
“இந்த கிராமத்தில் வாழவேண்டும் என்றுதான் நான் ஆசைப்பட்டேன். கிரியத்தெ நாயர்களின் பரம்பரையாகத் தொடர்ந்து இங்கேயே இருக்க வேண்டுமென்று நான் விரும்பினேன். எங்களுடைய வம்சத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் பூணூல் அணிந்திருப்பவர்களை மட்டுமே கணவர் களாக ஏற்றுக்கொண்டார்கள். சமூகம் எங்களுக்கு அளித்த வாழ்க்கை எனக்கு சந்தோஷம் அளிக்கக் கூடியதாகவே இருந்தது. மதிய நேரத்தில் தூங்குவது, மாலை நேரத்தில் நான்கு திசைகளிலும் திரிகள் ஏற்றி வைப்பது, பிள்ளைகளைப் பெற்றெடுப்பது, பொழுது புலர்வதற்கு முன்னால் கணவனை அனுப்பி வைப்பது... அந்த வாழ்க்கை முறை எனக்குப் போதும்...'' உமா தொடர்ந்து சொன்னாள்.
அவர் திடீரென்று ஒருமாதிரி ஆகிவிட்டார். உமா என்ன கூறிக்கொண்டிருக்கிறாள்? அவளை நம்பு வதற்கான தைரியம்கூட தனக்கு இல்லை என்பதைப் போல அவருக்குத் தோன்றியது.
“ஒரு காலத்தில்... உமா, உனக்கு இந்தச் சிறிய கிராமத்தின்மீது ஆழமான வெறுப்பு இருந்தது அல்லவா? கழிவறைக்குச் செல்லாமல் நிலத்தில் செடிகளுக்கு நடுவில் உட்கார்ந்துகொண்டு மலம் கழித்துக் கொண்டிருப்பவர்களைப் பற்றிக் கூறி நீ சிரிப்பாய் அல்லவா?''
“சிரித்திருக்கலாம். ஆனால், அந்தச் சிரிப்பு கிண்டல் நிறைந்த சிரிப்பல்ல. என் ஆன்மாவை வளர்த்த தாய் என்றென்றைக்கும் இந்த கிராமம்தான் என்றே நான் மனதிற்குள் நினைத்தேன். நான் ஒரு நாகரிகப் பெண்ணாக வாழவேண்டும் என்று பிடிவாதமாக ஆசைப்பட்டது என் தந்தைதான். என் தந்தை எனக்காக தேர்ந்தெடுத்த கணவருக்கும் அதுதான் விருப்பமாக இருந்தது. நான் நடித்து... நடித்து... எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்கினேன்.'' உமா சிரித்துக்கொண்டே சொன்னாள். அவள் சிரிக்கும்போதும் உரையாடும் போதும் மேலும் கீழும் மூச்சு விடுவதைப்போல அவருக்குத் தோன்றியது. அந்த மூச்சு அவளுடைய குரலை ஆக்கிரமித்து பாதிப்படையச் செய்தது.
“உமா, உனக்கு பருகுவதற்கு சீரக நீர் தரட்டுமா? இல்லாவிட்டால்... மோர் வேண்டுமா? எலுமிச்சை இலையை அரைத்துப் போட்டு தயார் பண்ணிய மோரை... உமா, நீ சிறு பிள்ளையாக இருந்தபோது தினமும் பருகுவாய். அதையெல்லாம் நான் மறக்க வில்லை.'' அவர் சொன்னார்.
“மோரையும் சீரக நீரையும் இந்த நேரத்தில் நான் பருகுவதில்லை.'' அவள் சொன்னாள்.
“அப்படியென்றால்... உமா, இந்த நேரத்தில் என்ன பருக வேண்டுமென்று நீ விரும்புகிறாய்?'' அவர் கேட்டார்.
“நான் சாயங்கால நேரத்தில் ஷெரி பருகுவேன். வானத்தில் பறவைகள் கூடுகளுக்கு வேகமாக பறந்து செல்வதைப் பார்க்கும்போது, நான் கவலையில் மூழ்கி விடுவேன். இரவில் சென்று படுப்பதற்கு எனக்கு இடமில்லையே! காமத்திற்காக அல்லாமல் கட்டிலில் ஓய்வு எடுப்பதற்கு என்னால் முடிந்ததில்லை. மாலை நேரத்தில், நான் ஷெரி குடிக்க வேண்டும். இல்லா விட்டால் வெள்ளை ஒயின்...'' உமா சொன்னாள்.
அவர் மீண்டும் ஒரு மாதிரி ஆகிவிட்டார். தன்னுடைய முகத்தை இருட்டில் வைத்துக்கொண்டு அவர் இப்படியும் அப்படியுமாக நடக்க ஆரம்பித்தார்.
“உமா, உனக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும், நான் செய்து தர தயாராக இருக்கிறேன்.'' அவர் சொன்னார்.
“உண்ணி, எனக்கு என்ன உதவியை நீங்கள் செய்து தரமுடியும்? கடந்து சென்ற இளமை திரும்பவும் கிடைக்காதே! கணவரின் விருப்பத்திற்கு எதிராக நான் எந்தச் சமயத்திலும் நடந்தது இல்லை. கட்டளை என்ற கயிறைக் கொண்டு அவர் என்னுடைய செயல்களை இயக்கிக் கொண்டிருந்தார். சந்தோஷப்படுத்த வேண்டியவர்களை நான் சந்தோஷப்படுத்த வேண்டி இருந்தது. காமம் அதிகமாகி பைத்தியம் பிடித்த நிலையில் இருப்பவர்களிடமும் நான் காதல் உணர்வு எழச்செய்தேன். அப்படிப்பட்ட முக்கிய மான நிமிடங்களில் நான் என் கணவரின் எண்ணங்களிலிருந்து சற்று விலகிச் சென்றிருக்க லாம்.'' உமா சொன்னாள்.
“உமா, நிறுத்து. இவற்றையெல்லாம் கேட்கக்கூடிய மன பலம் எனக்கு இல்லை. நான் ஒரு அப்பிராணி கிராமத்து மனிதன். உமா, நான் உன்னை உயிருக்கும் மேலாக காதலித்து வளர்ந்தவன். ஒரு திருமண ஆலோசனை நடத்துவதற்கு தைரியம் இல்லாதவன்...'' அவர் தழுதழுத்த குரலில் கூறினார்.
“வாங்க... எனக்கு அருகில் வாங்க...'' அவள் அழைத்தாள்.
அவர் அவளின் அருகில் சென்று வெறும் தரையில் அமர்ந்தார். அவள் அவருடைய நரை ஏறியிருந்த தலைமுடிகளை ஒதுக்கி விட்டாள்.
“தைரியம் இல்லாமல் போனதும் நல்லதுதான். உண்ணி, என் தந்தை உங்களுக்குக் கொடுத்திருக்க மாட்டார். என்னை நகர நாகரிகத்திற்கு பலி கொடுப்பதற்கு என் தந்தை எப்போதோ உறுதியாகத் தீர்மானித்து விட்டிருந்தார்.'' அவள் சொன்னாள்.
“உமா, உன்னைப் பற்றி பத்திரிகைகளிலும் வார இதழ்களிலும் அச்சடித்து வரும் விஷயங்களை நான் ஆர்வத்துடன் படித்தேன். ஆச்சரியத்துடன் படித்தேன். உன் வாழ்க்கை ஒரு மிகப் பெரிய வெற்றி என்று நான் நினைத்தேன். இப்போது நான் இந்த விஷயங்களைப் பார்த்து கவலைப்படுவதற்கு அதுதான் காரணமாக இருக்க வேண்டும்.'' அவர் சொன்னார்.
“பரம்பரை பரம்பரையாக இருந்து வந்திருக்கும் ஒரு வாழ்க்கை முறையை சமூகம் நமக்கு தயார் பண்ணி வைத்திருக்கும். அதை ஏற்றுக்கொள்ளாமல் வேறொன்றை ஏற்றுக்கொண்டால், வாழ்க்கை வெற்றி பெறாது. எனக்கு பணமோ, புகழோ தேவையில்லை உண்ணீ!'' அவள் மெதுவான குரலில் சொன்னாள்.
காரில் அமர்ந்தவாறு ஓட்டுனர் ஃபோன் செய்தான்.
“வாடகைக் காரின் ஓட்டுனருக்கு பொறுமை இல்லாமல் போயிருக்க வேண்டும். நான் கிளம்பட்டுமா? நாளை முதல் பஜனை... பக்தி இல்லாதவளின் பஜனையைக் கொண்டு குருவாயூரப்பன் திருப்திப்படுவாரா?''
உமா குலுங்கிக் குலுங்கி சிரித்துக்கொண்டே காரை நோக்கி நடந்து சென்றாள். அவளுடைய கால்கள் தடுமாறின. வானத்தில் நட்சத்திரங்கள் வந்து நிறைந்திருப்பதை அவர் புரிந்துகொண்டார்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook