ரோகிணி - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6349
நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன் என்று நீ நினைச்சிருந்த நேரத்தில் நான் அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பேன். என் பகல் தூக்கம் இல்லாமல் போனாலும் பரவாயில்லைன்னு நான் நினைச்சேன். பகல் நேரத்தில் ஓய்வு எடுக்கவில்லையென்றாலும், எனக்கு உனக்கு வர்றதைப் போல தலைவலி வராதே!”
“இதை உடனே நிறுத்துங்க”- அவள் கத்தினாள்: “உங்களுக்கு என்னவோ பிரச்சினை இருக்குது. இந்த நிமிடத்தில் நீங்கள் முற்றிலும் வேற யாரோ மாதிரி தெரியுது. உங்களுக்கு உங்களுடைய மனைவியைப் பற்றி இந்த அளவிற்கு மோசமான எண்ணம் இருக்கும் என்று நான் கொஞ்சம்கூட நினைக்கல. உங்களுடைய தாயைப் பற்றியும் இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் இருக்கா?”
அதைக் கேட்டு அவன் பலமாக சிரித்தான். அவள் பயந்துபோய் அமைதியாகிற அளவிற்கு ஒரு பயங்கரமான சிரிப்பாக அது இருந்தது. அன்று அவன் ஒரு துளி மதுவைக்கூட தொடவில்லை. மன நோய்க்கான அறிகுறிகள் ஏதாவது இருக்கின்றனவா என்று அவள் அவனுடைய முகத்தில் தேடினாள். அவனுடைய கண்கள் மிகவும் சாந்தமானவையாக இருந்தன. முகத்திலிருந்த தசைகள் அசைந்து கொண்டிருந்தன. அவன் எப்போதும்போல சிரிக்கும் பொம்மையாகக் காட்சியளித்தான். சந்தேக குணம் கொண்ட பொம்மை. அவள் உள்ளங்கைகளில் தன் முகத்தை மறைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
“உங்களுக்கு என்மேல வெறுப்பு வந்திடுச்சு”- அவள் மெதுவான குரலில் சொன்னாள்: “உங்களுக்கு என்மீது அன்பு இல்லையென்றால், நான் என் தாய் இருக்குற இடத்துக்குப் போயிடுறேன்.”
அவன் மீண்டும் சிரித்தான்: “எங்களுடைய பரம்பரையில் விவாகரத்து என்பது இல்லவே இல்லை குழந்தை...”- அவன் சொன்னான்: “எங்களுடைய ரகசியங்களுடன் நீ அங்கே போக நாங்க அனுமதிக்க மாட்டோம். எங்களுடைய ரகசியங்களை நீ எங்களின் எதிரிகளுக்கு விற்பனை செய்வே. எனக்கு உன்மேல நம்பிக்கை இல்ல...”
“பிறகு என்னை நீங்க என்ன செய்யப் போறீங்க?”- அவள் கேட்டாள். கண்ணீரின் வெப்பத்தை அவள் தன் கன்னங்களில் உணர்ந்தாள். “என்னைக் கொல்லணும்னு நீங்க நினைக்கிறீங்களா? நீங்களும் உங்க தாயும் சேர்ந்து...? என்னை இங்கே கொண்டு வந்து கொலை பண்ணும்படி அவங்க உங்களிடம் சொல்லியிருக்காங்களா?”- அவள் கேட்டாள்.
“உன்னுடைய இந்தப் பேச்சை நிறுத்து”- அவன் சொன்னான்: “ஆளுங்க யாராவது கேட்டுவிடப் போறாங்க. நம்முடைய அறைக்குப் பக்கத்துல வெளியே வராந்தாவில் டிரைவர் படுத்துத் தூங்கிக்கிட்டு இருக்கான். அவன் உன் சத்தத்தைக் கேட்டு, என்னிடமிருந்து உன்னைக் காப்பாற்றுவதற்காக ஓடிவருவான். அவன் உன்னை வழிபடுறவன் ஆச்சே! நீ அவனிடம் குழைவதை நான் பல நேரங்களில் பார்த்திருக்கேன்.”
“நான் அவன்கூட அப்படிப் பேசுறதே இல்லையே!”- அவள் சொன்னாள்.
“நீ கண்களால் குழைவது உண்டு அவனிடம்...”- கணவன் சொன்னான்.
“காரிலிருந்து இறங்கி நடக்குறப்போ, பின்பாகத்தை வைத்தும், காரில் ஏறும் நேரத்தில் உன் சதைப் பிடிப்பான மார்பகங்களை வைத்தும் கடந்த பல வருடங்களாக நான் உன் அசைவுகளைக் கவனிச்சுகிட்டுத்தான் வர்றேன்.”
“என்னைத் திரும்பவும் வீட்டுக்குக் கொண்டு போங்க”- அவள் கத்தினாள்: “இங்கே அறிமுகமில்லாத இந்த கிராமத்தில் தனியாக இருக்க எனக்கு பயமா இருக்கு. காரை தயாரா கொண்டு வந்து நிறுத்தும்படி டிரைவரிடம் சொல்லுங்க. நான் உடனே போகணும்.”
அவன் ரோமங்கள் அடர்ந்த முரட்டுத்தனமான கைகளால் அவளைப் பிடித்துப் பின் பக்கமாகப் படுக்கையில் தள்ளிவிட்டான்.
“அசையாமல் அங்கேயே படு...”- அவன் சொன்னான்: “இல்லாவிட்டால் நான் உன் கழுத்தை நெறித்துக் கொன்னுடுவேன்.”
இறுதியில் ரோகிணிக்கு சுய உணர்வு வந்தபோது, சூரிய ஒளி விழுந்து கொண்டிருந்த அறைக்குள் அவள் மட்டும் தனியே இருந்தாள். கடந்து சென்ற இரவின் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அவளுடைய நினைவில் திரும்பவும் வந்தது. அவள் கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தைப் பார்த்தாள். அவள் மிகவும் வெளிறிப் போய்க் காணப்பட்டாள். ஒருவேளை அந்த பயங்கரமும் அதிர்ச்சியும் தான் கனவு கண்டதாக இருக்குமோ என்று அவள் நினைத்தாள். அவள் ஆடைகளை மாற்றிக் கொண்டு கீழேயிருந்த சாப்பிடும் அறைக்குச் சென்றபோது, அவளுடைய கணவன் மேஜைக்கு அருகில் அமர்ந்து பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தான். அவன் தலையை உயர்த்திப் பார்த்தபோது, சாந்தமான முகத்தையும் அன்பை வெளிக்காட்டுவதையும் மலர்ந்த சிரிப்பையும் அவள் பார்த்தாள். ஒருவேளை அது கனவாக மட்டுமே இருக்க வேண்டும். அவளிடம் அந்த அளவிற்கு மிருகத்தனமாக நடப்பதற்கு அவனால் முடியாது. அவன் அவளை வழிபடக் கூடியவன். அவளையும் அவளுடைய நாகரிகமான நடவடிக்கைகளையும்தான். அவள் குளிக்கும்போது அவளுடைய மென்மையான மாநிறத்தைக் கொண்ட உடலைக் காண்பதற்கும், அதை ரசிப்பதற்கும் பல நேரங்களில் குளியல் தொட்டிக்கு அருகில் அவன் வந்து நின்று கொண்டிருப்பதுண்டு. குளியல் தொட்டிக்குள் சோப்பு நுரைகளுக்குள் இருந்து கொண்டு அவள் ஆனந்தம் அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ரசிக்க அவன் விருப்பப்பட்டான். அவள் தன் உதடுகளில் உதட்டுச் சாயம் பூசுவதைப் பார்த்துக் கொண்டு நிற்பதையும் அவள் ஹோட்டல்களில் கத்தியும் முள்ளும் பயன்படுத்தி உணவு சாப்பிடுவதைப் பார்ப்பதையும் அவன் விரும்பினான். ஆமாம்... அவள் மீது அவனுக்கு எப்போதும் ஒரு உயர்ந்த மதிப்பு இருந்தது. கடந்து போனது ஒரு கெட்ட கனவாக இருக்க வேண்டும்...
“கடந்த இரவில் நான் ஒரு வினோதமான கனவைக் கண்டேன்”- அவள் சொன்னாள்.
“நான் நினைச்சேன்”- அவன் சொன்னான்: “நீ தூக்கத்துல உளறிக்கிட்டு இருந்தே.”
“அது உங்களைப் பற்றித்தான்”- அவள் சொன்னாள்: “நீங்க ஏதோ ஒரு பயங்கரமான மிருகமா மாறிட்டீங்க. நீங்க என்னைக் கொல்ல விரும்புனீங்க...”
“கனவில்கூட உன்னைக் கொல்ல நான் விரும்பமாட்டேன் கண்ணே”- அவன் சொன்னான். ஒரு ரொட்டித் துண்டின் மீது வெண்ணெயைத் தேய்த்து அவளிடம் தந்தான். தொடர்ந்து தேநீர் போடத் தொடங்கினான்.
அவள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். அறைக்குள் விழுந்து கொண்டிருந்த சூரிய ஒளி மஞ்சள் நிற வெண்ணையைப் போல தோன்றியது. ஒரு நீலநிறப் பாத்திரத்தில் யாரோ கடல் தாவரங்களை வைத்திருந்தார்கள். அவை கடலின் வாசனையைப் பரப்பிக் கொண்டிருந்தது. கடல் மிகவும் அமைதியாக இருந்தது.
“இன்னைக்கு நாம என்ன செய்யணும்?”- அவன் அவளிடம் கேட்டான்: “விவேகானந்தர் பாறையைப் பார்க்கப் போவோமா? இல்லாவிட்டால் நீந்தப் போவோமா?”
“சுசீந்திரம் கோவிலுக்குப் போகணும் என்று அம்மா சொல்லலயா?”- அவள் புன்னகைத்துக் கொண்டே சொன்னாள்: “நாம் நம்முடைய விண்ணப்பத்துடன் அங்கே போகலைன்னா, அம்மா அதைப் பொறுத்துக்கவே மாட்டாங்க.”