பேருந்து பயணம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7167
வடக்கு திசையிலிருந்து ஒரு ஹாரன் சத்தம் கேட்டது. “அதோ பேருந்து வருது...'' என்று கூறிக்கொண்டே பத்மநாபன் எழுந்தார். ஒரு வண்ணமயமான பேருந்து ஃபுல் லோடுடனும் ஃபுல் ஸ்பீடுடனும் வளைவைத் தாண்டி வந்து கொண்டிருந்தது. “இங்கே... பக்கத்தில் வந்து நில்லு.'' பத்மநாபன் தன் மனைவியிடம் கூறினார். கமலாக்ஷி புடவை தலைப்பைப் பிடித்து சரி பண்ணியவாறு அழுது கொண்டிருக்கும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு சாலைக்கு வந்தாள்.
பேருந்து நெருங்கிக் கொண்டிருந்தது. நிறுத்தப் போவதற்கான அறிகுறி தெரியாததால், பத்மநாபன் வேகமாக ஒன்றிரண்டு அடிகள் முன்னோக்கி எடுத்து வைத்து, தன் கையை பேருந்திற்கு நேராக நீட்டினார். பேருந்து தன்னுடைய வேகத்தை சிறிதுகூட குறைக்காமல், பத்மநாபனை நோக்கிப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. பத்மநாபன் திடீரென்று பின்னோக்கி விலகினார். எந்தவொரு தயக்கமும் இல்லாமல் பேருந்து மிகவும் வேகமாகப் போய் மறைந்தது.
பத்மநாபன் "கொட்டையை இழந்த அணிலைப்போல' வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் பேருந்தையே செயலற்ற நிலையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். கமலாக்ஷி பத்மநாபனைப் பார்த்து சற்று புன்னகைத்து விட்டு, எதுவுமே பேசாமல் தான் முன்பு உட்கார்ந்திருந்த இடத்தில் போய் உட்கார்ந்தாள்.
லீலாவதி தன் தந்தையின் காலைக் கட்டிப்பிடித்துக் கொண்டே பிடிவாதம் பிடித்தாள்: "அப்பா, காப்பி...''
பத்மநாபன் எதுவும் கூறாமல் வெறுமனே நின்றிருந்தார். ஏமாற்றத்தாலும் கோபத்தாலும் அவரால் எதுவும் கூற முடியவில்லை. கமலாக்ஷி மீண்டும் அவரைப் பார்த்து புன்னகைத்தாள். காலையில் வயலின் வழியாக இரண்டு மூன்று மைல்கள் காப்பிகூட பருகாமல் நடக்கச் செய்து அழைத்து வந்ததற்கான எதிர்ப்பை அவள் அந்த வகையில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். தன் மனைவியின் புன்னகைக்கான அர்த்தத்தை பத்மநாபன் முழுமையாகப் புரிந்து கொண்டார். அவருடைய கோபம் எல்லை இல்லாமல் இருந்தது. ஆனால் என்ன கூறுவது? என்ன செய்வது?
குழந்தை முன்பைவிட உரத்த குரலில் அழ ஆரம்பித்தது. தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவதற்கு பத்மநாபனுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. “குழந்தைக்கு பால் கொடுக்கும்படி சொல்லி...'' அவர் கோபமான குரலில் திட்டினார்.
“யாரைப் பார்த்து இந்த அளவிற்கு கோபப்படுறீங்க?'' கமலாக்ஷிக்கு கோபம் உண்டானது:
“பேருந்தை நிறுத்தாதற்கு நானா குற்றக்காரி?''
பத்மநாபன் சிரமப்பட்டு தன்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டார். “யாரும் எந்தத் தப்பையும் செய்யல. வர்றது வரட்டும். நேற்று சாயங்காலமே போகலாம் என்று நான் சொன்னேன்.''
“அப்படின்னா ஏன் போகல! போக வேண்டாம்னு நானா சொன்னேன்?''
அதற்குப் பிறகும் பத்மநாபனின் கோபம் கட்டுப்பாட்டை மீறியது. “எனக்கு கோபம் வந்தால்... அதற்குப் பிறகு நடக்குறதே வேறு... வழி என்றுகூட நான் பார்க்க மாட்டேன்.''
“வழி என்று நினைக்கலைன்னா எனக்கு என்ன? சாயங்காலம் போக வேண்டாம் என்று நான் சொல்லல. அம்மாதான் சொன்னாங்க.''
“அம்மா சொன்னப்போ, போய் காரியங்களைப் பார்க்க வேண்டியதிருக்குன்னு நீதானே சொல்லணும்? நீ சொல்லக் கூடாதா?''
பத்மநாபனின் கோபம் ஏமாற்றமாக வடிவமெடுத்தது. “ஏன் அதையெல்லாம் சொல்லணும்? எனக்கு அது ஒரு பாடம்- அவனவனுடைய விஷயத்தை அவனவனே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது...''
“பிறகு... வேறு யாராவது பார்ப்பாங்களா?''
“போதும்டீ... நிறுத்து'' பத்மநாபன் கடுமையான குரலில் கட்டளையிட்டார்.
