ஒளியைப் பரப்பும் இளம்பெண்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6810
காலையில் நீண்ட தூரம் பயணம் போய் விட்டு வரலாம் என்று வீட்டைவிட்டுப் புறப்பட்ட நான் போகும் வழியில் என் பழைய நண்பன் ஒருவனைப் பார்த்தேன். அவனும் நானும் நடந்து இரவின் மது போதையில் இருந்து இன்னும் மீண்டிராத ஒரு பாருக்கு முன்னால் நடந்தோம். பாதி திறந்திருக்கும் அதன் வாசல் கதவைப் பார்த்தவாறே நாங்கள் சிறிது நேரம் பாதையின் எதிர்ப்பக்கத்தில் இருந்த சாய்வு பெஞ்சில் உட்கார்ந்தோம். பறவைகள் ஆகாயத்தில் ஓசை எழுப்பியவாறு பறந்து போய்க்கொண்டிருந்தன. காற்று, “ஸ்ஸ்ஸ்...’ என்று பலமாக வீசி மரத்திலிருந்த இலைகளை வீழ்த்தியது. கீழே விழுந்த இலைகள் எங்களைச் சுற்றிலும் பரவிக்கிடந்தன. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நாங்கள் பாதி அடைக்கப்பட்டிருக்கும் பாரின் கதவை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தோம்.
பாரில் மது ஊற்றிக் கொடுக்கும் பரிசாரகன் கொஞ்சம் கோபக்காரன் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம். அந்த ஆளின் முகம் எப்போதும் வெளிறிப்போய் பார்க்க சகிக்க முடியாத அளவுக்கு அவலட்சணமாக இருக்கும். அவன் வாயைத் திறந்தால், அவன் குரல் அவ்வளவு கர்ண கொடூரமாக இருக்கும். அவன் பேச ஆரம்பித்தால், வாயிலிருந்து வரும் வார்த்தைகளைக் காதால் கேட்க முடியாது. பண வசதி இல்லாத சாதாரண மனிதர்களைக் கண்டால், அந்த ஆளுக்குப் புழு, பூச்சி மாதிரி அவ்வளவு கேவலமாகத் தெரியும். இருந்தாலும், இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் நாங்கள் பாதி திறந்திருக்கும் கதவை நெருங்கினோம். நாங்கள் மிகவும் அலட்சியமாக அந்த பாரைப் பார்த்தோம். ஆனால், எங்களின் பார்வை என்னவோ கதவுக்குப் பின்னால் இருந்த இருட்டை நோக்கியே இருந்தது. நேரம் கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்து கொண்டிருந்தது. ஆகாயத்தில் மேகங்கள் படு வேகமாக சஞ்சரித்துக் கொண்டிருந்தன. பாரின் முற்றத்தில் இருந்த விசிறிப் பனை மரத்தின் காய்ந்துபோன ஓலையில் இருந்து ஒரு வவ்வால் குஞ்சை வாயில் கவ்வியவாறு பாம்பு ஒன்று வேகமாக ஓடியது.
மங்கலாக ஒரு பல்பு பாரின் ஹாலில் எரிந்துகொண்டிருந்தது. இரவில் நிறுத்துவதற்கு மறந்துபோன ஒரு மின்விசிறி உறக்கத்தில் இருப்பதுபோல மெதுவாகச் சுற்றிக்கொண்டிருந்தது. தாங்க முடியாத வீச்சம் தரையில் இருந்தும் மேஜையில் இருந்தும் மூலைகளில் இருந்தும் புறப்பட்டு எங்களை மிகவும் கஷ்டப்படுத்தியது. ஒரு மூலையில் சுவரோடு சேர்த்துப் போடப்பட்டிருந்த மர நாற்காலிகளின் மேல் எங்களுக்குப் பிடிக்காத மது ஊற்றும் மனிதன் இருண்டுபோன முகத்துடனும், தடிமனான உதடுகள் வழியே குறட்டை விட்டவாறும் உலகையே மறந்து உறங்கிக் கொண்டிருந்தான். அந்த ஆளுக்கு மேலே சுவரில் தொங்கிக் கொண்டிருந்த எண்கள் அழிந்து போயிருக்கும் கடிகாரம் ஏழுமுறை அடித்தது. படுத்திருந்த நாற்காலிகள் மிகவும் சிறியதாக இருந்ததால், வசதியாகப் படுக்க முடியாமல் இப்படியும் அப்படியுமாய் நெளிந்த மது ஊற்றும் மனிதன் மிகவும் கஷ்டப்பட்டு அந்தப் பக்கமாய்த் திரும்பிப் படுத்தான்.
நாங்கள் எதுவுமே பேசாமல், அமைதியாக நின்றவாறு மங்கலான வெளிச்சத்தில், எங்களுக்கு நன்கு பழக்கமான வயதான மனிதரைத் தேடினோம். ஆனால், யாருமே இல்லை. எங்கள் விரோதியான அந்த மது ஊற்றும் மனிதனின் குறட்டைச் சத்தம் மட்டும்தான் காதில் விழுந்துகொண்டிருந்தது. அதோடு மின்விசிறியின் ஓசை வேறு கேட்டுக் கொண்டிருந்தது. திடீரென்று எங்களுக்குப் பின்னால் இருந்த ஒரு சிறு அறைக்குள் இருந்து மங்கலான வெளிச்சம் புறப்பட்டு வந்தது. அதற்குள் இருந்து கொட்டாவி விட்டுக் கொண்டும், புகை பிடித்துக்கொண்டும் இரண்டு வேலைக்காரர்கள் வெளியே வந்தார்கள்.
நாற்காலிகள் தலைகீழாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மேஜைகளுக்கு நடுவே அவர்கள் இரண்டு பெருக்குமார்களைக் கையில் வைத்தவாறு சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். எலும்புத் துண்டுகளும், சிகரெட் துண்டுகளும், மீன் முற்களும், கறிவேப்பிலைகளும், அவர்கள் பெருக்க பெருக்க பெருக்குமார்களுக்கு முன்பு வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. நாங்கள் அவர்கள் பெருக்குவதற்கு வசதியாக ஒதுங்கி நின்றோம். பிறகு... மெதுவாக எழுந்து போய் வெளியே விசிறிப்பனை மரத்திற்குக் கீழே போய் நின்றோம். அருமையாக அங்கு காற்று வீசிக்கொண்டிருந்தது. ஆகாயத்தில் சூரியன் சுள் என்று எரிந்து கொண்டிருந்தான். நான் மேலே அண்ணாந்து, காய்ந்து போன் பனை ஓலைகளைப் பார்த்தேன். ‘குஞ்சை இழந்த தாயே... நான் உனக்காக வருத்தப்படுறேன்’ - நான் சொன்னேன்.
நாங்கள் மீண்டும் பாருக்குள் திரும்பி வந்தபோது, எங்களின் விரோதியான பரிசாரகன் தூக்கம் கலைந்து எழுந்து, தொடர்ச்சியாக ‘லொக் லொக் என்று இருமியவாறு, வாய் நிறைய சளியை வைத்துக் கொண்டு ஒரு கையால் வேஷ்டியை இறுகப் பிடித்தவாறு உள்ளே போனான். நாங்கள் கொஞ்சம் பின்னால் நகர்ந்து நின்றோம். அப்போ எங்களுக்கு மிகவும் விருப்பமான வயதான ஆள் சோப் வாசனை கமழ, நெற்றியில் சந்தனம் அணிந்தவாறு, வாயில் வெற்றிலை போட்டு மென்றுகொண்டே நடந்து வந்து கொண்டிருந்தார். அந்த ஆளைப் பார்த்ததும் எங்களின் முகத்தில் ஒரு பிரகாசம் உண்டானது. அவர் எங்களைப் பார்த்துப் பிரியத்துடன் புன்னகைத்தார். தலையை ஆட்டி எங்களைப் பார்த்ததைக் காட்டிக் கொண்டார். வாயில் ஒதுக்கி வைத்திருந்த வெற்றிலைக்கு நடுவே என்னவோ அவர் சொல்ல முயற்சிப்பது தெரிந்தது. பிறகு... தலைகீழாக வைக்கப்பட்டிருந்த நாற்காலிகளை ஒரு மேஜையிலிருந்து கீழே இறக்கி, மேஜைகளை ஜன்னலையொட்டி போட்டார். மேஜையின் மேற்பகுதியை முழுமையான ஈடுபாட்டுடன் சுத்தம் செய்தார்.
நாங்கள் இவ்வளவு சீக்கிரம் அங்கு வந்து உட்கார்ந்திருந்ததை யாரும் கேள்வி கேட்கவில்லை. கண்ணாடி டம்ளர்களைக் கொண்டு வந்து வைத்தார்கள். எங்களுக்காக அடுப்பறையில் யாரோ தீ மூட்டுவதை எங்களால் உணர முடிந்தது. சோடா புட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஐஸ் பெட்டியின் சாவியைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். எங்களுக்காக அடுப்பறையில் முட்டை பொரித்துக் கொண்டிருந்தார்கள். நேற்று வறுத்த மீன் துண்டு கண்ணாடி அலமாரியில் இருந்தது. அதைச் சூடு பண்ண ஆரம்பித்தார்கள்.
நானும் நண்பனும் அவர்கள் மவுனமாகச் செய்துக்கொண்டிருந்த எல்லா வேலைகளையும் வாய் திறந்து பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். பாரின் உள்ளறைக்குள் நுழைந்துபோன அந்த முரட்டுத்தனமான பரிசாரகன் திரும்பி வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனப்பூர்வமாகக் கடவுளிடம் பிரார்த்தித்தோம். அந்த ஆளுக்கு நாங்கள் தரவேண்டிய பணம் எவ்வளவு என்று மனதிற்குள் கணக்குப் போட்டுப் பார்த்தோம். வயதான பெரியவர் மதுவை எங்களுக்கு ஊற்றினார். நாங்கள் குடிக்க ஆரம்பித்தோம். தொண்டை வழியாக சூடாக மது இறங்கி, உள்ளே சென்றது.