காய்கறிக்காரி நாராயணி - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8246
கொடுத்த காய்கறிகளுக்கு காசு எதுவும் வாங்கவில்லை. விலை என்னவென்றுகூட கூறவில்லை. வீட்டில் பிள்ளைகள் பட்டினி கிடப்பதாகக் கூறி அவள் உடனே செல்ல வேண்டுமென்று வேறு கூறுகிறாள். காய்கறி வாங்குபவர்கள் உண்மையாகவே மனம் பதைபதைப்பார்களா இல்லையா? என்ன செய்ய வேண்டும் என்பது புரியாமல் வருத்தப்பட்டு நிற்பவர்களைப் பார்த்து நாராயணி சொல்லுவாள்:
“நேற்று பங்கஜாக்ஷிக்கிட்ட ரெண்டு ரூபா கடன் வாங்கினேன். புருஷன்கிட்ட மருந்து வாங்கிட்டு வரச் சொல்லி கொடுத்தேன். செக்ரட்டரி எஜமான் வீட்டுல கொடுத்த படி அரிசியை வாங்கிட்டுப் போய் கஞ்சி வச்சேன். இன்னைக்கு என்ன செய்யப் போறேனோ தெரியல.. பங்கஜாக்ஷிக்கிட்ட வாங்கின பணத்தைத் திருப்பித் தரலைன்னா, அவ கயிறை எடுத்துட்டு வரப்போறா. தூக்குப்போட்டு சாகப் போறதா சொல்லிக்கிட்டு...”
தான் கொடுத்த பொருட்களுக்கு பணம் வாங்காத நாராயணியின் வீட்டில் பங்கஜாக்ஷி தூக்குப்போட்டு சாக அனுமதிக்க முடியுமா? செக்ரட்டரியின் வீட்டில் படி அரிசி கொடுத்திருக்கும்பொழுது, எஞ்சினியரின் வீட்டிலிருந்தும் படி அரிசியாவது கொடுத்தால் தானே நன்றாக இருக்கும்? அரை ரூபாயோ முக்கால் ரூபாயோ விலை வருகின்ற சாமான்களைத் தந்துவிட்டு, நாராயணி இரண்டு ரூபாயும் படி அரிசியையும் வாங்கிக்கொண்டு திரும்புவாள்.
சில நேரங்களில் நாராயணி மிகுந்த பதைபதைப்புடன் சில வீடுகளின் படிகளில் ஏறுவாள்.
“இங்க பாருங்க சின்னம்மா... நீங்க கேட்டதையெல்லாம் நான் கொண்டு வந்திருக்கேன். இது எல்லாத்தையும் உள்ளே கொண்டு போய் வைக்கச் சொல்லுங்க. நான் போறேன் சின்னம்மா. என் புருஷன் ஆஸ்பத்திரியில இருக்காரு.”
“உன் புருஷன் உடம்புக்கு என்ன?”
“க்ஷயம் சின்னம்மா, க்ஷயம். நேத்து சாயங்காலம் நான் போறப்போ, போர்வையை மூடி மனுஷன் படுத்திருக்காரு. குழந்தைங்க அழுதுக் கிட்டு இருக்கு. நான் பக்கத்துல இருந்த ஆளுங்களையெல்லாம் வரவழைச்சு, கட்டில்ல படுக்கப் போட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனேன். இப்ப அங்கேதான் கிடக்குறாரு சின்னம்மா. சாப்பாடு கொண்டு போயி கொடுக்கணும். மருந்து வாங்கணும். ஆஸ்பத்திரி யில மருந்து இருந்தாலும், அவங்க கொடுக்க மாட்டேங்குறாங்க சின்னம்மா. நாமதான் பணம்தந்து வெளியேயிருந்து மருந்து வாங்கணும். நேத்து ஊசி போடுறதுக்கு மருந்து வாங்குறதுக்காக அஞ்சு ரூபா வேணும்னு நான் எங்கெல்லாம் அலஞ்சேன்றீங்க! கடைசியில மாதவியோட அண்ணன்கிட்ட போய் வாங்கினேன். அந்த ஆளோட பொண்டாட்டி நிறைமாசமா நின்னுக்கிட்டு இருக்கா. பிரசவத்துக்கு வச்சிருந்த பணத்துல இருந்து அஞ்சு ரூபாயை எடுத்து என் கையில தந்தாரு. இது எல்லாத்தையும் உள்ளே எடுத்து வைக்கச் சொல்லுங்க சின்னம்மா. நான் புறப்படுறேன். நான் போயி மருந்து வாங்கித் தந்தாத்தான் இன்னைக்கு ஊசி போட முடியும்.”
அவள் கூடையை எடுத்து தலையில் வைப்பாள். பொருட்களைக் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தை வாங்காமல் அவசரத்தில் போக இருக்கிறாள் அவள். எதற்கு? க்ஷயரோகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கிடக்கும் தன்னுடைய கணவனுக்கு ஊசி போடுவதற்கான மருந்து வாங்குவதற்குத் தேவையான பணத்தைச் சம்பாதிப்பதற்காக. எந்த சின்னம்மாவாக இருந்தாலும், மனம் இளகிப் போவார்களா இல்லையா? நாராயணி பணத்தை வாங்கிய பிறகுதான் அந்த இடத்தை விட்டே நகர்வாள்.
சில நாட்களுக்கு அவள் தன் கணவனின் க்ஷயரோகத்தைக் காரணம் காட்டி பலரிடமும் பணம் பறிப்பாள். வழக்கமாக தான் செல்லும் வீட்டைச் சேர்ந்தவர்கள் கேட்கும் பொருட்களைக் கொண்டு போய் கொடுக்கவும் செய்வாள். அவள் வக்கீல் வீட்டுப் படியில் மிகவும் களைத்துப் போய் இருப்பதைப்போல் காட்டியவாறு சென்று தன் தலையிலிருந்த கூடையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு கூறுவாள்.
“கொஞ்சம் தண்ணி தரச் சொல்லுங்க சின்னம்மா. தலை சுத்துறது மாதிரி இருக்கு.”
“உனக்கு என்ன ஆச்சு நாராயணி?”
“நேத்து எதுவும் சாப்பிடல, தூங்கவும் இல்ல. சின்னம்மா, பிள்ளைகளும் தளர்ந்து போய் படுத்துக் கிடக்குதுங்க. கடவுள்கிட்ட ஒப்படைச்சிட்டுத்தான் நான் வந்தேன். சின்னம்மா, நீங்க தாழம்பூவும் நெல்லிக்காயும் வேணும்னு சொன்னீங்கல்ல? இந்தாங்க... கொண்டு வந்திருக்கேன். இதை உள்ளே எடுத்து வைக்கச் சொல்லுங்க சின்னம்மா. நான் புறப்படட்டுமா? தன்னால முடியிறப்போ வேலை செஞ்ச மனுஷன்தானே! இப்ப அந்த ஆளுக்கு என்னை விட்டா வேறு யாரு இருக்குறது?” தன் கணவனின் க்ஷயரோகத்தைப் பற்றி கூறிவிட்டு நாராயணி தொடர்ந்து சொல்லுவாள்:
“நேத்து எஞ்சினியர் எஜமானோட வீட்டுல அந்தச் சின்னம்மா தந்த அஞ்சு ரூபாவை வச்சுத்தான் நான் மருந்து வாங்கினேன். இன்னைக்கு பணத்துக்கு நான் எங்கே போவேன்? யார்கிட்ட கேட்பேன்?” இதற்கிடையில் வேலைக்காரி கொண்டு வந்து தரும் கஞ்சியைக் குடித்து விட்டு, போவதற்கான ஆயத்தத்தில் இருப்பாள் நாராயணி.
“ஊசி போடலைன்னா ஆளு செத்துப் போகும்னு டாக்டர் சொல்லிட்டாரு. அப்படி சாகுறதா இருந்தா என்னைப் பார்த்துக்கிட்டே சாகட்டும். நான் பக்கத்துலயே இருக்கப் போறேன். நான் புறப்படுறேன் சின்னம்மா.”
அவள் அந்த சின்னம்மா தரும் ரூபாயை வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்வாள்.
நாராயணி தான் வழக்கமாகச் செல்லும் வீடுகளைப் பற்றி மிகவும் மோசமான கருத்துகளையே தன்னுடைய சினேகிதிகளிடம் கூறுவாள். ஒரு சின்னம்மா அறுத்த கைக்கு உப்பு தர மாட்டாள் என்பாள். இன்னொரு சின்னம்மா தான் தந்த பொருட்களுக்கு மிகவும் குறைவாகவே பணத்தைத் தருவாள் என்பாள். இன்னொரு சின்னம்மா மிகவும் திமிர் பிடித்தவள் என்பாள். இன்னொரு சின்னம்மா சமையல்காரி சொல்வதைக் கேட்டு செயல்படக் கூடியவள் என்பாள். இப்படி ஒவ்வொரு சின்னம்மாவைப் பற்றியும் கெட்டதாக ஏதாவது கூறி, தான் வழக்கமாகச் செல்லும் அந்த வீடுகள் பக்கம் தன் சினேகிதிகள் தலை காட்டாத மாதிரி அவள் பார்த்துக்கொள்வாள்.
ஒருநாள் எஞ்சினியரின் மனைவி தேங்காய்காரி பங்கஜாக்ஷியை அழைத்து பத்து, பன்னிரெண்டு தேங்காய்களை வாங்கினாள். அதற்கான நியாயமான விலையையும் கொடுத்தாள். நாராயணிக்கு அந்த விஷயம் தெரிய வந்தது. அடுத்த நிமிடம் அவள் எஞ்சினியரின் வீட்டைத் தேடி வந்தாள்.
“சின்னம்மா, பங்கஜாக்ஷிக்கிட்ட இருந்து தேங்காய் வாங்கினீங் களா?” அவள் கேட்டாள்.
“இங்கே அவசரமா தேங்காய் தேவைப்பட்டது. அப்போ பங்கஜாக்ஷி கேட் பக்கத்துல இருந்து கூப்பிட்டுக்கிட்டு இருந்தா. அவக்கிட்ட பன்னிரெண்டு தேங்காய்கள் வாங்கினேன். அதுக்கு என்ன நாராயணி?”
“எதுவும் இல்லாம நான் கேட்பேனா சின்னம்மா? அவ சொன்னா- உங்களுக்கு அதிகமான விலைக்கு தேங்காய்களை வித்துட்டதா.”
“அப்படி ஒண்ணுமில்ல நாராயணி. நீ தர்றதைவிட குறைவான விலைக்கு அவ தேங்காய்களைத் தந்தான்றதுதான் உண்மை.”
“அவ அப்படி குறைவான விலைக்கு தேங்காய்களைத் தர்றதுக்கு காரணம் என்ன தெரியுமா சின்னம்மா?”