
சாயங்காலத்திற்கு சற்று முன்பு ஒரு வெள்ளை நிற அம்பாசிடர் கார் அந்த மிகப் பெரிய மாளிகையின் வாசலுக்கு வந்தது.
உண்ணிராஜா தனியாக உட்கார்ந்திருந்தார். அவருடைய மனைவியும் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் அவர்களுடைய பூர்வீக வீட்டுக்கு ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகச் சென்றிருந்தார்கள். வேலைக்காரர்களின் ஆரவாரம் வீட்டின் பின்பகுதியில் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தது.
காரிலிருந்து இறங்கி தன்னை நோக்கி நடந்துவரும் பெண்ணைப் பார்த்து உண்ணிராஜா ஆச்சரியப்பட்டார். உமாவா? முப்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் அவளைப் பார்க்கிறாரோ? அவள் முற்றிலும் மாறி விட்டிருந்தாள். தேய்ந்து போய்விட்ட நிலவைப்போல உமா ஆகிவிட்டாளே! முன்பிருந்த பெண்மைக்கே உரிய அழகு எங்கு போனது? மெலிந்து, வெளிறிப்போய் காணப்படும் இந்தப் பெண்ணா ஒரு காலத்தில் அவருடைய காதல் சின்னமாக இருந்த உமாதேவி?
“உமா, உனக்கு வழி தவறிவிட்டதா? இங்கே வரவேண்டுமென்று எப்படித் தோன்றியது?'' அவர் கேட்டார்.
வாசலில் இருந்த படியின்மீது நின்று கொண்டு அவள் அவரையே வெறித்துப் பார்த்தாள். நரை ஏறிவிட்டிருந்த தலைமுடி, சவரம் செய்ய மறந்துவிட்டிருந்தார். தாடிமீது வளர்ந்திருந்த சிறுசிறு உரோமங்கள், காய்ந்து வறண்டுபோய் காணப்பட்ட சந்தனக்குறி, அழுக்கடைந்த பூணூல்... அவள் கண்களை சுருக்கிக் கொண்டு புன்னகை புரிந்தாள்.
“தம்புரான், உங்களிடம் மாறுதல் எதுவுமில்லை.'' அவள் சொன்னாள்.
“உமா, எப்போதிருந்து உனக்கு நான் தம்புரானாக ஆனேன்? என்னை "உண்ணீ' என்று அழைக்கக்கூடிய ஒரே நாயர் பெண் நீதான். ஞாபகத்தில் இல்லையா?'' அவர் கேட்டார்.
அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். அவளுடைய அந்தச் சிரிப்பிற்கு முப்பது வருடங்களாக எந்தவொரு மாறுதலும் உண்டாகவில்லை. ஒரு காலத்தில் அவளுடைய அந்த குலுங்கல் சிரிப்பைக் கேட்டு தான் எந்த அளவிற்கு பொறாமைப் பட்டிருக்கிறோம் என்பதை அவர் நினைவுப்படுத்திப் பார்த்தார். நகரத்திலிருந்து கோடை விடுமுறைக்கு மட்டும் கிராமத்திலிருந்த பூர்வீக வீட்டுக்கு வரும் வசதி படைத்த சிறுமி எப்போதும் சிரித்துக் கொண்டேயிருந்தாள். உலகத்தை சிரிக்கச் செய்வதற்காகவே தெய்வம் தன்னைப் படைத்திருக்கிறது என்பதைப்போல அவளுடைய செயல் இருக்கும். தன்னுடைய அரண்மனையைப் போன்ற மாளிகைக்குள் வேட்டைக்காரன் பாட்டு நடந்து கொண்டிருந்தபோதுகூட, அவற்றைக் கிழித்துக்கொண்டு உமா சிரித்தாள். அவளுடைய பாட்டி திட்டிய போது, அவள் சொன்னாள்: "எனக்கு சிரிப்பு வருகிறது. நான் என்ன செய்வது?'
வருடத்திற்கொருமுறை அவள் வரும்போது மட்டுமே தான் உயிருடன் இருப்பதைப் போன்ற தோணல் அவருக்கு உண்டாகும். அவளுடைய பட்டாடைகள்... அவளுடைய ஆங்கில வார்த்தைகள்... அவற்றுடன் கலந்த கொஞ்சல்கள்... அவளுடைய குலுங்கல் சிரிப்புகள்... அவை அவருடைய வாழ்க்கைக்கு மெருகு சேர்த்தன. அவளுக்காகக் காத்திருக்கக்கூடிய ஒன்றாக அவருடைய வாழ்க்கை மாறியது.
“உண்ணி, நீங்கள் ஏன் என்னை உட்காரும்படிக் கூறவில்லை? மனைவி கோபித்துக் கொள்வாள் என்ற பயமிருக்கிறதா என்ன?'' உமா கேட்டாள்.
“இல்லை... நான் கூறாவிட்டாலும்... உமா, உனக்கு இங்கே உட்காருவதற்கு உரிமை இருக்கிறது. இங்கு யாருமில்லை. அவளுடைய வீட்டுக்குப் போயிருக்கிறாள். மூன்று ஓணங்களுக்குப் பிறகு திரும்பி வருவாள்.'' அவர் சொன்னார்.
