ஓநாய்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4612
ஓநாய்
எம். முகுந்தன்
தமிழில்: சுரா
மனம் முற்றிலும் நல்ல நிலைமையில் இல்லை. கவலை, விரக்தி, குழப்பம் நிறைந்த தன்மை, களைப்பு... வீட்டில் இருக்கும்போது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்று தோன்றும். அதனால் ஒழுங்காக அலுவலகத்திற்குச் செல்கிறேன். பதினைந்து, முப்பது நிமிடங்களுக்கு முன்பே போய் விடுகிறேன். நேரத்தைப் பார்ப்பதில்லை. அலுவலகத்திற்குச் சென்ற பிறகு, பணிகளைச் செய்வதில்லை.
வேலை செய்வதற்குத்தான் அலுவலகம் என்ற ஒன்றே இருக்கிறது. வேலை செய்ய வேண்டும். அது தெரியாமல் இல்லை. முடியவில்லை. அறையில் படுக்கையில் கால்களை நீட்டி, நன்கு விரித்து படுத்துக் கிடப்பதை நினைத்துப் பார்க்கிறேன். தூங்குவதையும் நினைத்துப் பார்க்கிறேன். அலுவலகம் விடுவதற்கு முன்பே வெளியேறுகிறேன். நேராக வீட்டிற்குச் செல்கிறேன். படுக்கிறேன். தூங்குகிறேன். தூங்க வேண்டும்... தூங்க வேண்டும்... வேறு எதுவுமே வேண்டாம். தூங்காவிட்டால் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக வேண்டியதிருக்கும். பழிக்குப் பழி, பைத்தியம், தற்கொலை போன்ற சிந்தனைகள்....
விருப்பங்கள் இல்லாமற் போயிருக்கின்றன. முழுமையாக அல்ல. ஒரே ஒரு விருப்பம் மீதமிருக்கிறது. ஒன்று மட்டுமே.... தூக்கம். தூங்க முடிவது என்பது... மிகப் பெரிய பாக்யம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு 'காக்டெய்ல்' பார்ட்டிக்கு அழைப்பு வருகிறது. அழைத்திருப்பவர் உயர் அதிகாரி. போக வேண்டியதுதான். போகவில்லை. ஆனால், இறுதியில் 'எட்வேர்ட் தேர்ட்' வருகிறது. பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஃபிலிம் க்ளப்பில் உறுப்பினர். ஒவ்வொரு வருடமும் இருபத்தைந்து ரூபாய் கொடுக்கிறேன். வெறுமனே பார்க்கலாம். எனினும், போகவில்லை. ஒரு ஜோக்கர் கிடைத்தும், தொடர்ந்து விளையாடக் கூடிய சூழ்நிலையை உண்டாக்க முடியவில்லை. இரண்டு ஜோக்கர்கள் இருந்தும், டிக்ளேர் செய்ய முடியவில்லை. ரம்மி போகட்டும்... 56 ஜாக்கியையும் ஒன்பதையும் கையில் வைத்துக் கொண்டு ப்ளஸ் ஒன் கூறினேன். சீட்டுக்களை வீசி எறிந்தேன். பார்ட்னர் வெற்றிப் பாட்டு பாட ஆரம்பித்தார். நாற்காலியிலிருந்து எழுந்தேன். சீட்டுக்களைத் தாழ்த்திய பார்ட்னர் வற்புறுத்தினார். முடியாது... விளையாட முடியாது. வேண்டுமென்றால் எல்லோருக்கும் வெறுமனே கொஞ்சம் காசு தரலாம்.
எனக்கு என்ன ஆனது? என்ன என்று அவர் ஆச்சரியப்பட்டார். ஒவ்வொரு நாளும் நான் நொறுங்கிக் கொண்டிருக்கிறேன். தகர்ந்து முடிந்து விட்டேன் நான்.
கண்ணாடிக்கு முன்னால் போய் நின்றேன். அவர் பார்த்தார். மெலிந்து போன முகம். ஒட்டிப் போன நெஞ்சு. சுருக்கங்கள் விழுந்த பெரிய நெற்றி. என்னுடைய கண்கள் என்னை பயமுறுத்தின. ஆனால், நான் எப்போதும் இப்படித்தான் இருந்தேன். எப்போதும்... கல்லூரியில் போராட்டங்கள் உண்டாக்கியபோது, சத்தியாக்கிரகம் செய்தபோது, நூல் நிலையத்திற்கு நெருப்பு வைத்தபோது இப்படித்தான் இருந்தேன். இளம் பெண்களை 'போர்' அடிக்கச் செய்து நடந்து திரிந்த காலத்திலும் இப்படித்தான் இருந்தேன். அப்போது காரணம் இதுவல்ல. ஆரோக்கியக் குறைவால் அல்ல. ஆரோக்கியக் குறைவு உள்ள அனைவரும் இந்த என்னைப் போல அல்ல. அப்படியென்றால் காரணம் என்ன?
காரணமா?
நீ நிறைய குடிக்கிறாய். குதிரை பருகும் மது. மனிதன் பருகுவது அல்ல. தேவையில்லாமல் சிந்திக்கிறாய். யோசிக்கிறாய். நிறைய வாசிக்கிறாய். உனக்கு விருப்பப்பட்ட விஷயம் காதல் அல்ல. க்ரைம் அல்ல. உன்னுடைய புத்தகத்தில் மனோதத்துவம், மாஸ்டர்பேஷன், மந்திரவாதம் ஆகியவை இருக்கின்றன. பிறகு உன் மனதிற்கு எப்படி அமைதி கிடைக்கும்? புட்டிகளை யமுனை நதியில் வீசி எறி. புத்தகங்களை அடுப்பில் எரியச் செய்.
முட்டாள்தனம்.... தவறான சிந்தனை... காரணத்தைத் தேட வேண்டாம். காரணம் - காரணமே இல்லை. இருந்தால், காரணங்கள் மட்டுமே இருக்கின்றன. உன்னுடைய மனம்... வெப்பம் உள்ள, வெப்பம் இருந்த இரத்தம்.... பைசா, யுங் கப்ரியல் மார்ஸல், சிமோன் த் புவர்... மனிதனையும் பிசாசையும் படைத்த மனிதன்... அனைவரும். அதனால் உற்பத்தியையும், மூலதனத்தையும் தேடி அலைய வேண்டாம். இப்போது தேவை மன அமைதியும் சந்தோஷமும்தான். தேவை உற்சாகம்தான். சத்தம் போட்டு பாட்டு பாட வேண்டும். ஒரே சிந்தனையுடன் சீட்டு விளையாட வேண்டும். முன்பு செய்ததைப் போல அருமையான ட்ராஃப்ட்களைத் தயார் பண்ணுவதற்கும், ஒரு நிமிடத்திற்கு நாற்பது சொற்களை 'டைப்' செய்வதற்கும் இயல வேண்டும். எதற்கு இந்த அமைதியற்ற தன்மை? துக்கம்? விரக்தி? நான் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஒரு நாளாவது. ஒரு மணி நேரமாவது. ஒரு நிமிடமாவது. அது என்னால் முடியாதா?
முன்பு அவனுக்கு நிறைய மன ரீதியான பிரச்னைகள் இருந்தன. மனம் முழுவதும் ஓநாய்கள். மஞ்சள் நிற கண்கள். வாயிலிருந்து எச்சிலை வழிய விடுகின்றன. ஓடுகின்றன. தரையில் கிடந்து நெளிகின்றன. இரவு பகல் என்றில்லாமல் ஊளை இடுகின்றன. அவன் கல்லை எடுத்து எறிந்து கத்தினான். ஓநாய்கள்.... நாய்கள் அல்ல, ஓடிப் போவதற்கு. ஜாக் லண்டனின் 'பலம் கொண்ட, பயங்கரமான' ஓநாய்கள், அவற்றைத் தோல்வியடையச் செய்வதற்கு, கண்டு பிடித்த வழி ஹிப்னாட்டிஸத்தைப் போல பலன் தரக் கூடியதாக இருந்தது. எந்தவித உணர்ச்சியும் இல்லாமல். எதைப் பற்றியும் சிந்திக்காமலே இருந்தான். விருப்பங்கள் தலையை உயர்த்தாமலிருக்கும்படி கவனமாக பார்த்துக் கொள்கிறான். வேதனை தவிர்க்க முடியாதது. ஒவ்வொருவனுக்கும் அவனுக்கென்று நேரம் இருக்கிறது. எனக்கான நேரம் இதோ வந்திருக்கிறது. புகார் இல்லை. கோபம் இல்லை. எதுவுமில்லை. அவனுடைய மனதில் ஆரவாரமில்லை. சலனமில்லை. இருட்டு இல்லை. வெளிச்சமில்லை. அவன் கடுக்காய் தின்று, பாலுறவு கொள்ளும் அளவிற்கு பலசாலியாக ஆனான். கஞ்சா தீனியாக ஆனது. துறவியாக ஆனான். தன்னுடைய சொந்த அன்னை இறந்தால் கூட, கண்களில் ஒரு துளி நீர் வராது என்று தோன்றியது.
உறக்கம்தான் சாத்தியம். உறக்கம்தான் எனக்கு நாசம் விளைவிப்பது. அவன் நினைத்தான். உறங்கக் கூடாது. உறங்காத நேரம் அதிகமாக இருந்தது. அதனால் அதிகமான கெட்ட பழக்க வழக்கங்களுக்கு ஆளானான். குடிக்காத சாயங்கால வேளை முற்றிலும் இல்லவே இல்லை என்றானது. நள்ளிரவிற்கு முன்பு திரும்பி வரும் இரவுகள் இல்லாமற் போயின. இது எலியைக் கொல்வதற்கு வீட்டை நெருப்பிற்கு இரையாக்குவதைப் போன்றது. அவன் நினைத்தான். மேலும் அதிகமான கவலைகளுக்கு உள்ளான மனிதனாக ஆனான். மேலும் ஏமாற்றங்களைச் சந்தித்தவனாக ஆனான்.
'உனக்கு பித்தம்...'
ஒருவன் சொன்னான். அவன் உள்ளங்கையை நீட்டிக் காட்டச் சொன்னான். நீட்டி காட்டிய உள்ளங்கையில் கையைச் சுருட்டி வைத்துக் கொண்டு குத்தினான். உடனே கையை மூடிக் கொள்ளும்படி கூறினான். மூடினான். திறக்கும்படி கூறினான். திறந்தான். உள்ளங்கை மஞ்சள் நிறத்தில் இருந்தது. அவன் சொன்னான்: