ரஜினியையும் ஸ்ரீதேவியையும் அழகாக காட்டியவர் இன்று அமரர்!
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 3035
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
ரஜினியையும் ஸ்ரீதேவியையும் அழகாக காட்டியவர் இன்று அமரர்!
சமீபத்தில் தமிழ் திரைப்படவுலகிற்கு உண்டான மிகப் பெரிய இழப்பு-ஒளிப்பதிவு மேதை அசோக் குமாரின் மரணம். தமிழ் படவுலகம் பார்த்த சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் அவர்.
70களின் இறுதியிலும், 80களின் ஆரம்பத்திலும் மிகச் சிறந்த இயக்குநர்களும், அருமையான ஒளிப்பதிவாளர்களும் படவுலகிற்குள் நுழைந்து, தங்களின் தனித்துவ திறமையால் முத்திரை பதித்தனர். அந்த காலகட்டத்தில் தமிழ் படவுலகம் மூன்று திறமையான ஒளிப்பதிவாளர்களைச் சந்தித்தது. அவர்கள் நிவாஸ், பாலு மகேந்திரா, அசோக்குமார்.
பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், சிகப்பு ரோஜாக்கள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம் ஆகிய படங்களில் தன் அபாரமான ஒளிப்பதிவு திறமையால் தன்னை யார் என கேட்க வைத்தார் நிவாஸ். முள்ளும் மலரும், மூடுபனி, அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை, யாத்ர ஆகிய படங்களின் மூலம் காலத்தைக் கடந்து நிற்கும் தன் தனித்துவ ஒளிப்பதிவை செயல் வடிவில் காட்டி காவியங்கள் படைத்தார் பாலு மகேந்திரா.
அதே காலகட்டத்தில் தன்னுடைய புதுமையான ஒளிப்பதிவின் மூலம் திரைப்பட ரசிகர்களின் உள்ளங்களில் கூடு கட்டி வாழ்ந்தார் அசோக்குமார். இயக்குநர் மகேந்திரன்-ஒளிப்பதிவாளர் அசோக்குமார் காம்பினேஷன் படைத்த சாதனைகள் இருக்கின்றனவே!அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 'உதிரிப் பூக்கள்'திரைப்படம் அசோக் குமாரின் வியக்கத்தக்க ஒளிப்பதிவு திறமையை எல்லோருக்கும் பறை சாற்றி அறிவித்தது. அந்தப் படத்தில் அவர் பண்ணியிருந்த கதையோடு பின்னிப் பிணைந்த லைட்டிங், படத்திற்கு ஒரு யதார்த்த தன்மையை உண்டாக்கிக் கொடுத்தது. மகேந்திரன் இயக்கிய 'நண்டு'படத்திற்கு என்ன அருமையாக ஒளிப்பதிவு செய்திருந்தார் அசோக்குமார்!அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் இப்போதும் கண்ணுக்குள்ளேயே நின்று கொண்டிருக்கிறதே!வடநாட்டில் ஒரு புலர் காலை வேளையில் படமாக்கப்பட்டிருந்த 'அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா?' என்ற ஒரு பாடல் காட்சி போதுமே அசோக்குமாரின் கவித்துவத் தன்மை நிறைந்த உயர்ந்த ஒளிப்பதிவு அறிவை நிரூபிப்பதற்கு!'ஜானி'படத்தில் அசோக்குமார் பதித்த முத்திரையை படவுலகம் இன்னும் பல வருடங்கள் பேசிக் கொண்டே இருக்குமே! அதில் இடம் பெற்ற 'காற்றில் எந்தன் கீதம்'பாடல் காட்சி இத்தனை வருடங்கள் கடந்த பிறகும், மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணமே அசோக்குமாரின் அதிசயிக்கத்தக்க லைட்டிங்தானே!இப்போது பார்த்தாலும், அசோக்குமாரின் ஒளிப்பதிவு நேர்த்தி ஒவ்வொரு ஷாட்டிலும் தெரியுமே!மகேந்திரனுடன் சேர்ந்து அசோக்குமார் வெளிப்படுத்திய மாயாஜாலத்தை நம்மால் எப்படி மறக்க முடியும்?
'நெஞ்சத்தைக் கிள்ளாதே 'படத்தின் கவித்துவ ஒளிப்பதிவு காலத்தைக் கடந்து நிற்குமே! 'பருவமே'பாடலைக் கேட்கும்போதெல்லாம் அசோக்குமார் நம் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் ஊர்வலம் வருவாரே!அவரின் அண்ணாந்து பார்க்க வைத்த ஒளிப்பதிவு படத்திற்கு எவ்வளவு பெரிய சிறப்பை தேடித் தந்தது! படம் பார்த்து பல வருடங்களுக்குப் பிறகும் அசோக்குமாரின் பெயரை உயர்ந்த ரசனை கொண்ட ஒவ்வொரு உள்ளமும் உச்சரித்துக் கொண்டே இருந்ததே!
அசோக்குமார் ஒளிப்பதிவு செய்து, இயக்கிய படம் 'அன்று பெய்த மழையில்'. சில்க் ஸ்மிதாவை கதாநாயகியாக வைத்து ஒரு கவித்துவத் தன்மை கொண்ட படத்தை உருவாக்கியிருந்தாரே அசோக்குமார்!படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்து இறுதி காட்சி வரை அசோக்குமார் என்ற அந்த உன்னத கலைஞனின் திறமை ஆழமாக பதிந்திருந்ததை நம்மால் உணர முடிந்ததே!
அசோக்குமாரின் திறமையைப் பற்றி இப்படி கூறிக் கொண்டே போகலாம். உண்மையான கலைஞர்களுக்கு மரணமில்லை. அது அசோக்குமாருக்கும் பொருந்தும். அசோக்குமாரின் சரீரம் இந்த உலகை விட்டு நீங்கியிருக்கலாம். ஆனால், அவர் ஒளிப்பதிவில் பதித்த ஆழமான முத்திரைகள் காலத்தைக் கடந்து நின்று, அசோக்குமார் என்ற ஒப்பற்ற கலைஞனின் பெயரை உச்சரித்துக் கொண்டேயிருக்கும்.