அழகான மகள்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8125
அந்தத் தாய் தன்னுடைய சிறிய வீட்டின் வாசலில் அமர்ந்து மங்கலான கண்களால் சுற்றிலும் பார்த்தாள். வெளியே வெளிச்சம் குறைந்திருக்க வேண்டும்- அவள் நினைத்தாள்- இல்லாவிட்டால் திடீரென்று தன் கண்களைப் பாதிக்கக்கூடிய 'மூடல்' வழக்கம்போல இப்போது வந்து மூடியிருக்க வேண்டும். அப்படியாக இருந்தால் சிறிதுநேரம் சென்றபிறகு, கண்கள் மீண்டும் சிறிதாவது தெரிய ஆரம்பிக்கும். மீண்டும் தன்னைச் சுற்றிலும் இருக்கும் பொருட்களை கொஞ்சமாவது காணமுடியும்.
"பெண்ணே... நேரம் சாயங்காலம் ஆயிட்டது தெரியலியா? ஆமா... நீ அங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?"
மகளிடம் பேசும்போது ஒருமுறைகூட அவள் தன்னுடைய குரலைத் தாழ்த்தியே பேசுவதில்லை. எப்போது பார்த்தாலும் மகளை அவள் திட்டிக் கொண்டே இருப்பாள். அவளை தான் வெறுக்கிறோமா இல்லாவிட்டால் அன்பு செலுத்துகிறோமா என்பதைப் பற்றி அவளுக்கே தெளிவான ஒரு கருத்து இல்லை என்பதே உண்மை. அவளின் கண்பார்வை பாதிக்கப்பட்டு விட்டது. உடல்நலக்குறைவு காரணமாக படுத்திருக்கும் இடத்திலிருந்து நேராக எழுந்து நடக்கும் சக்தியும் இல்லாமல் போய்விட்டது. தன்னால் யாருக்கும் எந்தவித பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்த பிறகுதான் அவளிடம் இந்த கறாரான போக்கும், திட்டும் குணமும் வந்து ஒட்டிக் கொண்டன.
"நான் பார்க்கலைன்னு நினைச்சுக்கிட்டு இருக்காதே பெண்ணே. இந்த வீட்டுல நடக்கிற எல்லா விஷயங்களும் எனக்கு நல்லாவே தெரியும். ஞாபகத்துல வச்சுக்கோ!"- அவள் அவ்வப்போது அவளைப் பார்த்து கூறுவாள். தினமும் கத்தி கத்திப் பேசி அவளின் குரலே சகிக்க முடியாத அளவிற்கு மோசமாகிவிட்டது. மகள் தன் தாய் திட்டுவதையோ- கன்னாபின்னாவென்று பேசுவதையோ காதிலேயே போட்டுக் கொள்ளாதது மாதிரி இருப்பாள். பொதுவாக அந்தப்பெண் தன் தாயின் விருப்பத்திற்கெதிராக எப்போதும் நடந்ததேயில்லை. இருப்பினும், தாயின் கண்களில் மகள் குற்றவாளியாகவே தெரிந்தாள். மகள் மவுனமாக இருப்பதும் அவ்வப்போது சாந்தமான குரலில் பதில் சொல்வதும் அந்தத் தாயை அதிகமாகக் கோபம் கொள்ளச் செய்தது.
"நான் எவ்வளவு கேவலமா பேசட்டும், கொஞ்சம்கூட இந்தப் பெண்ணுக்கு வெட்கம்ன்ற ஒண்ணு இல்லவே இல்ல. நாணமும் மானமும் இல்லாத ஜாதி..."
தான் வேலை செய்து கிடைக்கும் பணத்தை அவள் அப்படியே தன் தாயின் கையில் கொண்டுவந்து கொடுத்து விடுவாள். காலையில் வீட்டை விட்டு புறப்படுவதற்கு முன்பு அவள் கஞ்சி தயாரித்து உப்பு கலந்து தன் தாய்க்குத் தருவாள். சாயங்காலம் வேலை முடிந்து திரும்பி வந்தவுடன் குளித்துவிட்டு மீண்டும் சாப்பாடு தயாரிக்க ஆரம்பித்து விடுவாள். இரவில் எவ்வளவு ஆழமான தூக்கமாக இருந்தாலும் தன் தாய் அழைத்தாள் என்றால் அக்கணமே தூக்கத்திலிருந்து அவள் எழுந்து விடுவாள். வண்டிக்காரன் எவ்வளவு கொடுமைப் படுத்தினாலும் பொறுமையாக இருக்கும் சாந்தமான ஒரு காளையைப் போல அவள் தன் தாயின் எல்லாக் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு வாழ்ந்தாள். சொல்லப்போனால் அப்படி சகிப்புத்தன்னைமயுடன் வாழ்வதுகூட அவளுக்கு நன்கு பழகிப்போன ஒன்றாகிவிட்டது. தாய்க்கு மகளைப் பார்க்கக்கூட முடியவில்லை. இருந்தாலும் அவளின் நடையில் இருக்கும் இளமைத் துள்ளலையும் அவள் அருகில் வரும்போது அவளிடமிருந்து புறப்பட்டு வரும் 'கமகம'வென்ற வாசனையையும் உணரும்போது அந்தத் தாய் மிகவும் பயப்படுவாள். அவளுக்கு நிச்சயம் காதலன் இல்லாமல் இருக்கமாட்டான் என்று அவள் உறுதியாக நம்பினாள். ஆனால், அதற்கு ஆதாரமாக ஏதாவது விசில் சத்தமோ- யாராவது ஓடும் ஓசையோ அவள் காதில் விழவில்லை.
