அமெரிக்க தேர்தலில் மோகன்லால் சதித்திட்டம்!
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 3024
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
அமெரிக்க தேர்தலில் மோகன்லால் சதித்திட்டம்!
படத்தில் என்னுடன் இருப்பவர் திரைப்பட இயக்குநர் அருண் வைத்யநாதன். அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர் இவர். 'அச்சமுண்டு அச்சமுண்டு'என்ற பெயரில் ஒரு நல்ல திரைப்படத்தை இயக்கினார். பிரசன்னா, சினேகா நடித்த அந்தப் படத்தில் யாருமே இதற்குமுன்பு கையாண்டிராத ஒருகதையை எடுத்து, மிகவும் அருமையாக படத்தை இயக்கியிருந்தார் அருண்.
சமீபத்தில் அவர் இயக்கிய மலையாள திரைப்படமான 'பெருச்சாழி' திரைக்கு வந்து நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. மோகன் லால் கதாநாயகனாக நடித்த அந்த படத்தை நான் பார்த்தேன். மாறுபட்ட ஒரு கதையை அதற்கென உருவாக்கியிருந்தார் அருண். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தேர்தல் நடக்கிறது. அங்கு கவர்னர் தேர்தலில் நிற்கும் அமெரிக்கர் எல்லா விஷயங்களிலும் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறார். ஏதாவது தகிடுதத்தங்கள் பண்ணினால்தான் அவர் வெற்றி பெற முடியும். அமெரிக்காவில் அது சாதாரண விஷயமா என்ன?அந்த கில்லாடி வேலைகளைச் செய்வதற்கு கேரள அரசியல்வாதி முகேஷால் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப் படுகிறார் மோகன்லால். அவருடன் வேறு இரண்டு கைத்தடிகளும். அமெரிக்காவிற்குச் சென்ற மோகன்லால் அந்நாடே இதுவரை பார்த்திராத புரட்டல் வேலைகளை அரங்கேற்றுகிறார். வெள்ளையர்களுக்கும், கருப்பர்களுக்குமிடையே சண்டை மூட்டி விடுகிறார். நம் அரசியல்வாதிகள் தருவதைப்போல இலவச பொருட்களை மக்களுக்கு அளிப்பதாக வாக்குறுதி அளிக்க வைக்கிறார். இசை நிகழ்ச்சியை முன்னின்று நடத்தி இசைக்கலைஞர்களின் வாக்குகளை வாங்குவதற்கு திட்டம் தீட்டி தருகிறார். 30சதவிகித வாக்குகளைக் கொண்டிருக்கும் ஸ்பேனிஷ் மொழி பேசும் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு வழிகளை உண்டாக்கித் தருகிறார். தான் ஆதரிக்கும் வேட்பாளர் ஒரு இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் சி. டி. எதிர்த்து நிற்கும் வேட்பாளர் கையில் சிக்கி விட, பல சாகசச் செயல்களைச் செய்து அந்த அந்த சி. டி. யை கைப்பற்றிக் கொண்டு வருகிறார். ஒவ்வொரு கட்டத்திலும் அதிக ஆதரவுடன் மேலே மேலே போய்க் கொண்டிருக்கும் மோகன்லால் ஆதரிக்கும் வேட்பாளர்தான் வெற்றி பெறப் போகும் நிலையில் இருக்கிறார். அந்தச் சமயத்தில் அந்த அமெரிக்கர் தன்னுடைய வேலையைக் காட்டுகிறார். தான் தருவதாக கூறிய பணத்தைத் தராமல் மோகன்லாலை ஏமாற்றப் பார்க்கிறார். விடுவாரா மோகன்லால்?ஒரே இரவில் பல பித்தலாட்ட வேலைகளைச் செய்து எதிர்த்து நிற்பவரை வெற்றி பெற வைக்கிறார். யாரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக அவர் அமெரிக்கா சென்றாரோ, அவரை மண்ணைக் கவ்வ வைக்கிறார். அமெரிக்க மண்ணில் நம் அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனங்களை அரங்கேற்றியதன் மூலம் கிடைத்த பல கோடி பணத்துடன் அவர் கேரளத்திற்கு திரும்பி வருகிறார். கேரளம் அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது.
லாஜிக் பற்றியெல்லாம் சிறிது கூட சிந்திக்காமல் நாம் இந்த படத்தைப் பார்க்க வேண்டும். ஜாலியான ஒரு பொழுது போக்குப் படம் என்ற எண்ணத்தை மனதில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். அந்த எண்ணத்துடன் படத்தைப் பார்த்தால் சிறிது கூட படம் போரடிக்காது. மோகன்லாலைத் தவிர, வேறு எந்த நடிகரும் இந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அருமையாக பொருந்தியிருக்க மாட்டார்கள். மோகன்லால் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தமிழ் பட இயக்குநர் ஒருவர் மலையாள படவுலகிற்குள் நுழைவது என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் மலையாள படவுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன்லாலிடம் ஒரு கதையைக் கூறி. அவரைச் சம்மதிக்க வைத்து ஒரு படத்தை இயக்குவது என்பது கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாத ஒன்று அந்த சாதனையைச் செய்திருக்கும் என் இனிய நண்பர் அருண் வைத்யநாதனை வாழ்த்துகிறேன். . . பாராட்டுகிறேன்.