ஒரு சிறிய குறும்புத்தனம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4513
ஒரு சிறிய குறும்புத்தனம்
(ரஷ்ய கதை)
ஆன்டன் செக்காவ்
தமிழில்: சுரா
குளிர் காலத்தின் பிரகாசமான ஒரு மாலை வேளை. காலடிகளில் பனி, மரத்துப் போகச் செய்யும் அளவிற்கு குளிர். பெரிய ஒரு மலையின் மேலே என்னுடைய கையில், தன் கையைக் கோர்த்தவாறு நின்று கொண்டிருந்த நாதெங்காவின் நெற்றியில் விழுந்து கிடந்த தலைமுடிகளிலும், மேலுதடில் இருந்த சிறு சிறு ரோமங்களிலும் பனியின் பிரகாசம்... எங்களுடைய காலடிகளுக்குக் கீழே கீழ் நோக்கி நீண்டு கிடக்கும் மலைச் சரிவின் பிரகாசத்தில் சூரியன் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தது. எங்களைத் தவிர, மலையின் மேலே துணியால் மூடப்பட்ட ஒரு சறுக்கல் வண்டி மட்டும்...
'நாதெங்கா, நாம் சற்று கீழ் நோக்கி சறுக்கி இறங்கலாம்!' - நான் வற்புறுத்தும் குரலில் கூறினேன்: 'ஒரு முறை மட்டும்! எந்தவொரு பிரச்னையும் வராது என்பதற்கு நான் உறுதி கூறுகிறேன். மிகவும் சுவாரசியமாக இருக்கும்.'
ஆனால், நாதெங்காவிற்கு பயமாக இருந்தது. அவளுடைய சிறிய செருப்பின் அடிப்பகுதிக்குக் கீழே இருந்து பனி மூடிய அந்த மலைச்சரிவின் கீழ்ப் பகுதிக்கான தூரம் அச்சமூட்டும் ஆழமாக தோன்றியது அவளுக்கு. அதைப் பார்த்தால் அவளுக்கு மூச்சை அடைக்கும். இதயம் நின்று விடும். அதன் வழியாக ஊர்ந்து இறங்கக் கூடிய சாகசத்திற்கு வற்புறுத்தினால், ஒருவேளை அவள் இறந்து போனாலும் போகலாம். இல்லா விட்டால், பைத்தியம் பிடிக்கும்.
'ஏய்... பரவாயில்லை' - நான் உற்சாகமூட்டினேன்: 'பயப்படாதே. இப்படி பலவீன மனம் கொண்டவளாக இருக்கலாமா, பயந்து நடுங்கிக் கொண்டு?'
இறுதியில் நாதெங்கா ஒத்துக் கொண்டாள். தன்னுடைய இறுதி நிமிடம் நெருங்கி விட்டது என்பதைப் போல அவளுடைய முகம் அப்போது இருந்தது. வெளிறி நடுங்கிப் போய் நின்று கொண்டிருந்த அவளை நான் கையைப் பிடித்து சறுக்கல் வண்டியில் ஏற்றி, இடுப்பை இறுக பிடித்தேன். பள்ளத்தை நோக்கி ஒரு வேகமான குதிப்பு... எங்களுடைய சறுக்கல் வண்டி துப்பாக்கி குண்டைப் போல காற்றில் சீறிப் பாய்ந்தது. காற்று முகத்தில் பலமாக மோதி, செவிகளுக்குள் சத்தம் உண்டாக்கியது. காற்றின் பலத்தால் சாட்டையை வைத்து அடிப்பதைப் போல எங்களுக்கு தோன்றியது. தோளிலிருந்து தலையைப் பிடித்து பறிப்பதைப் போல இருந்தது.
சுவாசம் விட முடியவில்லை. இரண்டு பேர் ஒன்றாகக் கிடைத்த சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டு பிசாசு எங்களை நரகத்தை நோக்கி பிடித்து நெருக்கிக் கொண்டு செல்வதைப் போல தோன்றியது. சுற்றிலுமிருந்த காட்சிகள் அனைத்தும் மங்கலான ஒரு கோட்டைப் போல மிகவும் வேகமாக பாய்ந்து சென்றன. இன்னும் ஒரு நிமிடம் கடந்தால், வாழ்வே இல்லாமற் போய் விடும்! அப்போது நான் அமைதியான குரலில் முணுமுணுத்தேன்: 'நாதெங்கா, எனக்கு உன்னை எந்த அளவிற்கு பிடித்திருக்கிறது, தெரியுமா?'
சறுக்கல் வண்டியின் வேகம் குறைந்தது. காற்றின் இரைச்சலும் முனகலும் முன்பு இருந்த அளவிற்கு பயங்கரமாக இல்லை. இப்போது எங்களால் நன்றாக மூச்சு விட முடிந்தது. இறுதியில் நாங்கள் கீழே வந்தோம். நாதெங்கா இறந்து விட்டதைப் போல இருந்தாள். வெளிறிப் போய், மெதுவாக மூச்சு விடுவது மட்டும்.... நான் அவளைப் பற்றி, எழச் செய்தேன்.