"நீ இவ்வளவு நேரம் குளத்துல என்ன பண்ணிக்கிட்டு இருந்தே? யாருடி உன் காதலன்? தேவிடியா, நீ என்னை ஏமாத்தலாம்னு நினைக்காதே. ஞாபகத்துல வச்சுக்கோ!"
மகள் முண்டைப் பிழிந்து விரித்து வீட்டிற்கு முன்னாலிருக்கும் கொடியில் காயப்போடுவாள். வாய் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் சமையலறையை நோக்கி அவள் நடப்பாள். சாப்பிட்டு முடித்து மகள் விரித்துப் போட்ட பாயில் படுத்து உறங்கும்வரை அவளின் தாய் ஏதாவது முணுமுணுத்துக்கொண்டே இருப்பாள். மகள் ஏதாவது பதில் சொன்னாளென்றால், அவ்வளவுதான். அவளுக்கு ஏகப்பட்ட திட்டுகள் கிடைக்க ஆரம்பித்துவிடும்; அவள் 'ஆமாம்' என்று சொன்னாலும் சரி; 'இல்லை' என்று சொன்னாலும் சரி.
"அடியே... யாருடி உன் காதலன்?"
"அம்மா, கொஞ்சம் பேசாம இருக்கியா? எனக்கு அந்த மாதிரி யாரோட தொடர்பும் இல்ல..."
"நீ பொய் சொல்லாதே. எனக்கு எல்லாம் தெரியும். ஞாபகத்துல வச்சுக்கோ!"
மீண்டும் ஒரே அமைதி நிலவும். மகள் கை, கால்களை நீட்டி படுத்து உறங்க ஆரம்பித்திருப்பாள். அவள் சீராக விடும் மூச்சுகளையே கவனித்துக் கொண்டிருக்கும் தாய் நீண்ட நேரம் ஏதாவது முணுமுணுத்துக்கொண்டே இருப்பாள். கடைசியில் அவளும் தூங்க ஆரம்பித்து விடுவாள்.
பொழுது விடிந்துவிட்டால் மீண்டும் அவர்களுக்குள் சண்டை ஆரம்பித்துவிடும். சிலநேரங்களில் அவளின் தாய், தான் அமர்ந்திருக்கும் பலகையை எடுத்து மகள் மீது வேகமாக வீசி எறிவாள். நிச்சயம் குறி தப்பாது என்ற உண்மை இருவருக்குமே நன்றாகத் தெரியும். "நான் உன்னைக் கொல்லாம விடமாட்டேன். என்னைப் பைத்தியம் பிடிக்க வச்சிடாதே" என்று அவள் உரத்த குரலில் கத்துவாள்.
மகள் தலைவாரி முண்டு மாற்றி வேலை செய்யும் இடத்திற்குப் புறப்படுவாள்.
"நீ அவங்ககிட்ட ஒண்ணும் கேட்கலியா? எனக்காக ஒரு முண்டோ போர்வையோ ஏதாவது... நீ இதுவரை எதுவும் கேட்கல. எனக்காக எதுவும் கேட்க உனக்கு விருப்பமில்ல. நீ நன்றி இல்லாதவ. சொறியும் சிரங்கும் பிடிச்சு நாறிப்போய் கிடந்தப்போ உன்னைத் தோள்ல போட்டு நான் ஒவ்வொரு நாளும் வைத்தியரைத் தேடி நடப்பேன். எல்லோரும் அப்போ என்னைப் பாத்துக் கேட்பாங்க: 'எதற்கு இதைத் தூக்கிக்கிட்டு அலையுறே? இது மாறவே மாறாது'ன்னு. அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்த நீ இப்போ கொஞ்சம் கூட நன்றி இல்லாதவளா ஆயிட்டே..."
எவ்வளவோ தடவைகள் கேட்ட விஷயம்தான். இருப்பினும், அந்தப் பழைய கதையைக் கேட்கும்போது உள்ளம் நெகிழ்ந்து விடுவாள் மகள்.
"அம்மா... எனக்கு உலகத்துல உனக்குப் பிறகுதான்மா வேற யாரா இருந்தாலும்..."
ஒருநாள் மதிய நேரத்தில் வாசலில் பரவியிருந்த வெயிலை உற்றுப் பார்த்தவாறு அவளின் தாய் அமர்ந்திருக்க,அவளுடன் பேசுவதற்கு ஒரு பெண் வந்தாள். பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் அந்தப் பெண் சொன்னாள்: "பார்க்குறதுக்கு உன் மக நல்ல ஒரு பொண்ணா தெரியிறா. அவளுக்கு சரியான மாப்பிள்ளை கிடைச்சா..."