எச்சங்கள்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4688
ஒரு பெண்ணுக்கு தன்னுடைய கணவன் மரணத்தைத் தழுவும்போது, அவளுடைய உடல் உணர்வு இழக்கப்படுகிறது. தன்னுடைய உடலின் உண்மையான மதிப்பைத் தெரிந்திருந்த ஒரே மனிதன் உயிருடன் இல்லை என்பது தெரிய வரும்போது, பெண் உடலைப் பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதில்லை.
தைலம் தேய்த்து உருவி விடுவதையும் வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துவதையும் அவள் நிறுத்தி விடுகிறாள். கணவனின் அன்பைக் காப்பாற்றி வைத்திருப்பதற்காக மட்டுமே அவள் ஆடைகள் அணிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
உடலின் மதிப்பு குறைந்துவிட்டால் பெண் உயிரை விடவும் தயாராக இருப்பாள். மனதில் கற்பனை பண்ணிக் கொண்டிருக்கும் நெருப்பில் அவள் எரிந்து அழிவாள்.
கணவன் உயிருடன் இருந்தபோது, அவள் அதிகாலையில் எழுந்து விடுவாள். குளித்து, ஆடைகள் அணிந்து, வாசனைப் பொருட்களைத் தேய்த்த பிறகே அவளால் அவனிடம் செல்ல முடிந்தது. அவளின் கையிலிருந்த தேநீரை வாங்கிப் பருகி, அவளைப் பார்த்து சந்தோஷப்பட்ட பிறகுதான் அவனால் ஒரு புதிய நாளையே ஆரம்பிக்க முடிந்தது. பூமி என்றால் அவள்தான் அதன் சாரமாக இருந்தாள். விதைக்குள் இருக்கும் உயிரும் அவளாகவே இருந்தாள். அந்த காரணத்தால்தான் இருக்க வேண்டும்- மரணம் நெருங்கி வந்தபோது, அவன் அவளுடைய கையை இறுகப் பற்றிக் கொண்டான். அவளுடைய கையை விடாமல் இருந்தால், தான் வாழ்ந்து கொண்டே இருப்போம் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது.
என்னுடைய கணவர் இறந்தபோது, சில குடும்ப நண்பர்கள் கேட்டார்கள்:
“இனி எங்கே போகப் போகிறாய்?''
நான் கிராமத்தின் அடைத்துப் பூட்டப்பட்டிருக்கும் வீட்டிற்கோ, பிள்ளைகளின் வீடுகளுக்கோ என்னுடைய துணிப் பெட்டியுடன் பயணம் செய்வேன் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
நான் வசிக்கும் வாடகை வீடு பெரியதாகவும் அழகானதாகவும் இருந்தது. குடும்பத் தலைவனும் மனைவியும் ஒன்றாகச் சேர்ந்து வாழக்கூடிய ஒரு வீடு. விதவையாகி விட்டதால் சிறகு ஒடிந்த நான் தனியாக இங்கு வாழ்வதைத் தங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதைப்போல அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். ஒரு மனிதர் என் கணவரின் ருத்ராட்ச மாலையைத் தனக்குப் பரிசாக தரும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். இன்னொரு மனிதர் என் கணவரின் புத்தகங்களைக் கேட்டார்.
நான் என் கணவரின் செருப்புகளைத் தூசி தட்டி துடைத்து பளபளப்பாக்கி ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு ஸ்டாண்டின் மீது அடுக்கி வைத்தேன். அந்த செருப்புகளை அணிந்திருந்த காலடிகளை நான் நினைத்துப் பார்த்தேன். நீர் வந்து வீங்கிய பாதங்களை நான் நினைத்தேன். நகத்தை வெட்டித் தருமாறு கூறும்போது, அதற்கான தைரியம் இல்லாமல் தயங்கிக் கொண்டிருந்த என்னுடைய கோழைத்தனத்தையும் நான் நினைத்துப் பார்த்தேன்.
சொர்க்கத்தில் வசிக்கும் ஆன்மாக்களின் கால் நகங்கள் வளருமா? சொர்க்கத்திலும் ஆண்கள் முகத்தைச் சவரம் செய்து கொள்வார்களா?
என் கணவர் சமீப காலமாக என்னிடம் கூறுவதுண்டு.
“நம்முடைய சொர்க்கம் இங்கேதான் இருக்கிறது. எனக்கு இந்த வீட்டில் உன்னுடன் ஒன்றாகச் சேர்ந்து இருக்கும் வாழ்க்கை, சொர்க்க வாழ்க்கைதான் என்று தோன்றுகிறது.''
அவர் கூறிய சொர்க்கத்தில் பாடல்களைப் பாடும் தேவதைகளோ நடனமாடும் பேரழகிகளோ கிடையாது. நாங்கள் சிரிப்பதுண்டு- அது மட்டுமே.
பட்யாலா பல்கலைக் கழகத்திலிருந்து ஆராய்ச்சிக்காக இங்கே வந்திருந்த பேராசிரியர் இக்பால் கவுர் என்னிடம் கேட்டார்.
“நீங்கள் ஏன் கணவரை உதறி விடவில்லை?''
அந்தக் கேள்விக்கு ஒரு பழமையான நியாயம் மட்டுமே பதிலாக என்னிடம் இருந்தது. ஒருவர்மீது ஒருவர் அன்பு செலுத்துவது என்ற பழமையான நியாயம். பெண் விடுதலைப் போராளிகளில் கிட்டத்தட்ட முக்கிய நபராக அவர்கள் மனதில் நினைத்திருந்த நான் அன்பு என்ற சொல்லை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது அவர்களின் நினைப்பு. இரவு நேரத்தில் என்னுடைய வேலைக்காரர்களிடம் பேராசிரியர் இக்பால் என் திருமண வாழ்க்கையைப் பற்றி விசாரித்திருக்கிறார். நானும் என் கணவரும் ஒருவரோடொருவர் சண்டை போடுக் கொள்வதில்லை என்று அவர்கள் கூறியபோது, அந்த ஆராய்ச்சி அறிஞரின் முகம் சிவந்து போய் விட்டிருக்கிறது.
காய்ச்சல் வந்து செயல்பட முடியாமல் படுத்திருந்தபோது, அவர் கேட்டார்:
“என்னால் சிரமம் உண்டாகிவிட்டது. இல்லையா?''
நான் பதில் கூறவேயில்லை. "இல்லை” என்று கூறுவதற்கு தைரியம் வரவில்லை. "ம்...” என்று கூற மனம் வரவில்லை.
விதவைக் கோலம் கண்ணீரை வற்ற வைக்கலாம். ஒரு அனாதையான நாயின் விலை குறைந்த சுதந்திரத்தை ஒரு பெண்ணுக்கு அது அளிக்கிறது. அவள் எரிந்து கொண்டிருந்த வெயிலிலும் நடக்கலாம். மழையிலும் அலைந்து திரியலாம். யாரும் அவளை அழைத்து தலையைத் துவட்டமாட்டார்கள். அறிவுரை கூறுவதில்லை.
விதவைக்குக் கிடைப்பது ஒரு இரண்டாவது பிறவி. இழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் அந்த இரண்டாவது பிறவியில் இழக்கப்படாமல் எஞ்சியிருப்பது முதல் பிறவியில் தனக்குக் கிடைத்த பெயர் மட்டுமே. நான் என்றென்றைக்கும் மிசஸ். தாஸ் ஆகவே இருப்பேன்.