ஓநாய் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4613
காலையில் அவன் சூட்கேஸை எடுத்துக் கொண்டு விமான நிலையத்திற்குச் சென்றான்.
யாரிடமும் முன்கூட்டி கூறவில்லை. யாரும் வரவில்லை. வர வேண்டிய அவசியமில்லை. திடீரென்று வந்து நிற்கிறான். தெய்வத்தைப் போல. எல்லோரும் திகைத்துப் போவார்கள். குறிப்பாக அம்மா திகைப்படையட்டும். கவலைகள் நிறைந்த திகைப்பு அல்ல. சந்தோஷம் நிறைந்த திகைப்பு. அது நல்லதுதான். சிவப்பு நிற தலைப்பாகைகள் நகர்ந்து செல்கின்றன. ஆட்கள்... சத்தங்கள்... சுட்டுக் கொண்டிருக்கும் வெயில்... வெயில் நிலா வெளிச்சத்தைப் போல இருந்தது. சுமை தூக்குபவர்கள் அவனை ஆக்கிரமித்தார்கள். சூட்கேஸைத் தட்டிப் பறித்தார்கள்.
தார் போடப்பட்டிருந்த தெரு உருகுகிறது. கொதிக்கிறது. மரங்கள் தளர்ந்து கிடந்தன. வெப்பத்தால் பாதிக்கப்பட்ட மரங்கள். நிழல்கள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. பிச்சைக்காரர்கள்... குஷ்ட நோயாளி இருக்கிறான். கண் பார்வை தெரியாதவன் இருக்கிறான். ஒரு கால் இருப்பவன் இருக்கிறான். எல்லோரும் இருக்கிறார்கள். முன்பு இவர்கள் அங்கு இல்லை. எப்போது வந்தார்கள்... என்னுடைய ஊருக்கு? எதற்காக வந்தார்கள்?
நடந்து செல்லும்போது எண்ணற்ற கைகள் நீண்டு கொண்டு வந்தன. விரல்கள் அற்ற கைகள்.... எல்லோருக்கும் பணம் கொடுத்தான். இது குவைத்தின் எண்ணெய் வயலிலிருந்து வரும் இஸ்மாயில். நான்.... தங்கத்தால் ஆன கைக்கடிகாரம், தங்கத்தால் ஆன டாலர், தங்கத்தால் ஆன பல், பெட்டி நிறைய தங்கம்! தின்பதும் குடிப்பதும் தங்கத்தைத்தான்! ஆமாம்... இஸ்மாயில் நான்தான். தங்கத்தின் மீது ஆர்வம் இல்லாத, மனதின் சந்தோஷத்திற்காக தங்கத்தைத் தருவதற்கு தயாராக இருப்பவன்....
அவன் வாசலுக்கு வந்தான். நளினி அக்கா முற்றத்தில் இருந்தாள். கையில் தடியுடன் நின்று கொண்டு கூறுகிறாள்:
'நீ இங்கே வா.... காட்டுறேன். இன்னைக்கு உன்னை நான் கொல்றேன்.'
அவனைக் கண்டதும் பையன் பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். நளினி அக்காவின் கையிலிருந்து தடி கீழே விழுந்தது. ஆச்சரியத்துடன் அவள் சொன்னாள்:
'இது யாரு என் குருவாயூரப்பா?'
ஒரு நிமிடம் வீடு திகைத்துப் போய் நின்றது. தொடர்ந்து ஆரவாரம். அம்மா குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவன் முதலில் பதைபதைப்புடன் காணப்பட்டான். பிறகு சிரிப்பு வந்தது. அவனுடைய உதட்டில் சந்தோஷத் துளிகள்!
'என் மகன் வந்துட்டானே! இனி இறந்தாலும், பரவாயில்ல. என் குருவாயூரப்பா!'
கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீர்... உலர்ந்து போன கன்னத்தின் வழியாக.
'இப்பவாவது உனக்கு வரணும்னு தோணுச்சே! வயசான அம்மா இங்கே இருக்கான்ற நினைப்பு இப்பவாவது உனக்கு வந்ததே!'
அதற்குப் பிறகும் அழுதாள் அம்மா.
கண்ணீரில் புன்னகை. கண்ணீர் உலர்கிறது. சமையலறையில் பரபரப்பு ஆரம்பமாகிறது.
குளிக்கிறான். சாப்பிடுகிறான். சாய்வு நாற்காலியில் வந்து சாய்கிறான். சிகரெட் பற்ற வைக்கிறான்.
அறை முழுவதும் குழந்தைகள். அவர்கள் எல்லாம் யார்? அவர்கள் அனைவரும் யாருடைய குழந்தைகள்? ஒரு குழந்தையைக் கூட தெரியவில்லை. பலரும் கடந்த நான்கு வருடங்களுக்குள் வெளிச்சத்தைப் பார்த்தவர்கள். மற்றவர்கள், பார்த்தால் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு மாறிப் போய் விட்டார்கள். அம்மா சொன்னாள்:
'நல்ல கதை! உன் கூட பிறந்தவர்களையும், மருமக்களையும் பார்த்தால் யாரென்று தெரியலையா?'
வாசற்படியில் திகைத்துக் கொண்டு நிற்கும் மூன்று சிறிய பெண் பிள்ளைகளைப் பார்த்து அவன் கேட்டான்:
'யாரு நளினி அக்காவின்...?'
'மூணுமே நளினியின் பிள்ளைகள்தான்.'
