ரோகிணி
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6348
புகழ்பெற்ற தேவியின் அருளைப் பெறுவதற்காக அவர்கள் கன்னியாகுமரிக்கு வந்திருந்தார்கள். திருமணம் முடிவடைந்து இருபது வருடங்களாகி விட்டன. ஒரு குழந்தை இல்லை. சாதாரண இந்து மதத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கு அது பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு விஷயம்தான். சந்தேகமே இல்லை. கன்னியாகுமரி பயணத்திற்கான பலனைப் பற்றி அவர்களுக்கு சிறிது சந்தேகம் இருக்கத்தான் செய்தது. அந்தச் சந்தேகத்தை அவர்கள் வெளியே கூறவில்லை.
அவனுடைய தாயை எடுத்துக் கொண்டால், ஒரு வாரிசு வேண்டும் என்ற விஷயத்தில் அமைதியற்றவளாக ஆகிவிட்டிருந்தாள். வீட்டிற்கு வரும் யாராக இருந்தாலும் சரி, சிறிய விஷயங்களைக் கூட விட்டுவிடாமல் ஏமாற்றம் நிறைந்த கதைகள் முழுவதையும் கூறுவது அவளுடைய குணமாக இருந்தது. அவர்கள் குருவாயூருக்குப் போனதையும், பழனிக்குப் போய் படிகள் ஏறியதையும், காசிக்கும் பூரிக்கும் ஹரித்துவாருக்கும் சென்றதையும், இவ்வளவு இடங்களுக்குப் போன பிறகும் கடவுள் கடந்த பிறவிகளில் செய்த பாசங்களை மறக்கவோ, அவர்களுக்குக் குழந்தை பிறப்பதற்கான பாக்கியத்தைத் தரவோ தயாராக இல்லை என்றும்; அவர்களுக்கு இப்போதும் குழந்தைகள் இல்லை என்றும் அந்தப் பெண் தன்னுடைய வறண்டுபோன குரலில் எல்லோரிடமும் கூறினாள். அந்த மொத்த பணத்தையும் அந்த சொத்துக்களையும் அந்த கட்டிடங்களையும் யாரிடம் தந்துவிட்டு இந்தத் தலைமுறை கடந்து செல்லும் என்று அவள் கவலைப்பட்டாள்.
ஒருமுறை மது அருந்தி போதை மயக்கத்துடன் வீட்டிற்கு வந்த ஒரு எழுத்தாளனிடம் அவள் கோவில்களைப் பற்றிச் சொன்னபோது, அவன் கேட்டான்: “அவள் கடவுள்களைத் தேடிப் போகாமல் ஒரு ஆணை அணுகிப் பார்த்தாளா?” என்று. அடுத்த நிமிடம் கிழவி அந்த மனிதனை அடித்து வெளியே விரட்டிவிட்டாள். ஒருமணி நேரம் அவள் ஒரு வலிப்பு நோய் வந்த பெண்ணைப் போல இருந்தாள். வீட்டிலிருந்த இளம் வயதினர் வார இறுதியில் வீட்டிற்கு வற்புறுத்தி வரவழைத்த விருந்தாளிகளை அவள் ஏற்றுக் கொள்ளவில்லை. விருந்தாளிகள் ஓவியர்களாகவும் கவிஞர்களுமாக இருந்தார்கள். ஒருமுறைகூட ஒரு கவிதை புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கக் கூட செய்யாத பணக்காரனும் தொழிலதிபருமான தன்னுடைய மகனுக்கும் அவர்களுக்கும் இடையில் என்ன தொடர்பு என்று அவள் நினைத்தாள். அவன் பள்ளி கல்வியைக் கூட முழுமையாக முடிக்கவில்லை. தொழிற்சாலைகளின் முழுச் சுமையையும் தாயின் தோள்களில் திடீரென்று வைத்துவிட்டு அவனுடைய தந்தை மரணத்தைத் தழுவிவிட்டார். தாய் உடல் ரீதியாக நல்ல நிலையில் இல்லை. ஆனால், அவள் மனரீதியாக பலம் கொண்டவளாக இருந்தாள். அவள் மிகுந்த தைரியசாலியாக இருந்தாள். தன் மகன் தொழிலில் ஆர்வம் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியபோது, தாய்க்கு சந்தோஷமாக இருந்தது. ஒரு வருடத்திற்குள் நகரத்தில் பிறந்து வளர்ந்த, படித்த ஒரு இளம் பெண்ணைப் பார்த்து அவனுக்குத் திருமணம் செய்து வைக்க அவனைக் கட்டாயப்படுத்தினாள். அப்படிப்பட்ட ஒரு மனைவி வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு வரவு – செலவு விஷயங்களில் அவனுக்கு உதவியாக இருப்பாளே!
