க்ரயோஜனிக் எஞ்சின்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7288
ஐ.எஸ்.ஆர்.ஓ திருட்டு வழக்கில் உங்கள் யாருக்குமே தெரியாத ஒரு மனிதன் சிறைக்குப் போயிருக்கிறான். அந்த ஆளின் கதைதான் இது. அந்த மனிதனின் பெயர் குட்டிகிருஷ்ணன். நம்பி நாராயணனையும், மரியம் ரஷீதையும், மற்றவர்களையும் காறித் துப்பவும், திட்டவும், முறைத்துப் பார்க்கவும் நீங்கள்கூட நினைத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் உங்களுக்கு சாந்தி... ஓம் சாந்தி... சாந்தி! உங்களுக்கு இப்பொழுது பைத்தியம் எதுவுமில்லை அல்லவா? நமக்குள் பிசாசு ஓடிக்கொண்டிருந்த அந்த நாட்களில்தான் திருவனந்தபுரத்துக்காரனான குட்டிகிருஷ்ணன் என்ற நாவிதன் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நடந்தது.
நம்பி நாராயணனின் முடியை வெட்டிக் கொண்டிருந்தது- திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் சலூன் வைத்து நடத்திக் கொண்டிருந்த குட்டிகிருஷ்ணன் என்ற மனிதன். முடி வெட்டுவதற்காக என்ற போர்வையில் நம்பி, குட்டிகிருஷ்ணனைத் தேடி அவனின் சலூனுக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்ததாகவும், குட்டிகிருஷ்ணனின் சவரக் கத்தியைப் பயன்படுத்தி அங்கே க்ரயோஜனிக் எஞ்சினைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மாலி பெண்களுக்கு விற்பனை செய்ததாகவும், அதற்கு குட்டிகிருஷ்ணன் உடந்தையாக இருந்ததாகவும், தன்னுடைய வாழ்க்கை நிலைக்கு மேல் பல மடங்கு அதிகப் பணம் அவன் தவறான வழிகள் மூலம் சம்பாதித்திருக்கிறான் என்பதாகவும் அவனின் மேல் குற்றம் சாட்டப்பட்டது. ஒருநாள் ஒரு வேன் நிறைய போலீஸ்காரர்கள் குட்டிகிருஷ்ணனின் சலூன்முன் வந்து இறங்கினார்கள். கையில் துப்பாக்கிகளை உயர்த்திப் பிடித்தபடி கடைக்குள் நுழைந்தார்கள். உதவி கமிஷனர் தன் கையில் இருந்த துப்பாக்கியை நீட்டியவாறு கேட்டார்: "எங்கேடா நாயே, அந்த க்ரயோஜனிக் எஞ்சினோட மீதி பாகங்கள்?''
குட்டிகிருஷ்ணன், கணபதி கோவிலில் தேங்காய் விற்பனை செய்யும் மனிதனுக்கு அப்போது முடிவெட்டிக் கொண்டிருந்தான். போலீஸ்காரர்களைப் பார்த்ததும் பதறிப்போன தேங்காய் வியாபாரி, விழுந்தடித்துக்கொண்டு ஓடி கணபதி கடவுளின் காலில் சரணம் புகுந்தான். அதனால் அவனுக்கு எந்தவித கேடும் உண்டாகவில்லை. குட்டிகிருஷ்ணன் "கிடுகிடு"வென்று நடுங்கியவாறு சொன்னான்: "எஜமான், நீங்க சொல்ற மாதிரி அப்படி ஒரு இயந்திரம் எதுவும் இங்கே இல்ல...'' அடுத்த நிமிடம் உதவி கமிஷனர் ஒரு போலீஸ்காரனின் துப்பாக்கியை வாங்கி, அதை ஓங்கி சலூனில் இருந்த கண்ணாடி மேலும், குட்டிகிருஷ்ணனின் தலையிலும் அடித்தார். பிறகு அவர் சொன்னார்: "ராஜத்துரோகி, நீ இன்னைக்குப் பத்திரிகை படிச்சியா இல்லியா?'' ஒரு மூலையில் என்னவோ பாடிக்கொண்டிருந்த மர்பி ரேடியோவைச் சுட்டிக் காட்டியவாறு ஒரு கான்ஸ்டபிள் சொன்னான்: "தப்பான வழிகள்ல பணம் சம்பாதிச்சதுல வாங்கினதாகத்தான் இருக்கும் இந்த ரேடியோவும்.''
"அந்த ரேடியோவை இங்கே எடு.'' ஏ.ஸி. உரத்த குரலில் சத்தமிட்டார்.
அவ்வளவுதான். அந்த கான்ஸ்டபிள் ஓடி வந்து அந்த மர்பி ரேடியோவைத் தூக்கினான். குட்டிகிருஷ்ணன் அதற்கு அத்தாட்சியாக கைநாட்டு வைத்தான்.
ஐந்தாம் நாள் மேஜிஸ்ரேட் நீதிமன்றத்திற்கு குட்டிகிருஷ்ணனை அழைத்து வந்தபோது, அவன் கை- கால், நகங்கள், புருவங்கள், முலைக்கண்கள், பிறப்பு உறுப்பு, மலத்துவாரம்- எல்லா இடங்களிலும் காயங்கள். நம்பிநாராயணன், சசிகுமாரன்- இரண்டு பேருடனும் கூட்டுச் சேர்ந்து க்ரயோஜனிக் இயந்திரத்தைத் துண்டு துண்டாகப் பிரித்து மாலி பெண்கள் மூலமாக பாகிஸ்தானுக்கு தான் விற்றதாக தானே குற்றத்தை ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போட்டிருந்தான் குட்டிகிருஷ்ணன். அதற்கு விலையாக தனக்குக் கிடைத்த ஏழு கோடி ரூபாயில் வாங்கியதுதான் நான்கு வால்வுகள் கொண்ட மர்பி ரேடியோ என்று குட்டிகிருஷ்ணன் ஒப்புக்கொண்டிருந்தான். மீதிப்பணத்தை வைத்து திருவனந்தபுரத்தில் ஒரு பால் பண்ணையும், பல் மருத்துவக் கல்லூரியும், திருநெல்வேலியில் காற்றாடி மின் உற்பத்தி நிலையமும், டெல்லியில் டிஸ்கொத்தேவும் ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்ததாகக் குட்டிகிருஷ்ணன் சொன்னான். பிறகென்ன? அவனை சிறைக்குக் கொண்டு போனார்கள்.
ஆனால், பிரபல மலையாளப் பத்திரிகைகளில் பணிபுரியும் பலருக்கும் குட்டிகிருஷ்ணன் காசு எதுவும் வாங்காமல் இலவசமாக சவரம் செய்திருப்பதால், அவர்கள் அவன் கைது செய்யப்பட்டதையோ, சிறைத்தண்டனை பெற்றிருப்பதையோ தங்களின் அன்றாட திரைக்கதைகளில் சேர்க்கவில்லை. நன்றி உணர்வு கொஞ்சம் இருந்ததால், குட்டிகிருஷ்ணன் விஷயத்தை அவர்கள் வேண்டுமென்றே கண்டுகொள்ளவில்லை. குட்டிகிருஷ்ணன் ஒரு போராளி என்று ஒரே ஒரு பத்திரிகை மட்டும் கட்டுரை எழுதியிருந்தது. அந்தப் பத்திரிகை குட்டிகிருஷ்ணன் உறுப்பினராக இருக்கும் கட்சிக்கென்று இருக்கும் பத்திரிகை. அந்தப் பத்திரிகையும் கருணை மனம் கொண்டு அவனின் கைது படலத்தையும், சிறை வாசத்தையும் பொதுமக்கள் பார்வையில் படாமல் பார்த்துக் கொண்டது. விளைவு- குட்டிகிருஷ்ணன் ஒரு கதாநாயகனாக நான்கு பேருக்குத் தெரிகிற மாதிரி இல்லாமல் போனான். அதனால் குட்டிகிருஷ்ணனை அடிப்பதற்கோ, உதைப்பதற்கோ, திட்டுவதற்கோ, முறைத்துப் பார்ப்பதற்கோ, கல்லைவிட்டு எறிவதற்கோ உங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
தான் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்தவாறு குட்டிகிருஷ்ணன் தன் உடம்பில் காயம் பட்டு மரத்துப் போயிருக்கும் உறுப்புகளைத் தொட்டுப் பார்த்தான். தன்னை இவர்கள் இனியும் உயிரோடு விட்டு வைப்பார்களா என்று ஒரு நிமிடம் அவன் சிந்தித்துப் பார்த்தான். "இனியும் நான் கத்திரியையும் சீப்பையும் கையில வச்சுக்கிட்டு கைரளி கட்டிங் சலூன்ல நிற்க வாய்ப்பு இருக்கா? என்னோட மனைவியும், குழந்தைகளும் இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருப்பாங்க? அந்த ரேடியோ இப்போ எங்கே இருக்கும்? என்னோட அப்பா ஐம்பது வருஷங்களுக்கு முன்னாடி வரதட்சணை வாங்குறப்போ கொண்டு வந்த ரேடியோ அது. கண்ணாடியை போலீஸ்காரங்க அடிச்சு உடைச்சிட்டாங்க. அதே மாதிரி ஒரு கண்ணாடியை இப்போ வாங்குறதுக்கு கையில காசு இல்லியே! ஆனால், நான் சலூனுக்கு இன்னொரு முறை போவேனா?" இப்படிப்பட்ட பலவித சிந்தனைகளுடன் இருந்த குட்டிகிருஷ்ணன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு தன் கண்களை மூடினான்.
குட்டிகிருஷ்ணன் ஒரு கனவு கண்டான். அந்தக் கனவில், அவன் சலூனில் இருக்கும் நாற்காலியில் தங்கத்தாலான ஒரு இயந்திரம் இருக்கிறது. அதில் குழாய்களும், பற்களாலான சக்கரங்களும், ஓட்டைகளும், நீளமான கண்ணாடிக் குழாய்களும், கண்சிமிட்டிக் கொண்டிருக்கும் வண்ண விளக்குகளும் இருக்கின்றன. அந்த இயந்திரம் இப்போது அழுகிறது. தேம்பித் தேம்பி அழுதவாறு இயந்திரத்தை பச்சை, சிவப்பு வண்ணங்களில் உள்ள தன் கண்களால் குட்டிகிருஷ்ணன் பார்க்கிறான். அடுத்த நிமிடம் அவன் கத்திரியையும் சீப்பையும் கீழே வைத்துவிட்டு, அந்த இயந்திரத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு முத்தம் தருகிறான். "அழாதே மகனே...'' குட்டிகிருஷ்ணன் சொல்கிறான். அப்போது அறை முழுக்க ஒரு தங்க நிற வெளிச்சம் பரவுகிறது. இயந்திரம் குட்டிகிருஷ்ணனிடம் சொல்கிறது: "நான் உன்னில் கலந்திருக்கிறேன்.''