ரோகிணி - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6349
“எனக்கு கடல் என்றால் விருப்பம்”- அவள் சொன்னாள்: “நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ, என் அப்பாவும் அம்மாவும் விடுமுறைக் காலத்தில் என்னைக் கடலோர இடங்களுக்கு அழைச்சிட்டுப் போவாங்க. நான் அப்போ சிப்பிகளைப் பொறுக்குவேன். அவை இப்போதும் என் தாயின் அறையில் இருக்கும் அலமாரியில் இருக்கின்றன. அது என் நினைவிற்குள் கொண்டு வருவது...”
“அது உன் நினைவிற்குக் கொண்டுவருவது நீ ஒரு வருடமாக உன் அம்மாவைப் போய் பார்க்கவில்லை என்ற விஷயத்தைத்தான்...”- அவன் சொன்னான்.
“நீங்க சொல்றது சரிதான்....”- அவள் சொன்னாள்: “அம்மாவைப் பார்க்குறதுக்கான நேரம் வந்துவிட்டது. இந்த வருடம் ஓணத்திற்கு நான் அங்கே போகணும். நீங்ககூட வரலாம். உங்களுக்குத் தெரியுமே... அம்மாவுக்கு உங்கள் மீது எந்த அளவிற்கு விருப்பம் இருக்குன்னு! நான் கூட இருக்குறப்போ அம்மா எப்போதும் உங்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பாங்க. என் அம்மா இருக்கும் இடத்தில் நீங்கள் ஏன் மேலும் கொஞ்ச நாட்கள் தங்கவில்லை? நாங்க ஏழைகள்ன்றதுனாலா? உங்க அளவுக்கு பணக்காரர்களா இல்லாததுனாலா?”
“என் டிரைவருக்கு முன்னால் நீ இப்படிப் பேசாதே”- அவன் குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான்: “அது என்னை மன அமைதி இல்லாதவனா ஆக்குது.”
அவள் அடுத்த நிமிடம் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு கடற்கரையைப் பார்த்தாள். அழுக்கு ஆடைகள் அணிந்த இரண்டு சிறுமிகள் ஒரு குஜராத்தி தம்பதிகளுக்கு சிப்பி மாலை விற்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.
“கோவிலில் ஏறி இறங்குவதற்கு பதிலாக நாம் ஒரு ஏழை குழந்தையைத் தத்து எடுத்தால் என்ன?”- அவள் தன் கணவனிடம் கேட்டாள்: “இந்தச் சிறுமிகளில் ஒருத்தியை நாம் வீட்டுக்குக் கொண்டு போய் குளிப்பாட்டி நல்ல உணவு கொடுத்து வளர்க்கலாம். அவள் காலப்போக்கில் என்னை மாதிரி ஆகி விடுவாள்.”
“மற்றவர்களுடைய குழந்தைகள் என் சொத்துக்கு வாரிசுகளாக வருவதை நான் விரும்பவில்லை”- அவன் சொன்னான். அந்த உரையாடல் அத்துடன் முடிந்தது.
2
கோவிலில் கடவுளை தரிசனம் செய்யப் போவதற்கு முன்னால், அறையில் கொடுக்கப்படும் உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, நேரத்தைச் சரி பண்ணுவதற்காக நிர்வாணத் திரைப்படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள் கூறுகிறபடி நடந்துகொள்ளும் மாடல்களைப் போல அவர்கள் சிற்றின்ப லீலையில் ஈடுபட்டார்கள். அந்தச் சூழ்நிலையிலும் சந்தோஷத்தை அடைய ரோகிணியால் முடியவில்லை. அதற்குக் காரணம்- அவர்களைத் தன்னுடைய பொம்மைகளாக ஆக்க விரும்புகிற அவளுடைய மாமியாரின் அறிவுரையால்தான் தாங்கள் அந்தச் செயலில் ஈடுபடுகிறோம் என்ற விஷயம் அவளுக்கு நன்றாகவே தெரியும். அவளுடைய கணவன் உடலுறவில் ஈடுபடுவதற்குத் துடித்ததற்குக் காரணம் அவளுடைய உடல்மீது அவன் கொண்டிருந்த மோகம் அல்ல- மாறாக, கிழவியின் கட்டளை அது என்பதையும் அவள் அறிந்திருந்தாள். அந்த தலை நரைத்துப்போன பெண் அவர்களைப் பார்த்து ஒன்று – இரண்டு – மூன்று என்று எண்ணியவாறு தங்களுக்கு அருகில் நின்று கொண்டிருப்பதைப் போல அவள் உணர்ந்தாள். அவளுக்குத் தேவை ஒரு வாரிசு. அவ்வளவுதான். தன் மாமியாரைப் பற்றி நினைத்துப் பார்த்தபோது, ரோகிணி தன்னையே நொந்து கொண்டாள். கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்- அவள் அவர்களுடன் வராமல் இருந்துவிட்டாள். அவள் மெதுவான குரலில் தனக்குத்தானே கூறிக் கொண்டாள். தன் தடிமனான கையை அவள்மீது வைத்தவாறு படுத்திருந்த அவளுடைய கணவன் தலையைத் திருப்பி அவளைப் பார்த்தான்.”
“நீ ஏதாவது சொன்னியா?”- அவன் அவளிடம் கேட்டான். அவள், ‘இல்லை’ என்று தலையை ஆட்டினாள்.
“நீ சரியாக ஓய்வெடுப்பது இல்லை என்பதுதான் உன்னிடம் இருக்கும் பிரச்சினையே...”- அவன் சொன்னான்: “தூக்கத்தில்கூட உன் கைகள் மரத்துப்போனது மாதிரி இருக்கின்றன. நீ ஏன் அப்பப்போ தூங்க மாட்டேங்குறே?”
“நான் இப்படித்தான்”- அவள் சொன்னாள்: “போதாதற்கு, உங்களுடைய உடம்பிலிருந்து வரும் கந்தக வாசனை எனக்குப் பிடிக்கவே இல்ல. உங்களுக்கு வியர்வை வர்றப்போ, அந்த வாசனை என்னை ஒரு மாதிரி ஆக்குது. மூச்சுவிட முடியல...”
“நீ ஒரு காதலனுடன் தொடர்பு உண்டாக்கணும்”- அவன் சொன்னான்.
அதைக் கேட்டதும் அவள் நிலைகுலைந்து போய் அவனைப் பார்த்தாள். ஆனால், அவனுடைய முகம் எப்போதும்போல எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தது. அப்படியென்றால் அவன் வெறுமனே தமாஷுக்காக அதைச் சொல்லவில்லை. அவன் ஒரு பொறாமை கொண்ட கணவனாக இல்லாமல் போய் விட்டானா? அவளுடைய உடல்மீது கொண்ட மோகத்தை அவன் இழந்துவிட்டானா?
“எனக்கு இப்படிப்பட்ட வேடிக்கைப் பேச்சுகளைப் பிடிக்காது”- அவள் தாங்க முடியாமல் சொன்னாள்.
“கோபத்தில் சிரிப்பது உன் வாய்க்குப் பொருத்தமாக இல்லை”- அவன் சொன்னான்: “உனக்கு நாற்பது வயது நடக்குது என்ற விஷயத்தை நீ மறந்துட்டே...”
“இன்னைக்கு உங்களுக்கு என்ன ஆச்சு?”- அவள் தன் குரலை உயர்த்திக் கொண்டு கேட்டாள்: “இரக்கமே இல்லாத வார்த்தைகளால் என்னைக் காயப்படுத்த வேண்டுமென்று உங்களுக்கு ஏதோ கட்டாயம்னு நினைக்கிறேன்.”
அவன் அதைக் கேட்டுப் புன்னகைத்தான்: “நான் காயப்படுத்தணும்னு நினைச்சா, நான் அதை வார்த்தைகளால் செய்யமாட்டேன். இன்னும் கொஞ்சம் கூர்மையா இருக்கும் ஏதாவதொன்றை நான் பயன்படுத்துவேன்”- அவன் சொன்னான்: “நான் கவிஞன் இல்லை. இசையின் மூலங்களைப் பற்றியும் ஆல்பர் காம்யுவைப் பற்றியும் உன்னிடம் பேசவதற்காக வரும் கலைஞர்களில் ஒருவனல்ல நான்.”
அவள் திடீரென்று எழுந்தாள். அவளுடைய இதயம் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. “நீங்கள் குடிச்சு போதையில் இருக்கீங்களா?”- அவள் அவனிடம் கேட்டாள்: “நீங்கள் எப்படி இப்படிப்பட்ட மோசமான மிருகமா மாறினீங்க?”
“நீ ஆணவம் கொண்ட ஒரு பெண். வேறொண்ணும் இல்ல...”- அவன் சொன்னான்: “இதை உன்னிடம் சொல்றதுக்காக நான் இருபது வருடங்கள் காத்திருந்தேன். நல்ல சிந்தனைகளைக் கொண்டவள்னு நீ நடிக்கிறே. எதிர்ப்புகளைச் சந்திக்க நேரும்போது, நரம்பு சம்பந்தமான தலைவலி வந்துவிடுவதாகக் கூறி நீ நடிக்கிறே. சிறு பிள்ளைத்தனத்தையும் போலித் தனமான தனித்துவத்தையும் வச்சிக்கிட்டு இருக்குற ஒருத்தி நீ. நீ கூலிக்கு குத்துறவ. நீ கேவலமான மன நிலையைக் கொண்டவள். உன் வீட்டின் பாதுகாப்பிற்காகத்தான், பணக்காரியாக ஆகணும்ன்றதுக்காகத்தான் நீ என்னைத் திருமணம் செய்துக்கிட்டே. உன் தோழிகளுக்கு உன்னுடைய அதிர்ஷ்டத்தின் மீது பொறாமை வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு முன்னால் ஒப்பனை அணிந்து நடக்க நீ விரும்பினே. அவர்கள் ஒவ்வொருவரும் குணத்தில் உன்னைவிட உயர்ந்தவர்கள். அவர்கள் நம்முடன் தங்கியிருக்க வந்தப்போ, அவங்க ஒவ்வொருத்தருடனும் நான் தனிப்பட்ட முறையில் பேசிக் கண்டுபிடிச்ச விஷயம் இது.