“நான் குருவாயூர் பஜனைக்காக வந்தேன். ஒரு ஹோட்டலில் அறை எடுத்தேன். ஏழு நாட்கள் மனதில் நினைத்துக்கொண்டு கடவுளைத் தொழும்படி எல்லாரும் சொன்னார்கள்.'' அவள் சொன்னாள்.
அவளுடைய புன்னகை நம்பமுடியாதவளின் புன்னகையாக இருந்தது. எதையும் எப்போதும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு அறிவாளியின் புன்னகை.
“உமா, உனக்கு கோவில்களில் நம்பிக்கை இல்லையென்று நான் பத்திரிகைகளில் வாசித்திருக்கிறேன்.'' அவர் சொன்னார்.
“எனக்கு புற்றுநோயின்மீதும் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது- அது என்னை பாதிக்கும் வரை...'' அவள் சொன்னாள். அந்த நிமிடத்தில் அவளுடைய சிரிப்பு மிகவும் வேதனை உண்டாக்கக் கூடியதாக இருப்பதைப் போல அவர் உணர்ந்தார். தனக்கு புற்றுநோய் இருக்கிறது என்று கூறும்போது அவள் அழுதிருக்கலாம். அந்த அழுகை அவருடைய இதயத்தை இந்த அளவிற்கு வேதனை கொள்ளச் செய்திருக்காது.
“உமா, நான் உனக்காக நாளை ஒரு ஹோமம் நடத்தப்போகிறேன். உனக்கு சுகம் கிடைக்கும். என்னால் உறுதியாக அதைக் கூறமுடியும்.'' அவர் சொன்னார்.
“இறந்தாலும் ஒருவகையான சுகம் கிடைக்கும் உண்ணீ!'' உமா சொன்னாள்.
“இறக்க வேண்டிய வயதாக வில்லை.'' அவர் சொன்னார்.
அவள் தன்னைச் சுற்றிலும் அலட்சியமாக கண்களை ஓட்டினாள். தென்னந்தோப்புகளையும் வயல்களையும் தாண்டி வானத்தின் விளிம்பு சிவந்து காணப்பட்டது. பாம்புப் புற்றுக்கு அருகிலிருந்த இலஞ்சி மரத்திற்கு மேலே வெளிறிப் போன ஒரு நட்சத்திரம் உதயமாயிருப்பதை அவள் பார்த்தாள்.
“முதல் நட்சத்திரம்...'' அவள் முணுமுணுத்தாள்.
“ஆமாம்... வியாழன்...'' அவர் சொன்னார்.
“உண்ணி, நான் வியாழன் நட்சத்திரத்தைப் பார்த்து ஒரு சுலோகம் சொல்லுவேனே? அது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறதா? நினைப்பவை நடக்க வேண்டும் என்பதற்காக நான் அந்த சுலோகத்தை நாற்பத்தொரு நாட்கள் கூறினேன். மனதோடு ஒன்றிப்போய் கூறினேன். இருந்தும்....? எனக்கு எதுவுமே கிடைக்கவில்லை...'' உமா சொன்னாள்.
“உமா, உனக்கு என்ன கிடைக்கவில்லை? அனைத்தும் கிடைத்திருக்கின்றனவே! வேண்டிய அளவிற்கு செல்வம், புகழ்... இனி என்ன வேணும்?'' அவர் கேட்டார்.
உமா மேற்கு திசையைப் பார்த்தவாறு எந்த விதமான சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தாள். அவளுடைய கண்களில் சூரியன் மறையும்போது காணப்படும் சிவப்பு, மாலை மயங்கும் நேரத்தில் ஏற்றப்படும் திரியைப்போல பிரகாசமாகத் தெரிந்தது. அந்த தளர்ச்சியடைந்த கண்கள் விளக்கு வைக்கப்பட்ட மாடங்களாக மாறின. பேசுவதற்கு முயற்சித்த போது அவளுடைய தொண்டை தடுமாறியது.
“இந்த அளவிற்கு ஏராளமான புகழ்மாலைகளும் பெருமைகளும் கிடைத்த ஒரு பெண் எழுத்தாளர் கேரளத்தில் இருக்கிறாளா?'' அவர் கேட்டார்.
"ரத்னாஷ்டாவத வஸ்த்ரராசிமமலம்
தக்ஷால்கிரந்தம் கரா
தாஸீனம் விபணவ்கரம் நிததநம்
ரத்னாதிராசவ் பரம்
பீதாலேபன புஷ்பவஸ்த்ரமகிலா
லங்கார ஸம்புஷிதம்
வித்யாஸாகர பாரகம் ஸுரகுரும்
வந்தே ஸுவர்ணப்ரபாம்...'
உமா மென்மையான குரலில் கூறினாள்.
“உமா, நீ எதையும் மறக்கவில்லை. படித்த சுலோகங்கள், வழிபாட்டு வார்த்தைகள்... எதையும் நீ மறக்கவில்லை. ஆச்சரியம் தான்...'' அவர் சொன்னார்.
“அர்த்தம் புரியாமலேயே கூற ஆரம்பித்தேன். அனைத்தும் மனப்பாடம் ஆயின. அர்த்தம் தெரிந்துகொள்ளாத சொற்களின் விளையாட்டாக என்னுடைய வாழ்க்கை ஆகிவிட்டது. நான் ஒரு இயந்திர பொம்மையாக ஆகிவிட் டேன்.'' உமா சொன்னாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook