கடைசி இரவு - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7320
சோதனைச் சாவடியின் மேற்கூரையிலிருந்து பனித் துளிகள் விழுந்து கொண்டிருந்தன. நிமிஷம் செல்லச் செல்ல காலம்தான் எவ்வளவு வேகமாய் ஓடிக் கொண்டிருக்கிறது என்று கேசவனுக்கு வியப்புத் தோன்றியது.
முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் சாதாரணமான ஒரு காவலாளாகக் கேசவன் தம் உத்தியோக வாழ்வில் காலடி எடுத்து வைத்தார். அவர் ஆறாம் வகுப்பில் இருக்கும்பொழுதே, தந்தை இந்த உலகைவிட்டு விடை பெற்றுக் கொண்டார். எஸ்.எஸ்.எல்.ஸி. தேறிப் பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியராக வரவேண்டுமென்பதுதான் ஆசை. ஆனால், நடைமுறை என்று வரும்போது அது சாத்தியமில்லாமல் போயிற்று. வீட்டைப் பீடித்த தரித்திரத்தால், ஆறாம் வகுப்பைக் கூட கேசவனால் முழுமையாக முடிக்க முடியாமல் போயிற்று. தோட்ட வேலைக்குப் போனார். கட்டிடம் கட்டும் வேலையில், சிமென்ட் கலவை எடுத்துக் கொடுக்கும் ஆளாக இருந்தார். படித்த பள்ளிக்கூடத்துக்கே மண் சுமக்கச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையும் ஏற்பட்டது அவருக்கு. தம்முடன் படித்த நண்பர்கள் கேரள பாணினீயத்தையும், சம்புப் பிரபந்தங்களையும், துர்க்கேச நந்தினியையும் சத்தமிட்டுப் படித்துக் கொண்டிருந்தபோது, கேசவனோ பள்ளி முற்றத்தில் சிமென்டை மணலுடன் சேர்த்துக் குழைத்துக் கொண்டிருந்தார்!
கடைசியில் அங்ஙாழக்கல் என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு ரேஞ்சர்தான் கேசவனைக் காவலாள் வேலையில் சேரச் செய்தார்.
ஆசிரியராக வரவேண்டும் என்று கேசவன் ஆசைப்பட்டதெல்லாம் போய், ஆறு ரூபாய்ச் சம்பளம் வாங்குகிற அரசாங்க ஊழியர் ஆனார்.
வீட்டில் தாயுடன், நான்கு சகோதரிகள் இருந்தார்கள். சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் மணமுடித்து, புக்ககம் அனுப்பி வைத்து, ‘அப்பா... பாரத்தை இறக்கியாச்சு’ என்று நினைக்கும்போது, அவருடைய தலைமுடி முழுமையாக நரைத்து விட்டிருந்தது. அவருடைய வாழ்வில் மார்தட்டிக்கொண்டு சொல்லும் அளவுக்கு அப்படி ஒன்றும் நிகழ்ந்ததில்லை. அதற்காக விரக்தி அடைந்து அவர் மூலையில் போய் உட்கார்ந்து விடவுமில்லை.
காலச் சக்கரத்தின் சுழற்சியில் காவலாள் கேசவன் காவலதிகாரி (கார்டு) என்ற நிலைக்கு உயர்ந்தார். ஏழாம் வகுப்பாவது தேர்ச்சி பெற்றிருந்தால் ஒரு படி மேலே போய் அவர் காட்டிலாக்கா அதிகாரி ஆகியிருக்கலாம். வருமானத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்று கூற முடியாவிட்டாலும், சிறிய சம்பளக்காரர்களுக்கிடையே சிறு உயர்வுகூட மதிப்பில் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கிவிடுகிறது. இந்த மதிப்பு நிச்சயம் அவருடைய பதவி உயர்வுக்காகக் கிடைத்ததல்ல. உத்தியோகத்தில் காட்டும் நேர்மைதான் எல்லாவற்றுக்கும் காரணம்.
நீலகண்ட பிள்ளை அடிக்கொருதரம் என்று இருமிக்கொள்கிறார். மனைவி, மக்கள் எல்லாம் இருக்கும் அவர் எவ்விதக் கவலையும் இல்லாமல் நிம்மதியாய் உறங்கிகொண்டிருக்க, ஏகாங்கியான கேசவனோ குளிரையும் பொருட்படுத்தாமல் அமர்ந்து ஏதோ சிந்தனையில் இருந்தார்.
மேலதிகாரிகளுக்கு கேசவன் மீது எப்போதுமே ஒரு தனிப்பிரியம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒளிவு மறைவில்லாத அவருடைய போக்கும் வேலையில் அவர் காட்டும் சிரத்தையும் அவர்களுக்குப் பிடித்திருந்தது, அவருக்குப் பழக்கமில்லாத இடமே இந்தக் காட்டுப் பகுதியில் இல்லை.
மலையாற்றூர்ப் பகுதியில் பணியாற்றும்போதுதான் மாவட்ட காட்டிலாக்கா அதிகாரியான மேனன் அவருக்கு அறிமுகம் ஆனார். கேசவனின் வாழ்க்கையில் அது குறிக்கப்பட வேண்டிய ஒரு நாள். பரிசோதனையின் பொருட்டு மேனன் அந்தப் பகுதிக்கு வந்திருந்தார். போகும்போது, “கேசவன்! நாளைக்கு நீங்க கோட்டயம் ஜில்லா ஆபீஸுக்குக் கொஞ்சம் வாங்க” என்று கூறிவிட்டுப் போனார்.
