
அவளோட இதயத்தைத் தொட்ட என்னோட ஒரு கதையைப் பற்றி அவளோட ஒரு தோழி அவகிட்ட குறை சொல்லியிருக்கா. அவ்வளவுதான்- அவங்க ரெண்டு பேர்க்குள்ளயும் ஒரே சண்டை. அவ கோபத்துல தோழியோட வயித்துல பென்சில வச்சு குத்திட்டா. இந்த விஷயம் தலைமை ஆசிரியை வரை போயிடுச்சு. தலைமை ஆசிரியை நடந்த விஷயத்தை இவளோட அப்பாகிட்ட சொல்லிட்டாங்க.
இந்த விஷயத்தைச் சொல்லிச் சொல்லி அவளோட அக்காமார்கள் எங்களைக் கிண்டல் பண்ணினாங்க. அப்போ நாங்க ஒரு வட்ட மேஜை முன்னாடி உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தோம். என்னையும் மீறி அவளோட கைகள் ரெண்டையும் என் கைகளில் நான் வச்சிருந்தேன். அதைப் பார்த்து அவளோட அக்காமார்கள் கேலி பண்ணிச் சிரிச்சப்போதான் எங்களுக்கே இது தெரிய வந்துச்சு. நாங்க ரெண்டு பேரும் திட்டம் போட்டு அப்படிச் செய்யல. நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்காம, திட்டம் போடாம அப்படி நடந்திடுச்சு. எனக்கு அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, சொல்லப்போனா ஒரே கூச்சம். அவ முகத்தை கோபமா வச்சிக்கிட்டு அக்காமார்களைப் பார்த்தா. அடுத்து என்னைப் பார்த்தா... அவளோட முகத்துல ஒரு பிரகாசம்... உதட்டுல ஒரு புன்சிரிப்பு!
அவளுக்கு நான்தான் கணவன்... அவளோட ஒரு தோழிகிட்ட அவ சொல்லி, இந்த விஷயம் அவளோட வீடு வரை போயிடுச்சு. என்னை மதம் மாறச் சொல்லுவா. இல்லாட்டி அவ மதம் மாறுவா. என்னோட மதத்துல சேருவா. இப்படி எல்லாம் அவ சொன்னதா அவளோட அக்காமார்கள் சொன்னாங்க. அவளைப் பார்த்து அவங்க கேட்டப்போ அவ ஆமாம்னும் சொல்லல. இல்லைன்னும் சொல்லல. அவ என் பக்கத்துல வந்து- மிகமிக நெருக்கமா வந்து உட்கார்ந்தி ருப்பா. அப்போ அவளை அப்படியே தூக்கி மடியில வச்சு முத்தம் கொடுத்து கட்டிப்பிடிக்கணும்போல எனக்கு இருக்கும். ஆனா, அவ சின்னப் பிள்ளையாச்சே! அவளுக்கு இதைப் பற்றி என்ன தெரியும்?
இப்படி நாட்கள் போய்க்கிட்டிருக்கிறப்பதான் ஒரு சம்பவம் நடந்திச்சு. அவளுக்குக் காது வலி. வேதனை தாங்க முடியாம அவ படுத்துக் கிடந்து அழுறா. நான் அந்தச் சமயத்துல அங்கே போறேன். அவளோட அப்பாவும் அம்மாவும் அக்காமார்களும் அவளோட காதுல மருந்து ஊத்தப் பாக்குறாங்க. ஆனா அவ, அவங்களை விடல... என்ன செய்றதுன்னு தெரியாம அவங்க சிலை மாதிரி நின்னுக்கிட்டு இருக்காங்க.
"நான் மருந்து ஊத்துறேன்'னு சொல்லிட்டு, நான் அவ பக்கத்துல போய் நின்னப்ப அவ என்னையே உற்றுப் பார்த்தா. அப்ப அவளோட கண்கள்ல இருந்து நீர் வழிஞ்சுக்கிட்டே இருக்கு.
நான் சொன்னேன்:
"என் கையில இப்ப ஒரு கதை இருக்கு...'
அவ கண்களில் நீர் வழிந்தவாறு கையை நீட்டினா. நான் ஒரு கதையை எடுத்து அவ கையில தந்தேன். அதோடு அவளைத் தேற்றி அவளோட அழுகையை மாற்றி, அவ காதுல மருந்தை ஊற்றினேன். அவ கதையைப் படிக்கல. அதை நெஞ்சு மேல வச்சுக்கிட்டு அப்படியே படுத்துக் கிடந்தா. கண்கள் ரெண்டுல இருந்தும் கண்ணீர் வழிஞ்சுக்கிட்டே இருக்கு.
