கவர்னர் வந்தார்!
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 6920
போக்குவரத்தைக் கண்காணிக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் துக்காரம் அன்று வேலைக்கு சென்ற பொழுதே விடுமுறை எடுத்துத் திரும்பி வந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் தான் போய் இருந்தான். அவனுடைய மகனுக்குக் கடந்த ஐந்து நாட்களாகக் கடுமையான காய்ச்சல். அது கொஞ்சமும் குறைவதாகத் தெரியவில்லை. சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் காய்ச்சலின் கடுமை அதிகரித்துக் கொண்டே வந்தது. ஒரு வேளை குழந்தைக்குப் பேய் பிடித்து விட்டிருக்குமோ என்று குருக்களைப் போய்ப் பார்த்தான் துக்காரம்.
குருக்கன் மந்திரம் கூறி குழந்தையின் கையில் கறுப்புக் கயிற்றைக் கட்டிய பிறகும் கூட காய்ச்சல் குறைந்ததாகத் தெரியவில்லை. துக்காராமுக்கும் அவனுடைய மனைவிக்கும் பயம் மூண்டது. குழந்தை வைத்தியர் பாபுராவிடம் கொண்டு சென்று காட்டினார்கள். நாலணாவுக்கு மருந்து கொடுத்துவிட்டு கட்டணமாக எட்டணா வாங்கிக் கொண்டார் அவர்; எது எப்படியோ மருந்து கொடுத்தாகி விட்டது. பாபுராவின் மருந்து மட்டும் காய்ச்சலின் உஷ்ணத்தை உடனடியாக கீழே இறக்கிக் கொண்டு வந்து விடுமா என்ன? வேதனையால் துடித்துக் கொண்டிருந்தான் பையன். முகம் சற்று அதிகமாகவே வெளிறிப் போயிருந்தது. கண்களில் கூட குழி விழுந்து விட்டது. உடலில் வெப்பம் அனலாக வீசியது.
துக்காராமின் மனைவி துளசி நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள். துக்காராமுக்கு ஐந்து பெண் குழந்தைகள். ஆண்பிள்ளை இவன் ஒருவன் தான். ஒரு வேளை காய்ச்சலால் இவன் இறந்து விட்டால் நிச்சயம் துளசியும் இறுதி மூச்சை விட்டு விடுவாள்.
சீருடை அணிந்து கொண்டிருந்த துக்காராமைப் பார்த்த துளசி, "உங்களுக்கென்ன, எப்போ பார்த்தாலும் ஒரே டூட்டி... டூட்டி... டூட்டி... குழந்தை காய்ச்சல்ல கெடக்குதே! அதைப் பத்தி கொஞ்சமாவது கவலைப்படுறீங்களா?" என்றாள்.
துக்காரம் தாழ்ந்த குரலில் "நான் போய் லீவு வாங்கிட்டுத் திரும்பி வர்றேன் துளசி" என்றான்.
பொது மருத்துவமனைகளைத் துக்காராமினால் நம்ப முடியவில்லை; பாவம், அந்த நோயாளிகளை அங்கே மனிதர்களாகவா நினைக்கிறார்கள்? ஏதோ புழு, பூச்சி என்று மாதிரியல்லவா அவர்களை நடத்துகிறார்கள்? நாடி பிடித்துப் பார்ப்பது, ஸ்டெதாஸ்கோப்பை நெஞ்சில் வைத்து இதயத் துடிப்பைக் கணக்கிடுவது - இதைக் கூடவா இந்த எளிய மக்களுக்கு செய்யக் கூடாது? நோயாளி தன்முன் வந்து நின்று, தனக்கு இருக்கும் நோய் குறித்துக் கூறுவதற்கு முன்பே மருந்தின் பெயரை எழுத ஆரம்பித்து விடுவார் டாக்டர். டாக்டரானாலும், வேறு அதிகாரியானாலும் அவரவருக்கென்று உள்ள வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டுமல்லவா? எப்படியும் தவறாமல் ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கிவிட வேண்டும்! இதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே குறி.
இந்தப் பொது மருத்துவமனைக்குள் கால் வைக்க வேண்டுமென்றாலே யார் யாருக்கெல்லாம் கைக்கூலி கொடுக்க வேண்டியிருக்கிறது? சரி. அதுதான் பரவாயில்லை என்றால் தினமும் பசியிலும் பட்டினியிலும் உழன்று கொண்டிருக்கும் ஏழைகளை மிதித்துத் தாண்டியல்லவா டாக்டர்மார்களின் அறைக்குள் போகவேண்டியிருக்கிறது! தங்களுக்குக் கிடைக்காததை நினைத்துப் பொருள் இல்லாதவன் ஏங்கிக் கிடக்க வேண்டியதுதான். போன மாதம் தன் இளைய மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அல்லல்பட்ட அனுபவம் இன்னும் நன்றாகவே நினைவில் இருக்கிறது துக்காராமுக்கு.
