ராசலீலை
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6382
மூவாயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தபிறகு வண்டி நகரத்தின் புகைவண்டி நிலையத்தில் அதன் நீண்ட பயணத்தை முடித்தது. தான் அமர்ந்திருந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியை விட்டு கடைசியாக ப்ளாட்ஃபாரத்தில் இறங்கியது கண் பார்வை தெரியாத கிருஷ்ணன்தான். பத்து வருடங்களுக்குப் பிறகு அவன் மீண்டும் அந்த நகரத்திற்கு வருகிறான். ஒரு கையில் தன்னுடைய பெட்டியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் பிரம்பைப் பிடித்துக்கொண்டு தடவியவாறு கூட்டத்திற்கு மத்தியில் அவன் முன்னோக்கி நடந்தான்.
பாலனைப் பார்க்காததால் அவனிடம் ஒருவித பதைபதைப்பு உண்டானது. பாலன் வரவில்லையென்றால் கண் பார்வை தெரியாத கிருஷ்ணனால் பாலன் இருக்குமிடத்தை எப்படி அடைய முடியும்? ஆட்கள் அவனை இப்படியும் அப்படியுமாய் உரசிக்கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். வெளியே போகும் வழி அவனுக்குத் தெரியவில்லை. இருட்டில் தடவியவாறு ஒரு சுவரைக் கண்டுபிடித்து அவன் அதன்மீது சாய்ந்து நின்றான். நேரம் மதிய நேரத்தைத் தாண்டிவிட்டிருக்க வேண்டும். தேநீரின் வாசனை வந்து கொண்டிருந்ததை வைத்து ப்ளாட்ஃபாரத்தில் இருக்கும் தேநீர் கடையொன்றின் அருகில் தான் நின்றுகொண்டிருப்பதை அவனால் யூகிக்க முடிந்தது. அவனுக்குப் பயங்கரமாக வியர்த்துக் கொண்டிருந்தது. கையிலிருந்த பிரம்பைச் சுவர்மீது சாய்த்து வைத்துவிட்டு, சட்டைப் பையிலிருந்து கைக்குட்டையை எடுத்து தன்னுடைய முகத்தை அவன் துடைத்துக்கொண்டான். சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பிரம்பு கீழே விழுந்தது. குனிந்து ஒருவித பதைபதைப்புடன் அவன் அதைத் தேடி எடுத்தான். அப்போது சட்டைப் பையிலிருந்த தாள்களும் நாணயங்களும் கீழே விழுந்தன. அந்தத் தாள்களில் ஒன்றில்தான் பாலனுடைய முகவரி இருந்தது. அவன் குனிந்தமர்ந்து தாள்களைத் தேடினான். அப்போது யாரோ ஒரு ஆள் அவனுடைய கை மீது மிதித்தான். தாள் கிடைத்த மகிழ்ச்சியில் அவன் தன் கையில் உண்டான வலியை உணரவில்லை.
“நல்ல ஆள்” -பாலன் சொன்னான்.
“நான் உன்னை எங்கேயெல்லாம் தேடுகிறது!”
கிருஷ்ணனுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது. பாலனுடைய உடலிலிருந்து வரும் வாசனையை அவன் உணர்ந்தான். நகரத்தை விட்டுப்போன பிறகு பலமுறை பாலன் ஊருக்குப் போய் கிருஷ்ணனைப் பார்த்திருக்கிறான்.
“என்ன... பயந்துட்டியா?”
பாலன் சிரிப்பதை அவன் கேட்டான். அவன் பெட்டியை எடுக்கும் ஓசையையும்தான்.,
“வா...”
பாலன் கிருஷ்ணனின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தான். பத்து வருடங்களுக்கு முன்பு இதே புகைவண்டி நிலையத்திலிருந்துதான் கிருஷ்ணன் ஊருக்கு வண்டி ஏறினான். அன்று அவனை வழியனுப்பி வைக்க வந்தவர்களின் கூட்டத்தில் பாலனும் இருந்தான். இருக்கை எண்ணைக் கண்டுபிடித்து அவனை இருக்கையில் கொண்டு வந்து உட்கார வைத்ததுகூட பாலன்தான்.
இருட்டு திடீரென்று சிவந்தது மாதிரி இருந்தது. அவர்கள் புகைவண்டி நிலையத்தை விட்டு வெளியே வந்திருந்தார்கள். குதிரை வண்டிக்காரர்கள், ஆட்டோ ரிக்க்ஷாக்காரர்கள் ஆகியோரின் ஆரவாரம் அங்கு பலமாக இருந்தது. வெயில் சுட்டெரிக்க அவர்கள் சாலை வழியே நடந்தார்கள். ஆப்பிள் பழங்களின் வாசனையை கிருஷ்ணன் உணர்ந்தான். இரைகளைப் பிடிப்பதற்காகக் காத்து நின்றிருந்த குதிரை வண்டிகளுக்கருகில் சாலையோரத்தில் பழவியாபாரம் செய்து கொண்டிருந்தவர்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். மேடும் பள்ளமுமாய் இருந்த சாலையில் கால் வைப்பதற்கு இடமில்லை. குதிரை வண்டிகளும் ஆட்டோ ரிக்க்ஷாக்களும் பஸ்களும் கால்நடையாக நடந்து செல்பவர்களும் ஆக்கிரமித்ததில் சாலை திணறிக் கொண்டிருந்தது. சாலையின் இரு பக்கங்களிலும் இருந்த பழைய கட்டிடங்களின் கீழ் பகுதிகளிலும் மும்முரமாக வியாபாரம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மேல் மாடிகளில் பலதரப்பட்ட தங்கும் விடுதிகளும் விலைமாதுக்கள் இருக்கும் இடங்களும் இருந்தன. கிருஷ்ணன் நினைத்துப் பார்த்தான். பத்து வருடங்களுக்கு முன்பு அவனுடைய கண்களுக்குப் பார்க்கும் சக்தி இருந்தது. ஒரு நாள் அவன் பார்க்க அந்த இருளடைந்த கட்டிடங்களின் மேல் மாடிக்கு ஏறிச்சென்ற காவல் துறையினர், அங்கிருந்த விலைமாதர்களைப் பிடித்துக்கொண்டுவந்து அவர்களின் தலைமுடியை அறுத்து, அடித்து உதைத்தார்கள். அப்போது அந்த விலைமாதுக்களின் உரிமையாளரான ஒரு கிழவி ஒடுங்கலான படிகள் வழியே வேகமாக வந்து காவல்துறையினரைப் பார்த்து வாய்க்கு வந்தபடி திட்டியதோடு நிற்காமல் தன்னுடைய ஆடையை மேலே தூக்கிக்காட்டவும் செய்தாள். அவன் அதையெல்லாம் நினைத்துப் பார்த்தான்...
“பாலன்...”
“என்ன?”
“இந்தச் சாலையின் ஓரத்தில் இடிந்துபோன அந்தக் கட்டிடங்கள் இப்பவும் இருக்கா?”
பாலன் வெறுமனே அந்தப் பக்கம் பார்வையை ஓட்டினான். அந்த இடிந்துபோன பழைய கட்டிடங்கள் அதேபோல்தான் இப்போதும் இருந்தன. மேலே புகைபிடித்து மேற்பூச்சு உதிர்ந்து போயிருக்கும் கைப்பிடிகளைப் பிடித்தபடி நின்றிருக்கும் விலைமாதுக்கள் கைகளை அசைத்து சாலையில் செல்வோரை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பத்து வருடங்கள் அல்ல; நூறு வருடங்கள் கடந்தாலும் இந்த விஷயத்தில் எந்தவொரு மாற்றமும் உண்டாகப் போவதில்லை என்பது மட்டும் பாலனுக்கு நன்றாகவே தெரியும்.
“நீ என்ன ஒண்ணுமே பேசாம இருக்கே?”
“கிருஷ்ணா, அந்தப் பழைய கட்டிடங்கள்ல ஒண்ணுகூட இப்போது இல்ல. அந்த இடத்துல இப்போ புதிய கான்க்ரீட் கட்டிடங்கள் இருக்கு...”
“அப்போ மேல மாடியில இருந்த விலைமாதர்கள்...?”
“அது உனக்கு தெரியாதா கிருஷ்ணா? சமூகத்துல ஒரு மோசமான தொழிலாக இருந்த விபச்சாரத்தை ஒழிப்பதற்காக நம்ம அரசாங்கம் ஒரு புதிய திட்டம் கொண்டுவந்துச்சு. அதன் விளைவா இப்போ நகரத்துல விலைமாதர்களே இல்ல. அவங்கள்லாம் இப்போ மரியாதையான தொழில் செய்து மனைவிகளாகவும் தாய்களாகவும் வாழ்க்கையை நடத்திக்கிட்டு இருக்காங்க.”
இவ்வளவையும் சொன்ன பாலன் வலது பக்கம் முகத்தைத் திருப்பி மேலே பார்த்தான். முகத்தில் சாயம் தேய்த்துக்கொண்டு அதிகபட்சம் பன்னிரண்டோ, பதின்மூன்றோ வயது இருக்கக்கூடிய ஒரு இளம்பெண் அவனைக் கைகாட்டி அழைத்தாள். கிருஷ்ணனுக்குப் பார்வை தெரியாமல் போனது எவ்வளவு நல்லதாகப் போயிற்று என்று நினைத்தான் பாலன். கிருஷ்ணன் இதையெல்லாம் பார்க்க வேண்டியதில்லையே!
அவர்கள் இருவரும் ஒரு குதிரை வண்டியில் ஏறினார்கள். கிருஷ்ணனின் பெட்டியை பாலன் தன்னுடைய கால்களுக்கு மத்தியில் சேர்த்து வைத்துக்கொண்டான். பிரம்பைத் தன்னுடைய மடியில் வைத்த கிருஷ்ணன் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தான். குதிரை வண்டி குலுங்கிக் குலுங்கி போய்க் கொண்டிருந்தது.
“பாலா, இப்போல்லாம் இங்கே குதிரை வண்டிகள் இருக்காதுன்னு நான் நினைச்சேன்...”
அதற்கு பாலன் சிரித்தான். “குதிரை வண்டின்றது ஒரு அடையாளம்ன்னு சொல்றதுதான் சரி. நம்ம நாட்டோட பழமைக்கும் மாற்றமில்லாமைக்கும்...”
கால் நூற்றாண்டுக்கு முன்னால் வேலை தேடி கிருஷ்ணன் முதல் தடவையாக இந்த நகரத்திற்கு வந்தபோது இதேபோல ஒரு குதிரை வண்டியில் ஏறித்தான் அவன் வந்தான். அது மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக் கொண்டிருந்த ஒரு வயதான குதிரை.