கொஞ்ச நேரம் ஆனதும் நாங்க ரெண்டு பேர் மட்டும் தனியா இருந்தோம். அவ அப்பவும் சத்தமே இல்லாம அழுதுக்கிட்டு இருந்தா. நான் நினைச்சேன்- காது வலி தாங்க முடியாம அவ அழறான்னு. அதைப் பற்றி அவகிட்டயே கேட்டேன். அப்போ அவ சொன்னா:
"காதுல இப்போ ஒண்ணும் வலி இல்ல...'
"பிறகு எதுக்கு அழறே?'
நான் இப்படிக் கேட்டதும் அவ மீண்டும் அழுதா. இதயமே வெடித்துவிடும்போல இருந்துச்சு. அவளை ஏதோ ஒரு பெரிய கவலை வாட்டிக்கிட்டு இருக்குன்றதை மட்டும் என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது.
"என்ன விஷயம்? ஏன் அழறே?'ன்னு நான் கேட்டேன். அப்போ அவ சொன்னா:
"என்னை நீங்க காதலிக்கவே இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும். பொய் சொல்லாதீங்க. எனக்கு எல்லாமே தெரியும்.'
அவ்வளவுதான்-
நான் செயலற்று நின்னுட்டேன். அவ சின்னப் பொண்ணு! அவளுக்குக் காதலைப் பற்றி என்ன தெரியும்? நான் சொன்னேன்.
"நான் உன்னை மனப்பூர்வமா காதலிக்கிறேன். உலகத்துலயே- உன்னை மட்டும்தான். உன்னால என் காதலைப் புரிஞ்சுக்க முடியுதா?'
அவ சொன்னாள்:
"இது ஒண்ணும் கதை கிடையாது. சும்மா பொய் சொல்லாதீங்க. என்னோட இதயமே வெடிச்சிடும்போல இருக்கு!'
"என்னோட இதயமும் வெடிச்சிடும். நான் இங்கே வர்றதே உன்னைப் பார்க்கத்தான்!”
"பொய்!” அவ சொன்னா: "என் மேல உங்களுக்குக் கொஞ்சம்கூட விருப்பம் கிடையாது. நீங்க இங்கே வர்றது என்னோட அக்காவைப் பாக்குறதுக்கு- எனக்கு அது நல்லாவே தெரியும். உங்களோட பிரியம் எல்லாமே அவங்க மேலதான். எனக்கு இது தெரியாதுன்னு நெனைச் சீங்களா? ஆதாரங்களோட இதை என்னால நிரூபிக்க முடியும்.”
அவளை அப்படியே கட்டிப்பிடிச்சு அணைக்கணும்போல இருந்துச்சு எனக்கு. இருந்தாலும் நான் அதைச் செய்யல. நான் நேரா நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். இது ஒரு முக்கியமான விஷயம். நான் ஏன் அவளை முத்தமிடணும்? ஏன் அவளைக் கட்டிப்பிடிக்கணும்? என்னால அவளைக் கல்யாணம் செய்ய முடியுமா? எனக்கும் அவளுக்கும் எத்தனை வயசு வித்தியாசம் இருக்கு? என்னைவிட பதினோரு வயசு இளையவ. நான் இதையெல்லாம் உண்மையாகவே நினைச்சுப் பார்த்தேன். என் கைக்குள் இருக்கிற ஒரு அழகான பனிநீர் மொட்டு.
நான் எதுக்கு அதைத் தேவையில்லாம கிள்ளி வாடிப்போக வைக்கணும்? நான் இப்படியெல்லாம் சிந்திக்கிறதுக்குக் காரணம்- நான் அவளை மனப்பூர்வமா விரும்புறதுதான். நான் அடுத்த ரெண்டு மூணு நாட்கள் அந்தப் பக்கமே போகல. சூரியன் மறையிற நேரத்துக்குக் கொஞ்சம் முன்னாடி நான் சாலை வழியே கடல் பக்கம் போனேன். அவ வீட்டு முன்னாடி நான் போனேன். ஆனா, அவ வீட்டை நான் பார்க்கல. அவ வீட்டுச் சுவரை ஒட்டி நான் நடந்து போனேன். அப்போ எல்லாரும் கேட்கிற மாதிரி என்னை யாரோ கூப்பிடுறாங்க- அழுகையோட சேர்ந்து. என் பேரைச் சொல்லித்தான்! ஒரே ஒரு தடவை! கூப்பிட்டது அவதான்! வீட்டோட மாடியில அவ நின்னுக்கிட்டு இருக்கா!
நான் மேலே ஏறிப்போனேன். அவளை நெருங்க நெருங்க என் உடம்புல உஷ்ணம் அதிகமாகிக்கிட்டே இருந்துச்சு. என்னோட காதுகள் ரெண்டும் அடைச்சுப்போன மாதிரி இருந்துச்சு. எனக்கு அழணும்போல இருந்துச்சு.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook