Lekha Books

A+ A A-

அம்மா

amma

ம்மா தூர தேசத்தில் இருக்கும் ஏதோ ஒரு நகரத்தில் பலவிதப்பட்ட துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னுடைய மகனுக்கு இதய வேதனையுடன் கடிதம் எழுதுகிறாள்.

‘மகனே, நாங்க உன்னைக் கொஞ்சம் பார்க்கணும்’

இது மட்டுமே அல்ல. நிறைய நிறைய வாக்கியங்கள். இலக்கண முறையோ எழுத்து அழகோ அதில் இல்லை. எனினும் அம்மாவின் மனக்கவலை முழுவதும் அந்தக் கடிதத்தில் வெளிப்பட்டது. அவர்களுக்கிடையே சந்திப்பு நடந்து நீண்ட காலமாகிவிட்டது.

அம்மா தினந்தோறும் தன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்ற விஷயம் மகனுக்குத் தெரியும். ஆனால் என்ன செய்வது? போய் பார்க்கப் பணம் இல்லை. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கே சிரமமாக இருக்கிறது. ‘எப்படியாவது நாளைக்கு பயணத்தை ஆரம்பத்துவிட வேண்டும், அம்மாவைப் போய் பார்க்க வேண்டும்’ என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொள்வான். இதற்கிடையில் நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும், மாதங்கள் வருடங்களாகவும் அப்படியே கடந்து போய்க் கொண்டிருக்கும்.

அம்மா தினந்தோறும் தன் மகனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

நான் இதுவரை கூறியதும், இனிமேல் கூறப்போவதும் என்னுடைய அம்மாவைப் பற்றித்தான். இப்படிப்பட்ட சம்பவங்கள் பாரதத்தில் இருக்கும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு அம்மாக்களைப் பற்றியும் கூறுவதற்கு இருக்கும். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றித்தான் நான் கூறப் போகிறேன். நினைத்துப் பார்க்கும்போது கவலை அளிக்கக்கூடிய விஷயம். அதற்கும் அம்மாவிற்கும் இடையே பெரிய தொடர்பு எதுவும் இல்லை. நான் அம்மாவின் மகன் என்ற உறவு மட்டுமே.. என்னைப் போன்ற பிள்ளைகளைப் பெற்ற அம்மாக்கள் பாரதமெங்கும் இருக்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய குற்றத்திற்காக சிறைகளில் அடைக்கப்பட்ட காலத்தில் அந்த அம்மாக்கள் என்ன செய்தார்கள்? பாரதத்தைச் சேர்ந்த இளைஞர்களையும் இளம்பெண்களையும்... எங்கிருந்தோ இங்கு வந்த வெள்ளைக்காரர்களுடைய அரசாங்கத்தின் அரக்கத்தனமான இந்தியர்களே அடித்தும் உதைத்தும் எலும்புகளை நொறுக்கிச் சிறைகளில் அடைத்திருந்த காலத்தில், அவர்களுடைய அம்மாக்கள் வெளியில் இருந்த லட்சக்கணக்கான வீடுகளில் இருந்து கொண்டு என்ன செய்தார்கள்? நினைத்துப் பார்க்க முடியுமா? எதையும் என்னுடைய தாய் என்ன செய்தாள் என்று எனக்கு நன்றாக தெரியும்.

அந்தப் பழைய கதையை நான் இங்கு எழுதப்போவது வேறு எந்தவொரு நோக்கத்தினாலும் அல்ல. அம்மாவின் கடிதத்தை வாசித்தபோது பழைய பழைய நினைவுகள் எனக்குள் வந்து அலைமோதுகின்றன. நான் வைக்கம் தலையோலப் பறம்பில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மைல்கள் தூரத்தில் இருக்கும் கோழிக்கோட்டிற்கு உப்பு சத்தியாகிரகத்திற்குச் சென்ற கதை...

உப்புச் சத்தியாக்கிரகம்! நினைத்துப் பார்க்க முடியுமா?

