தங்கமாலை - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6938
கிணற்றின் மேற்பகுதிக்கு வந்து வட்டமான சுவரில் ஏறி இறங்கியவாறு நடுங்கிகொண்டு அங்கு நின்றிருந்த மனைவியையும் பிள்ளைகளையும் முத்தமிட்டவாறு ஏணியை மேலே தூக்கி கிணற்றிற்கு வெளியே போட்டுவிட்டு மூச்சு வாங்க தளர்ந்து போய் கிணற்றின் மேற்பகுதியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு மனைவியைப் பார்த்துச் சொன்னார்: “சிகரெட்...”
மனைவி சிகரெட்டை எடுத்து அவருடைய உதட்டில் வைத்து, அவளே அதைக் கொளுத்தினாள். புகையை ஊதியவாறு பார்ததபோது இடதுகாலில் மூன்றாவது விரல் வேதனை தந்தது.
கிணற்றில் இறங்கும் அழுக்கடைந்த அந்த மனிதரிடம் அவர் சொன்னார்: “மாலையை எடுத்தாச்சு!”
“யார் கிணத்துக்குள்ள இறங்கியது?”
“நான்தான்...”
“இன்னைக்கு நான் இந்த ஊரைவிட்டுப் போறேன். திரும்ப வரப்போறது இல்ல. என் பெண்டாட்டியும் குழந்தைகளும் தோட்டத்துல இருக்காங்க. அங்கே எனக்கு ஏதாவது வேலை கிடைக்கும். நான் புறப்படுறேன். அரை ரூபா தாங்க...”
அரை ரூபாயை அவர் தந்தார்.
நாட்கள் நகர்ந்தன. பல சம்பவங்களும் அடுத்தடுத்து வருகின்றன. கிணற்றில் இறங்கியதற்கான பின் விளைவுகள்.
ஒருநாள் மனைவி தேநீர் கொண்டுவந்து தந்தாள். குடித்துப்பார்த்தார் மிகவும் காட்டமாக அது இருந்தது. கொஞ்சம் கூட இனிப்பாக இல்லை. சர்க்கரையே அதில் போடப்படவில்லை. கசப்பாக இருந்த அந்தத் தேநீரை ஒரே மூச்சில் குடித்து முடித்தார். தேநீர் குடித்த மாதிரியே இல்லை.
மனைவி சொன்னாள்:
“ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரைதான் சாப்பிடுவீங்க! குறைஞ்சது ஒவ்வொரு நாளும் முப்பது தம்ளர் தேநீர் குடிக்கிறீங்க. ஒரு நாளைக்கு உங்க ஒரு ஆளுக்கு மட்டும் ஒருகிலோ சர்க்கரை தேவைப்படுது. நாங்க காப்பிக்கு வெல்லத்தைப் பயன்படுத்துறோம். இனிமேல் தேநீருக்கு சர்க்கரை போடுறதா இல்ல...”
அவர் சொன்னார்:
“டாக்டர் பரிசோதனை செஞ்சி எதுவும் சொல்லலியே! பரிசோதனை செய்தபிறகு வேணும்னா, சர்க்கரையை நிறுத்திக்கோ.”
“எனக்குத் தெரியும். உடம்புல கட்டாயம் சர்க்கரை இருக்கும்.”
சர்க்கரை இருக்குமா? அவருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இதற்கெல்லாம் காரணம் உடலில் இருந்த ஒரு புண்தான். கிணற்றுக்குள்ளிலிருந்து ஏறியபோது விரலில் உண்டான சிறு காயம்.
இடது காலின் நடுவிரலின் ஓரத்தில் உராய்ந்ததால் உண்டான காயம் அது. சிறிது நாட்கள் சென்றபிறகு அந்த இடம் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது. அந்தப்புண் பழுக்கத் தொடங்கியது. டாக்டரிடம் அதைக் காண்பித்தார். அவர் அன்புடன் அதைத் துடைத்து சுத்தம் செய்து பழுத்திருந்ததை உடைத்தார். பிறகு பிரகாசமாக இருந்த வளைந்த ஒரு கத்திரி நுனியில் கொஞ்சம் பஞ்சை எடுத்து அதை புட்டிக்குள் இருந்த ஒரு திரவத்திற்குள் நுழைத்து புண்ணின் மேல் தடவினார். வலி தாங்க டியாமல் அவர் இப்படியும் அப்படியுமாக அசைந்தார். மூன்று, நான்கு முறை பஞ்சைஅந்த திரவத்தில் நனைத்து கழுவி அந்தக் காயத்தை முழுமையாக டாக்டர் சுத்தம் செய்தார். புண்ணின் வாய்ப்பகுதியில் ஏதோ ஒரு தூளை வைத்து அதைத் துணியால் நன்றாகக் கட்டிவிட்டார்.
“நனைஞ்சிடக்கூடாது...”
பிறகு சில மாத்திரைகளைத் தந்தார்.
பத்து, பதினாறு நாட்கள் சிறு வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த நீரில் புண்ணைக் கழுவிச் சுத்தப்படுத்துவதும், மாத்திரை சாப்பிடுவதுமாக இருந்தார். ஆனால், புண் பெரிதாகிக்கொண்டே வந்தது. பழுப்பதும் அதிகமாகிக் கொண்டிருந்தது. புண் ஏன் ஆறவில்லை?
“சிறுநீர் கொண்டுவாங்க. உடம்பில் சர்க்கரை இருக்கான்னு பார்ப்போம்...”
அவ்வளவுதான் ஒரு மாதிரி ஆகிவிட்டார் அவர்.
“டாக்டர்... அப்படி ஒருவேளை உடம்பில் சர்க்கரை இருந்தா...?”
“தானியங்களை இனிமேல் உபயோகிக்கக் கூடாது. சோறு சாப்பிடமுடியாது. இனிப்பை முழுமையாக நீக்கணும். தேநீர்,காப்பி எதுலயும் சர்க்கரை போடக்கூடாது. பழங்கள் சாப்பிடக்கூடாது. கொழுப்பைக் குறைக்கணும்.”
கடவுளே, வாழ்க்கையின் சுகத்திற்கு இனிமேல் நான் எங்கு போனேன்?
கிணற்றிலிருந்து தப்பித்து வெளியே வந்தபிறகு இப்படியொரு நிலை அவருக்கு. கட்டாயம் உடம்பில் சர்க்கரை இருக்கும். வயதும் அதிகம் ஆகிவிட்டது. அதனால்தான் கிணற்றுக்குள் நான் சோர்வடைந்து போயிருக்கிறேன்.
ஒரு சிறு புட்டியில் சிறுநீருடன் மனைவி வந்தபோது, அவள் கழுத்தில் தங்கமாலை பிரகாசித்துக் கொண்டிருந்தது.
என்ன வரலாறு படைத்த தங்கமாலை அது!
சிறுநீரை வாங்கிய கம்பவுண்டர் சொன்னார்:
“நாளைக்கு ரிசல்ட் என்னன்றதை சொல்றோம். பத்து மணிக்கு உங்க மனைவி இங்கே வரட்டும். பெனிடிக்ஸ் சொல்யூஷன் இங்கே தீர்ந்து போச்சு. நகரத்தில் இருந்து வாங்கிட்டு வரணும்.”
எல்லாம் முடிந்து கணவரும் மனைவியும் கிளம்பினார்கள். இரவு முழுவதும் கணவர் உறங்கவேயில்லை. ரிசல்ட் எப்படி இருக்கும்? வாழ்க்கை ஒரு முடிவில் வந்து நின்றுகொண்டிருக்கிறது. இனிமேல் இருக்கும் வாழ்க்கை..?
கிணற்றுக்குள் நடைபெற்ற சம்பவத்தை அவர். நினைத்துப் பார்த்தார். எப்படிப் பார்த்தாலும் இதுவரை வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவே இருந்திருக்கிறது. எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். எதை வேண்டுமானாலும் குடிக்கலாம் என்ற நிலை இதுவரை இருந்தது. இனிமேல் இனிப்புள்ளதையும் கொழுப்பு உள்ளதையும் நீக்க வேண்டும். சுவாரசியமில்லாத வாழ்க்கை! ம்... வரும்போது வரட்டும். பார்ப்போம். அதுதானே வாழ்க்கையின் சட்டம்!
மறுநாள் காலையில் பத்துமணிக்கு ரிசல்ட் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக மனைவி சென்றாள்.
கணவர் குழப்பமான மனநிலையுடன் காத்திருந்தார். புண்ணைக் கட்டியிருந்த கட்டை அவிழ்த்துப் பார்த்தார். காயம் ஆறி வருவதைப் போல் தோன்றுகிறதே! அது வெறும் தோணல் மட்டும்தானோ?
மனைவி வந்து சொன்னாள்:
“ரிசல்ட் தெரிஞ்சிடுச்சு. நிறைய சர்க்கரை உடம்புல இருக்கு.”
அவ்வளவுதான். மனம் மரத்துப்போனதைப்போல் ஆகிவிட்டது. உடம்பும் மரத்துப் போகத் தொடங்கியது. இனிமேல் உள்ள வாழ்க்கை...?
சிறிதுநேரம் சென்றதும் மனைவி பணிவாக வந்து தேநீர் தந்தாள்.
கணவர் குடித்துப் பார்த்தார். ஆச்சரியம் ! தேநீர்! குளு குளு இனிப்பு!
“என்ன சர்க்கரை போட்டிருக்கே?”
மனைவி சிரித்தாள்:
“நான் சும்மா சொன்னேன். ரிசல்ட் தெரிஞ்சுடுச்சு. உடம்புல சர்க்கரை கொஞ்சம்கூட இல்ல...”
கடவுளுக்கு நன்றி!
இருந்தாலும்...
“என்னடி!”
மகிழ்ச்சியுடன் பார்த்த அவர் அதிர்ந்துபோய் விட்டார். மனைவியின் கழுத்தில் தங்கமாலை இல்லை.
அது எங்கு போனது?
நேராகச் சென்று கிணற்றுக்குள் பார்த்தார். சந்தோஷம்! கிணற்றுக்குள் மிகவும் ஆழத்தில் தெளிவான நீருக்கடியில் மஞ்சள் நிறத்தில் குசாலாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது தங்கமாலை!
மங்களம்
சுபம்.