'எதைத் தருவதாக கூறினாலும், இனிமேல் நான் இந்த காரியத்தைச் செய்ய மாட்டேன்' - பயம் வெளிப்படும் கண்களால் என்னையே வெறித்துப் பார்த்தவாறு அவள் கூறினாள்: 'இந்த உலகத்திலிருக்கும் எதைத் தருவதாக கூறினாலும் சரி... நான் தயாராக இல்லை. இறக்கவில்லை. அவ்வளவுதான்...'
சிறிது நேரம் கழித்து கிட்டத்தட்ட சாதாரண நிலைக்கு வந்தவுடன், அவள் என்னுடைய கண்களையே கேள்வி கேட்பதைப் போல பார்த்தாள் - 'உண்மையிலேயே நீதான் நான்கு வார்த்தைகளை உச்சரித்தாயா? இல்லாவிட்டால், காற்றின் முனகளில் அது கேட்டதைப் போல எனக்கு வெறுமனே தோன்றியதா?' என்று கேட்பதைப் போல.... நான் அவளுக்கு அருகில் நின்றவாறு புகை பிடித்துக் கொண்டும், கையுறைகளைக் கொஞ்சிக் கொண்டும் இருந்தேன்.
அவள் என் தோளில் கையை வைத்தாள். நாங்கள் நீண்ட நேரம் அந்த மலைச் சரிவின் வழியாக நடந்தோம். பதில் கிடைக்காத அந்த கேள்வி அவளுடைய மன அமைதியைக் கெடுத்துக் கொண்டிருந்தது. அந்த வார்த்தைகள் உண்மையிலேயே கூறப்பட்டவையா, இல்லாவிட்டால்....? உண்மையா, இல்லாவிட்டால் தோணலா?
பெருமை, பாராட்டு, சந்தோஷம், வாழ்க்கை - அனைத்தும் அடங்கிய பெரிய ஒரு பிரச்னையாக அந்த கேள்வி இருந்தது. இந்த உலகத்திலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை... நாதெங்கா என்னுடைய முகத்தை நோக்கி கவலை நிறைந்த, கேள்விகள் நிறைந்த பார்வையைச் செலுத்திக் கொண்டேயிருந்தாள். நான் ஏதாவதொன்றைக் கூற மாட்டேனா என்று எதிர்பார்த்தாள். அவளுடைய முகத்தில் எப்படிப்பட்ட உணர்ச்சிகள் வெளிப்பட்டன! தனக்குத் தானே பெரிய ஒரு போராட்டத்தில் அவள் ஈடுபட்டிருந்தாள்! அவள் என்னவோ கேட்க நினைத்தாள்.... கூற நினைத்தாள்.... ஆனால், வார்த்தைகள் கிடைக்கவில்லை. பயம், பதட்டம், மிகுந்த மகிழ்ச்சி...
என்னை நோக்கி பார்க்காமல் அவள் கேட்டாள்: 'நான் ஒரு விஷயம் கூறட்டுமா?'
'ம்...'
'இன்னொரு முறை நாம் அப்படி போகலாமா? .... சறுக்கல் வண்டியில் கீழ் நோக்கி...'
நாங்கள் மலையின் மேல் நோக்கி செல்லும் படிகளில் ஏறினோம் வெளிறிப் போய் நடுங்கிக் கொண்டிருக்கும் நாதெங்காவை மீண்டும் சறுக்கல் வண்டிக்குள் பிடித்து ஏற்றி அந்த ஆழத்தை நோக்கி தாவினேன். மீண்டும் காற்றின் இரைச்சல், ஊளை இடும் சத்தம்.... அனைத்தும் மிகவும் சத்தமாக கேட்டுக் கொண்டிருந்த நிமிடத்தில் நான் மெதுவான குரலில் கூறினேன்: 'நாதெங்கா, எனக்கு உன்னை எந்த அளவிற்கு பிடித்திருக்கிறது, தெரியுமா?'
சறுக்கல் வண்டி அடிவாரத்தை அடைந்து நின்றபோது, நாதெங்கா திரும்பி அந்த மலையையே பார்த்தாள். பிறகு.... சிறிதும் உணர்ச்சி இல்லாமல் பேசும் என்னுடைய குரலைக் கேட்டவாறு என்னையே கண்களை அகல திறந்து வைத்து பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நின்றிருந்தாள். அவளுடைய தோற்றமும், ஆடைகளும் கூட உள்ளுக்குள் நிறைந்திருந்த கடுமையான பதைபதைப்பையும், மன குழப்பத்தையும் வெளிப்படையாக காட்டின. அவளுடைய முகத்தில் அந்த கேள்வி தெரிந்தது: 'அந்த வார்த்தைகளைக் கூறியது யார்? அவன் கூறினானா, இல்லாவிட்டால், எனக்கு வெறுமனே தோன்றியதா?'
அவள் முழுமையான தர்மசங்கடமான நிலையில் இருந்தாள். என் கேள்விக்கு எந்தவொரு பதிலும் இல்லை, கவலை நிறைந்த வெறித்த பார்வை மட்டும். அவள் அழுகையின் விளிம்பில் இருந்தாள்.