கடிதம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7491
நான் மீண்டும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறேன். வெளியே வருவதேயில்லை. ஏதாவது படிக்கலாம் என்றாலோ அதில் கொஞ்சம்கூட கவனம்போக மாட்டேன் என்கிறது. என்னுடைய புத்தகங்கள் அலமாரியில் வரிசை வரிசையாக அடுக்கப்பட்டிருக்கின்றன. எழுதுவதற்கு ஒன்றுமே தோன்றவில்லை. மனதில் அழகுணர்வு பற்றிய நினைவு கொஞ்சம்கூட இல்லை. நான் உனக்கு இந்தக் கடிதத்தை மிகவும் அவசர அவசரமாக எழுதுகிறேன்.
நாளைக்கு அவர்கள் என்னை வேறெங்கோ கொண்டு போகப் போகிறார்கள் என்று என் மனதிற்குத் தோன்றுகிறது. டிரைவரிடம் நாளைக்குப் பொழுது புலர்வதற்கு முன்னால் வந்துவிட வேண்டும் என்று அவர்கள் சொன்னது மட்டும் என் காதில் விழுந்தது. ஒருவேளை அவர்கள் என்னைக் கொண்டு போகப்போகும் இடத்தில் பேப்பரும் பேனாவும் இல்லாமல் இருந்தால்...? அதனால்தான் இந்த இரவு நேரத்தில் அமர்ந்து இந்தக் கடிதத்தை உனக்கு அவசர கதியில் எழுதுகிறேன். நீ என்னுடைய கடைசி மகனாக இருப்பதால், என்னைப் பற்றிய எல்லா உண்மைகளையும் உன்னிடம் கூறிவிடுவதுதான் சரியான விஷயமென்று நான் நினைக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் ரகசியங்கள் உன்னுடைய கற்றலின் ஒரு பாகமாக இருக்கட்டும். இவற்றைப் பற்றி நீ வீணாக சிந்தித்துப் பார்த்து வருத்தப்பட வேண்டாம். நான் சொல்லப் போகும் விஷயங்களை, ஒரு மனிதனின் வாழ்க்கை அனுபவங்கள் என்ற அளவில் மட்டும் நீ எடுத்துக் கொண்டால் போதும். இந்த அறைக்குள் இப்போது ஆக்கிரமித்திருக்கும் இருட்டு வெகு சீக்கிரமே என் ஆத்மாவிற்குள்ளும் நுழையும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். உன்னை அந்தச் சமயத்தில் யார் என்றே தெரியாத ஒரு ஆளைப் போல நான் பார்க்கலாம். ஆனால், உண்மையை நீ தெரிந்து கொள்ள வேண்டும். பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாமலே, சில காரியங்களை எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் செய்ய முயன்று தோல்வியடைந்த வேதனையை பலமுறை அனுபவிக்க நேர்ந்த ஒரு மனிதனாக மட்டுமே உன் தந்தையை நீ எடுத்துக் கொண்டால் போதும். என் கண்களில் தெரியும் பரிச்சயமின்மையைப் பார்த்து நீ துணுக்குற வேண்டாம். அதனால்தான் அவசர அவசரமாக நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
நீ எல்லாவற்றையும் அறிய வேண்டும். யாருக்குமே தெரிந்திராத ஒரு சம்பவத்தை நான் உனக்குக் கூறுகிறேன். நாற்பது வருடங்கள் கடந்தோடிய பிறகும், என் மனதில் அந்த நிகழ்ச்சி அப்படியே ஞாபகத்தில் இருக்கிறது. என் மனதால் அந்தச் சம்பவத்தை மறக்கவே முடியவில்லை. நான் இங்கு அமர்ந்து இந்த இரவு வேளையிலும் என் நகத்தைக் கடித்து தின்று கொண்டிருக்கிறேன். என் கைகள் வலிக்கின்றன. அவற்றில் இருந்த பலம் குறைந்துவிட்டது. பலம் குறைந்த வேதனையை என்னால் உணர முடிகிறது. ஒரு வேளை புதிய தலைமுறையைச் சேர்ந்த, புதிய அனுபவங்களைத் தேடும் உன்னால் என்றைக்காவது என்னுடைய அனுபவத்தைப் புரிந்து கொள்ள முடியலாம். சரி - நான் சொல்வதைக் கேள். திருமணம் செய்வதற்கு முன்பு இளைஞனாக இருந்த நான் ஒரு நண்பனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். என் நண்பன் ஜானுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. ஏழு மாதமே ஆன சிறு குழந்தை அவனுக்குப் பிறந்திருந்தது. பிரசவமானபோது, நான் போய் வியப்புடன் பார்த்த