நிச்சயம் தன் மகனை இந்தப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு போகக் கூடாது, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, தனியார் மருத்துவமனைக்குத்தான் கொண்டு போக வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானம் செய்து கொண்டான் துக்காராம். பணம் இருந்தால், எப்படிப்பட்ட மருந்து வேண்டுமானாலும் கிடைக்கும். வீட்டில் என்ன பணம் கொட்டியா கிடக்கிறது - நினைத்தவுடன் எடுத்து செலவு செய்ய? யாரிடமாவது கடன் தான் வாங்க வேண்டும். நான்கு பேருக்கு இந்த விஷயம் தெரிந்தால் என்ன நினைப்பார்கள்? போக்குவரத்தைக் கவனிக்கும் போலீஸ்காரராக இருந்து கொண்டு கடன் கேட்கப் போனால் கேலி செய்ய மாட்டார்களா?
துளசி அடிக்கடி சொல்வாள் : "வாழ்றதா இருந்தா, அந்த விட்டல் மாதிரி வாழணும். அவர் தன் பெண்டாட்டிக்கு என்னவெல்லாம் வாங்கித் தந்திருக்கார்னு பார்த்தீங்களா? புதுசு புதுசா என்ன மாதிரியெல்லாம் சேலை வாங்கித் தந்திருக்கார்! குழந்தைகளுக்கு என்ன என்ன தினுசுல, கலர் கலரா ஆடை எடுத்துத் தந்திருக்கார்! மனுஷன்னா அப்படி இருக்கணும்.. அதை விட்டுட்டு, உங்க மாதிரி இருந்தா... எப்பப் பார்த்தாலும் உங்களுக்கு வறுமைப் பாட்டுத்தான்!'
மனைவி இப்படி சொல்லும் சமயங்களில் அவளைப் பார்த்து என்னவோ மாதிரி சிரிப்பான் துக்காராம். ஒரு பக்கம் பார்க்கப் போனால், அவள் சொல்வதில் உண்மை இருக்கத்தான் செய்தது. விட்டல் எப்படியெல்லாமோ காசு சேர்க்கிறான். இரட்டைச் சவாரி, விளக்கு இல்லாமல் சைக்கிளில் பயணம் செய்வது, அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிக் கொண்டு லாரி செல்வது - இப்படி எத்தனையோ விஷயங்களை மூலமாக வைத்து பிழைத்துக் கொண்டிருந்தான் விட்டல். சுங்கச் சாவடியில் மட்டும் ட்யூட்டிக்கு நின்றால் போதும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் நிச்சயம் துக்காராமினால் இது முடியாத காரியம். பொய் சொல்வதற்குத் துக்காராமின் நாக்கு ஒரு போதும் சம்மதித்ததில்லை. சட்டத்துக்கு விரோதமாக வரும் பணத்தை அவனின் கைகள் பெற்றுக் கொண்டதே இல்லை. கைக்கூலி வாங்கும் சமயம் பார்த்து டிரைவர் உடையில் சி.ஐ.டி. யாரேனும் வண்டியில்
இருந்து விட்டால் அவ்வளவுதான்! அதன் பிறகு நடக்கப் போவதைப் பற்றி சொல்லவே வேண்டாம். என்றாலும், கொஞ்சமும் உழைக்காமலே கிடைக்கிற பணம் மழைபோல் ஆயிற்றே!
சாலையோரத்தில் யாரோ கூவி அழைக்கிறார்கள். எட்டணா கொடுத்தால் இருபதாயிரம்... ஒரு ரூபாய் கொடுத்தால் ஒரு லட்சம். தினமும் லாட்டரி சீட்டு வாங்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த மாதிரி பல நண்பர்கள் துக்காராமுக்கும் இருக்கிறார்கள். காக்கி உடை அணிந்து கொண்டு அதிர்ஷ்டத்தைத் தேடிப் போய்க் கொண்டிருக்கும் இவர்கள் நிச்சயம் வினோதமான மனிதர்கள்தாம்!
இன்ஸ்பெக்டர் குல்கர்ணியின் முன் கான்ஸ்டபிள்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள்.
"சீக்கிரம்... சீக்கிரம்..." ஹெட் கான்ஸ்டபிள் விட்டல் கையை உயர்த்தி சத்தமிட்டான். வேகமாக ஓடிவந்து 'சல்யூட்' அடித்தபோது, டயரியைப் பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், துக்காராமைக் கவனித்தார்.
"சார்..."
"என்ன?" குல்கர்ணி மெதுவாகக் கேட்டார். என்றாலும் அதில் அதிகாரவர்க்கத்தின் ஆணவம் இருந்தது.
"என் குழந்தைக்குக் காய்ச்சல், சார். அதனால இன்னிக்கு ஒரு நாள் எனக்கு லீவு தரணும்.."
மீண்டுன் டயரியைப் பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் தலையை உயர்த்திக் கேட்டார்: