மமதா - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6785
‘‘அந்தப் பாம்பின் பெயர் கருஞ்சாத்திதானே? காட்டில் மரங்களின் உச்சியில் வாலைச் சுற்றிக் கொண்டு தலை கீழாகத் தொங்கிக் கொண்டுதானே அவை உடலுறவு கொள்கின்றன? அந்தச் சமயத்தில் அந்தப் பாம்புகளின் விஷம் அதன் உச்சத்தை அடைகின்றன என்று அந்தக் கால மனிதர்கள் சொல்றாங்க. கேக்குறதுக்கு சுவாரசியமா இருக்குல்ல? அப்படின்னா, அந்த விஷத்திற்கும் அறிவாற்றலுக்கும் சம்பந்தம் இருக்குதா?”
அவனுக்கு வெறுப்பு தோன்றியது.
‘‘நீ என்ன எதுவுமே சொல்லாம இருக்கே?”... அவள் ஒரு கையை நீட்டி அவனுடைய தோள்மீது வைத்தாள். அவளுடைய கையை விலக்கிவிட்டு, அவன் எழுந்தான். அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தவாறு, ஆற்றை நோக்கி நடந்தான்.
யார் இவள்? இந்த மமதா?
சினேகிதியா? காதலியா? காசு கொடுத்து உடன் படுப்பதற்காக வந்த ஒரு விலைமாதுவா?
பல வருடங்களுக்கு முன்பிருந்தே தனக்கு அவள் நன்கு பழக்கமானவள் என்பதாக அவனுக்குத் தோன்றியது. அதே நேரத்தில் அந்தக் காலத்தில் இருந்து உள்ள விஷயங்களைத் தீர்மானிப்பதற்கு தான் யார்? யாரும் அல்ல.
யாரும் அல்ல.
ஆனால், முதல் அமிர்தப் பால் நாக்கு நுனியில் படும்போது அவளுடைய ருசி.
தங்கையின் முடிக்கு அவளுடைய அழகு. காதலியின் முதல் முத்தத்திற்கு அவளுடைய ருசி. மனைவியின் உடலுக்கும் மெத்தைக்கும் அவளுடைய நெருப்பு. கூலி வாங்கிக் கொண்டு வரும் இரவு ராணிகளின் ஒரே இரவுக்கு அவளுடைய இன்பம்.
அப்படியென்றால் அவள் ?
தாயா? சகோதரியா? காதலியா? மனைவியா? விலைமாதுவா? பிள்ளையா? இல்லாவிட்டால் எல்லாம் சேர்ந்ததா?
அப்போது பாடல் ஆரம்பமானது. பாடுவது யார்? பறவைகள் அல்ல. அவை கூட்டுக்குள் அடங்கிவிட்டன. மமதா அல்ல. அவள் முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு ஒரு கற்சிலையைப்போல அங்கு உட்கார்ந்திருக்கிறாள்.
எது எப்படியோ - பாடல் இருக்கிறது. பாடலுக்கு இசை இருக்கிறது. இசைக்கருவிகள் இல்லை. வார்த்தைகள் இல்லை. எழுத்துகள் இல்லை. ஆனால் அர்த்தம் இருக்கிறது என்று அவனுக்குத் தோன்றியது. அர்த்தம் மட்டுமல்ல - இனிய சுகமும்.
பாடுவது நதியா? காற்றா? சிறிய செடிகளா? யார் வேண்டுமானாலும் இருக்கட்டும். யார் பாடினாலும் பாட்டு பாட்டுதான். அபூர்வ ராகங்களின் அருமையான இசையில் அவன் தன்னையே இழந்துவிட்டான்.
இசைதான் உண்மையானது. நாதம், ஆதிநாதம், ஓங்காரப் பொருள்... அதை வெல்லும் உண்மை எங்கே இருக்கிறது?
நாதத்திற்கு மணமும் இருக்கிறதா? ஏதோ ஒரு மணம் அவனை வேட்டையாட ஆரம்பித்தது. அது அவளுடைய வாசனை அல்ல! பிறகு? இசையின் வாசனை அது. அந்த வாசனை அவனைப் பைத்தியம் பிடிக்கச் செய்தது. தன்னுடைய காலடிக்குக் கீழே மண் நீங்குகிறதா? மனதின் கால் சுவடுகள் மண்ணில் பதிவதில்லையே!
ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தான். காலமெல்லாம் அலைந்து திரிந்தான்.
எவ்வளவு நாட்கள்?
எவ்வளவோ ஆட்களுடன் அறிமுகமானான். எத்தனையோ ஊர்கள். எவ்வளவோ மனிதர்கள். எத்தனையோ சூழ்நிலைகள். எவ்வளவோ பெண்கள். இறுதியில் இவள். இந்த மமதா ஒரு சந்தேகம். இவள் கடைசியா? இல்லாவிட்டால் ஆரம்பமே இவளிலிருந்தா?
முதல் பாவத்திற்கான அடிப்படை இவளா?
அவன் மிகப் பெரிய தார்மீக பிரச்சினையின், ஒரு சித்தாந்த ரீதியான குழப்பத்தின் சுழிகளுக்குள் மாட்டிக் கொண்டான். ஒரு முடிவையும்
எடுக்க அவனால் முடியவில்லை. எல்லாம் எங்கேயோ அதிர்ந்து நின்று விடுகின்றன.
தவறுகள் எங்கிருந்து ஆரம்பமாகின்றன ?
ஏதன் தோட்டத்தில் இருந்த அறிவின் கனியிலா? இல்லாவிட்டால் பாஞ்சாலி துகில் இழந்ததிலா?
ஒரு யுகப் பிறவி.
ஒரு பாரதப் போர்.
எல்லாவற்றின் ஆரம்பமும் தவறுகள்தான்.
அவள்தான் ஆரம்பமா?- அவள் ஆரம்பமும் மட்டுமா?
அவள் தொடர்ச்சியாகவும் இருந்தாளே!
மூன்று காலங்களிலும் அவள் நிறைந்து நின்றிருக்கிறாள்.
பெயரை மாற்றி மாற்றிக் கூறுகிற எல்லா பெண்களும் மமதாவாக இருந்தார்களா?
சொந்தம் என்று நினைத்தவையெல்லாம் மமதாவாக இருந்தனவா? இந்த அடிவாரத்தின் இசைகூட மமதாதானா?
அவள் சற்றுத் தள்ளி இருக்கிறாள். முந்திரிப் பருப்பைக் கொறித்துக் கொண்டிருக்கிறாள். பேரீச்சம்பழத்தைத் தின்று கொண்டிருக்கிறாள். கடுமையான முகத்துடன், கறுத்த முடியுடன் மாலை நேரத்தில் அமர்ந்திருக்கிறாள் மமதா.
அவள் கோபப்படும்போது அனைத்தும் தளர்ந்து போகின்றன; தகர்ந்து விடுகின்றன.
அவளை நிராகரிக்க வேண்டும் என்று தோன்றியபோது அவன் பதைபதைப்பு அடைந்துவிட்டான். தனக்குத்தானே அவன் கேட்டுக் கொண்டான். அவளையா? நிராகரிக்க வேண்டுமா? உன்னால் அது முடியுமா மனிதா? அவள் உன்னுடைய தாய் அல்லவா? உன்னைப் பத்து மாதங்கள் சுமந்து பெற்ற, உனக்கு அமிர்தப் பால் புகட்டி வளர்த்த தாய்... அவள் உன் சினேகிதி அல்லவா? தங்கை அல்லவா? மனைவி அல்லவா? காதலி அல்லவா? படுக்கையறையில் எரியும் போதைப் பொருள் அல்லவா? சிறப்புத் தகுதிகள் கொண்ட விலைமாது அல்லவா? அவளுடைய வடிவங்கள் பல. முகங்கள் பல. குணங்கள் பல.
அவளை நிராகரிக்க உன்னால் முடியுமா? அதற்கான தைரியம் உனக்கு இருக்கிறதா? அதற்கான மனவலிமை உனக்கு இருக்கிறதா?
மொத்தத்தில் அவன் பதறிப்போய் விட்டான்.
அவளை இல்லாமற் செய்யும் ஆற்றல் தனக்கு இல்லை என்று அவனுக்குத் தோன்றியது.
ஆனால்-
‘மமதா ஏமாற்றுவாள்’ என்று குரு வசனம் கூறுகிறது. குரு வசனம் தொடர்கிறது.
‘ஞானத்தில் இருந்தும் நன்மையில் இருந்தும் அகற்றுவாள். அஞ்ஞானத்தின், கெட்டதின் படுகுழிக்குள் வீசி எறிவாள். மிகப் பெரிய அழிவுக்கு அழைத்துச் செல்வாள்.’
அவன் ஏதோ தெளிவற்ற யோசனைகளில் மூழ்கித் தன்னை இழந்து கொண்டிருந்தான்.
அவன் அப்படியாக சப்பணமிட்டு உட்கார்ந்தான். சரளமான - எளிமையான மொழியில் ஞானக்கருத்துக்களை உதிர்த்துக் கொண்டிருந்த குருவின் அழகான முகமும் அழகான புன்னகையும் அவனுடைய மனதிற்குள் தோன்றின.
மானிட சமுதாயத்தின் வரலாற்றிலிருந்தும் மனிதனின் வாழ்க்கை அனுபவங்களிலில் இருந்தும் மமதாவின் வஞ்சனைச் செயல்களை உதாரணங்களுடன் குரு காட்டினார். ஞானோதயத்தின், நன்மையின் பாதையை நோக்கி குரு வெளிச்சத்தைக் காட்டினார்.
‘அது மிகவும் மோசமான பாதை’- அவர் கூறினார்.
அவன் வெள்ளை நிறத்தில் இருந்த உருண்டையான கற்களை ஆற்று நீருக்குள் எறிந்து கொண்டிருந்தான்.
இறுதியில் அவன் திரும்பி அவளை நோக்கி நடந்தான்.
‘‘நாம போவோம்” - அவன் சொன்னான்.
அவள் அதைக் கேட்டு உற்சாகமானாள். அவளுக்குள் காம எண்ணங்கள் அலைமோதுவதை அவனால் உணர முடிந்தது. அவளுடைய கண்களிலும் உதடுகளிலும் காம நெருப்பு எரிந்து கொண்டிருப்பதை அவன் பார்த்தான்.