கடிதம் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7493
இவர்களின் துக்கத்திற்கு ஒரு மாற்றம் உண்டாக்க நான் நினைத்தேன். வயதான கிழவியின் பிணத்தைச் சுற்றிலும் அவர்கள் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க, அந்த அழுகைச் சத்தத்திற்கு மத்தியில் வேறு எந்தவொரு சத்தமும் அங்கு கேட்காமல் இருக்க, நான் இந்த துக்கத்தில் மூழ்கிப் போயிருக்கும் மக்களின், பேரக் குழந்தைகளின் மனதில் சிறிது மாற்றம் உண்டாகட்டும், கொஞ்சம் அங்கு குளிர்ச்சி உண்டாகட்டும் என்றெண்ணி பிணம் இருந்த கட்டிலுக்குப் பின்னால் அந்த ரேடியோகிராமின் அருகில் சென்று ஷெல்ஃபில் இருந்து ஒரு லாங்க் ப்ளே இசைத் தட்டை எடுத்து, ரிக்கார்ட் சேஞ்சரில் வைத்து பொத்தானை அழுத்தி, ஒலியின் அளவைக் குறைத்து வைத்தேன். இருந்தாலும் நான் செய்த செயல் அங்கு அழுது கொண்டிருந்தவர்களின் முகத்தில் இலேசான ஒரு பிரகாசத்தை உண்டாக்கியதை என்னால் உணர முடிந்தது. ரேடியோகிராமின் மினுமினுக்கும் மேற்பகுதியில் கையை வைத்தவாறு நான் காத்திருந்தேன். க்ளிக்... க்ளிக் இசைக்கருவிகள் இயங்க ஆரம்பித்தன. குழல்கள் ஊதின. மணியோசை கேட்டன. இனிமையான ஒரு பாடல் காற்றில் தவழ்ந்து வந்தது. ‘சாந்த் கோ க்யா மாலும்...’
துக்கம் கலந்த அழுகைக் குரல்கள் திடீரென்று நின்றவுடன் நான் சந்தோஷம் கொள்ள ஆரம்பித்தேன். நான் நினைத்தது நடந்துவிட்டது. நான் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க, அவர்களின் கண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்த முகங்கள் ஒவ்வொன்றும் எனக்கு நேராக இயந்திரங்களைப் போல் திரும்பின. என்னுடைய நீட்டப்பட்ட கைகளுக்குக் கீழே பாடிக் கொண்டிருந்த ரேடியோகிராமையும் அவர்கள் நம்ப முடியாத கண்களுடன் பார்த்தார்கள்.
அவர்களின் கண்கள் என்னைக் கழுகுகளைப்போல கொத்தப் பார்த்தன. அந்தப் பார்வைகளைப் பார்த்து பனிக் கட்டியைப்போல் நான் உறைந்து போனேன். பந்தத்தால் நெருப்பு வைப்பதைப் போல என்னை அவர்கள் பார்த்தார்கள். அவர்களின் கண்ணீர் வழிந்து கொண்டிருந்த கன்னத்தில் கோபத்தின் சிவந்த ஜுவாலைகளையும் நான் பார்த்தேன். அவர்களின் முகங்களில் வெறுப்பு, ஏமாற்றம், அவமானம், கண்டனம் எல்லாமே இருப்பதை என்னால் உணர முடிந்தது.
“தொம்மச்சனச்சா!” - யாரோ உரத்த குரலில் என்னை அழைத்தார்கள்.
அவர்களின் செயலைப் புரிந்துகொள்ள முடியாமல் நின்றிருந்த என்னுடைய கைகளைப் பிடித்து இழுத்து அறைக்கு வெளியே கொண்டு போனாள் உன் தாய். பிறகு அவள் தேம்பித் தேம்பி அழுதாள். உன்னுடைய அண்ணன்மார்கள் என்னை சுற்றி நின்றார்கள். “அப்பா...” அவர்கள் அழைத்தார்கள். “அப்பா உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி நடந்தீங்க?” என்றார்கள்.
உன்னுடைய டாக்டர் அண்ணன் சொன்னான்: “அப்பா, யூ ஆர் லூஸிங் யுவர் ஹோல்ட் ஆன் திங்க்ஸ். யூ நீட் எ லாங் ரெஸ்ட்!” ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் அவர்கள் என்னைப் பார்த்து என்னென்னவோ சொன்னார்கள். என்னைக் காரில் ஏற்றி நேராக வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். என்னால் எதுவும் பேச முடியவில்லை. நான் எதற்காக அந்த ரேடியோகிராமை இயங்க வைத்தேன் என்பதற்கான காரணத்தை அங்குள்ளவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்? நான் சொல்வதை அவர்கள் காது கொடுத்து கேட்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நான் களைப்படைந்து விட்டேன். மகனே, மற்றவர்களுக்கு கீழ்ப்படிந்து போவதுதான் சரியான விஷயமாக இருக்கும். யாருடனும் பேச எனக்கு விருப்பம் இல்லை. என்னுடைய புத்தகங்களும், நான் எழுதிய புத்தகங்களும், என்னுடைய நண்பர்கள் எழுதிய கடிதங்களும், என்னுடைய ஆடைகளும், என் பேனாவும், என் ஷேவிங் செட்டும், என்னுடைய பேரக் குழந்தைகளின் படங்களும், சுவரில் மாட்டப்பட்டிருக்கும் தாயின் படமும் என்னைச் சுற்றிலும் இருந்து என்னையே பார்க்கின்றன. நான் அவற்றிலிருந்து மாறுபட்டு தெரிகிறேன். இனிமேல் நான் மவுனமாக இருப்பதே சரியானது. நீ என்னைப் பார்க்க வருகிறபோது, நான் உன்னை அடையாளம் தெரியாதது மாதிரி நடந்துகொண்டால் அதற்காக நீ வருத்தப்படாதே. நான், நீ அறியும் நான், எனக்குள் மறைந்திருக்கிறேன். ஆனால், நான் வெளி உலகத்திற்கு வர விரும்பவில்லை. அது என்னை மோசம் செய்கிறது.