காய்கறிக்காரி நாராயணி
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8242
வாழைக்குலை, முருங்கைக்காய், வெண்டைக்காய், கீரை, கரிசலாங்கண்ணி, தாழம்பூ, ரோசாப்பூ, தேங்காய், இளநீர்- இப்படி பலவகைப்பட்ட விஷயங்கள் நாராயணியின் கூடையில் இருக்கும். அவளின் வழக்கமான வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கக் கூடியவைதான் அவை எல்லாம்.
காலையில் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் பழைய கஞ்சி கொடுத்து விட்டு, எஞ்சியிருப்ப தைத் தான் சாப்பிட்டுவிட்டு, தலைமுடியை வாரி கட்டி, ப்ளவ்ஸுக்குமேலே ஒரு மேற்துண்டை எடுத்து அணிந்து, கூடையை எடுத்து தலைமீது வைத்துக் கொண்டு, அவள் நகரத்தை நோக்கிப் புறப்பட்டாள். பக்கத்து வீட்டுக்காரிகளான பங்கஜாக்ஷியும் ஜானகியும் மாதவியும் அவளின் சினேகிதிகள். காய்கறிகளின் விலை, பெரிய வீடுகளுக்குள் நடக்கும் உள் நாடகங்கள், கணவர்களும் சகோதரர்களும் வீட்டுக்குள் கொண்டு வரும் நாட்டு விஷயங்கள், காதல், திருமணம், பிரசவம், குடும்பச் சண்டை போன்ற பலவிதப்பட்ட விஷயங்களைப் பற்றி தங்களுக்குள் வாதம், எதிர்வாதம் செய்தவாறு அவர்கள் நகரத்திற்குள் நுழைவார்கள். பிறகு, நான்கு பேரும் நான்கு வேறு வேறு வழிகளில் பிரிவார்கள். சில நேரங்களில் மீண்டும் ஒன்று சேர்வார் கள். பிறகு மீண்டும் பிரிவார்கள். வியாபாரத்தில் பெரிய போட்டி இருக்கும் அவர்களுக்குள்.
நாராயணி எல்லா வீடுகளிலும் ஏறுவாள். ஆனால், சில வீடுகள் அவளுடைய நிரந்தர வாடிக்கையாக இருக்கும். அந்த வீடுகளுக்கு தன் சிநேகிதிகள் செல்வதை அவள் விரும்ப மாட்டாள். அப்படி யாராவது அந்த வீடுகளைத் தேடி வந்தால், மீண்டும் அவர்கள் அங்கு வராமல் இருக்கவும் அவர்களை சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்கள் படி ஏற்றாமல் இருக்கவும் சில தந்திரங்களை அவள் பயன்படுத்துவாள்.
பங்கஜாக்ஷி தேங்காய் வியாபாரம் செய்பவள். அவள் அழைக்காமல் எந்த வீட்டுப் படியிலும் ஏற மாட்டாள். ஒவ்வொரு வீட்டு கேட்டிலும் நின்று அவள் உரத்த குரலில் சத்தமிடுவாள்:
“தேங்காய் வேணுமா, தேங்காய்?”
வீட்டுக்காரர்கள் அழைத்தால், அவள் கேட்டுக்குள் நுழைவாள். இல்லாவிட்டால் அடுத்த கேட்டில் நின்று மீண்டும் கத்துவாள். வீடுகளில் விற்று மீதியிருக்கும் தேங்காய்களை அவள் மார்க்கெட்டிற்குக் கொண்டு போய் விற்பாள்.
ஜானகி வாழைக்குலை விற்பவள். தேநீர் கடைகளிலும் வெற்றிலை பாக்கு கடைகளிலும்தான் அவளுக்கு வியாபாரம். வீடுகளில் அழைத்தால் மட்டுமே அவள் செல்வாள்.
மாதவி வெறும் காய்கறி விற்பவள்தான். பூசனிக்காய், வெள்ளரிக் காய், கீரை, வெண்டைக்காய், முருங்கைக்காய் போன்ற நாட்டு காய்கறிகளை மட்டுமே அவள் விற்பனை செய்வாள். அவள் எல்லா வீடுகளிலும் ஏறி இறங்குவாள். காய்கறி வாங்கினாலும் வாங்க வில்லையென்றாலும் தன் கூடைகளில் இருக்கும் எல்லா காய்கறிகளையும் அவள் எடுத்துக் காட்டுவாள். விலை கூறுவாள். மிகவும் களைப்பாக இருக்கும்பொழுது வீடுகளில் கஞ்சி நீர் இருக்குமா என்று கேட்பாள். சில வீடுகளில் கஞ்சி நீர் மட்டும் தருவார்கள். சிலர் கஞ்சி நீரில் கொஞ்சம் சாதத்தையும் போட்டு, அதனுடன் கூட்டும் சேர்த்துத் தருவார்கள்.
நாராயணிக்கு இரண்டு வகை வியாபாரமும் உண்டு. காலையில் மார்க்கெட்டுக்குப் போகும்வரை ஒரு வியாபாரம். மார்க்கெட்டிலிருந்து இங்கிலீஷ் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீடு வரும்வரை அவளின் இரண்டாவது வியாபாரம் நடக்கும். நாட்டு காய்கறிகள் வகையைச் சேராத காய்கறிகளை இங்கிலீஷ் காய்கறிகள் என்று அழைப்பார்கள்.
நாராயணியின் வியாபாரத்தை வியாபாரம் என்றே சொல்ல முடியாது. அவள் எந்த காய்கறிக்கும் விலை கூற மாட்டாள். விலை சொல்லாமலே இரண்டு மடங்கு காசு வாங்குவது எப்படி என்ற விஷயம் அவளுக்குத் தெரியும். வழக்கமாக செல்லும் வீடுகளுக்குத் தேவையான காய்கறிகளைக் கொடுத்துவிட்டு அவள் சொல்லுவாள்:
“விலையை பிறகு சொல்றேன் சின்னம்மா. இதை முதல்ல எடுத்து வைக்கச் சொல்லுங்க...”
பெரிய பதவியில் இருப்பவர்களின் வீடுகள்தான் நாராயணியின் வாடிக்கையான வீடுகள். அரசாங்க காரியாலயத்தில் சூப்பிரண்டாக இருப்பவர்கள், உதவி செக்ரட்டரிகள், செக்ரட்டரிகள், எஞ்சினியர் கள், காவல் துறை அதிகாரிகள் போன்றவர்களின் வீடுகள்தான். நாராயணியின் வாடிக்கையான வீடுகள். அந்த வீடுகளுக்குத் தேவையான காய்கறிகளை அவள் கொண்டு போய் கொடுக்கிறாள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதை ஒரு வியாபாரமாக அவர்கள் கருதக்கூடாது என்ற கொள்கையையும் அவள் கொண்டிருந்தாள். அவள் கூறுவாள்:
“சின்னம்மா, உங்களுக்கு என்ன வேணுமோ அதைச் சொல்லுங்க. அதைக் கொண்டு வந்து தர்றது என் பொறுப்பு.”
எந்த வீட்டுக்கும் தேவையே படாத ஒரு பொருள் நாராயணியின் கையில் வந்துவிட்டால், அதை அவள் எப்படியும் நல்ல விலைக்கு விற்று விட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள். ஒருநாள் அவளுடைய கணவன் எங்கிருந்தோ கரிசலாங்கண்ணி கொண்டு வந்தான். அதிலிருந்து கொஞ்சத்தைக் கூடையில் எடுத்து வைத்துக்கொண்டுதான் அவள் அடுத்த நாள் நகரத்திற்கே புறப்பட்டாள். போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீட்டுப் படியில் கால் வைத்தபோது அங்கிருந்து சின்னம்மா கேட்டாள்:
“எதற்கு நாராயணி கரிசலாங்கண்ணி?”
“இதை நான் சூப்பிரண்ட் எஜமானோட வீட்டுக்குக் கொண்டு போறேன். அங்கே இருக்குற சின்னம்மாவும் பிள்ளைகளும் கரிசலாங்கண்ணி சாறுல எண்ணெய்யைக் கலந்து காய்ச்சி உடம்புல தேய்ச்சுக்கிறாங்க. அந்தச் சின்னம்மாவோட முடியை சின்னம்மா, நீங்க பார்த்திருக்கீங்களா? கன்னங்கரேர்னு பனங்குலை யைப்போல அது தொங்குறதைப் பார்க்கணுமே! வக்கீல் எஜமான் வீட்டுக்கும் நான்தான் கரிசலாங்கண்ணி கொடுக்குறேன். மூத்த மகளோட முடி முன்னாடி செம்பட்டையா இருந்துச்சு. கரிசலாங் கண்ணி சாறுல எண்ணெய்யைக் கலந்து காய வச்சு உடம்புல தேய்க்க ஆரம்பிச்சாங்க. இப்போ அவங்க முடியைப் பார்க்கணுமே...”
“அப்படின்னா எனக்கும் கொஞ்சம் கரிசலாங்கண்ணி கொண்டு வந்து தர முடியுமா, நாராயணி?”
“அது கிடைக்குறது ரொம்பவும் கஷ்டம் சின்னம்மா. என் புருஷன் நேத்து முழுசும் நடந்து இதைக் கொண்டு வந்தாரு. இன்னைக்குக் காலையில எதுவும் சாப்பிடாமலே மனுஷன் கிளம்பிப் போனாரு. கரிசலாங்கண்ணி தேடித்தான். கிடைச்சா சின்னம்மா உங்களுக்குக் கொடுத்துட்டுத்தான் மத்தவங்களுக்கு நான் கொடுப்பேன்.” என்னவோ தீவிரமாக யோசிப்பதைப்போல் முகத்தை வைத்துக்கொண்டு அவள் கூறுவான்:
“இல்லாட்டி ஒரு காரியம் செய்வோம் சின்னம்மா. சூப்பிரண்டு வீட்டுக்கு வேணும்னா நாளைக்கு நான் கொடுத்துக்கிறேன். இப்ப இருக்குறதை சின்னம்மா நீங்க எடுத்துக்கோங்க.”
“இதற்கு நான் என்ன தரணும் நாராயணி?”
“அதைப் பிறகு சொல்றேன் சின்னம்மா. இதை இப்போ உள்ளே எடுத்து வைக்கச் சொல்லுங்க.”
ஒவ்வொரு வீட்டிலும் காய்கறிகளைக் கொடுத்து முடித்து விட்டால், நாராயணி புறப்படுவதற்கு மிகவும் அவசரப்படுவாள்.
“சரி... புறப்படட்டுமா சின்னம்மா? சின்னப் பிள்ளைங்க வீட்டுல பட்டினியா இருக்குதுங்க. கடைசி பிள்ளைக்கு கடுமையான காய்ச்சல். நான் போய்த்தான் ஏதாவது சாப்பாடு தயார் பண்ணணும்.”