Lekha Books

A+ A A-

மமதா

mamadha

வ்வளவோ விஷயங்களைக் கூற வேண்டியதிருக்கிறது. எவ்வளவோ... எவ்வளவோ... அந்த அவஸ்தையில்தான் ஆழமான – சூனியமான இருள் மூடிய மவுனத்திற்குள் அவன் விழுந்து கிடந்தான்.

மலையின் அடிவாரத்தில் அவன் மட்டும் தனியாக இருக்கவில்லை. அவனுடன் மமதாவும் இருந்தாள். பிரம்பால் செய்யப்பட்டு சாயம் அடிக்கப்பட்ட அவளுடைய கூடையில் முந்திரிப் பருப்பும், பேரீச்சம்பழமும், கொதிக்க வைத்து ஆற வைத்த நீரும் இருந்தன. அவளுடைய கூடைக்கு வெளியே அடிவாரத்தில் இருக்கும் பூக்களும் புல் மேடும் வண்ணத்துப் பூச்சிகளும் இருந்தன.

சிறு செடிகளும் பெரிய மரங்களும் இருந்தன. மரக்கிளைகளில் கிளிகள். அவை கூட்டுக்குச் சென்று அடைக்கலம் அடையும் வேகத்தில் இருந்தன. அடிவாரத்தின் கிழக்கு மூலையில் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ஆழம் குறைவான, அகலமும் குறைந்த ஒரு ஆறு. ஆற்றின் அக்கரையில் அடிவாரம் மேல்நோக்கி ஏற ஆரம்பித்தது. மேலே ஏறி ஏறி, அடிவாரம் குன்றானது; மலை ஆனது. மலைத் தொடரானது... மலைத் தொடர்கள் மவுனமானது.

மலைத் தொடர்களுக்கும் எத்தனை எத்தனையோ விஷயங்கள் கூறுவதற்கு இருக்க வேண்டும். அப்போதுதானே மவுனம் வந்து ஆக்கிரமிக்கும்.

மவுனம் வந்து மூடுகிறதா? மவுனத்திற்கு மத்தியில் ஒரு மனிதன் சென்று விழுகின்றானா? இல்லாவிட்டால் ஒருவன் மவுனத்தைத் தன் கைப்பிடிக்குள் கொண்டு வருகிறானா? ஒரு சுயம்வரமே அல்லவா அங்கு நடக்கிறது ? மவுனத்தை மணந்து வார்த்தைகளை அடக்குவது... வேறொரு மாதிரி கூறுவதாக இருந்தால், மவுனம் என்ற வாளைப் பயன்படுத்தி வார்த்தைகளைத் துண்டிப்பது... சிந்தனையில் மூழ்கினால் ஆபத்து. ஆபத்து வானம் வரையில் வளரும். வானத்தைக் கடந்தும் வளரும். உணர்வற்ற நிலையின் எல்லையை அடைந்து நிற்கும். அப்படியென்றால் பைத்தியக்காரத்தனத்தின் அருகில்... இல்லை... சுத்தமான பைத்தியக்காரத்தனத்தில்தான்.

மமதா முந்திரிப்பருப்பைக் கொறித்தாள். பேரீச்சம்பழத்தைத் தின்றாள். கொதிக்க வைத்து ஆற வைத்த நீரைப் பருகினாள். அவளுடைய கையிலிருந்து புட்டியை வாங்கி அந்த மனிதனும் ஒரு மடக்கு நீரைக் குடித்தான். பிறகு ஒரு சிகரெட்டைக் கொளுத்தினான்.

கிளிகளின் சத்தம் குறைந்திருந்தது. அவை பெரும்பாலும் கூட்டுக்குள் போய்விட்டன. எனினும், அடிவாரத்தில் வெளிச்சம் இருந்தது.

‘‘நாம திரும்பிப் போகலாமா?” - மமதா சொன்னாள். ‘‘இல்லாவிட்டால்...” அவள் தொடர்ந்து சொன்னாள்: ‘‘நாம இநத் இரவு இங்கேயே தங்கிடுவோமா?” பூகம்பங்களின் காலம் அது. கெஸ்ட் ஹவுஸில் இருக்கும் அறையைவிட மிகவும் பாதுகாப்பானது திறந்து கிடக்கும் அந்த இடமல்லவா ? இருட்டின் அந்த வெளிச்சத்தில் ஒரு இரவு. வேறு யாரும் இல்லாத, பறவைகள் கூட தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு இரவு... கனவைவிட அழகான இரு இரவு... எந்தச் சமயத்திலும் நினைவிலிருந்து மறையாத ஒரு இரவு...

‘மமதா, நீ ரொம்பவும் அதிகமா பேசுறே’... அவன் தனக்குள் சொன்னான். அது சரியானதா? வார்த்தைகளைக் குறைத்துக் கொண்டு, மவுனத்தை ஏற்றுக் கொள்வதுதானே நாம் செய்ய வேண்டியது !

‘‘பிறகு சாப்பாட்டுப் பிரச்சினை...” -மமதா அதற்குப் பிறகும் தன் பேச்சைத் தொடர்ந்தாள்: ‘‘முந்திரிப் பருப்பும் பேரீச்சம் பழமும் சாப்பிட்டு ஒரு இரவை நாம் செலவிட முடியாதா? உனக்கு உன் சிகரெட்டுகள் போதாதா?”- அவிழ்ந்த கூந்தலை பின்னோக்கி எறிந்தவாறு மமதா சிரித்தாள்.

