ரோகிணி - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6349
“கவலைப்படாதே. நான்தான்... விஜயன்... நான் உன்னை வேதனைப்பட விடமாட்டேன். எனக்கு நீ தேவை என்பதைவிட நான் உனக்குத் தேவைன்றதுதான் உண்மை.”
“என்னை விட்டுட்டுப் போங்க.”- அவள் கோபத்துடன் கத்தினாள்: “நான் சத்தம் போட்டு என் கணவனைக் கூப்பிடுவேன்.”
“நீ கூப்பிட்டால் அவனுடைய காதுகளில் விழாது”- மது வாசனை அடித்துக் கொண்டிருந்த மனிதன் சொன்னான்: “அவன் வெளியே இருக்கும் அறையில் படுக்கையில் இறந்ததைப் போல உறங்கிக்கிட்டு இருக்கான்.”
“என்னை விடுங்க...”- அவள் அழுதாள். “நீங்க என்னைத் தொட நான் அனுமதிக்க மாட்டேன். நீங்க என்னை ஏதாவது செய்தால், நான் அவமானம் தாங்க முடியாம இறந்திடுவேன். நான் போய் கடல்ல குதிச்சிடுவேன்.”
“உனக்கு வலிப்பு நோய் இருக்கு ரோகிணி” என்று சொல்லியவாறு அவன் அவளுடைய கழுத்தில் முத்தமிட்டான். “உனக்கு எப்போதும் வலிப்பு நோய் இருந்தது. நாம இருபது வருடங்களுக்கு முன்னால் சுற்றுலா போயிருந்தப்போ நான் வேறொரு பெண்ணைப் பார்த்ததற்கு நீ பண்ணிய ஆர்ப்பாட்டங்கள் இப்போ ஞாபகத்துல இருக்கா?”- அவன் கேட்டான்.
“எனக்கு அப்படிப்பட்ட ஒரு சுற்றுலாவே ஞாபகத்தில் இல்லை”- அவள் சொன்னாள்: “நான் உங்களை இன்னைக்குத் தவிர, என் வாழ்க்கையில் முன்பு எப்போதும் பார்த்ததே இல்லை.”
“உனக்கு ஒரு நரம்பு நோய் வந்திருந்தது ரோகிணி”- அவளுடைய ஆடையின் பொத்தான்களை அவிழ்த்தவாறு அவன் சொன்னான்: “கர்ப்பத்தைக் கலைச்ச பிறகு நீ எந்தச் சமயத்திலும் பழைய நீயா ஆனதே இல்லை. உனக்கு சய உணர்வை வரவழைப்பதற்காக நான் எவ்வளவு மாதங்கள் சிரமப்பட்டேன் என்பது தெரியுமா? நாம இரண்டு பேர் மட்டும் ஊட்டிக்குப் போயிருந்த கோடை காலத்தை நீ மறந்துட்டியா? நான் உன்னை மலை உச்சிக்கு அழைச்சிட்டுப் போனேன். நீ ஒரு சிறு குழந்தையைப் போல அழுதே... உனக்கு அது ஞாபகத்துல இல்லையா?”
நினைத்தாளா இல்லையா என்பது அவளுக்குப் பிரச்சினையே அல்ல. அவன் அவளிடம் ஆரம்பித்து வைத்தது அவளுடைய வாழ்க்கையிலேயே மிகுந்த சந்தோஷத்தைத் தரக்கூடிய அனுபவமாக இருந்தது. தான் உருகிக் கொண்டிருப்பதைப் போல அவளுக்கு இருந்தது. அவளுக்குள் மிகவும் இறுகிப் போயிருந்த பகுதிகூட உருகிக் கொண்டிருந்தது. தொடர்ந்து அவளிடம் அவனைத் தவிர வேறு எதுவும் மீதமில்லை என்ற நிலை உண்டானது. ப்ரவுன் நிறத்தைக் கொண்ட புள்ளி விழுந்த கண்களின் சொந்தக்காரனான அவன் மட்டுமே எஞ்சி நின்றான். “நான் உன்னைக் காதலிக்கிறேன்”- அவள் சொன்னாள்: “ஓ கடவுளே! நான் உன்னைக் காதலிக்கிறேன்.”
அவன் ஆடைகளை அணிவதற்காக எழுந்தபோது அவள் சொன்னாள்: “என் கணவர் ஆழமான தூக்கத்தில் இருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. எழுந்து வந்து நாம ஒன்றாகப் படுத்திருப்பதைப் பார்த்தால், அவர் என்ன செய்வார்னே எனக்கு தெரியாது.”
அதைக் கேட்டு விஜயன் சிரித்தான். அது கிண்டலான ஒரு சிரிப்பாக இருந்தது. “நான் உன்னுடன் இருக்கிறேன் என்பது அவனுக்கு ஏற்கெனவே தெரியும்”- அவன் சொன்னான்: “உண்மையைச் சொல்வதாக இருந்தால், அவன்தான் என்னை உன் படுக்கைக்கே அனுப்பி வச்சான்.”
“என்னால அதை நம்ப முடியல”- அவள் சொன்னாள். போர்வைக்கு அடியில் தான் நடுங்குவதை அவளால் உணர முடிந்தது. “தன் தாய்க்கு ஒரு பேரக் குழந்தையைத் தர வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார் என்று எனக்குத் தெரியும். ஆனால் இன்னொரு மனிதனின் குழந்தை தன்னுடைய குழந்தையாக வளர்வதை அவர் விரும்பமாட்டார். அவருக்குத் தன்னுடைய ரத்தத்தைக் குறித்து உயர்ந்த மதிப்பு இருக்கு. அவருடைய பாழாய்ப்போன, சக்தி இல்லாத ரத்தத்தைக் குறித்து...”
“குழந்தை விஷயத்தை யார் சொன்னது?”- விஜயன் கேட்டான். அவன் பெல்ட்டின் பக்கில்களை இட்டு முடித்திருந்தான். பாக்கெட்டில் எதையோ அவன் தேடுவதைப்போல் இருந்தது. சிகரெட்டாக இருக்குமோ? எழுந்து தீக்குச்சியை உரசி, அந்த ஜூவாலையைத் தன் உள்ளங்கைகளால் மூடி, அவனுக்கு அதைப் பற்றச் செய்து தர வேண்டும் என்று அப்போது அவளுக்கு விருப்பம் உண்டானது. அவனுக்குச் சொந்தமானவளாக ஆக வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். அவனுடைய மனைவி... அவனுடைய குழந்தைகளின் தாய்...
“நாம என்ன செய்யப் போறோம்?”- அவள் கேட்டாள்.
“நான் என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்”- அவளுடைய உதடுகளில் முத்தமிட குனிந்தவாறு விஜயன் சொன்னான்: “எதைச் செய்வதற்காக எனக்குப் பணம் கிடைத்தது என்று எனக்குத் தெரியும்.”
அந்த முத்தத்தின் போதையில் அவளுடைய தலை சுற்றியது. அவள் மெதுவாக முனகினாள். “எதைச் செய்வதற்காக உனக்கு பணம் தரப்பட்டிருக்கிறது கூலி வேலைக்காரனே?”- அவள் கேட்டாள். அடுத்த ஒன்றோ இரண்டோ நிமிடங்களுக்குள் அவனுடைய கைகள் அவளுடைய கழுத்தைச் சுற்றுவதாகவும், அவளுடைய உயிரை இறுக்கி பிழிவதைப் போலவும், நிரந்தரமான இருளை அவளுக்கு விடுதலையாகத் தருவதாகவும் அவள் உணர்ந்தாள்.
இறுதியில் அந்த இருட்டு, அதன் பயங்கரமான வாயைத் திறந்து அவளை விழுங்கியது.