ஆசாரிப் பெண்ணின் திருமணம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4508
ஆசாரிப் பெண்ணின் திருமணம்
எம். முகுந்தன்
தமிழில்: சுரா
ஆசாரிப் பெண்ணின் திருமணத்திற்கு பொன் இல்லை. நான்கு ஆட்களிடம் கேட்டான். ஊரில் உள்ளவர்களிடம் கேட்டான். பொன் கிடைக்கவில்லை.
பெண்ணுக்கோ மார்பகம் வந்தது. திருமணம் செய்து கொடுப்பதற்கான வயது வந்தது. ஆசாரியால் பாதையில் இறங்கி நடக்க முடியவில்லை. குடும்பத்தில் உள்ளவர்களும் ஊரில் உள்ளவர்களும் கேட்பார்கள்:
‘ஆசாரியே... ஆசாரியே.... ஆசாரிப் பெண்ணுக்கு எப்போது திருமணம்?’
அதைக் கேட்கும்போது, ஆசாரிக்கு கோபம் வரும். அவன் ஒரு அமைதியான மனிதன். முகத்தைக் கறுப்பாக்கி, யாரிடமும் ஒரு வார்த்தை கூட கூற மாட்டான். அதனால் கோபத்தை உள்ளுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு, ஆசாரி கூறுவான்:
‘குடும்பத்தைச் சேர்ந்தவர்களே... ஊரில் உள்ளவர்களே... மழை போய் வெயில் வரும்போது ஆசாரிப் பெண்ணுக்கு திருமணம்.’
அப்போது வானத்தில் மழை மேகங்கள் இருந்தன. ஆசாரிக்கு நிம்மதி உண்டானது. இன்னும் ஒரு மூன்று மாத காலம் மழை இருக்கும். இனி மழைக் காலம் முடியும் வரை யாரும் திருமண விஷயத்தைப் பற்றி பேச மாட்டார்கள் அல்லவா?
‘என் ஆசாரிக்கு இன்று என்ன கவலை? முகம் ஏன் மங்கலாக ஆகி விட்டது? கண் ஏன் ஈரமாகி விட்டது?’
ஆசாரியின் மனைவி அருகில் வந்து நின்றாள்.
‘குடும்பத்தில் உள்ளவர்களும் கேட்கிறார்கள். ஊரில் உள்ளவர்களும் கேட்கிறார்கள். ஆசாரிப் பெண்ணுக்கு எப்போது திருமணம் என்று....’
‘குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொல்லணும்.... ஊரில் உள்ளவர்களிடமும் சொல்லணும்... மழை போய் வெயில் வரும் போது ஆசாரிப் பெண்ணுக்கு திருமணம் என்று.’
மழை போய் வெயிலும் வந்தது. சிங்ஙம் மாதம் பிறந்தது. பொன்னென தகித்துக் கொண்டிருந்த வெயிலில் வண்டுகள் பறந்து கொண்டிருந்தன. ஆசாரியின் ஊருக்கே அழகு பிறந்தது.
‘ஆசாரியே... ஆசாரியே...’
குடும்பத்தில் உள்ளவர்களும், ஊரில் உள்ளவர்களும் கேட்டார்கள்.
‘மழை போய், வெயில் வந்தது. ஆசாரிப் பெண்ணுக்கு எப்போது திருமணம்?’
‘வெயில் போய், மழை வர்றப்போ ஆசாரிப் பெண்ணுக்கு திருமணம்.’
ஆசாரி கூறினான்.
வெயில் போய், மழை வந்தது. மழை போய், வெயிலும் வந்தது. எனினும், ஆசாரிப் பெண்ணிற்கு ஒரு வழியும் பிறக்கவில்லை.
ஆசாரிக்கு பசியில்லை, உறக்கமுமில்லை. அதைப் பார்த்து ஆசாரியின் மனைவிக்கும் பசியில்லை, உறக்கமுமில்லை. அவர்களின் மனம் வேதனைப்பட்டது. அவர்கள் சிந்தித்தார்கள். பத்து பவுன் வேண்டும். அதற்கு எங்கு போவார்கள்? அதற்கு என்ன செய்வார்கள்? அது எங்கிருந்து கிடைக்கும்? அதை யார் தருவார்கள்? அவர்களுக்கு எப்படி பசி எடுக்கும்? அவர்கள் எப்படி உறங்குவார்கள்?
‘எனக்கு ஒரு வழி தெரிகிறது. நான் அதை கூறுகிறேன். ஆசாரியே, நீங்கள் எதிர்த்து பேசக் கூடாது.’
‘என்ன வழி? ஏது வழி?’
‘நம்முடைய மகளுக்கு ஒரு வழி பிறக்கட்டும். நம்முடைய மகளுக்கு ஒருவன் கிடைக்கட்டும். ஆசாரியே, எதிர் வார்த்தை கூறக் கூடாது.’
‘எட்டு தெய்வங்களின் மீதும் கையை வைத்து சத்தியம் பண்ணுகிறேன். நான் எதிர் வார்த்தை கூற மாட்டேன். நம்முடைய மகளுக்கு ஒருவன் கிடைக்கட்டும்.’
‘ஆசாரியே, கேட்கணும். ஒரேயொரு வழி...’
‘என்ன வழி? ஏது வழி? ஆசாரிப் பெண்ணே, சொல்லு.’
‘ஆசாரியே, நீங்கள் திருடச் செல்லணும்.’
அதைக் கேட்டு ஆசாரி அதிர்ச்சியடைந்து விட்டான். ஆசாரி அழுதான்.
‘ஆசாரிப் பெண்ணே, கேட்கணும். இதுவரை நான் திருடியதில்லை. பொய் கூட கூறியதில்லை. என்னால் திருட முடியாது.’
‘பொன்னில் பிறந்து பொன்னில் வளர்ந்த ஆசாரியின் மகளுக்கு பொன் இல்லையென்றால், திருடச் செல்ல வேண்டும். கொல்வதற்கு செல்ல வேண்டும்.’
‘என்னால் முடியாது.’
‘நம்முடைய மகளுக்கு யாரும் வர மாட்டார்கள். நம்முடைய மகள் வயது அதிகமாகி, நரைப்பாள்.’
‘நரைக்கட்டும்.’
அதைக் கேட்டு ஆசாரியின் மனைவி மார்பில் அடித்துக் கொண்டு அழுதாள்.
‘நமக்கு ஒரு மகள். நம்முடைய மகள். அவள் வயது அதிகமாகி நரைக்க மாட்டாள். அதைப் பார்த்துக் கொண்டிருக்க என்னால் முடியாது. அதற்கு முன்பே நான் உயிரை விட்டு விடுவேன்.’
ஆசாரியின் மனைவி சாப்பிடவில்லை. உறங்கவில்லை. அவளுடைய கண்கள் கண்ணீர் நதிகளாக மாறின.
ஆசாரியின் மனைவியின் கண்ணீரைப் பார்த்து ஆசாரிக்கு கவலை வந்தது.
‘ஆசாரிப் பெண்ணே, சாப்பிடு. ஆசாரிப் பெண்ணே, உறங்கு. நான் திருடச் செல்கிறேன்.’
ஆசாரி, தன் மனைவியின் கண்ணீரைத் துடைத்து விட்டான். அவர்கள் ஒரு கிண்ணத்தில் சோறு சாப்பிட்டார்கள். ஒரு பாயில் படுத்தார்கள்.
பொழுது புலர்ந்தபோது, ஆசாரி கேட்டான்:
‘நான் எதைத் திருடுவேன், ஆசாரிப் பெண்ணே?’
‘பொன்னைத் திருடணும், ஆசாரி.’
‘எந்த வீட்டிற்குச் சென்று திருடுவேன், ஆசாரிப் பெண்ணே?’
‘ஆயிரம் வீட்டின் பெரியவருடைய வீட்டிற்குச் சென்று திருடணும், ஆசாரி.’
‘எப்படி திருடுவேன், ஆசாரிப் பெண்ணே?’
‘காகமாக மாறி திருடணும், ஆசாரி.’
அன்று மதிய நேரத்தைத் தாண்டியதும், ஆசாரி ஒரு காகமாக தோற்றம் மாறி, ஆயிரம் வீட்டின் பெரியவரின் வீட்டை நோக்கி பறந்து சென்றான்.
ஆசாரிக்கு அந்த வீடு தெரியும். ஆசாரி அங்கு போயிருக்கிறான்.
ஊரிலேயே மிகப் பெரிய பணக்காரர் ஆயிரம் வீட்டின் பெரியவர். ஊரில் உள்ளவர்கள் அனைவருக்கும் பெரியவரைப் பார்த்தால் பயம். காகம் பறந்து வீட்டின் வாசலிலிருந்த மரத்தில் சென்று தங்கியது. தலையைச் சாய்த்து வைத்துக் கொண்டு வீட்டிற்குள் பார்த்தது. சிறிய காகம், கருங்காகம், திருட்டு காகம்...
முன்பொரு முறை ஆயிரம் வீட்டின் பெரியவரின் வீட்டிற்கு ஆசாரி போயிருக்கிறானே! பெரியவரின் மனைவியின் வயதைக் கொண்டாடும்போது வந்திருக்கிறானே! பெரியவருடைய மனைவியின் நகைகளைப் பார்த்து கண்கள் அப்படியே கூசிப் போயிருக்கின்றனவே! எப்படிப்பட்ட பல இன வளையல்கள்! எவ்வளவு... எவ்வளவு வளையல்கள்! எவ்வளவோ கற்கள் பதித்த மோதிரங்கள்! முடி குப்பிகள்! அரைஞாண்கள்!
பெரியவருடைய மனைவி நகைகளைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பது ஒரு பித்தளைப் பெட்டியில்தானே! அந்த பித்தளைப் பெட்டியைப் பாதுகாத்து வைத்திருப்பது பெரியவரின் படுக்கையறையில்தானே!
காகம் நான்கு பக்கங்களிலும் சற்று பார்த்தது. வாசலில் யாருமில்லை. திண்ணையிலும் யாருமில்லை. பெரியவருக்கு ஒரு நாய் இருக்கிறது. அந்த நாயையும் காணவில்லை. தெய்வங்கள் துணை இருக்கட்டும்.
தன்னுடைய எட்டு தெய்வங்களையும் நினைத்துக் கொண்டே ஆசாரி ஒரே ஒரு பறத்தல்....
என்ன ஒரு கஷ்ட காலம்! பறந்து பழக்கமில்லாததால் வாசலில் தொங்கிக் கொண்டிருந்த திரைச் சீலையில் போய் மோதினான். சிறகுகள் தடுத்து கீழே உருண்டு விழுந்தான். எதுவும் நடக்கவில்லை. தெய்வங்கள் துணையாக இருந்தன.
ஆசாரி நெளிந்து எழுந்தான். திரும்பவும் பறந்து வாசலிலிருந்த பூச்செடியில் போய் அமர்ந்தான். தலையைச் சாய்த்தவாறு இரு பக்கங்களிலும் சற்று பார்த்தான். விழுந்ததை யாராவது பார்த்தால், ஆசாரிக்கு குறைச்சல்தான்.... அவனுடைய மனைவிக்கும் குறைச்சல்.