முதல் முத்தம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7837
அவர்களின் பேச்சில் முதல் முத்தம் என்ற விஷயமே வரவில்லை. அப்படியானால் அவர்கள் என்னதான் பேசினார்கள்? அவர்கள் எதையுமே பேசவில்லை. இருந்தாலும், எல்லாவற்றையும் பேசவும் செய்தார்கள். அந்தக் கூட்டத்தில் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள்? ஐந்து சிறுகதை ஆசிரியர்கள், மூன்று கவிஞர்கள், இரண்டு விமர்சகர்கள்- இதற்கு மேல் விஷயங்களைப் பேச வேறு யார் வேண்டும்?
அவர்கள் கூட்டிய கூட்டத்திற்கு ஒரு பெரிய லட்சியம் எதுவும் கிடையாது. இருந்தாலும் ஒரு இலக்கு இல்லாமல் இல்லை. அவர்கள் எல்லாரும் ஒரு கூட்டத்திற்குப் போய்விட்டு வந்து, சங்கோஜியும் அப்பாவியும் சிறுகதை எழுதக்கூடியவனும் வழுக்கைத் தலையனும் காதலனுமான அந்த நல்ல மனிதனின் அறையில் ஒன்று கூடினார்கள்.
பொதுக்கூட்டத்தில் அவர்கள் எல்லாரும் நிலவி வரும் சமூக அமைப்பை ஒரு பிடி பிடித்தார்கள். கவிஞர்கள் தங்களின் கவிதைகளால் சமுதாயத்தை பலமாகச் சாடினார்கள். விமர்சகர்கள் சமூக விரோத சக்திகளைத் தங்களின் பேச்சால், கத்தியால் வீழ்த்துவதுபோல் வெட்டிச் சாய்த்தார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டு கூடியிருந்த மக்கள் உணர்ச்சி வசப்பட்டு ஆவேசம் கொண்டார்கள். பண்பாட்டையும் நாகரீகத்தையும் விளக்கு வெளிச்சமென காப்பாற்றிக் கொண்டிருக்கும் அந்த இலக்கியவாதிகளைப் பார்த்துக் கைத்தட்டினார்கள். பாராட்டு மழையில் அவர்களை நனைய வைத்தார்கள். அந்தக் கூட்டம் முடிந்தபிறகுதான் அந்த இலக்கியவாதிகள் சங்கோஜியும் அப்பாவியும் சிறுகதை எழுதக்கூடியவனும் வழுக்கைத் தலையனும் காதலனுமான அந்த நல்ல மனிதனின் அறைக்கு வந்தது. வாசல் கதவை மூடியதும், அவர்களின் முகபாவங்கள் அத்தனையும் முழுமையாக மாறிவிட்டன. அவர்கள் ஒரு நீண்ட பெருமுச்சு விட்டவாறு சாய்ந்து உட்கார்ந்து பொதுமக்களைக் கன்னாபின்னாவென்று திட்டித் தீர்த்தார்கள். பொதுமக்களின் தாய், தந்தை பெயரைச் சொல்லி கெட்ட வார்த்தைகளில் திட்டினார்கள்.
"கழுதைகள்” என்று பொதுமக்களைப் பேச்சுவாக்கில் அவர்கள் குறிப்பிட்டார்கள். தங்களின் சொந்த தாய்- தந்தையரையே அவர்கள் வாய்க்கு வந்தபடி திட்டினார்கள். எல்லாம் பேசியபிறகுதான் அவர்கள் மனதிலேயே சமாதானம் உண்டானது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்- அவர்கள் பலரையும் திட்ட நினைத்த விஷயங்கள் அவர்களின் பேச்சுக்குக் கீழே யாருக்கும் தெரியாமல் மறைந்து கிடந்தன. அவற்றை வெளியில் தயக்கம் இல்லாமல் கொட்டியதன் மூலம் அவர்கள் தங்கள் இதயத்தையே சுத்தப்படுத்திக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாம் முடிந்ததும் அவர்கள் தேநீர் அருந்தினார்கள். பலகாரம் சாப்பிட்டார்கள். அது முடிந்ததும் சிலர் சிகரெட் புகைத்தார்கள். சிலர் பீடி பிடித்தார்கள். சிலர் வெற்றிலை- பாக்கு போட்டார்கள். சிலர் பொடி போட்டார்கள். கூட்டத்தில் இருந்த ஒரு விமர்சகன் நம்முடைய சங்கோஜியும் அப்பாவியும் சிறுகதை எழுதக்கூடியவனும் வழுக்கைத் தலையனும் காதலனுமான அந்த நல்ல மனிதனைப் பார்த்துக் கேட்டான்:
“டேய் பையா... இந்த வழியா பெரிய பெரிய மனிதர்களெல்லாம் வருவாங்களா?''
அந்த நல்லவன் சொன்னான்:
“குழந்தைகளே... பயப்படாதீங்க. இந்தப் பொடியன் இங்கே தங்கி இருக்கான்ற விஷயம் எல்லா பெரிய மனுஷங்களுக்கும் தெரியும். அதனால அவங்க யாரும் இந்தப் பக்கம் வரமாட்டாங்க. இந்த வழியே போற பொதுமக்கள் எல்லாருமே நம்மோட தோழர்கள்தான். கெட்ட வழியில போனவங்க. பல வகையிலயும் பாதிக்கப்பட்டவங்க.''