அவள் மெலிந்து போய்க் காணப்பட்டாள். பிரகாசமான கருப்பு நிறம். அவள் அவனிடமிருந்தும் மாமியாரிடமிருந்தும் முற்றிலும் வேறுபட்டவளாக இருந்தாள். அவனுடைய தாய் தடிமனான உடலைக் கொண்டவளும், மாநிறத்தைக் கொண்டவளுமாக இருந்தாள். அவளுடைய முகத்திலிருந்த கருப்பு ஒரு குறையாகவே இருந்தது. ஆனால், அந்தக் குறைப்பாட்டை வைத்துத்தான் அவளுடைய மாமியார் தன் மகனுக்காக அவளைத் தேர்ந்தெடுத்தாள். அழகான பெண்ணைத் தேர்வு செய்தால் அவ்வளவு நல்லதல்ல. அழகு தவறான வழியில் கொண்டு போய்விடும். அவளுடைய மகன் தொழிலை விட்டு விலகிப் போய்விடக்கூடாது. இன்னொரு விஷயமும் இருக்கிறது. அவளைப் பற்றிக் கூறுகின்ற வேலைக்காரிகள் மற்றும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் உறவினர்கள் ஆகியோரின் வார்த்தைகள் கிழவியின் காயம்பட்ட பொறாமையின் மீது ஒரு மருந்தைப் போல புரண்டன என்பதென்னவோ உண்மை. அவர்கள் கூறுவார்கள்: “அம்மா, உங்களுடைய மருமகள் நிறைய படித்தவளாக இருக்கலாம். ஆனால், உங்களுடைய நிறத்தில் அவள் பாதி கூட இல்லை. நீங்க ஒரு வெள்ளை ரோஜா மலரைப் போல இருக்கீங்க. உங்களுடைய பால் போன்ற வெள்ளை நிறத் தோலைப் பார்த்து நகரத்திலிருந்து வரும் எந்தப் பெண்ணாக இருந்தாலும் ஏங்குவார்கள் தெரியுமா?”
கன்னியாகுமரி கோவிலுக்குச் செல்லும் முதல் பயணத்திற்காக ஆடைகளை மாற்றிக் கொண்டிருந்த ரோகிணி இப்படிப்பட்ட வார்த்தைகளை நினைத்து வேதனையால் நெளிந்தாள். கெஸ்ட் ஹவுஸில் அவர்களுடைய அறையின் ஜன்னல்கள் மூடியிருந்தன. ஜன்னல்களின் கண்ணாடிகளில் தூசி படிந்திருந்தது. காலையில் அந்தக் கதவுகளைத் திறக்க அவள் முயற்சித்தாள். ஆனால், அவை இறுகிப்போய் இருந்தன. அவள் அதற்குப் பிறகு அதை அப்படியே விட்டுவிட்டாள். கடலின் வயிறு வீங்கியிருந்தது. கதவின் இடைவெளி வழியாக அதன் இறைச்சல் சத்தம் அவளுடைய காதுகளில் விழுந்தது. இருண்டு உயரமாக நின்றிருந்த பாறைகள் மீது அலைகள் வேகமாக வந்து மோதியது, கோபம் நிறைந்த சத்தங்களின் ஆரவாரம் தன்னுடைய காதுகளில் விழுவதை அவளால் உணர முடிந்தது. அது அவளை தளரச் செய்தது. ஒற்றைப் பாலத்திலிருந்து கன்னியாகுமரிவரை உள்ள நீண்ட கார் பயணத்தின் மூலம் உண்டான களைப்பு காரணமாக இருக்கலாம்- இரவில் அவளால் நன்கு உறங்கவே முடியவில்லை. எந்தவிதக் கவலையும் இல்லாமல் குறட்டை விட்டவாறு தூங்கிக் கொண்டிருந்த தன் கணவனுக்கு அருகில் மணிக்கணக்காக அவள் இப்படியும் அப்படியுமாகப் புரண்டு கொண்டிருந்தாள். படுத்தவுடன் தூங்கக் கூடிய அவனுடைய இயல்பைப் பார்த்து அவளுக்கு பொறாமையே உண்டானது. தொழிற்சாலையில் வேலை நிறுத்தங்களும் கதவடைப்புகளும் நடக்கலாம். ஆனால், சாப்பிட்டு முடித்தவுடன் தூங்க வேண்டும் என்ற ஒன்றைத் தவிர, வேறு எதுவும் அவனுக்குப் பிரச்சினையே இல்லை. தொழிலாளிகளின் கோபத்தைப் பார்த்து நிலைகுலைந்து போகக்கூடியவள் மனைவிதான். அவன் யாரிடமாவது எந்தச் சமயத்திலாவது கோபப்படுவதை அவள் பார்த்ததேயில்லை. விளையாட்டுப் பொருட்கள் விற்கப்படும் கடைகளில் இருக்கக்கூடிய வட்ட முகத்தையும் சிறிய கண்களையும் தொந்தியையும் வைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கும் பொம்மைதான் அவனுடைய தோற்றம் என்று அவளின் மனதில் தோன்றியது. மனதில் அவள் அமைதியாக அவனைக் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதும் சாபம் இடுவதுமாக இருந்தாள். அவன் ஒரு தீனிப் பண்டாரமாகவே இருந்தான். தன்னுடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் அவன் ஒரு கிராமத்து மனிதனாகவே இருந்தான். ஆனால் தன்னுடைய மனக்குறையை அவனுடைய முகத்தைப் பார்த்து அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. எந்தவிதத்தில் பார்த்தாலும் வறுமையின் காரணமாக ஆசிரியை வேலைக்கோ ஸ்டெனோகிராஃபராக பணியாற்றவோ போக வேண்டிய சூழ்நிலைக்கு ஆளான தன்னுடைய சிநேகிதிகளைவிட அவள் அதிர்ஷ்டம் வாய்த்தவளாக இருந்தாள்.