
ஹெரோதேஸ் மன்னரின் காலத்தில் யூதத்தில் பெத்லஹேமில் இயேசு பிறந்தபோது கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் ஜெருசலேமிற்கு வந்து கேட்டார்கள். “யூதர்களின் ராஜாவாக பிறந்தவன் எங்கே?” இதைக் கேட்டு ஹெரோதேஸ் மன்னரும் ஜெருசலேம் மக்களும் பதைபதைத்து நின்றார்கள்.
(2:2-4)
...கடவுளின் புண்ணிய ஆவி யோசேப்பின் கனவில் தோன்றி சொன்னது: “எழுந்திரு. குழந்தையையும் தாயையும் அழைத்துக் கொண்டு எகிப்துக்கு உடனே ஓடப் பார்... இந்தக் குழந்தையை அழிக்க ஹெரோதேஸ் உடனடியாக விசாரணைகளைத் தொடங்குவார்.
(2:13)
...ஹெரோதேஸ் தன் வேலைகளை ஆரம்பித்தார். அவர் பெத்லஹேமிற்கும் பக்கத்து ஊர்களுக்கும் அனுப்பி வைத்த ஆட்கள் இரண்டு வயது அல்லது அதற்குக் கீழே வயதுள்ள ஆண் குழந்தைகள் அனைவரையும் கொன்றனர்.
(2:16)
(மத்தாயி எழுதிய சுவிசேஷம்)
பட்டாளக்காரன் வாசல் கதவைத் திறந்து உள்ளே வந்தான். அவன் மிகவும் களைத்துப் போயிருந்தான்.
பயங்கரமாக வேதனை தந்து கொண்டிருந்த கால்களுடன் ஒரு கட்டிலில் சாய்த்து அவன் கண்களை மூடினான்.
உள்ளேயிருந்த அறையின் கதவு இலேசாகத் திறந்தது. பின்னர் மூடியது. அதை யாரோ தாழ்ப்பாள் போட்டார்கள்.
பட்டாளக்காரனின் செருப்பில் படிந்திருந்த உலர்ந்துபோன இரத்தத்தை ஈக்கள் மொய்த்தன. எங்கோ ஒரு மூலையில் இருந்து ஒரு ஆந்தை இடைவிடாது அலறிக் கொண்டிருந்தது. வாசலில் கோழிகள் வெயிலில் நின்றவாறு சிலிர்த்துக் கொண்டிருந்தன. தூரத்தில் இருந்து வந்த அழுகைக் குரல்கள் திறந்து கிடந்த ஜன்னல் வழியே உள்ளே வந்து கொண்டிருந்தன. சிறிது நேரம் கழித்து கோழிகள் எங்கேயோ போய் மறைந்தன. ஆந்தை அலறுவதை நிறுத்தியது. பட்டாளக்காரன் உறங்கிய கட்டிலை தூரத்தில் இருந்து வந்த அழுகைக் குரல்கள் ஒரு வலையைப் போல வளைத்துக் கொண்டிருந்தன.
பட்டாளக்காரன் தூக்கம் கலைந்து எழுந்தபோது, வெயில் குறைந்திருந்தது. அவன் படுக்கையை விட்டு எழுந்தான். தன்னுடைய கைகளையும் அணிந்திருந்த ஆடைகளையும் பார்த்த அவன் சொன்னான்: “நான் உடனடியா குளிக்கணும்!”
விலைமாதர்கள் இல்லத்தின் சொந்தக்காரி உள்ளே வந்து சொன்னாள்: “தண்ணி சுட வச்சிட்டா போச்சு. ஆமா... என்ன வாசனைத் திரவியம் அதுல கலக்கணும்?”
பட்டாளக்காரன் தலையை இரண்டு கைகளையும் நோக்கி குனிந்தவாறு சொன்னான்: “எது வேணும்னாலும்...” அவன் முணுமுணுக்கும் குரலில் சொன்னான்: “இரத்த வாடை அவ்வளவு சீக்கிரம் போயிடாது...”
விலைமாதர்கள் இல்லத்தின் சொந்தக்காரி நல்ல உயரத்தைக் கொண்டவளாக இருந்தாள். அழகின் நிழல்கள் இன்னும் உயிரோட்டத்துடன் இருக்கிற ஐம்பது வயது நிறைந்த பெண் அவள். அவளின் முகத்தில் இனம் புரியாத ஒரு உணர்ச்சி வெளிப்பட்டு அவன் தலையை உயர்த்தியவுடன் இல்லாது போனது. அவள் சொன்னாள்: “குழந்தைகளின் இரத்தம்தானே எல்லாமே...”
பட்டாளக்காரன் தன் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் கேட்டாள்: “நீங்க எந்தத் தெருவுல இருந்தீங்க?”
பட்டாளக்காரன் ஒன்றும் பதில் பேசவில்லை.
வீட்டுச் சொந்தக்காரி ஒய்யாரமான ஒரு நடை நடந்து பட்டாளக்காரனுக்கு முன்னால் வந்து அமர்ந்தாள். அவள் கேட்டாள்: “நீங்க கொன்ன குழந்தைகளுக்கு நீங்க அவர்களைக் கொல்லப் போறீங்கன்னு முன்கூட்டியே தெரியுமா?”
பட்டாளக்காரன் எதிர் திசையில் இருந்த சுவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் அவனின் முகத்தையே பார்த்தவாறு அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்பதற்காகக் காத்திருந்தாள்.
அவன் சொன்னான்: “நான் உடனடியா குளிக்கணும்...”
