தங்கமாலை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6935
பழமையான ஒரு தங்கமாலை அது. இருபத்தொன்றேகால் பவுன் எடை கொண்டது. மனைவியின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த மாலை அது. மனனவி நீர் இறைக்கும்பொழுது அந்த மாலை ஆழமான கிணற்றுக்குள் விழுந்து விட்டது. மிகவும் பழமையான - பெரிய அந்தக் கிணற்றில் சொல்லிக் கொள்கிற மாதிரி இடைவெளிகள் எதுவும் கீழே இல்லை. வாய்ப்பகுதி மட்டும் வட்ட வடிவில் பெரிதாக இருக்கும்.
வீட்டையும் நிலத்தையும் விலைக்கு வாங்கும்போது கிணறு இருக்கும் பகுதியெங்கும் காட்டுச் செடிகள் அடர்ந்து கிடந்தன.
கிணற்றைச் சுற்றிலும் பாக்கு அளவிற்குச் சிறுசிறு கற்கள் நிறைய கிடக்கும். ஒரு நாள் ஒரு செடியில் பாம்பு படம் எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க நேர்ந்தது. அவ்வளவுதான்-சிமெண்டை இடித்து மிகவும் கஷ்டப்பட்டு நிறைய மனிதர்களின் கடுமையான உழைப்பைக்கொண்டு கிணறு சுத்தம் செய்யப்பட்டது. கிணறு உண்டாகி முந்நூறு வருடங்கள் இருக்கும். தெளிந்த நீர் அதற்குள் இருந்தது. மதியநேரத்தில் நீரின் ஆழத்தில் தங்கமாலை மஞ்சள் வண்ணத்தில் கிடப்பது நன்றாகவே தெரிந்தது.
கணவர் தன்னுடைய கண்ணாடி வழியாக அதை நன்றாகப் பார்த்தார். கணவருடைய அன்னையின் கழுத்தில் அவர் தந்தை கட்டியது அது. அந்த மாலையைத் திருமணத்தின்போது கணவர் தன்னுடைய மனைவியின் கழுத்தில் அணிவித்து எத்தனை வருடங்களாகிவிட்டன! எல்லாம் இப்போது நடந்ததைப்போல் இருக்கிறது.
இப்போது அந்த மாலையை எப்படி எடுப்பது?
ஊரில் கிணற்றுக்குள் இறங்கக்கூடிய ஒரு பெரிய மனிதன் இருக்கிறான். அவன் ஒரு திருடன். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து அவன் நடப்பான். ஹோட்டல்களுக்குள் நுழைந்து பலகாரங்களைக் கொள்ளையடித்துத் தின்பான். தோட்டங்களில் நுழைந்து வாழைக்குலை, தேங்காய், பலாப்பழம் போன்றவற்றைத் திருடுவான். ஏராளமாக அடியும் உதையும் வாங்கியதன் காரணமாக ஆள் மிகவும் தளர்ந்து போய் சயரோகம் பிடித்த மனிதனைப் போல் ஆகிவிட்டான். ப்ளேடின் உதவியால் கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்கான கயிறை மெதுவாக அறுத்து விடுவான். குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்துவிட்டு, அவர்களிடமிருந்து அவன் ஏதாவது திருடுவான். பல் துலக்குவது, குளிப்பது என்பது அவனிடத்தில் இல்லாத ஒன்று. அவனுடைய உடல் சொறிபிடித்ததைப் போல் இருக்கும்.
அவனுக்கு இருப்பது ஒரு கண்தான். அம்மைநோய் வந்து அவனுக்கு ஒரு கண் போய்விட்டது. அம்மைநோய் வந்து பீடிக்கப்பட்ட ஒரு வீட்டுக்குள் திருடுவதற்காக நுழைந்து பயந்துபோய் பிடிப்பட்டவன் அவன் என்பது வரலாறு.
அவன் வந்து கிணற்றைப் பார்த்தான். உள்ளே கிடக்கும் தங்க மாலையைப் பார்த்தான். பிறகு சொன்னான்:
“கிணறு ரொம்பவும் பயங்கரமாக இருக்கு. இதைப்போல ஒரு கிணற்றை வேற எங்கேயும் நான் பார்த்ததே இல்ல. கிணறு எவ்வளவு ஆழமா இருக்கு! இறங்குறது, மேல ஏறி வர்றது ரெண்டுமே ரொம்பவும் கஷ்டம்தான். தண்ணிவேற நிறைய இருக்கு. நான் உள்ளே கிடக்கிறற தங்க மாலையை எடுத்துத் தர்றேன். ஆனா, அதற்கு எனக்கு கூலியா இருபத்தஞ்சு ரூபாய் தரணும்.”
அந்த அழுக்குப்பிடித்த மனிதன் இருபத்தைந்து ரூபாய்க்கு கிணற்றுக்குள் இறங்கி தங்கமாலையை எடுத்துத்தர தயாராக இருக்கிறான். தண்ணீருக்குள் இறங்கினால் யாராக இருந்தாலும் சிறுநீர் கழிப்பார்கள். அந்தத் தண்ணீரைத்தான் நாம் குடிக்கவேண்டும். ஒரு ரூபாயை அவனிடம் கொடுத்துவிட்டு அவர் சொன்னார்:
“போயி தேநீர் குடி. தண்ணி கொஞ்சம் குறைஞ்ச உடனே நான் சொல்லி அனுப்புறேன்.”
அவன் அந்த இடத்தை விட்டு அகன்றான். அப்போது அவருடைய மனதில் சிறு சந்தேகம் எழுந்தது. இரவு நேரத்தில் கிணற்றுக்குள் இறங்கி அவன் தங்க மாலையை யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு போய்விட்டால்...? ஆனால் அவன் எப்படி கிணற்றுக்குள் இறங்குவான்? மீசைக்கு ‘டை’ அடித்து, கறுப்பாக்கி முடித்து, மனைவி கூந்தலைக் கறுப்பாக்கிக் கொண்டிருந்தபோது. கணவர் சொன்னார்:
“அந்த ஆளுக்கு நான் ஒரு ரூபாய் கொடுத்து அனுப்பிவிட்டேன். கிணற்றுல அவன் மூத்திரம் இருப்பான். அந்தத் தண்ணிய நாம குடிக்கவேண்டியது வரும்!”
மனைவி சொன்னாள் :
“அவன் இந்த ஊரையே விட்டுப் போகப் போறான். அந்த ஆளோட பொண்டாட்டியும் குழந்தைகளும் எங்கோ இருக்கிற ஒரு தோட்டத்தில இருக்குறாங்க. அங்கே அந்த ஆளுக்கு வேலை இருக்கு. அதனால அவன் நிரந்தரமா இங்கேயிருந்து போறான். அதற்குப் பிறகு கிணற்றுல இறங்குறதுக்கு யார் இருக்கா?”
சிறிதுநேரம் சென்றபிறகு கணவர் சொன்னார்:
“அடியே, கிணற்றுல நான் இறங்குறேன்...”
“அவ்வளவு பெரிய ஆழத்துலயா? வேண்டாம்...”
“போடி... நீ பிறக்குறதுக்கு முன்னாடி நான் எவ்வளவோ கிணற்றுக்குள்ளே இறங்கியிருக்கேன். தென்னை மரத்துல ஏர்றது... கயிறை மரத்தோட சேர்த்துக் கட்டிட்டு, பிடிச்சுக்கிட்டே கிணற்றுக்குள்ள இறங்குறது...”
“அதெல்லாம் அந்தக் காலம்!”
“இந்தக் காலத்துல என்ன?”
பல் துலக்கி முடித்து, குளியல் முடித்து, தேநீர் குடித்து முடித்து, ஒரு சிகரெட்டைப் புகைத்தவாறு கணவர் கிணற்றின் கரையில் நின்று கொண்டிருக்கிறார். மனைவியின் தங்கை, மனைவி, பள்ளி இறுதி வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் மகள், நர்சரிப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் மகன் எல்லோருமே அங்கு கூடி நின்றிருக்கிறார்கள். சிறுநீர் கழித்து முடித்துவிட்டு வந்த கணவர் தன் மனைவியைப் பார்த்து சொன்னார்:
“நீ போய் பசுவைக் கட்டுற நீளமான கயிறைக் கொண்டுவா...”
“எதுக்கு?”
“கிணற்றுல இறங்கி உன்னோட தாலியை எடுத்துட்டு வர்றதுக்கு...”
“நினைக்கிறப்பவே என் உடம்பு நடுங்குது.”
“இதுல நடுங்குறதுக்கு எதுவுமே இல்ல..”
“எனக்கு பயமா இருக்கு.
மகள் சொன்னாள்:
“டாட்டா, நீங்க கிணத்துல இறங்கவேண்டாம்.”
மகனும் மகளும் தந்தையை ‘டாட்டா’ என்றுதான் அழைக்கிறார்கள்.
“பிறகு எப்படி மாலையை எடுக்கிறது?”
சிறிது நேரம் கழித்து கணவர் சொன்னார்: “அடியே. நான் ரொம்பவும் தைரியமா இருக்கேன். நான் கிணத்துல இறங்கி மாலையை எடுக்கிறேன்...”
மனைவி நடந்துபோய் மிகவும் நீளமான ஒரு கயிறைக் கொண்டு வந்தாள். கணவர் அதன் ஒரு முனையைக் கிணற்றுக்குப் பக்கத்திலிருக்கும் தென்னை மரத்தில் கட்டிவிட்டு இன்னொருமுனையை கிணற்றுக்குள் எறிந்தார். அது நீரில் விழுந்து கிடந்தது.
கணவர் துண்டைக் கட்டிக்கொண்டு கண்ணாடி அணிந்தவாறு கிணற்றின் மேற்சுவரில் ஏறினார்.
மனைவி கேட்டாள்:
“கண்ணாடி வேணுமா?”
“பார்க்கணும்ல! கட்டாயம் வேணும்...”
கணவர் கயிறைப் பிடித்தவாறு மெதுவாகக் கிணற்றுக்குள் இறங்கினார். பக்கவாட்டுச் சுவரை காலால் மிதித்தவாறு கீழே இறங்கினார். குளிர்ச்சியான பெரிய பாதாளத்தில் இறங்குவதைப்போல அவர் இறங்கினார். காற்றே இல்லாமற்போனதைப் போல் இருந்தது.