அழகான மகள் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8129
அதைக் கேட்டு அந்தத் தாய் அப்படியே சிலையென உட்கார்ந்து விட்டாள். பத்து வருடங்களுக்கு முன்பிருந்த தன்னுடைய மகளின் முகத்தை அவள் அப்போது தன் மனதில் நினைத்துப் பார்த்தாள். சப்பையான மூக்கும் பல் இல்லாத வாயும்... அப்போது அவளைப் பார்த்தவர்கள் யாரும் அவளை அழகானவள் என்று சொல்லவில்லை.
அன்று மகள் திரும்பி வந்தபோது, தாய் சொன்னாள்: "நீ சிங்காரிச்சு மினுக்கிக்கிட்டு நடக்கவேண்டாம். ஏதாவது அசம்பாவிதம் நடந்தா, உன்னைச் சும்மாவிடமாட்டேன். அவமானத்தைத் தேடித் தந்திடாதடி... ஞாபகத்துல வச்சுக்கோ!"
"நான் ஒண்ணும் சிங்காரிச்சு மினுக்கிக்கிட்டு நடக்கல..."
"சிங்காரிச்சு மினுக்காமலே நீ அழகின்றே... அதுதானே? அடியே தேவிடியா..."
அதற்கு மேல் மகள் எதுவும் பேசவில்லை. அவள் அப்படி அமைதியாக இருந்ததைப் பார்த்து ஒரு மாதிரி ஆகிவிட்டாள் தாய். அப்போது அவள் இளமை பூத்துக்குலுங்க நின்றிருக்கிறாள் என்பது மட்டுமல்ல; ஒரு அழகியாகவும் மாறியிருக்கிறாள். அதற்காக உண்மையிலேயே அந்தத் தாய் பெருமைப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அவள் தன் மகளைச் சகட்டுமேனிக்குத் திட்ட ஆரம்பித்தாள்.
"உன் அழகால எனக்கு என்ன கிடைக்குது? கொஞ்சம் சாமர்த்தியம் இருக்கிற பொண்ணா எனக்குப் பிறக்கலையே! எல்லாம் என் தலைவிதி.-.."
மகள் அடுப்பை ஊதிக்கொண்டே திரும்பிப் பார்த்தாள். அவளின் தாய் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். அந்த அறையில் பரவியிருந்த இருட்டில் வெள்ளை நிறம் கலந்த தன் தாயின் கண்கள் மட்டும் தெளிவாகத் தெரிந்தன.
"எனக்கு ஒரே வெறுப்பா இருக்கு!" - அவளின் குரல் உரத்து இல்லையென்றாலும் அந்தத்தாய் அதைக் கேட்கவே செய்தாள்.
"என்னடி... பதிலுக்குப் பதில் பேச ஆரம்பிச்சிட்டியா! நீ என்னைக் கொல்லாம விட மாட்டே..."
அவள் தலையைக் குனிந்து கொண்டு மீண்டும் அடுப்பிலிருந்த நெருப்பை ஊதத் தொடங்கினாள்.
தாய் தானே வரவழைத்துக் கொண்ட கண்ணீருடன் சிறிது நேரம் என்னவோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவாறு உட்கார்ந்திருந்தாள். அப்படி உட்கார்ந்தபடியே சிறிது நேரத்தில் தன்னை மறந்து தூங்கி விட்டாள். கனவுகள் நிறைந்த அந்த தூக்கத்திலிருந்து அவள் கண் விழித்தது தன்னுடைய மகளின் வார்த்தைகளைக் கேட்டுத்தான்.
"பேசாம போறீங்களா இல்லியா? என் வாயால தேவையில்லாம பேச விடாதீங்க. நான் ஒரு ஏழை. அதுக்காக செய்யக்கூடாததைச் செய்ய நான் தயாரா இல்ல..."
மெதுவாக ஒலிக்கும் ஒரு ஆணின் குரலையும் அந்தத் தாய் கேட்டாள். சிறிது நேரம் பேசிய பிறகு வந்த ஆள் திரும்பிப் போனான்.
"அது யாருடி பெண்ணே?"
மகள் தன் தாயின் காதில் அந்தப் பெயரைச் சொன்னாள்.
"அடியே... அறிவு இல்லாத கழுதை! தேடி வந்த அதிர்ஷ்டத்தை நீ காலால மிதிச்சு அனுப்பிட்டியே! அவ்வளவு நல்ல ஆளு உன்னைத்தேடி வந்தது எவ்வளவு பெரிய விஷயம்! நன்றியில்லாதவ..."
மகள் அன்று அழுதுகொண்டே உறங்கினாள். இருட்டில் அவ்வப்போது கேட்ட அவளுடைய தேம்பல் சத்தத்தைக் கேட்ட அவளின் தாய் வழக்கமான தன்னுடைய முணுமுணுப்பை நிறுத்தி வைத்துவிட்டு அமைதியாகப் படுத்திருந்தாள். அவளின் முகத்தைச் சுற்றி கொசுக்கள் ஓசை எழுப்பியவாறு பறந்து கொண்டிருந்தன. அவை அவளின் முகத்தில் அமர்ந்து கடித்தபோதும் அவளுக்கு வலி என்ற ஒன்று உண்டாகவேயில்லை.
மறுநாள் காலையில் மகள் சொன்னாள்:
"அம்மா... நான் கல்யாணம் செய்துக்கப்போறேன் வேலுவை..."
"என்ன? அந்தத் தரித்திரம் பிடிச்சவன் உன் புருஷனா? என்னடி சொல்ற? குழந்தைகள் பிறந்து கஷ்டப்படுறப்போ என்ன செய்வே? ஒரு பெண்ணைக் காப்பாத்துற அளவுக்கு அவனுக்குத் திறமை இருக்கா என்ன?"
அதற்கு மகள் எந்தப் பதிலும் கூறவில்லை. அவளின் தாய் முணுமுணுத்தாள். அவளைத் திட்டினாள். நீண்டநேரம் ஆனபிறகு தாய் பாயில் சுருண்டு படுத்து உறங்கினாள்.
மாலையில் மகள் திரும்பி வந்தவுடன் தாய் கேட்டாள்: "அடியே... நீ ஏதாவது பிரச்சினையில மாட்டிக்கிட்டியா? அந்த வேலு உன்னை கெடுத்திட்டானா?"
"நாங்க ஒருத்தரையொருத்தர் விரும்புறோம் அம்மா. உனக்கு சம்மதம்னா என்னைக் கல்யாணம் பண்ணிக்கத் தயாரா இருக்குறதா முந்தாநாள் சொன்னாரு."
"திருட்டு நாயே! உயிரோட இருக்குற காலம் வரைக்கும் அதற்கு நான் சம்மதிக்கவே மாட்டேன். ஞாபகத்துல வச்சுக்கோ. இனி அவன் இந்தப் பக்கம் வரட்டும். அதுக்குப் பிறகு நான் யார்ன்றதை அவனுக்குக் காட்டுறேன். பொண்ணுகளைக் கெடுக்குறதுக்குன்னே இருக்கான்... தரித்திரம் பிடிச்ச பய!"
இரவில் படுப்பதற்கு முன்பு அவர்கள் இருவருக்குமிடையே பயங்கர சண்டை நடந்தது. தாய் பலகையை எடுத்து மகளுக்கு நேராக எறிந்தாள். வலியால் மகள் அழுததைக் கேட்ட பிறகும் தாயின் கோபம் சிறிது கூட தணியவில்லை. அவள் கத்தியைக் கையில் எடுத்தவாறு அடுப்பு இருக்கும் இடத்திற்கு வந்தாள்.
"அடியே... நான் உன்னைக் கொல்லப்போறேன். நன்றியில்லாதவ... தேவிடியா..."
சிறிது நேரம் சென்றபிறகு தாய் தன்னுடைய பாயில் சுருண்டு படுத்து உறங்கினாள். இரத்தத்தில் மூழ்கி மரணத்தைத் தழுவும் அழகான தன்னுடைய மகளை கனவில் கண்ட தாய் பயந்துபோய் உரத்த குரலில் கத்தினாள். படுத்திருந்த இடத்தைவிட்டு எழுந்து தேடியபோது அவளுடைய மகளைக் காணவில்லை. வெளியே காகங்கள் கரைந்து கொண்டிருந்தன. தாய் வாசல் பகுதிக்கு வந்தாள். முற்றத்தில் பார்த்தவாறு உரத்த குரலில் அழைத்தாள்:
"மாதவி... எங்கேடி இருக்கே?"
அந்தத்தாயின் குரல் அங்கிருந்த காகங்களை பயப்படச் செய்தது. காற்றில் தென்னை மரங்கள் ஆடிக் கொண்டிருந்தன.
"நீ என்னை விட்டுப் போயிட்டியா மாதவி? என் மகளே..."
அன்று சாயங்காலம் ஊர்க்காரர்கள் சிலர் அந்தத் தாய்க்கு ஆறுதல் சொல்ல வந்தபோது சொன்னார்கள்:
"இந்த அளவுக்கு நன்றியில்லாத பொண்ணா அவள்! பாசத்தோடு வளர்த்த தாயை வயசான காலத்துல தனியா விட்டுட்டு ஒருத்தன் கூட ஓடிப்போகணும்னு அவளுக்கு எப்படித்தான் தோணுச்சோ? இவ்வளவு கல்மனசு அவளுக்கு இருக்குன்னு யாரும் நினைக்கலியே!"
தாயின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஆனால், அவள் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை. தன்னுடைய மகளை இதுவரை தோன்றாத பாசத்துடன் அவள் அப்போது மனதில் நினைத்தாள்...