கடைசி இரவு
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7318
தன்னைவிட உயர்ந்தது வேறெதுவுமில்லை என்று அறிவிக்கிற மாதிரி கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கும் மலை. அதில் வளைந்து வளைந்து இரண்டு பக்கமும் மரம் செடி கொடிகள் அடர்ந்து கிடக்கச் செல்லும் மலைப்பாதை. அடிவாரத்தில் மலை மேலிருந்து ஓசை எழுப்பிப் பாய்ந்து விழும் அருவி. அருவியிலிருந்து புறப்பட்டு மேல் நோக்கி எழுந்து நாலு திசைகளிலும் வியாபித்து அந்தப் பிரதேசமெங்கும் ஒரு வகையான குளிர் நிலையைப் பரவச் செய்யும் பனிப்படலம்.
காசநோயாளியின் இளைப்பைப் போன்று மாறி வருகிற குளிரும் உஷ்ணமும் மலையின் பின் சூரியன் கண்ணயர வேண்டித் தன் முகத்தை மறைத்துக் கொள்வதற்கு முன்பே, போர்வையைப் போர்த்து அவனியின் மேல் தன் ஆதிக்கத்தைச் செலுத்த வரும் இரவு.
சாலையோரத்தில் பனையோலை வேய்ந்த சோதனைச் சாவடி முன் மினுக் மினுக்கென்று அரிக்கன் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருக்கிறது. அதனால் இருள் கலந்த பனிப்படலத்தின் ஆதிக்கத்தைக் கிழித்துக்கொண்டு தன்னை மிகப் பெரிதாய்க் காட்டிக் கொள்ள முடியாத நிலை!
சாலையின் குறுக்கே இரண்டு மரக்கம்புகளை ஊன்றி ஒரு நீண்ட தடி செருகப்பட்டிருக்கிறது. ஒரு மூலையில் தொங்க விடப்பட்டிருக்கும் அறிவிப்புப் பலகையின் எழுத்துக்கள் கூடக் காலச் சக்கரத்தின் சுழற்சியில் சற்று அழிந்து மங்கலாகக் காணப்படுகின்றன. ‘வண்டிகள் இங்கே நிறுத்தப்பட வேண்டும். ஃபாரஸ்ட் செக்கிங் ஸ்டேஷன்.’
சோதனைச் சாவடியின் ஒரு மூலையில் குத்துக் காலிட்டு அமர்ந்திருக்கும் காவல் அதிகாரி (கார்டு) கேசவன் குளிர் தாங்காமல் தன் உடலைப் போர்த்தியிருக்கும் கம்பளியை மேலும் கொஞ்சம் இழுத்துக் கால்முதல் தலைவரை அதனுள் அடக்கிக் கொண்டார். தலையைச் சுற்றியிருக்கும் மஃப்ளரை இழுத்துக்கட்டி அதன் ஒரு பகுதியைக் காதுப் பக்கம் அழுத்தமாகச் செருகிவிட்டுக் கொண்டார்.
நேரம் செல்லச் செல்ல தன் ஆதிக்கத்தை மிகவும் அதிகமாகவே வியாபிக்கச் செய்தது நாலு பக்கமும் பரவிக் கிடக்கும் பனிப் படலத்தை, வைத்த கண் எடுக்காமல் பார்த்தார். அவரும் எத்தனை வருஷங்களாக இந்தப் பனிப் படத்தைப் பார்த்து வந்திருக்கிறார்! இருந்தாலும் மற்ற நாட்களைவிட இன்று அது அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தோன்றியது.
சோதனைச் சாவடியின் மற்றொரு பகுதி பிரப்பம் பாயால் தடுத்துப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அங்கே தம்மை மறந்து உறங்கிக் கொண்டிருக்கும் நீலகண்ட பிள்ளையின் குறட்டைச் சத்தம் ஒலித்தது. உறங்கட்டும்! நாளை முதல் தன்னந்தனியாக இந்தச் சோதனைச்சாவடி, அதைச் சுற்றியிருக்கும் மரம் செடி கொடிகள், எங்கும் பரவிக்காணும் பனிப்போர்வை, குளிர் எல்லாவற்றிலுமிருந்தும் கேசவன் என்றென்றும் விடை பெற்றுக் கொள்ளப் போகிறார்.
வைத்த கண் எடுக்காமல் நோக்கியவாறு எவ்விதச் சலனமுமின்றி அமர்ந்திருந்தார் கேசவன். தம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்ச்சியுமே அந்தப் பனிப்படலத்தில் எழுதப்பட்டிருப்பது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது அவருக்கு.
மலைமேல் இருக்கும் ஊர்களுக்குச் செல்கிற பஸ்கள் பயணிகளுடன் சோதனைச்சாவடி முன் வந்து நின்றன. தூக்க முடியாத சுமையைத் தலைமேல் சுமந்து இரைக்க இரைக்க வரும் கிழவனைப் போல் ‘ங்... ங்...’ என்று முக்கி முனகிக் கொண்டு மலைமேல் ஏறிவரும் வண்டி மாடுகளும், பஸ்களும், லாரிகளும், குதிரைகளும் தங்கள் களைப்பைப் போக்கிக் கொள்ளும் இடமும் இதுதான்.
சோதனைச் சாவடியிலிருந்து சிறிது தூரத்தில் சாலையை ஒட்டி ஒரு டீக்கடை. பனையோலை வேய்ந்த அந்தக் கடையை நோக்கிப் பயணிகள் படையெடுத்த அதே சமயம் டிரைவரும், கண்டக்டரும் மேஜை மேல் இருக்கும் நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்திடச் சோதனைச் சாவடியை நோக்கி வந்தார்கள். மேஜைக்கு இந்தப்புறம் அமர்ந்திருக்கும் காவல் அதிகாரியிடம் வழக்கமான குசலம் விசாரித்துவிட்டு சிறிது நேரத்தில் தாங்களும் டீக்கடையை நோக்கி போய்விடுவார்கள். பிறகு அங்கிருந்து காற்றைக் கிழித்துக்கொண்டு பெரிதாய் ஒலிக்கும் கூக்குரல்களுக்கும், சிரிப்புகளுக்கும், ஆரவாரத்துக்கும் எல்லையே இல்லை! சிகரெட்டை உதட்டில் வைத்து ‘குப் குப்’ என்று இழுத்தபடி பஸ்ஸைச் சுற்றிலும் இங்குமங்குமாய் நின்று கொண்டிருந்தார்கள் பயணிகள். சீக்கிரம் புகை இழுத்து எஞ்சி இருக்கும் சிகரெட் துண்டுகளை வீசி எறிந்து பஸ்ஸினுள் ஏறி அமர வேண்டும் என்ற அவசரம் ஒவ்வொருவரிடமும். பஸ்ஸின் ‘பானெட்’டைத் திறந்து அதன் ‘தாக’த்தைத் தீர்த்தானதும், ‘ங்... ங்...’ என்று முனகிக் கொண்டு மலைப்பாதையில் மேல்நோக்கிச் செல்ல ஆரம்பித்தது பஸ். சற்றுத் தொலைவில் இருக்கும் வளைவு திரும்பியவுடன், அதுவும் பார்வையிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாய் மறைந்து போனது. பஸ் செல்வதையே வைத்த கண் எடுக்காது நோக்கியபடி அமர்ந்திருக்கும் காவல் அதிகாரி கேசவன் தமக்குள் மெல்லக் கூறிக்கொண்டார்.
“பயணம் நல்லா நடக்கட்டும். இனித் திரும்பி வந்தால் பார்ப்போம்.”
மலை மேலிருந்து கீழ்நோக்கி வரும் பஸ்கள் ஒன்றன்பின் ஒன்றாய் சோதனைச் சாவடியின் முன் காத்து நின்றன. சில சமயங்களில் அவற்றில் சட்டத்துக்கு விரோதமாக மரக்கட்டைகள் கடத்திச் செல்லப்படுவதும் உண்டு. அதனால் கொஞ்ச நேரம் ஆனாலும் அவற்றை முழுமையாகச் சோதனையிட வேண்டும். வண்டியின் மேற்பகுதி, இருக்கையின் கீழ்ப்பகுதி, டிரைவரின் அருகே இருக்கும் உபகரணப் பெட்டி, சில நேரங்களில் ‘பானெட்’டின் உள்பாகம் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சோதனையிட வேண்டும். அதற்காகத்தான் காட்டிலாக்காவினால் இந்தச் சோதனைச் சாவடி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
தூக்கத்திலிருந்து விழித்த நீலகண்ட பிள்ளை, வண்டியைப் பரிசோதிக்க வேண்டி சாலையை நோக்கிப் போனார். பஸ்ஸின் மேற்பகுதியிலுள்ள வாழைக் குலைகளினூடே கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் கால் வைத்து நடந்து போவார் அவர். கேசவன் பஸ்ஸினுள்ளே கேசவன் சோதனையிட்டார். பெரிய ஒரு சோதனை என்றுதான் சொல்ல வேண்டும். பயணிகளின் தோல் பைகளிலும், கோணிகளிலுங்கூட ஏதாவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம்- குறுந்தோட்டி, கோலரக்கு, கலைமான் கொம்பு, மான் இறைச்சி, தேன், கஞ்சா, இப்படி ஏதாவது!
சட்டத்துக்குப் புறம்பாக இப்படிக் கடத்திக் கொண்டு வரும் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதோ இல்லை! எப்படியோ ஏதோ ஒரு வகையில் சமரசமாகப் போய், நல்ல ஒரு முடிவும் ஏற்பட்டுவிடும். சோதனைச் சாவடியின் மேஜைமேல் இருக்கும் டப்பாவில் நாணயங்களும் நோட்டுகளும் போடப்படும். அதன்பின், சிறிது நேரத்துக்கு ஒரே நிசப்தம்.
மாலை நேரம் வந்துவிட்டால் சாவடியின் குறுக்கே தடியால் மறித்து, வரும் வண்டிகளை நிறுத்தச் செய்ய வேண்டும். சோதனைச் சாவடியினுள்ளும் வெளியே அறிவிப்புப் பலகை இருக்கிற இடத்திலும் அரிக்கன் விளக்கு ஏற்ற வேண்டும்.