“அப்படியா?'' அவர்கள் பேச உட்கார்ந்தார்கள். இரண்டு பேரை விட்டால், மற்றவர்களுக்கு மனைவிகள் இருக்கிறார்கள். தங்களின் மனைவிகளைப் பற்றி ஒவ்வொருவரும் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள். மனைவிகளிடம் இல்லாத குணங்களை எல்லாம் அவர்களே இருப்பதாகக் கற்பனை பண்ணிக்கொண்டு பேசினார்கள். ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு மனைவிமார்களைத் துதி பாடினார்கள். எல்லாமே பச்சைப் பொய்கள். அந்தப் பொய்களைப் பேசுவதில், சொல்லப்போனால் போட்டி போட்டார்கள். கவிஞர்கள் தங்களை மறந்து பாடினார்கள். அப்படியே அவர்கள் பேச்சு காதலில் போய் முடிந்தது. ஆமாம்... காதல் என்றால் என்ன?
அவர்கள் ஒவ்வொருவரும் காதலை மனோவிஞ்ஞானப்படி அலசிப் பார்த்து விளக்கங்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் காதல் என்ற விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து, பின்னர் அதை ஒட்டிப் பார்த்து... இப்படி என்னென்னவோ செய்தார்கள். ஒரு கதாசிரியர் சொன்னார்.
“காதல்! இது ஒரு உபாயம் அப்படின்னுதான் சொல்லணும். அதாவது- இது ஒரு வலை. குழந்தைகளை உற்பத்தி செய்வது- இதுதான் காதலோட லட்சியம்- குறிக்கோள்!''
“காதல்ன்றது அழிவே இல்லாதது. எல்லை அற்றது.'' ஒரு கவிஞர் சொன்னார்: “அதற்கு முடிவே கிடையாது. அது...''
“ஏய்... அவனை அடிச்சுக் கொல்லுங்கடா!'' ஒரு சிறுகதை எழுத்தாளர் சொன்னார். அவ்வளவுதான்- ஒரு விமர்சகன் அந்தக் கவிஞரின் கழுத்தைப் பிடித்தான்.
“நான் பேசப்போறது இல்ல... நான் போய் காதல் கவிதை எழுதப் போறேன்.''
“நாங்க உன்னைக் கொன்னுட்டுத்தான் மறுவேலை பார்ப்போம்.'' ஒரு கதாசிரியர் சொன்னார். “நீ இன்னையில இருந்து காதலைப்பற்றி கவிதையே பாடக்கூடாது.''
“நான் அதை பலமா எதிர்க்கிறேன்.'' அந்த நல்லவனான வழுக்கைத் தலை காதலன் தாழ்ந்த குரலில் சொன்னான்: “இதை எழுதக்கூடாது. இதைத்தான் எழுதணும்னு கட்டுப்பாடு போடுற விஷயத்தை நான் பலமா எதிர்க்கிறேன். அது தனி மனிதனோட சுதந்திரம். அதுல எப்படி நீங்க தலையிட முடியும்? பெரியோர்களே! நான் சொல்ற இந்தக் கருத்தைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?''
“போடா உன் வேலையைப் பார்த்துக்கிட்டு...'' உயரமான மெலிந்துபோய் ஒட்டடைக்குச்சி மாதிரி இருக்கும், உடம்பெல்லாம் ரோமத்தைக் கொண்ட ஒரு சிறுகதை ஆசிரியர் சொன்னார்: “உனக்கு இதைப் பற்றி என்ன தெரியும்? நீ பேசாம உன்னோட அவளைப் பற்றி நினைச்சுக்கிட்டு கிட. டேய் பையா... நீ அவளை எத்தன தடவை முத்தம் கொடுத்திருப்பே?''
இப்படி காதலைப் பற்றிய பேச்சு முத்தத்தை நோக்கித் திரும்பியது. சிறிது நேரத்தில் பேச்சு அதையும் தாண்டி முதல் முத்தத்தில் போய் முடிந்தது.
நீங்கள் வாழ்க்கையில் யாரை முதல் தடவையாக முத்தமிட்டீர்கள்?
அவர்கள் ஒவ்வொருவரும் யோசிக்க ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்தச் சம்பவத்தையே மறந்து போயிருந்தார்கள். இருந்தாலும் தாகம் மேலோங்க- உணர்ச்சி வசப்பட்டு நீங்கள் வாழ்க்கையில் முதல் தடவையாக யாருக்காவது கட்டாயம் முத்தம் கொடுத்திருப்பீர்கள் அல்லவா?
அதுதான் யார்?
அந்த இனிய நிகழ்ச்சி நிச்சயம் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டிருக்கும். அதை அவ்வளவு சாதாரணமாக மறந்துபோய்விட முடியுமா என்ன? அதை ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும். முகம் இதயத்தின் கண்ணாடி என்றால்... அந்த முகத்தின் பாவங்கள் அப்போது எப்படி இருந்தன?