வீட்டுச் சொந்தக்காரி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் சொன்னான்: “எனக்குத் தெரியாது. குழந்தைகளுக்கு மரணம்ன்ற ஒண்ணு இருக்கா? அவர்களுக்கு மரணத்தைப் பற்றி சிந்திக்கத் தெரியுமா என்ன?”
அவள் பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.
அவன் சொன்னான்: “என் காதுல விழுந்ததெல்லாம் தாய்மார்களோட அழுகைச் சத்தம்தான்...”
வீட்டுச் சொந்தக்காரி எழுந்து உள்ளே போனாள்.
பட்டாளக்காரன் தன்னுடைய இடுப்புப் பகுதியிலிருந்து இரத்தம் தோய்ந்திருந்த உறையில் இடப்பட்டிருந்த ஒரு வாளை உருவி தரையில் வைத்தான். இடுப்பு வாரையும் கழற்றி அதற்கருகில் வைத்தான். பிறகு கைகளில் படிந்திருந்த காய்ந்த இரத்தத்தை நகத்தால் சுரண்டினான்.
வீட்டுச் சொந்தக்காரி திரும்பி வந்து மீண்டும் அவனுக்கு முன்னால் அமர்ந்தாள். “தண்ணி சுட வச்சிருக்கு” - அவள் சொன்னாள். தொடர்ந்து சற்று முன்னால் நகர்ந்து உட்கார்ந்தவாறு அவனிடம் கேட்டாள்: “நீங்க எத்தனை குழந்தைகளைக் கொன்னீங்க?”
பட்டாளக்காரன் எதுவும் பேசவில்லை.
முகத்தில் ஒரு செயற்கையான சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அவள் சொன்னாள்: “நீங்க ஒரு நல்ல பட்டாளக்காரர்தான்... நூறு குழந்தைகளைக் கொல்றதுக்கும் அதே அளவு பட்டாளக்காரர்களைக் கொல்றதுக்குமிடையே என்ன வித்தியாசம் இருக்கு?”
பட்டாளக்காரன் பதில் கூறாமல் மவுனமாக இருந்தான்.
அவள் சொன்னாள்: “குழந்தைகளுடன் உங்களுக்கு போர் செய்ய வேண்டிய அவசியம் இல்ல... இல்லியா? விஷயமே அதுதான்...”
பட்டாளக்காரன் சொன்னான்: “பட்டாளக்காரர்களுக்கு யாருடன்தான் போர் இருக்கு?”
வீட்டுச் சொந்தக்காரி தரையில் இருந்த வாளையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் சொன்னாள்: “யாருடன் இந்த வாளுக்கு போர் இருக்கு?”
இலேசாக முன்னோக்கி நகர்ந்து தன் தலையை பட்டாளக்காரனுக்கு மிகவும் நெருக்கமாக வைத்துக்கொண்டு குரலைச் சற்று தாழ்த்திக் கொண்டு அவள் கேட்டாள்: “ஹெரோதேஸின் பகைவன் யார்? அப்படி யார் இங்கே பிறந்திருக்கிறது? ஒரு குழந்தையைப் பார்த்து எதுக்கு ஹெரோதேஸ் பயப்படணும்?”
பட்டாளக்காரன் கேட்டான்: “உனக்கு இன்னும் தெரியலியா?”
வீட்டுச் சொந்தக்காரி சொன்னாள்: “இல்ல...”
பட்டாளக்காரன் சொன்னான்: “யூதர்களோட தலைவன் இங்கே பெத்லஹேமில் பிறந்திருக்கிறதா அவனைத் தேடி வந்த ஞானிகள் ஹெரோதேஸ்கிட்ட சொல்லிட்டாங்க. அவ்வளவுதான் - ஹெரோதேஸ் பயப்பட ஆரம்பிச்சிட்டாரு. ஞானிகள் குழந்தையை யாருக்கும் தெரியாம ரகசியமா பார்த்து வணங்கிட்டுப் போயிட்டாங்க. அந்தக் குழந்தையைத்தான் இப்போ நாங்க தேடிக்கிட்டு இருக்கோம். அவனைக் கொல்றதுதான் எங்களோட நோக்கம்!”
அவன் தன்னுடைய இரண்டு கைகளையும் சேர்த்து வைத்துக் கொண்டு அவற்றைப் பார்த்தவாறு சொன்னான்: “யாருக்குத் தெரியும்? ஒருவேளை என்னோட இந்தக் கைகளாலேயே யூதர்களோட ரட்சகன் இன்னைக்கு இறந்திருக்கலாம்...”
வீட்டுச் சொந்தக்காரி சொன்னாள்: “நீங்க சொல்றது உண்மையாகக்கூட இருக்கலாம். யாருக்குத் தெரியும்?”
பட்டாளக்காரன் சற்று முன்னோக்கி நகர்ந்து உட்கார்ந்து கொண்டு கேட்டான்: “இத்தனை ஆயிரம் குழந்தைகளின் இரத்தத்தைத் தாண்டியா ஒரு ரட்சகன் வரணும்?”
அவள் ஒன்றும் அதற்கு பதில் பேசவில்லை.
அவன் தலையைக் கைகளை நோக்கி குனிந்து கொண்டு விரல்களால் கண்களையும் முகத்தையும் மூடிக் கொண்டு சொன்னான்: “உனக்கு இது புரியல. உனக்கு குழந்தை கிடையாதுல்ல! நான் கொன்ன குழந்தைகள் முகத்தில் தெரிந்த பதைபதைப்பை நீ பார்க்கலையில்ல...!”
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook