் இவ்வளவு காலமா என்னைப் பார்க்க வரல?'' அவள் கேட்டாள்: "உனக்குக்கூட நான் பார்க்கக் கூடாதவளா ஆயிட்டேனா?''
"யாருக்கு பார்க்கக் கூடாதவளா ஆயிட்டே?'' நான் கேட்டேன்.
"அவருக்கு.''
"இதை என்னால நம்ப முடியவில்லை, அருண். நீ தவறாக நினைத்திருக்க வேண்டும். உன்னை வெறுப்பதற்குக் காரணம் எதுவும் இல்லையே!''
அருணா படுக்கையில் போய் படுத்துக் கொண்டாள். "அதையெல்லாம் சொன்னால் நீ நம்ப மாட்டாய், விமலா.'' - அவள் சொன்னாள்: "நான் சொல்றதை சமீபகாலமாக யாரும் நம்ப மாட்டேன் என்கிறார்கள். எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்காம். நான் குழந்தைகளைத் தொந்தரவு செய்கிறேனாம். கத்தியைப் பார்த்தால், நான் அதை எடுத்து ஆட்களை பயமுறுத்துகிறேனாம். இதையெல்லாம் நீ கேள்விப்பட்டிருப்பாயே!''
"இவற்றையெல்லாம் யார் கூறிப் பரப்புகிறார்கள்?'' நான் கேட்டேன்.
"அவர்... பிறகு... எல்லாரும்.... இப்போ குழந்தைகூட எனக்கு அருகில் வருவதில்லை. அவளை அவரோட அம்மா கொண்டு போயிட்டாங்க. போன மாதம் ஒரு நாள் நான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினப்போ அவர் அவளை அழைத்துக் கொண்டு வந்தார். ஆனால், அவள் வாசல்ல நின்றுகொண்டு சொல்கிறாள், "அம்மா பைத்தியக்காரி”ன்னு.''
"இதெல்லாம் எப்போ ஆரம்பமானது?'' நான் கேட்டேன்.
"எனக்கு ஞாபகத்தில் இல்லை.'' அருணா சொன்னாள்: "எனக்கு நேரத்தைப் பற்றி ஒரு பிடியும் கிடைக்க மாட்டேன் என்கிறது. ஒரு நாள் நான் அவரைக் கொல்வதற்கு முயற்சித்தேனாம். கத்தியை எடுத்துக் கொண்டு பின்னால் ஓடினேனாம். சொல்லு விமலா, இதையெல்லாம் நான் செய்வேனா?''
நான் தலையை ஆட்ட மட்டும் செய்தேன்.
"பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் என்னைப் பார்த்து பயம். அவர்கள் வேலைக்காரியிடம் கேட்டார்களாம் - என்னை ஒரு மனநல மருத்துவமனைக்கு அவர் ஏன் அனுப்பாமல் இருக்கிறார் என்று.''
"இதை யார் சொன்னார்கள்?'' நான் கேட்டேன்.
"அவள்தான்... ஃபுல்மதி. உனக்கு அவளைத் தெரியுமல்லவா? இப்போது இந்த வீட்டின் அரசி அவள்தான். அவருடைய படுக்கையில் படுக்கக்கூட ஆரம்பித்துவிட்டாள்.''
"இல்லை... அருண். இதெல்லாம் உண்மையாக இருக்காது. நீ வெறுமனே தவறாக நினைத்துக் கொண்டிருக்கலாம்.'' நான் சொன்னேன்.
அருணா அடுத்த நிமிடம் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.
"என்னை யாரும் நம்பவில்லை.'' அவள் முணுமுணுத்தாள்.
"நீ இங்கேயிருந்து ஏன் போகாமல் இருக்கிறாய்?'' நான் கேட்டேன்: "நீ கூறியவையெல்லாம் உண்மையாக இருந்தால், இந்த அவமானங்களைச் சகித்துக் கொண்டு நீ ஏன் இங்கே இருக்க வேண்டும்? நீ உன்னுடைய அப்பாவிடம் போய் விடலாமே?''
"அது முடியாது விமலா.'' அருணா சொன்னாள்: "இரவு நேரத்தின் இடையில் நான் விளக்கைப் போட்டுப் பார்க்கிறப்போ அவர் சாய்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பது தெரியும். இரண்டு கால்களையும் மடக்கி வைத்துக் கொண்டு, ஒரு கையின்மீது முகத்தைச் சாய்த்து வைத்து, ஒரு சிறு ஆண் குழந்தையைப் போல... அவர் எந்த அளவிற்கு
அழகானவர், விமலா! அவர் படுத்திருப்பதைப் பார்த்தால், எல்லா கவலைகளும் இல்லாமல் போய்விடும். இல்லை... நான் அவரை விட்டுப் போக மாட்டேன். உனக்குப் புரியுதா, விமலா?''
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook