கடிதம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7493
என் கண்களில் பரிச்சயமின்மைக்கான முகமூடி அணிவிக்கப்பட்டு விடும்போது, நான் அதற்குப் பின்னால் எதுவுமே தெரியாதது மாதிரி அமைதியாக உட்கார்ந்திருப்பேன். நீ அப்போது என்னைப் புரிந்து கொள்ள வேண்டும். சரி... நான் சொல்ல வந்த விஷயத்தை சீக்கிரமாக கூறிவிடுகிறேன்.
மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சண்ணியின் திருமணத்திற்கு நீயும் வந்திருந்தாய் அல்லவா? திருமணம் முடிந்ததும் நீ உடனடியாக போர்டிங்குக்குப் போய்விட்டாய். இரவில் உணவு சாப்பிட்டு முடிந்தபிறகு, நாங்கள் எல்லோரும் சண்ணியின் வீட்டில்தான் தங்கினோம். நான் வராந்தாவில் ஒரு பாயை விரித்துப் படுத்துக் கிடந்தேன். மாலை முதலே சண்ணியிடமும் அவனின் மனைவியிடமும் மாமா என்ற முறையில் ஏதோ ஒரு முக்கிய விஷயத்தை நான் சொல்ல விரும்பினேன் என்பதையும், அதை நான் மறந்துவிட்டேன் என்பதையும் என் மனம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தது. நான் திண்ணையில் பாயில் படுத்தவாறு வானத்தில் இருந்த நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சண்ணியிடம் நான் சொல்ல வேண்டிய விஷயம் என் ஞாபகத்தில் வந்தது. மீண்டும் அதை நான் மறந்து போய் விடக்கூடாது என்பதற்காக வேகமாக நடந்து போய் சண்ணியும் அவன் மனைவியும் படுத்துக் கிடக்கும் அறை வாசல் கதவு அருகில் போனேன். கதவை மெதுவாகத் தட்டினேன். தொடர்ந்து பல தடவை தட்டிய பிறகு சண்ணி உள்ளேயிருந்தவாறு கேட்டான்: “யாரு?”
நான் சொன்னேன்: “தொம்மச்சனச்சன்...”
சண்ணி கதவைத் திறந்தான்: “என்ன தொம்மச்சனச்சா?”
நான் சொன்னேன்: “சண்ணி... உன்கிட்டயும் உன் மனைவிகிட்டயும் நான் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும். அது என்னன்னா...”
நான் சொல்ல வந்த விஷயத்தை முற்றிலுமாக மறந்து விட்டிருந்தேன். தயங்கிய குரலில் அவனைப் பார்த்து நான் சொன்னேன்: “சண்ணி... நான் திரும்பவும் அந்த விஷயத்தை மறந்துட்டேன். நீ போய் படு. நான் ஞாபகப்படுத்தி பார்க்குறேன்...”
நள்ளிரவுக்குப் பிறகு எனக்கு தூக்கம் இல்லாமல் போனது. அப்போதுதான் மறந்து போயிருந்த விஷயம் எனக்கு ஞாபகத்தில் வந்தது. அவ்வளவுதான் - அடித்துப் புரண்டு எழுந்தேன். ஆகாயத்தில் நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. பயங்கர குளிர் வேறு. இங்குமங்குமாய் பனித்துளிகள் விழுந்து கொண்டிருந்தன. மூச்சு விடும் சத்தம், குறட்டைச் சத்தம், முணுமுணுப்புகள் ஆகியற்றைத் தட்டுத் தடுமாறித் தாண்டிப்போய் மீண்டும் நான் சண்ணியின் அறைக் கதவைத் தட்டினேன். திரும்பத் திரும்ப தட்டிக் கொண்டே இருந்தேன். இந்தத் தடவை நான் சொல்ல வந்த விஷயத்தை மறந்துபோய்விடக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தேன். என் மனது என்னுடைய ஞாபக சக்தியை இறுக பிடித்துக் கொண்டிருக்க, என் கைகள் கதவை வேகமாக தட்டியவண்ணம் இருந்தன. “சண்ணிசண்ணி...”- நான் குரலை உயர்த்தி கூப்பிட்டேன். என் சத்தத்தைக் கேட்டு அங்கு தூங்கிக் கொண்டிருந்த எல்லோரும் எழுந்துவிட்டார்கள். சிலர் படுக்கையை விட்டு எழுந்து என்ன விஷயம் என்று விசாரித்தார்கள். சில குழந்தைகள் அழுது கொண்டிருந்தன. மூன்று நான்கு ஆட்கள் இருட்டைத் தாண்டி என்னருகில் வந்து என்னிடம் கேட்டார்கள்: “என்ன தொம்மச்சா?”
“சண்ணிக்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும்”- நான் உண்மையைச் சொன்னேன்.
சண்ணி அப்போது கதவைத் திறந்தான். நான் சொன்னேன்: “சண்ணி, நான் மறந்த விஷயம் இப்போ எனக்கு ஞாபகத்துல வந்திருச்சு. விஷயம் இதுதான். நாமெல்லாம்...”
நான் சொல்ல வந்த விஷயத்தை முழுமையாக சொல்ல அவர்கள் யாரும் விடவில்லை. அவர்கள் என்னை பலவந்தமாக இழுத்துக்கொண்டு போனார்கள். சண்ணி என்னைத் தப்பாக புரிந்து கொண்டிருக்க வேண்டும். நான் வெட்கக்கேடான முறையில் நடந்து கொண்டதாகவும், என் வயதுக்குத் தகுந்தபடி பக்குவமான முறையில் நடந்துகொள்ளவில்லை என்றும் அவர்கள் என் மீது குற்றம் சுமத்தினார்கள். உன் தாய் கூட என்னை சந்தேகம் கொண்ட நாணக்கேட்டின் வேதனையை அனுபவிக்கிற கண்களுடன் பார்த்தாள். நான் யாருக்காவது தொந்தரவுகள் கொடுத்தேனா? யாரையாவது கொன்றிருக்கிறேனா? யாரையாவது தாக்கி இருக்கேனா? யாருக்காவது துரோகம் செய்திருக்கிறேனா? யாரையாவது அவமானப்படுத்தியிருக்கேனா? யாரையாவது கற்பழித்திருக்கிறேனா? யாரையாவது மோசம் செய்திருக்கிறேனா? நான் அப்படி செய்து விட்டேன்?
கடைசியில் சென்ற வாரம் என்னைப் பற்றிய ஒரு தெளிவான அறிவு அவர்களுக்குக் கிடைத்தது. உன்னுடைய பெரிய பாட்டியின் தங்கை காலமாகிவிட்டாள். தேவையில்லாமல் உனக்கு இந்த விஷயத்தைச் சொல்லி எதற்கு வீணாக படிப்பிற்கு தொந்தரவு வருவது மாதிரி செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. எல்லோரும் வந்திருந்தார்கள். எல்லோரும் சேர்ந்து அழுதார்கள். நெஞ்சில் அடித்துக் கொண்டார்கள். பலர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்கள். சிலர் தாங்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுதார்கள். நான் போன அறை ஒவ்வொன்றிலும் துக்கம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. சாம்பிராணி புகையில் துக்கத்தின் வாசனை இரண்டறக் கலந்து போயிருந்தது. நான் சுற்றிலும் பார்த்துக் கொண்டு நின்றேன். எண்பது வயது பூர்த்தியான கிழவியை வெள்ளைத துணியில் சுற்றி கைகளில் சிலுவையையும், பூச்செண்டையும் கொடுத்து படுக்கப் போட்டிருக்கிறார்கள். இதில் துக்கப்படுவதற்கு ஒரு காரணமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எண்பது வயதான அந்தக் கிழவி இன்னும் மரணமடையாமல் இருந்தால்தான் உண்மையிலேயே கவலைப்பட வேண்டும்! கண் பார்வை தெரியாமல், நடக்க முடியாமல், மலம் - மூத்திரம் கழிப்பதற்கு இன்னொருத்தர் உதவியை நாடாமல் காய்ந்து கருவாடாகப் படுத்துக் கொண்டு இருக்காமல் இவ்வளவு சீக்கிரம் அந்தக் கிழவி மரணத்தை தழுவியது எவ்வளவு பெரிய விஷயம்! தன்னுடைய மக்கள் விவசாயம் செய்தும், வியாபாரம் செய்தும் பணக்காரர்கள் ஆனதை அந்த வயதான தாய் வாழும் காலத்திலேயே பார்த்து விட்டாள். கார்கள் வாங்கியதையும், பங்களாக்கள் கட்டியதையும் பார்த்து விட்டாள். பேரக் குழந்தைகளின் ஆர்ப்பாட்டமான திருமணங்களில் கலந்து கொள்ள நீளமான கார்களில் முகம் முழுக்க புன்னகையுடன் அவள் போனாள். தன்னுடைய மக்கள் தன்னைச் சுற்றிலும் நின்றிருக்க, திருமண நிகழ்ச்சிகளை கண் குளிர கண்டாள். வீட்டில் மொசைக் போட்ட அறையில் அமர்ந்து கண்ணாடி ஜன்னல்கள் வழியாக புதுப்புது இசையும் தானே இயங்கும் இயந்திரங்களில் இருந்து புறப்பட்டு வருவதை காது குளிர கேட்டாள். மொத்தத்தில் - அவள் பூரண மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவினாள். பாக்யசாலியான அந்த வயதான தாய்க்காக இவ்வளவு உரத்த குரலில் அழுவது, மயக்கமடைவது, ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு கூப்பாடு போடுவது, கண்களில் சுய உணர்வே இல்லாமல் இங்குமங்குமாய் அலைந்து திரிவது - இவற்றையெல்லாம் உண்மையாகவே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.