அவளுடைய உருவ அழகு அவனை ஆசைகொள்ளச் செய்தது. அவளுடைய சிறிதும் நிறுத்தாத வார்த்தைகள் அவனை வெறுப்படையச் செய்தன.

இருட்டிக் கொண்டிருக்கும் வானத்தைப் பார்த்தான். அவன் மிகவும் அமைதியாக இருந்தான்.

மமதாவின் குரல் மிகவும் இனிமையாக இருந்தது. அந்தக் குரலை அவன் மிகவும் விரும்பினான். இப்போதும் விரும்புகிறான்.

அவள் ‘உம்’ கொட்டும்போது... மெதுவாக முனகும்போது... மெல்லிய குரலில் சிணுங்கும்போது...

அந்தக் குரலின் இனிமையில் அவன் தன்னை முழுமையாக மறந்து காணாமல் போய்விடுகிறான்.

அவள் பாடும்போதும்தான்...

ஆனால், இப்போது அவள் இடைவிடாமல் பேசும்போது அவனுக்கு வெறுப்பு உண்டாகிறது. அவன் பைத்தியம் பிடித்தவனைப் போல ஆகிவிடுகிறான். அந்த நிலை கோபமாகவோ விலகலாகவோ மாறுகிறதா என்ன ?

வானத்தில் அலைந்து கொண்டிருந்த கண்கள் அவளுடைய கண்களை நோக்கித் திரும்பியபோது, வானத்தை வென்றெடுக்கக்கூடிய அழகு இருப்பதை அவன் பார்த்தான். அவளைப் பிடித்து நெருக்கமாக ஆக்கி தன் மார்பின்மீது சாய வைக்கலாம் என்று அவன் நினைத்தான். ஆள் அரவமற்ற அடிவாரம்... புல் மெத்தை... மாலை நேரம்... ஆற்றின் சத்தம் மட்டும்...

மமதா ஒரு புதிய பெண்ணாக இருப்பாளோ ?

வாழ்க்கையில் அவளை முதல் தடவையாகப் பார்க்கிறோம் என்று அப்போது அவன் நினைத்தான்.

புதிய பெண்... புதிய சூழ்நிலைகள்... காற்றில் இதற்கு முன்னால் அனுபவித்திராக ஏதோ ஒரு இனிய மணம் பரவியிருக்கிறது. எங்கிருந்தோ காதுகளில் கனவுகளை உண்டாக்கும் ஒரு பாடல் மிதந்து வருகிறது. அந்தப் பாடல் எங்கிருந்து வருகிறது ? அந்த இனிய வாசனை எங்கிருந்து ?

புல் மெத்தையின் சுகம்... ஆற்றின் அழகு... புதுப் பெண்ணின் புத்துணர்ச்சி...

உடலெங்கும் மோகம் அரும்புகிறது.

தன்னைப் போன்ற ஒருவனுக்குத் தேவையில்லாதது இந்த மோகம்... மோகத்தின் காலம்தான் முடிந்துவிட்டதே! மோகத்திற்கான வயதுதான் கடந்துபோய்விட்டதே!

இல்லை என்று உடல் கூறுகிறது. சூடான ரத்தக் குழாய்கள் கூறுகின்றன.

அப்போது-

‘‘நீ இபப்டி எதை சிந்திச்சிக்கிட்டு இருக்கே?” - மமதாவின் குரல். ‘‘அறைக்குப் போறோமா?- இல்லாவிட்டால் இந்த இரவு வேளையில் இங்கேயே... இந்த அடிவாரத்திலேயே படுக்கையறை உண்டாக்குகிறோமா? உனக்குத் தேவைப்படும் மாலை நேர மருந்து காரில் இருக்குல்ல?  உனக்கு அது போதாதா? இல்லாவிட்டால், நல்ல உணவு சாப்பிடணும்னு எண்ணம் இருக்குதா? போறதா இருந்தால் போகலாம். இல்லை... இங்கேயே இருப்போம்னா இருப்போம். நான் எதற்கும் தயார். நேரத்தை வீணாக்க வேண்டாம். ஒரு முடிவை எடு...”

அவனுக்கு அதைக் கேட்டு கோபம் உண்டானது.

‘மமதா... நீ நிறைய பேசுறே...’ அவன் தனக்குள் கூறினான். முக்கியமில்லாத விஷயங்கள்... அர்த்தமற்ற வார்த்தைகள்...

அவளுக்குள் அறிவாற்றல் இருக்கிறதா? அவளுடைய கண்களிலும் உதடுகளிலும் காம நெருப்பு பற்றி எறிகிறதா? அவளுக்குள் உண்டான அறிவாற்றல் தன் மீதும் படர்ந்து விட்டதா?

அவனுக்கு ஒரு ஆசை தோன்றியது.

கூடாது... கூடாது...

காமத்தை அடிமைப்படுத்தும்... இல்லாவிட்டால்... அப்படி அடிமைப்படுத்த நினைக்கவாவது செய்யும் ஒரு மனிதன், ஆசைகளை வழிபடக்கூடாது.

‘‘நீ கருஞ்சாத்தி என்ற விஷப் பாம்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கியா?”... மமதா மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள்:

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel