கடைசி இரவு - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7320
‘இப்போ அவங்கள்ளாம் எங்கே இருக்காங்களோ? என்னை நினைச்சுப் பார்ப்பாங்களா?’ என்று சிந்திக்கலானார் கேசவன். மேனன் எங்கே போனாலும் கேசவனையும் உடன் அழைத்துக் கொண்டுதான் போவார். கார்டிடம் இந்த அளவுக்கு உயிரினும் மேலாக அன்பு செலுத்திய ஒரு மனிதனைத் தம் வாழ்வில் கேசவன் கண்டதேயில்லை. பரந்து கிடக்கும் காட்டுப் பகுதியில் மானைப் போன்று துள்ளிப் போகும் மேனனுடன் ஒரு குட்டி யானையைப் போல் போக கேசவனுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் தெரியுமா?
இன்று அந்தக் காடுகளெல்லாம் எங்கே போயினவோ! அன்று அவர்கள் நடந்து திரிந்த அந்த வனாந்தரப் பகுதிகளெல்லாம் இன்று ஜன சமுத்திரத்தால் நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன. கொஞ்ச நஞ்சம் எஞ்சி நிற்பது கூட கால ஓட்டத்தில் சீரழிந்து வந்தன. மரங்கள், செடிகள், கொடிகள், பறவைகள், பிராணிகள் எல்லாமே கொஞ்சங் கொஞ்சமாய் இருந்த இடம் தெரியாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் பெயர்களை அறிந்தவர்கள்கூட இன்று நம்மிடையே அதிகமாக இல்லை.
மேனன் டேராடூனில் நடைபெற்ற மாநாட்டுக்குச் சென்ற போதும் கேசவனைத் தம்முடன் அழைத்துச் செல்ல மறக்கவில்லை. புகைவண்டியில் முதல் வகுப்பில் பயணம் செய்த அவர் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்த கேசவனைக் காண ஒவ்வொரு ஸ்டேஷனிலும் இறங்கி வருவார். அவருக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்கத்தான்! மொழி தெரியாத இடத்தில் தம்முடன் வரும் ஆளுக்கு கஷ்டம் ஏதேனும் உண்டாகிவிடக்கூடாது என்று மேனன் நினைத்திருக்க வேண்டும். உடன் வரும் ஊழியனின் சௌகரியங்களில் அக்கறை காட்டும் மேல் அதிகாரி அவர்.
டேராடூனில் நேர்ந்த ஓர் அனுபவத்தை நினைத்துப பார்த்தார் கேசவன்.
காலையில் அறையைவிட்டுப் போனாரானால் பின்பு மாலையில் தான் மேனன் திரும்பி வருவார். பாரதத்தின் பல பகுதிகளிலுமிருந்து வந்திருக்கும் பெரிய அறிவியல் அறிஞர்களுடன் சர்ச்சைகள் செய்துகொண்டிருப்பார் மேனன் பகல் நேரம் முழுவதும். மாலையில் அவர் திரும்பும் வரை கேசவனுக்கு வேலை ஒன்றும் இல்லை.
வெயில் பட்டு வெள்ளியாக மின்னும் இமயத்தைக் காண ரம்மியமாய் இருக்கும். வானளவு உயர்ந்து நிற்கும் அந்த மலையின் முன், தாம் இதுவரை கண்டு வந்த மலைகள் எவ்வளவு சாமான்யமானவை என்ற உண்மை அப்போதுதான் தெரிந்தது கேசவனுக்கு.
வனவியல் கல்லூரியைச் சேர்ந்த அந்தப் பகுதியில் பலதரப்பட்ட காய்கறிச் செடிகள் பயிரிடப்பட்டிருந்தன. உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கொண்டு வந்த சிறிதும் பெரிதுமான இனங்கள் அவற்றில் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றைப் பார்த்தபடியே நடந்து சென்றால் நேரம் போவதே தெரியாது கேசவனுக்கு.
ஒரு நாள் எதிர்பாராத வகையில் மேனனே முன்னால் நின்று கொண்டிருந்தார். அவர் ஏதோ முக்கியமாகச் சிலருடன் விவாதித்துக் கொண்டிருந்தார். சிறிது தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் உச்சியில் அடிக்கொரு தரம் சுட்டிக் காட்டியவாறு என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார்.
கேசவனைக் கண்ட மேனன், அவரை அழைத்தார். “கேசவா, இங்கே வா...”
கேசவன் பணிவுடன் அருகே போய் நின்றார். அவரிடம் மரக்கிளை ஒன்றைக் கொடுத்தார் மேனன்.
“இதென்ன மரம்னு சொல்லு, பார்ப்போம்!”