அதை இங்கு எழுதுவதற்கு முன்னால் சில விஷயங்களக் கூற  வேண்டியதிருக்கிறது. நான் இதை எழுதுவது ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தெட்டாம் ஆண்டில் என்பதைப் பற்றியோ, இந்தியா இப்போதும் சுதந்திரம் இல்லாமல்தான் இருக்கிறது என்பதைப் பற்றியோ உள்ள ரகசியத்தை அல்ல. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மனிதரால் தான்  நான் முதல் தடவையாக  அடியும் உதையும் வாங்கினேன் என்ற ரகசியத்தைத்தான் நான் இங்கு எழுதப் போகிறேன். எது எப்படியோ, அம்மா என்னைப் பெற்றெடுக்காமல் இருந்திருந்தால் என் விஷயத்தில் எந்தவொரு  பிரச்சினையும் உண்டாகி இருக்காது. என்னால் அம்மாவிற்கு இந்த மனவேதனையும் உண்டாகி இருக்காது. அடிமைத்தனமும் வறுமையும் இதைப் போன்ற வேறு நிறைய கொடுமையான நோய்களும் நிறைந்த ஆதரவற்ற இந்த நாட்டில் அம்மா என்னை எதற்காகப் பெற்றெடுத்தாள்? இந்தக் கேள்வியை இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு அம்மாக்களிடமும் அவர்களுடைய ஆண்களும் பெண்களுமாகிய பிள்ளைகள் ஒவ்வொருவரும் கேட்பார்களா? எது எப்படி இருந்தாலும், இந்திய நாடு எப்படி இந்த அளவிற்கு வறுமை நிறைந்த நாடாக ஆனது? நான் ஒரு இந்தியன் - அப்படி என்றால் பெருமையுடன் கூற முடியவில்லை. நான் வெறும் ஒரு அடிமை. அடிமை நாடான இந்தியாவை நான் வெறுக்கிறேன். ஆனால்... இந்தியா... என் தாய் அல்லவா? என்னைப் பெற்றெடுத்த என்னுடைய அம்மா என்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப்போல பாரதமும்  என்னை எதிர்பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது? பாரத மண் இறந்த என்னையும்; என்னைப் பெற்றெடுத்த என்னுடைய அம்மா வாழ்ந்து கொண்டிருக்கும் என்னையும்.

எதிர்பார்ப்பு!

நான் நினைத்துப் பார்க்கிறேன்.

அம்மா என்னைப் பெற்றெடுத்தாள். மார்பிலிருந்து பாலையும் பிறவற்றையும் தந்து என்னை வளர்த்தாள். அந்த வகையில் என்னை ஒரு மனிதனாக ஆக்கினாள். ஏங்தி, ஆசைப்பட்டு உண்டான பிள்ளை நான் என்பது அம்மாவின் வாதம்! ‘நீ ஏங்கி ஆசைப்பட்டு உண்டான பிள்ளை!’ இப்படி ஒவ்வொரு பிள்ளையையும் பார்த்து ஒவ்வொரு அம்மாவும் கூறுவாளா? என் இதயத்தில் உண்டாகும் உணர்வுகளை இங்கு அப்படியே வெளிப்படுத்த முடியாது. எதிர்ப்பின் கை விலங்கு இருப்பதைப்போல போலீஸ் லாக்-அப்கள், சிறை, தூக்கு மரம்... நினைத்துப் பார்க்கிறீர்களா?

‘மனதையும் உடலையும் மூச்சடைக்கச் செய்யும் உன்னதமான பிராகாரங்கள் கொண்ட ஒரு பயங்கரமான இருட்டறைதான் இந்தியா!’- காந்திஜி கூறிய வார்த்தைகள் இவை என்பதற்கு உத்தரவாதம் இல்லை. காந்திஜி காரணமாக அடியும் உதையும் வாங்கியது எனக்கு நன்கு ஞாபகத்தில் இருக்கிறது. அடித்தவர் ஒரு பிராமணர். பெயர்- வெங்கிடேஸ்வரய்யர். வைக்கம் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர். பிரம்பால் முழு பலத்தையும் பயன்படுத்தி ஏழு அடிகள். அது வைக்கம் சத்தியாகிரக காலத்தில் நடந்த விஷயம். எல்லா தாழ்த்தப்பட்ட இந்துக்களையும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். சத்தியா கிரகத்தில் ஈடுபட்டவர்களின் கண்களில் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த இந்துக்கள் பச்சை சுண்ணாம்பை தடவுகிறார்கள். அடித்து, உதைக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவு உண்டாக வேண்டும். வருகிறார் காந்திஜி! ஞாபகம் இருப்பவர்கள் இருக்கிறார்களா?

வைக்கம் படகுத் துறையிலும் ஏரிக்கரையிலும் நல்ல கூட்டம். எங்கும் ஆரவாரம். மற்ற மாணவர்களுடன் சேர்ந்து நானும் இப்படியும் அப்படியுமாக நெளிந்து தள்ளி, மக்கள் கூட்டத்திற்கு முன்னால் சென்றுவிட்டேன். படகில் காந்திஜியை தூரத்திலேயே பார்த்துவிட்டேன். படகுத் துறையை படகு நெருங்கியது. ஆயிரமாயிரம் தொண்டைகளுக்குள்ளிருந்து சத்தம் உயர்ந்தது. இந்தியாவில் நடக்கும் எல்லா அநீதிகளுக்கும் எதிராக ஒலித்த போர் முழக்கத்தைப் போல-ஆவேசமான ஒரு சவாலைப்போல- ஆயிரமாயிரம் தொண்டைகளில் இருந்து கடலின் சீற்றத்தைப்போல- ‘மகாத்மா...காந்தி...கீ... ஜே!’

அந்த அரை நிர்வாணத் துறவி இரண்டு பற்கள் இல்லாத ஈறைக் காட்டிச் சிரித்துக்கொண்டே கைகளால் தொழுதவாறு கரையில் இறங்கினார். மிகப்பெரிய ஆரவாரம். திறந்திருந்த காரில் அவர் மெதுவாக ஏறி உட்கார்ந்தார்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel