பேருந்து பயணம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7163
அறுவடை முடிந்து தரிசாகக் கிடந்த வயல்களுக்கு நடுவிலிருந்து வரப்பின் வழியாக அவருடன் வேகமாக நடந்து கொண்டிருந்தார்கள். கோட்டை மடித்து தோளில் இட்டுக்கொண்டு, மேற்துண்டைக் கொண்டு தலையில் ஒரு கட்டு கட்டிக்கொண்டு, அரை வயதுகூட ஆகாத குழந்தையை மார்புடன் சேர்த்து வைத்துக்கொண்டு திரு. பத்மநாபன் வேகமாக நடந்தார். அவர் இடையில் அவ்வப்போது திரும்பிப் பார்த்தார்.
தந்தையுடன் சேர்ந்து கொள்வதற்காக ஓடி வந்து கொண்டிருந்த மகள் லீலாவதியிடம் “விழுந்துடாதே!'' என்று எச்சரித்துக் கொண்டும், கணவர் அவ்வளவு வேகமாக நடந்துசெல்வதைப் பற்றிய கவலையை முகத்தில் வெளிப்படையாகக் காட்டியவாறு அன்ன நடை நடந்து வந்து கொண்டிருந்த மனைவி கமலாக்ஷியிடம், “கொஞ்சம் இங்கே சீக்கிரமா நடந்து வா'' என்று பொறுமையில்லாமல் கட்டளை பிறப்பித்துக்கொண்டும், கிழக்கு திசையின் வான விளம்பில் உதித்து வந்து கொண்டிருந்த சூரியனின் அழகில் ஒன்றிப் போய் ஆரவாரம் உண்டாக்கி உற்சாகத்தில் திளைத்திருந்த செல்லக் குழந்தைக்கு முழுமையான பாசத்துடன் முத்தம் கொடுத்துக் கொண்டும்... இவ்வாறு நடையின் வேகம் அதிகரித்துக் கொண்டிருந்தது.
“என்னால முடியாது... இப்படி ஓடுறதுக்கு.'' கமலாக்ஷி மேலும் கீழும் மூச்சு விட்டுக்கொண்டே உரத்த குரலில் சொன்னாள்.
“நெருங்கி வந்து விட்டோமே! அதோ சாலை தெரிகிறது...'' பத்பநாபன் வயலின் இன்னொரு கரையைச் சுட்டிக்காட்டினார்.
“அப்படின்னா எதற்கு இப்படி ஓடணும்? கொஞ்சம் மெதுவா நடங்க...''
பத்மநாபன் நடையை சாதாரணமாக ஆக்கிக் கொண்டே சொன்னார்: “ஆலப்புழையில் இருந்து வர்ற முதல் பேருந்தில் போகணும்.''
கமலாக்ஷி நடந்து அருகில் வந்து கொண்டே சொன்னாள்: “இரண்டாவது பேருந்தில் போனா என்ன? நீதிமன்றத்துக்கு பதினொரு மணிக்கு போனா போதாதா?''
பத்மநாபனுக்கு சற்று கோபம் வந்துவிட்டது. “அப்படியென்றால் நான் சொன்னது எதுவும் உனக்குப் புரியவில்லை. அப்படித்தானே? காலையில் நான் முன்சீப்பின் வீட்டிற்குப் போகணும். அதற்குப் பிறகு வேறு ஒன்றிரண்டு பேர் சீக்கிரமே நீதிமன்றத்துக்கு வர்றதா சொல்லி இருக்காங்க. ஏதாவது பணம் கிடைக்கக் கூடிய விஷயம்...''
“யாரைப் பார்த்தாலும் பரவாயில்லை. எங்கு போனாலும் பரவாயில்லை. இப்போ என்னால் ஓடி வர முடியாது. அவசரப் படுறவங்க போகலாம்.'' கமலாக்ஷி தன்னுடைய நடையை முன்பு இருந்ததைவிட தாமதமாக்கினாள். வேறு வழி இல்லாததால், பத்மநாபனும் தன்னுடைய நடையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டார்.
சிறிது நேரம் அவர்கள் மிகவும் அமைதியாக நடந்தார்கள். பத்மநாபன் கொல்லம் முன்சீப் நீதிமன்றத்தில் தலைமை க்ளார்க்காக பணியாற்றுகிறார். மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைத்ததால், தன் மனைவியின் வற்புறுத்தலின் காரணமாக அவர்களுடைய வீட்டிற்கு வந்து விட்டு, திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அன்று அதிகாலை நேரத்தில் கொல்லத்தில் போய் சேர்ந்ததும், பல வேலைகள் இருக்கின்றன. முந்தைய நாள் சாயங்காலம் போவதாகக் கூறியபோது, மாமியார் தடுத்துவிட்டாள். மனைவி மவுனமாக இருந்தவாறு அதற்கு ஆதரவாக இருந்தாள். எது எப்படி இருந்தாலும், காலையில் முதல் பேருந்தில் போய் விடலாம் என்ற எதிர்பார்ப்புடன் பத்மநாபன் இரவில் அங்கேயே இருந்துவிட்டார். வீட்டிலிருந்து மூன்று மைல் தூரம் நடந்தால்தான் பேருந்து செல்லக் கூடிய சாலையை அடைய முடியும். பொழுது புலரும் நேரத்தில் எழுந்து, காப்பி குடித்துவிட்டு புறப்பட்டால் போதும் என்ற மனைவி, மாமியார் ஆகியோரின் வற்புறுத்தலைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் பத்மநாபன் வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார்.