அம்மா பெருமூச்சு விடுகிறாள். மூன்று பெண் பிள்ளைகளும், இரண்டு ஆண் பிள்ளைகளும்!
'இது நளினியின் நான்காவது பையன். வயசு இரண்டு, இரண்டரை கடந்திடுச்சு. பார்த்தால் தோணுதா?'
உண்மையிலேயே தோன்றவில்லை. ஒரு தளர்ந்து போன நாய்க் குட்டியைப் போல இருந்தான்.
'பெயர் என்ன?'
'ப்ரவீண்.'
'நல்லது. பெயரிலாவது ஆரோக்கியம் இருக்கிறதே!'
'பார்க்கலைன்னாலும் எப்பவும் மாமன்... மாமன்னு சொல்லிக்கிட்டே இருப்பான்' நளினி அக்கா தொடர்ந்து சொன்னாள்:
'மகனே, இது உன்னோட மாமன். போ.... ஒரு நமஸ்தே சொல்லு.'
நாய்க்குட்டி மெதுவாக அவனை நோக்கி நடந்து வந்தது. எலும்புடன் காணப்பட்ட கைகளைக் கூப்பி சொன்னது: 'நமஸ்தே!' கண்கள் பயத்தால் வெடிக்கப் போகிறது. அவனுடைய மனதிற்குள் அந்தக் காட்சி தோன்றியது. அவன் சூட்கேஸைத் திறந்தான். பிஸ்கட் டின்களையும் ரஸகுல்லா டின்களையும் வெளியே எடுத்தான். நாய்க்குட்டியின் கண்கள் பிரகாசமாக ஆயின. பிஸ்கட்டின் வாசனை பரவியதும் அம்மாமார்களின் இடுப்பிலிருந்தும் நாற்காலிகளுக்குப் பின்னாலிருந்தும் ஆர்வம் நிறைந்த சிறிய கண்கள் முன்னோக்கி வந்தன. எல்லா குழந்தைகளும் ஒரே தோற்றத்தில் இருந்தன. மெலிந்து போன கை, கால்கள். கண்களில் ஆர்வம். அவன் கேட்டான்:
'இந்த குழந்தைகளுக்கு தின்பதற்கும் குடிப்பதற்கும் எதுவும் கொடுக்குறது இல்லையா?'
'இங்கே இருக்குற நிலைமை உனக்கு என்னடா தெரியும்?'
'நான் ஒவ்வொரு மாதமும் நூறு ரூபாய் அனுப்புறேன்ல?'
'நூறு ரூபாய்! அரிசியோட விலை என்னடா? மண்ணெண்ணெய்யோட விலை என்னடா? புட்டிக்கு? சர்க்கரை கிடைக்குதா?'
அவன் எழுந்து வாசலுக்கு நடந்தான். குழந்தைகள் அவனுக்கு வழி உண்டாக்கிக் கொடுத்தன. வெயில் எரிந்து கொண்டிருந்தது. பலமாக பற்றி எரிந்து கொண்டிருந்தது. தெரு ஆள் அரவமற்று இருந்தது. வாசலில் விழுந்து கிடந்த நிழலில் ஒரு நாய் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. இடுப்பு எலும்புகள் உயர்ந்து கொண்டும், தாழ்ந்து கொண்டும் இருந்தன.
சாவதானமாக நளினி அக்கா கிடைத்தபோது, அவன் கேட்டான்:
'என்ன நளினி அக்கா இது? ஐந்து குழந்தைகளா?'
'தெய்வம் தர்றதுதானே? வாங்கிக்காம இருக்க முடியுமா?'
குற்றம் கடவுளுடையது. அவனுக்கு வெறுப்பு உண்டானது. அஸ்தமனம் கடந்து போன கண்கள். மஞ்சள் நிற கன்னங்கள். என் மனதில் இருந்த நீங்கள் இதுவல்ல. தலையில் சங்கு புஷ்பங்கள். கன்னத்தில் பவுடர். விரல் நுனியில் பிரகாசமான ஒரு குழந்தை. ஒன்றே ஒன்று மட்டும்....
வெயில் குறைந்ததும், வெளியேறினான். வெறுமனே சற்று நடப்பதற்கு. நடக்க நடக்க பதைபதைப்பு அதிகமாகிக் கொண்டு வந்தது. பதைபதைப்பு அல்ல... வெறுப்பு. கையற்ற நிலை. கிரகணத்தால் பாதிப்பு உண்டாகி வீங்கிய வயிறு. மெலிந்து போன கை, கால்கள். வெறுமை நிறைந்த சிறிய கண்கள். ஏக்கம் - எல்லா இடங்களிலும் இதேதான்... இதேதான்... வேறெதுவுமில்லை. ஏன் அது? அங்கு வசிப்பது பன்றிகளா?
மிகவும் ஆசைப்பட்டான் - அழகான ஆடை அணிந்த, கூர்மையும் குறும்புத்தனமும் நிறைந்த ஒரு குழந்தையைப் பார்ப்பதற்கு.
தின்பதற்கு இல்லை. பட்டினி. எப்படி அழகான ஆடைகளை அணிவார்கள்? கூர்மையான அறிவும் பிரகாசமும் உண்டாகும்? ஒவ்வொருவருக்கும் நான்கோ ஐந்தோ குழந்தைகள் இருக்கிறார்கள். பட்டினி எப்படி விலகிச் செல்லும்? தின்பதற்கு எப்படி இருக்கும்?