கவர்னர் வந்தார்! - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 6922
கடவுளே, இந்தக் கவர்னரின் கார் எப்போது இந்தப் பக்கம் வருவது?
துக்காராமை எதிர்பார்த்து துளசி தளர்ந்து போயிருப்பாள். பாவம், அவள் என்ன செய்வாள்? குழந்தை பெற்று விடுவதோடு ஒரு தாயின் கஷ்டம் தீர்ந்து விடுகிறதா என்ன?
கடுமையான நடுப்பகல் வெயில். வியர்வை அரும்பி, ஆடையை ஈரமாக்கிக் கொண்டிருந்தது.
காலையில் வேலைக்குக் கிளம்பி வரும்போது கூட, துக்காராம் ஒன்றும் சாப்பிடவில்லை. நிழல் தரக் கூட ஒரு மரம் இல்லாத இந்த இடத்தில் உடம்பைக் கஷ்டப்படுத்திக் கொண்டு நிற்பது என்ன சாதாரண விஷயமா? பசி வயிற்றைக் கிள்ளியது. கண்களை இருட்டிக் கொண்டு வருவது மாதிரி இருந்தது.
"போலீஸ்காரர் இன்னும் நின்னுக்கிட்டிருக்காரே!"
"போலீஸ் சார், ஏன் காலையிலயிருந்து இங்கேயே நின்னுக்கிட்டிருக்கீங்க?" திரும்பி வந்த பள்ளிக்கூடக் குழந்தைகள் துக்காராமை நோக்கி விசாரித்தார்கள்.
"எனக்கு இப்ப ட்யூட்டி, குழந்தைகளே!"
தன்னைக் கடந்து போகும் குழந்தைகளையே ஒரு முறை பார்த்தான் துக்காராம்.
சுமார் ஐந்து மணி இருக்கும். போலீஸ் ஜீப் ஒன்று சிறிது தூரத்தில் வந்து கொண்டிருந்தது. அட்டென்ஷனில் தயாராக நின்றான் துக்காராம். எதிர்ப்பக்கம் வந்து கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி கவர்னர் போக வசதி செய்து கொடுக்க வேண்டும்!
அடுத்த சில நிமிடங்களில் அந்த ஜீப் துக்காராமின் அருகே வந்ததும் நின்றது. ஜீப்பிலிருந்த கான்ஸ்டபிள் கூறினார்:
"என்ன சொல்லட்டும் துக்காராம்... கவர்னர் ஸாப் வேற ஏதோ ரூட்ல போயிட்டாராம். என்ன இருந்தாலும் அவங்கல்லாம் பெரியவங்க. நாம என்ன செய்ய முடியும்?"
துக்காராமும் தலையை ஆட்டி வைத்தான் - "ஆமாம்" என்கிற பாவனையில்.
படுக்கையில் துவண்டு கிடக்கும் மகன், கண்ணீர் வழிய அவனையே பார்த்தபடி சோகமே வடிவமாக அமர்ந்திருக்கும் துளசி- இவர்களின் முகம் என்ன காரணத்தாலோ துக்காராமின் மனதில் அப்போது தோன்றின.