பத்மநாபன் பல விஷயங்களைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டே நடந்து நடந்து வயலைத் தாண்டியவுடன், திரும்பிப் பார்த்தார். கமலாக்ஷி மிகவும் தொலைவில் மெதுவாக... மிகவும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள். லீலாவதி ஓடி ஓடி களைத்துப் போய்விட்டாள். பத்மநாபனுக்கு கோபம் வந்துவிட்டது. “இதனால்தான் பெண்களையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு எந்தவொரு இடத்திற்கும் போவதில்லை என்று முடிவு செய்ததே.''
கமலாக்ஷிக்கும் கோபம் வந்தது: “அழைத்துக் கொண்டு போகும்படி யாராவது சொன்னார்களா? நீங்கள் மட்டும் நடந்து போனால் போதுமே! வருடத்திற்கு ஒரு முறையாவது பெற்ற தாயைக் கொஞ்சம் போய் பார்க்க வேண்டாமா?''
“எனக்கும் ஒரு தாய் இருக்காங்க.''
“அதனால் என்ன? போய் பார்த்தால் என்ன? அம்மாவுக்கும் தம்பிமார்களுக்கும் ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்பி வைக்கிறீர்கள் அல்லவா? உங்களைப் பெற்றது மாதிரிதான் என் தாய் என்னையும் பெற்றிருக்காங்க.''
“அதற்கு நான் என்ன செய்ய முடியும்? நீயும் பணம் அனுப்பி வை.''
“ஓ... எல்லாரைப் பற்றியும் எனக்குத் தெரியும். அம்மாவுக்கு ஏதாவது பணம் அனுப்பி வைக்கணும்னு நான் சொன்னால், அப்போ சொல்லுவீங்க- சீட்டுக்கு கட்டணும், முண்டு வாங்கணும், அதை வாங்கணும், இதை வாங்கணும் என்றெல்லாம்..''
“நீங்க ஒரு நன்றி இல்லாத கூட்டம். இப்போது பத்து ரூபாயும் முண்டும் மேற்துண்டும் உன்னுடைய தாய்க்குத் தந்தேன் அல்லவா?''
“ஒவ்வொரு வருடமும் ஒரு முறை பத்து ரூபாய் அனுப்பி வைத்தால் போதுமானது. உங்களுடைய அம்மாவுக்கு நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூபாய் அனுப்பி வைக்கிறீங்களே! அது...?''
“ஒவ்வொரு மாதமும் அனுப்பி வைத்தாலும், வருடத்திற்கு ஒருமுறை கொடுக்கும் அதே அளவு பணம்தானே வருது?''
“ஆமாம்... ஆமாம்... எனக்குத் தெரியும்... எல்லோரைப் பற்றியும்...''
அவர்கள் வயலைக் கடந்து சாலையில் கால் வைத்தார்கள். சாலையில் கால் வைத்த இடத்திலேயே ஒரு பெரிய மாமரமும் சற்று தூரத்தில் ஒரு சிறிய பாலமும் இருந்தன.
பத்மநாபன் சொன்னார்: “குழந்தையைக் கொஞ்சம் தூக்கு. நான் கோட்டை அணிந்து கொள்கிறேன்.''
கமலாக்ஷி அலட்சியமாக குழந்தையை வாங்கி தன் இடுப்பில் வைத்தாள். பத்மநாபன் கோட்டை அணிந்து கொண்டார். மேற்துண்டை தலையிலிருந்து எடுத்து கழுத்தில் சுற்றி அணிந்தார். தொடர்ந்து லீலாவதியின் கையைப் பிடித்துக் கொண்டு பாலத்தின் மீது போய் அமர்ந்தார். கமலாக்ஷியும் அருகில் வந்து முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு நின்றாள். லீலாவதி தன் தந்தையின் முழங்கால்களைப் பிடித்துக்கொண்டே கேட்டாள்: “இனி எப்போ அப்பா காப்பி குடிக்குறது?''
“நாம இப்போ அங்கே போயிடுவோமே! பிறகு காப்பி குடிப்போம்.'' அவர் தன் மகளை வருடிக் கொண்டே தேற்றினார்.
கமலாக்ஷியின் இடுப்பிலிருந்த குழந்தை அழ ஆரம்பித்தது. பத்மநாபன் திட்டினார்: “குழந்தைக்கு ஏன் பால் கொடுக்கல?''
“வழியில வந்து கொண்டிருக்கிறப்போ பால் தர்றதுக்கு இப்போ என்னால முடியாது.''
லீலாவதி பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தாள்: “அப்பா, எனக்கு காப்பி...''
“அங்கே போன பிறகு குடிப்போம், மகளே.''