அதைக் கேட்டவுடன் உண்மையிலேயே நடுங்கிப் போனார் கேசவன். கோட்டயத்துக்குக் கூப்பிட வேண்டிய அளவுக்கு உத்தியோகத்தில் அவர் என்ன தப்புச் செய்துவிட்டார்? வாழ்க்கையில் இதுவரை வெளியே கூறிக்கொள்கிற அளவுக்கு ஒன்றும் பெரிதாக அவர் சம்பாதித்து விடவில்லை. இரண்டாம் தங்கையின் இரண்டு குழந்தைகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆக வேண்டிய செலவை கேசவன்தான் கவனித்துக் கொண்டார். தமக்குத்தான் சொந்தம் என்று கூற ஒரு குடும்பம் அமையும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டாலும், தாம் பிறந்த குடும்பத்திலாவது பட்டதாரிகள் உருவாகட்டுமே என்று கனவு கண்டு கொண்டிருந்தார் கேசவன். நிலைமை இப்படி இருக்க, அவருக்குக் கோட்டயத்துக்கு வர வேண்டும் என்று ஆணை வந்தால்...?
ரேஞ்சர் செரியன் சிரித்துக் கொண்டே இறங்கி வந்தார். “கேசவன், மேனன் சார் உன்னைப் பார்க்கத்தான் வந்தார். தம் சொந்த வேலைகளை நம்பிக்கையாக ஒப்படைப்பதற்கு அவருக்கு விசுவாசமான ஒரு கார்டு வேணுமாம்! உன்னைப் பற்றி நல்ல விதமா எல்லாரும் மேனன் சாரிடம் சொல்லியிருக்காங்க. எங்ககிட்டயும் கேட்டார். நாங்களும் சொன்னோம். நாளைக்குக் காலையிலேயே போய்ப் பாரும். இல்லாட்டி... இப்பவே போ மேன்!” என்றார்.
அவ்வளவுதான், கேசவனின் இரண்டு கண்களிலும் கண்ணீர் அரும்பிவிட்டது! காவல் உத்தியோகம் பார்க்கும் தம்மைப் போய் அவ்வளவு பெரிய அதிகாரி தேர்ந்தெடுத்ததை எவ்வளவுதான் முயற்சி செய்து பார்த்தும் கேசவனால் நம்பவே முடியவில்லை!
பனிப்படலத்தினூடே ஒளியின் இழைகள் தெரிந்தன. லாரி ஏதாவது வந்துகொண்டிருக்கும்.
லாரி ஒன்று வளைவு திரும்பி முனகியபடி சோதனைச் சாவடியின் முன் வந்து நின்றது.
மேஜையின் மேல் சான்றிதழை வைத்த டிரைவர் ஓர் ஓரத்தில் பீடி புகைக்க ஆரம்பித்தார்.
சாலையின் குறுக்கே போடப்பட்டிருக்கும் மரத்தடியை எடுத்து மாற்றும்போது, மேலும் இரண்டு லாரிகள் வந்து நின்றன. ஒன்றில் கட்டைகள் ஏற்றப்பட்டிருந்தன. மற்றொன்றில் மரவள்ளிக் கிழங்கு மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. வண்டன்மேடு என்ற இடத்திலிருந்து வருகிறது அந்த லாரி. சங்ஙனாச்சேரிச் சந்தைக்குப் போகிறது. மலையின் அடிவாரத்திலுள்ள நகரப் பிரதேசத்து மக்களுக்கு, மலைச் சாரலிலிருந்துதான் உணவுப் பொருள் போயாக வேண்டும்.
கேசவன் லாரியைச் சுற்றி சென்று டார்ச் விளக்கினால் பரிசோதித்துப் பார்த்தார். நீண்ட ஒரு கம்பியினால் மரவள்ளிக்கிழங்கு மூட்டைகளைச் குத்திப் பார்த்தார். மரவள்ளிக்கிழங்கு மூட்டைகளினூடே திருட்டுத்தனமாகக் கடத்திக் கொண்டு வரப்படும் கட்டைகள் இல்லை.
டிரைவர் நீளமான ஒரு புத்தகத்தில் லாரியின் எண்ணை எழுதிக் கையெழுத்திட்டார். அடுத்து என்ன நினைத்தாரோ, ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து மேஜை மேலிருந்த மசிப்புட்டியின் அடியில் வைத்தார்.
லாரிகள் போனவுடன், மீண்டும் கம்பளியை இழுத்துவிட்டுக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார் கேசவன்.
மேனனுடன் கழித்த அந்த நாட்கள்! கேசவன், மேனனின் வீட்டில் ஓர் உறுப்பினர் என்கிற அளவுக்கு அந்தக் குடும்பத்துடன் தம்மை நெருக்கமாக ஐக்கியப்படுத்திவிட்டிருந்தார். மேனனின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் கேசவன் என்றால் உயிர்! காலொன்று சூம்பிப்போன பிரசன்னகுமாரைத் தோளில் உட்கார வைத்து கேசவன் நடக்கும்போது, தன்னையும் மேலே ஏற்ற வேண்டும் என்று அடம் பிடிப்பான் துடுக்குப் பையனான மோகனசந்திரன்.