அருகில் இருந்த மரத்தின் மேல் பகுதியைப் பார்த்தார் கேசவன். பின்பு கையில் இருந்த அந்தக் கிளையையே ஒரு நிமிஷம் ஆராய்ந்தார். இலை, பூ, தளிர், அளவு ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்து பார்த்தார். இதற்கு முன் நன்கு பழக்கமாயிருக்கும் இனம் போன்று தோன்றியது. ஆனால் அவரால் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. என்ன இனத்தைச் சேர்ந்ததாக அது இருக்கும் என்று அவர் நினைக்கிறாரோ, அதற்கும் இதற்கும் அளவில் சற்று வித்தியாசம் தெரிந்தது. அது எப்படி என்று தெரியாமல் அவரால் எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்?
மேனனும் அவருடன் நின்ற ஆட்களும் கேசவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“என்ன, ஒனக்கும் தெரியல்லியா?”
“கரி மருது மாதிரி தெரியுது!” தயங்கித் தயங்கிக் கூறினார் கேசவன்.
“போடா... நீயும் உன் கரிமருதும்” கேசவனைக் கேலி செய்தார் மேனன்.
தமக்குத் தெரிந்ததைக் கூறினார் கேவசன். இலை, பூக்களின் அமைப்பு அளவு... பிறகு... பிறகு... புதியதாகச் சில பாகங்கள் இருந்தாலும் அளவில் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது.
“சரிதான்... நீ சொன்னது சரி” கேசவனின் தோளில் தட்டியபடி கூறினார் மேனன். “ஒரு விஷயம் தெரியுமா? நம்ம பகுதியிலிருந்து எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாடி இதைக் கொண்டு வந்து வச்சிருக்காங்க. இங்கே இருக்கிற ரிக்கார்டுகளிலேயும் அதை எழுதி வச்சிருக்காங்க. உனக்கு எங்கே தெரியுதான்னு பார்த்தேன். சீதோஷ்ண நிலை மாற்றத்துக்கு ஏற்ற மாதிரி இலையின் அளவு மாறிப் போயிருக்கு; அவ்வளவுதான்!”
அடக்கத்தால் தலை குனிந்து கொண்டார் கேசவன். உலகப் பெரும் அறிவியல் அறிஞர்கள் வைத்த அந்தத் தேர்வில் கேசவனைப் பொறுத்தவரை ஓர் அனுபவப் பாடம் கிடைத்தது. அதில் அவர் தோற்கவில்லை.
மேனன் அவர்களிடம் என்னவோ ஆங்கிலத்தில் கூற, அவர்கள் கேசவனைப் பார்த்தபடி சிரித்தார்கள். தன் ஊழியனின் திறமையில் மேனனுக்கும் பெருமை உண்டாகியிருக்க வேண்டும். அதன் அறிகுறி அவருடைய விழிகளில் தெரிந்தன.
தமக்குக் கீழே பணியாற்றுபவர்களுக்கு ஊக்கம் தருவதிலும், அவர்களின் திறமையைக் கண்டு பாராட்டுவதிலும் மேனனுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. அவருடன் கழிந்த இன்பமயமான அந்த நாட்கள்... எப்போதும் அப்படியே இருக்கக் கூடாதா?
சாலையில் லாரியின் ப்ரேக் சத்தம் கேட்டதும் கேசவனின் சிந்தனைத் தொடர் அறுபட்டது. அரிக்கன் விளக்கின் வெளிச்சம் மேலும் குறைந்துவிட்டிருந்தது.
“என்ன சேட்டா, விளக்கிலே மண்ணெண்ணெய் இல்லை போல இருக்கே!” - சோதனைச் சாவடியினுள் வந்த டிரைவர் கேட்டார்.
கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த அந்த விளக்கை எடுத்துக் கொண்டு பிரம்புத் தடுப்புக்கு அப்பால் போனார் கேசவன். அங்கே வாய் பிளந்து உறங்கிக் கொண்டிருந்தார் நீலகண்ட பிள்ளை. அவரைச் சுற்றிலும் சாராயத்தின் நெடி வீசியது. கட்டிலின் அடியில் இருந்த மண்ணெண்ணெய் புட்டியிலிருந்து எண்ணெயை ஊற்றினார் கேசவன். பின்பு, திரியை நீட்டிவிட்டு மேஜையை நோக்கி வந்தார்.
“ஒங்க ஃப்ரெண்ட் எங்கே, காணோம்!”- டிரைவர் கேட்டார்.
கேசவன் ஒன்றும் பதில் கூறவில்லை. சாலையில் இறங்கி டார்ச் விளக்கை அடித்துப் பார்த்தார்.
"சில்லறை ஒண்ணும் எடுத்திட்டு வரல்லே, சேட்டா. நாளை தந்தா போதுமா?" டிரைவர் பின் கழுத்தைச் சுரண்டியபடி கேட்டார்.