குழந்தை அது. மதியம் ஆவது வரை நானும் ஜானும் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். சீட்டு விளையாடினோம். மற்றவர்களைப் பற்றி கிண்டல் பண்ணி பேசினோம். ஆபாசக் கதைகள் எவ்வளவோ பேசினோம். வாய்விட்டு சிரித்தோம். மதிய உணவு முடிந்து நாங்கள் திண்ணையில் வந்து மீண்டும் உட்கார்ந்தோம். ஜானின் மனைவி அவர்களின் குழந்தையைக் கையில் எடுத்தவாறு வந்து எங்கள் உரையாடலில் அவளும் கலந்து கொண்டாள். நான் திண்ணையில் உட்கார்ந்தவாறு குழந்தையைப் பார்த்து நாக்கை நீட்டி காண்பித்து சிரித்தேன். கைகளைத் தட்டினேன். கையை நீட்டினேன். விசிலடித்தேன். நான் கேட்டேன்: “மகனே... உனக்கு என்னைத் தெரியுதா? என் கூட நீ வர்றியா?” என்னுடைய கண்ணாடியைக் கழற்றி அவன் முன் நீட்டியவாறு நான் கேட்டேன்: “மகனே, உனக்கு கண்ணாடி வேணுமா? வா... நான் உனக்கு போட்டு விடுறேன்!” நான் அதற்கு முன்பு எந்தக் குழந்தையையும் தூக்கியதில்லை. அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதையோ என்ன நினைக்கிறார்கள் என்பதையோ என்னால் புரிந்து கொள்ள முடியாததால் பொதுவாக குழந்தைகளைத் தூக்க எனக்கு பயம்தான். தெய்வங்களைப் போல புரிந்து கொள்ள முடியாத மனதைக் கொண்டவர்களாயிற்றே குழந்தைகள்! அந்த தைரியத்துடன் நான் அந்தக் குழந்தையைத் தொட்டேன். “மகனே வா” என்று சொல்லியவாறு நான் மீண்டும் என் இரண்டு கைகளையும் அவன் முன் நீட்டினேன். என் நண்பனின் மனைவி சிரித்தவாறு குழந்தையை என் கைகளில் தந்தாள். நான் அந்தக் குழந்தையின் குளிர்ந்து போயிருந்த மென்மையான இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்து வாங்கினேன். சிரித்துக் கொண்டே விசிலடித்தவாறு குழந்தையை நான் வாங்கியபோது, குழந்தை என் கைகளை விட்டு நிலத்தில் விழுந்தது.
அது சாகவில்லை.
உடம்பில் எந்த உறுப்பிற்கும் எந்தவித கேடும் உண்டாகவில்லை.
நான் அந்த நிமிடத்தில் செத்துப்போன மனிதனாகிவிட்டேன். என்னை மீறி கத்தினேன். தேம்பித் தேம்பி அழுதேன். ஒரு இயந்திரத்தைப் போல குழந்தையின் தாயையும் தந்தையும் வெறித்துப் பார்த்தேன். அவர்களின் பார்வை கூர்மையான கத்தியைப் போல என்னைக்குத்தியது. என் இதயத்தில் இரத்தம் வடிந்தது. கண்ணீர் விட்டு அழுதேன். கல்லாக மாறினேன். வாய்விட்டு உரத்த குரலில் கத்தினேன்.
மகனே, அதற்குப் பிறகுதான் எனக்கு திருமணம் ஆனது. உன்னுடைய அண்ணன்மார்கள் பிறந்தார்கள். உன்னுடைய சகோதரிகள் பிறந்தார்கள். நீயும் பிறந்தாய். ஒவ்வொருத்தரும் அந்தந்த நேரத்தில் போர்டிங்குகளிலும் ஹாஸ்டல்களிலும் லாட்ஜ்களிலும் பிறகு... வாடகை கட்டிடங்களிலும் வளர்ந்தீர்கள்.
இந்தச் சம்பவம் அவர்கள் யாருக்கும் தெரியாது. என்னை அவர்கள் நாளை காலையில் வேறு எங்கோ கொண்டு போகப் போகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இங்கு நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதை வைத்துத்தான். எனக்கே தெரியாமல் சில விஷயங்கள் நடந்து விடுகின்றன என்பதையும், அந்த மாதிரியான நேரங்களில் நானே செயலற்று நின்று விடுகிறேன் என்பதையும் சிகிச்சை செய்து மாற்றி விடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்களா என்ன? ஆனால், அப்படி நான் நினைக்கவில்லை. அவர்களால் என்னைப் புரிந்து கொள்ள முடியாததால், நான் அவர்களுக்கு கீழ்படிந்து நடக்க தயாராகிவிட்டேன். அவர்களின் உலகத்தில் இருக்கும் சட்டதிட்டங்கள் இனி எனக்குப் பொருந்தாது.