ராசலீலை - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6385
அவள் காதுகளில் அணிந்திருந்த வளையங்கள் ‘கில்ட்’ நகைகள் என்ற உண்மை நீண்ட காலத்திற்குப் பிறகுதான் அவனுக்கே தெரியவந்தது. விடுமுறை நாட்களில் புடவைத் தலைப்பை இடுப்பில் சுற்றிக்கொண்டு கையில் ஒரு துடைப்பத்தை வைத்துக்கொண்டு அறையையும் சுற்றுப்புறத்தையும் அவள் சுத்தம் செய்வாள். அறையின் மூலையில் சுவரில் மாட்டப்பட்டிருந்த சிறு ஸ்டாண்டில் ஒரு கடவுள் படமும் ஒரு சிறு குத்துவிளக்கும் இருக்கும். அந்த ஸ்டாண்டை அங்கு மாட்டியது பாலன்தான். மாலை மயங்கிய நேரத்தில் கிருஷ்ணன் அங்கு வரும்போது அந்தக் குத்துவிளக்கிலிருக்கும் ஒற்றைத் திரியில் எரிந்து கொண்டிருக்கும் வெளிச்சம் அறையின் மூலைவரை பரவியிருக்கும். அப்போது லீலா சமையலறையில் இருப்பாள். வயதாகி படுத்த படுக்கையில் கிடக்கும் சமயத்திலும் அவளின் தந்தைக்கு நன்றாகச் சாப்பிட வேண்டும். வயிறு நிறைய உணவு கிடைக்கவில்லையென்றால், அந்த ஆள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமே பண்ணிவிடுவார். வயிறு நிறைந்துவிட்டால் அறையிலிருக்கும் சிறு கட்டிலில் ஒரு சிறு குழந்தையைப் போல அமைதியாக அவர் உறங்க ஆரம்பித்துவிடுவார்.
“என்ன இது?”
“ம்... ஒண்ணுமில்ல. கொஞ்சம் கடுகு எண்ணெய்.”
அவன் கடுகு எண்ணெய் டின்னை அவளுக்கு முன்னால் வைப்பான். ஆரம்பத்தில் அவள் அதை வாங்குவதற்கு மறுத்து விட்டாள். தன்னுடைய நிறுவனத்திலிருந்து தனக்கு அது குறைவான விலைக்குக் கிடைக்கிறது என்று அவன் சொன்ன பிறகுதான் அவள் அதை வாங்கிக் கொள்ள சம்மதித்தாள். பிறகு எல்லா மாதமும் அவளுக்கு உணவு சமைக்கவும் குளிர்காலத்தில் உடம்பில் தேய்த்துக் குளிப்பதற்கும் தேவைப்படும் கடுகு எண்ணெயை அவன்தான் கொண்டு வந்து தருவான்.
கடுகு எண்ணெய் தவிர வேறு எதையும் தான் லீலாவிற்குத் தரவில்லையே என்பதை நினைத்து பல நேரங்களில் கிருஷ்ணன் கவலைப்பட்டிருக்கிறான். அது அவனுடைய குற்றம் மட்டுமல்ல. அவளுடைய குற்றமும்தான். ஒருநாள் பக்கத்து நகரத்திற்கு எண்ணெயின் ஏஜன்ஸி விஷயத்தை முறைப்படுத்துவதற்காகப் போயிருந்தபோது அங்குள்ள கடை வீதியில் ஒரு மஞ்சள்நிறப் புடவையை அவளுக்காக அவன் வாங்கிக்கொண்டு வந்தான். அவளுக்கு மிகவும் பிடித்தநிறம் அது என்பதைக் கிருஷ்ணன் நன்கு அறிவான்.
“இந்தப் புடவையை நீங்களே பத்திரமா வச்சிருங்க. கல்யாணம் நிச்சயமான பிறகு நான் எடுத்துக் கட்டிக்கிறேன். போதுமா?” அவள் கள்ளங்கபடமற்ற ஒரு சிரிப்பு சிரித்தாள்.
“கிருஷ்ணா, என்ன நீ சிந்திக்கிறே?”
“லீலாவைப் பற்றி...”
“அவளுக்கு இப்போ கணவனும் குழந்தைகளும் இருக்காங்க.”
“எனக்குத் தெரியும் எனக்குத் தெரியும்...”
கிருஷ்ணன் தலையை ஆட்டினான். தேவையில்லாத ஒன்றை தான் சிந்திக்கவில்லையே என்று அவன் நினைத்தான். பழைய நினைவுகளை மீண்டும் நினைத்துப் பார்க்க அவனுக்கு உரிமை இருக்கிறதே! அதுவும் இப்போது கண் பார்வை தெரியாத ஒரு மனிதனாக மாறிவிட்ட அவன் வெறும் நினைவுகளில் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும்போது...
“கிருஷ்ணா, நான் சும்மா சொன்னேன். நீ அதைப் பற்றி தப்பா எதுவும் நினைக்காதே...”
பாலன் தன்னுடைய நண்பனின் கையைப் பிடித்து அழுத்தினான். கிருஷ்ணனின் எண்ணங்களும் உணர்வுகளும் பாலனுக்குத் தெரியாதது அல்ல. பத்து வருடங்களுக்குப் பிறகு நகரத்திற்கு மீண்டும் வந்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், கிருஷ்ணன் மனதின் அடி ஆழத்தில் இருக்கும் நினைவுகள்கூட எழுந்து மேலேவரும் என்பதை அவன் நன்கு அறிவான். குறிப்பாக லீலாவைப் பற்றிய நினைவுகள்... கிருஷ்ணனுக்கு பார்வை மட்டும் போகாமலிருந்தால் இப்போது அவன் லீலாவுடனும் குழந்தைகளுடனும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பான். ஆனால், கடவுள் அவனை அந்த வாழ்க்கைக்கு அனுமதிக்கவில்லை. அவன் பார்வை தெரியாத ஒருவனாகிவிட்டான். அவனுக்கு வேலை இல்லாமற் போய்விட்டது. லீலாவையும் அவன் இழந்துவிட்டான்.
குதிரை வண்டி ஒரு வளைவில் திரும்புவதை கிருஷ்ணனால் புரிந்துகொள்ள முடிந்தது. அதேநேரத்தில் சாக்கடையிலிருந்து கிளம்பி வந்த கெட்ட நாற்றமும் அவனுடைய மூக்கிற்குள் நுழைந்தது. முன்பு பாலன் தங்கியிருந்த அறைக்குப் போகும் பாதையில் இருந்த அதே நாற்றம்... பத்து வருடங்கள் கடந்தோடிய பிறகும் அந்த நாற்றத்தை அவனால் மறக்க முடியவில்லை.
“இந்த வழி எனக்கு நல்லா அறிமுகமானது மாதிரி தெரியுதே! உன் வீட்டுக்கு இன்னும் தூரமா போகணுமா என்ன?”
“இதோ, வந்துட்டோம். ஒரே ஒரு வளைவு திரும்பணும்...”
பாலன் முன்பு வசித்த இடத்திற்குப் போகும் வழியும் இதே போலத்தான் இருந்தது. வார்னிஷ் ஃபாக்டரியைத் தாண்டி சிறிது தூரம் சென்றால் ஒரு வளைவு வரும் ஒரு கிலோமீட்டர் தூரமுள்ள சாக்கடையைத் தாண்டினால் மீண்டும் ஒரு வளைவு வரும்.
“பாலா, நான் உன்னைப் பற்றி எதுவுமே கேட்கல. பழைய ஏற்றுமதி நிறுவனத்துலதான் இப்பவும் நீ வேலை பார்க்குறியா?”
“இல்ல... இல்ல... அந்த நாசமாப் போன வேலையை நான் எப்பவோ விட்டுட்டேன். நீ போன பிறகு முயற்சிசெய்து சி.ஏ. பாஸ் ஆனேன். இப்போ எனக்கு சொந்தமா ஒரு கம்பெனி இருக்கு.” பாலன் உரத்த குரலில் சொன்னான்.
அவன் சட்டைப் பையிலிருந்து விசிட்டிங் கார்டை எடுத்து கிருஷ்ணன் கையில் வைத்தான். கிருஷ்ணன் அதை வாங்கி கையால் மெதுவாகத் தடவினான். அந்தக் கார்டில் என்ன எழுதியிருக்கிறது என்பதை அவனால் பார்க்க முடியவில்லையே. ‘சில நேரங்கள் கண்கள் இமைக்காமலிருப்பதே நல்லது’ -பாலன் தனக்குத் தானே கூறிக்கொண்டான்.
“சரி... நீ யாரைக் கல்யாணம் பண்ணினே! ஒரு கடிதம்கூட எனக்குப் போடலியே!”
“நல்ல கதைதான். நான் அனுப்பின கல்யாண அழைப்பிதழ் உனக்குக் கிடைக்கலியா?”
“இல்ல...”
"மன்னிக்கனும் கிருஷ்ணா! சொந்தமா கம்பெனி ஆரம்பிச்சதுல இருந்து எனக்கு என்னோட நண்பர்களை நினைக்கக்கூட நேரம் இல்லாமப் போச்சு...
“பரவாயில்ல...”
கிருஷ்ணன் தன்னுடைய நண்பனின் கையைப் பிடித்து அழுத்தினான். குதிரை வண்டி இப்போதும் ஓடிக்கொண்டுதானிருந்தது. இரு பக்கங்களிலும் இருண்டுபோய்க் காணப்பட்டது. இரண்டு பக்கங்களிலும் உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் உள்ள அகலம் குறைவான பாதையின் வழியாக தாங்கள் போய்க் கொண்டிருப்பதை மட்டும் கிருஷ்ணனால் உணர முடிந்தது. அவ்வப்போது இருட்டில் லேசான வெளிச்சத்தின் சாயல் உண்டானது. அது கட்டிடங்களுக்கு இடையில் கடந்துவந்த சூரிய வெளிச்சத்தால் ஏற்பட்டது.
பத்து நிமிடங்களுக்குள் அவர்கள் பாலன் வசிக்குமிடத்தை அடைந்தார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு அவன் வசித்த அசுத்தம் நிறைந்த அதே அறைதான் அது. பார்வையற்ற கிருஷ்ணனுக்கு அது தெரியாது. அவனுக்குச் சிறிதுகூட சந்தேகம் தோன்றவுமில்லை.