கமலாக்ஷி சற்று தாழ்ந்த குரலில் சொன்னாள்:
“ஓ! நான் நிறுத்திக்கொள்கிறேன்.'' அவள் இரவிக்கையைச் சற்று உயர்த்தி, பாடியின் முடிச்சை அவிழ்த்துவிட்டு, குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக மாமரத்திற்குப் பின்னால் சென்றாள்.
தந்தை, தாய் இருவரின் சண்டைச் சத்தத்தையும் கேட்டு பசியை மறந்துவிட்டு லீலாவதி பாலத்தின்மீது எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். பாதையின் வழியாக இடையில் அவ்வப்போது ஒவ்வொருவரும் போய்க் கொண்டிருந்தனர். அவர்கள் ஆர்வத்துடன் பத்மநாபனையும் மனைவியையும் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் போய்க் கொண்டிருந்தனர். ஒரு வயதான கிழவன் பத்மநாபனின் அருகில் வந்து நின்றுகொண்டு கேட்டான்: "என்ன இங்கே இப்படி நின்னுட்டு இருக்கீங்க?''
“நாங்கள் கொல்லத்துக்கு போகணும்.'' பத்மநாபன் மிடுக்கான குரலில் கூறினார்.
“பேருந்துக்காக காத்திருக்கீங்க... அப்படித்தானே?''
“ம்...''
“என்ன வேலை?''
கிழவனின் அந்த அடுக்கடுக்கான கேள்விகள் அந்த வகையில் தொடர்ந்து கொண்டிருக்கும் என்பதும், இறுதியில் தன்னுடைய ஒரு வாழ்க்கை வரலாற்றை அந்த கிழவனிடம் கூற வேண்டியதிருக்கும் என்பதும் பத்மநாபனுக்குப் புரிந்தது. அதனால் முன்கூட்டியே அந்த கேள்விகளுக்கு ஒரு தடை இட வேண்டும் என்று மனதிற்குள் முடிவு செய்து கொண்டே இவ்வாறு கேட்டான்: "இனி பேருந்து எப்போ வரும்?''
“இப்போ வரும்... வீடு எங்கே இருக்கு?''
“சற்று தூரத்தில்... இங்கே பக்கத்துல எங்கேயாவது காப்பி கிடைக்குமா?''
“கிடைக்காமல் என்ன? அதோ இருக்கே! அந்த சுமை தாங்கியைத் தாண்டி, குட்டன் பிள்ளையோட தேநீர் கடை... உட்காருவதற்கும் சவுகரியமான இடம்... பெஞ்ச், நாற்காலி எல்லாம் இருக்கு... பேருந்து வர்றப்போ நீங்க ஏறிப்போகலாம். அய்யோ... பிள்ளை பசியால வாடிப்போயிருக்கே! நான் அங்கே போறேன். வரட்டுமா?''
“நல்ல காப்பி கிடைக்குமா?''
"பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்குற ஆசிரியர்கள் எல்லாரும் அங்கேதான் தேநீர் குடிக்கிறாங்க. முதல் தர தேநீர்...''
“ஏங்க கொஞ்சம் இந்தப் பக்கம் வாங்க.'' மாமரத்திற்குப் பின்னாலிருந்து ஒரு அழைப்பு. பத்மநாபன் மாமரத்திற்குப் பின்னால் சென்றார். கமலாக்ஷி கோபத்துடன் நின்றிருந்தாள்: “கண்டவனோட தேநீர் கடையில் போய் உட்கார்ந்து கொண்டிருப்பதற்கும் தேநீர் பருகுவதற்கும் நான் தயாரில்லை. தெரியுதா? நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிடுறேன்.''
"தேநீர் கடையில் போய் உட்காரு, தேநீர் பருகுன்னு உன்னிடம் யாராவது சொன்னாங்களா?''
“பிறகு அந்தக் கிழவனிடம் என்ன கேட்டீங்க?''
“குழந்தைக்கு காப்பி வாங்கிக் கொடுப்பதற்காக கேட்டேன்.''
“குழந்தைக்கு இப்போ தேநீர் கடையில் இருந்து எதுவும் வாங்கிக் கொடுக்க வேண்டாம்.''
“அப்படின்னா, நீ காப்பி தயார் பண்ணிக் கொடு.''
"காப்பி குடிச்சிட்டு புறப்பட்டால் போதும்னு நான் சொன்னேன்ல?''
“நீ சொல்றதையெல்லாம் கேட்கக்கூடியவனா நான்?''
“நான் சொல்றதைக் கேட்கறது ஒரு குறைச்சலான விஷயமா தெரிந்தால், கேட்கவே வேண்டாம். ஆனால், குழந்தைக்கு தேநீர் கடையில் இருந்து எதையும் வாங்கிக் கொடுக்க நான் சம்மதிக்க மாட்டேன்.''
வடக்கு திசையிலிருந்து ஹாரன் ஒலி கேட்டது. பத்மநாபன் சாலையை நோக்கி ஒடினார். அவர் சாலைக்கு வந்து கையைக் காட்டிகொண்டு நின்றார். பேருந்து நெருங்கி வர வர வேகம் குறைய ஆரம்பித்தது. “சீக்கிரமா வா...'' அவர் மாமரத்திற்குப் பின்னால் பார்த்து உரத்த குரலில் சொன்னார்.