Lekha Books

A+ A A-

லத்தியும் பூக்களும்

லத்தியும் பூக்களும்

உறூப்

தமிழில் : சுரா

 

டது பக்கமாக சாய்ந்த கையெழுத்தில் எழுதிய அந்த காதல் கடிதத்தை வாசித்து முடித்தபோது, எனக்கு என்னவோ தோன்றியது. அவள் எழுதியிருந்தாள்: ‘நீங்கள் என்னை மறந்து விட்டீர்களா? இனி எப்போதும் நினைக்க மாட்டீர்களா?’

உண்மை. நான் ஒரு இதயத்தில் சூனியம் நிறைந்தவனாக ஆகி விடுகிறேன்.

சிறையிலிருந்து வந்து நான்கு வாரங்கள் ஆகி விட்டாலும், இதுவரை அவளைப் போய் பார்க்கவில்லை, என் குற்றமா? பகல் முழுவதும் பணம் பெறுவதற்கும் சங்கம் சம்பந்தப்பட்ட செயல்களுக்கும் ஓடித் திரிந்து களைத்துப் போய் இரவில் வந்து விரிப்பில் விழும்போது ஓராயிரம் சிந்தனைகள் என் இதயத்திற்குள் அலை பாய்ந்து கொண்டிருக்கும்.  என் இதயத் துடிப்பை நானே கேட்கக் கூடிய இரவின் அந்த பேரமைதியில் சோகம் நிறைந்ததாகவும், இனிமை கொண்டதாகவும் இருக்கக் கூடிய ஒரு கிராமத்து இளம் பெண்ணின் குரல் என் செவிக்குள் வந்து முணுமுணுப்பதுண்டு: ‘நீங்கள் என்னை மறந்து விட்டீர்களா?’

என் அம்மிணி, உன்னை நான் மறப்பதா? பல தங்கச் சாவிகள் வைத்திருந்தவர்களையும் தட்டி விலக்கி விட்டு, தன் இதயத்தின் சாவியை இந்த அப்பிராணி சிறை. மனிதனின் கையில் தந்த உன்னை எப்படி மறப்பது? அம்மிணி – அந்தப் பெயரே எந்த அளவிற்கு இனிமையானது! கோஷ வார்த்தைகளைக் கூறிக் கூறி கட்டிப் போன என் தொண்டைக்கு அது மெழுகு இடுகிறது. ‘அம்மிணீ.....’ என்று வாசலில் நின்று நான் அழைக்கும்போது, ‘என்ன?’ என்று கேட்டவாறு வாசலுக்கு வரும் கள்ளங்கபடமற்ற இளம் பெண்! அழுவதையும் காதலிப்பதையும் தவிர, எதுவுமே தெரியாத கிராமத்துப் பெண்! அவளுடைய இறக்கம் குறைந்த ரவிக்கையும், கருப்பு கரை போட்ட முண்டும், சந்தன பொட்டும், அழகும் பிரகாசமும் கொண்ட முகவெளிப்பாடும் - ஒவ்வொன்றும் தனித் தனியாகவும், அனைத்தும் சேர்ந்தும் என் இதயத்தில் திரண்டு நிற்கும் – என்னவொரு வேதனை!

என் அறிவு அரசியல், சமூகம், பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பலவகையான பிரச்னைகளை நோக்கி சுற்றி நுழைந்து கொண்டிருக்கும் போது இதயத்திற்குள்ளிருந்து ஒரு இளம் குயிலின் மெல்லிய பாட்டு கேட்கும் : ‘நீங்கள் என்னை மறந்து விட்டீர்களா?’

நான் சிறைக்குள் இருந்தபோது, அவளைப் பார்க்காமல் இருந்ததைப் பற்றி ஒரு நிரபராதித் தன்மை தோன்றியிருந்தது – அது என்னுடைய வரையறையைத் தாண்டியதாயிற்றே என்றொரு தோணல்! சிறை வாசலுக்கு வெளியே வந்தவுடன், என் இதயம் முதலில் பாய்ந்தது அவளை நோக்கித்தான்........ ஒரு வடக்கு திசையைப் பார்க்கும் ஊசியைப் போல. ஆனால், நகரத்திற்குள் வந்ததும், காரியங்களெல்லாம் மாறி விட்டன.

‘தாமுவா? டேய் சைத்தான்..... நீ நேரத்திற்கு வந்து விட்டாய். மில்லில் வேலை நிறுத்தம் நடப்பது தெரியுமல்லவா?’ – அபூபக்கர் என் தோளில் கையை வைத்தவாறு தொடர்ந்து கூறினார் : ‘உண்மையிலேயே இங்கு யாருமே இல்லை. நான் கிடந்து சுற்றிக் கொண்டிருக்கிறேன்.’

இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அபூபக்கர் சிறையிலிருந்து வந்தார். அவர் என் முகத்தையே பார்த்தார் : ‘நீ அலுவலகத்திற்கு வா’.

‘அண்ணா..... நான் கிராமத்தில் கொஞ்சம்.....’

‘டேய் சைத்தான்... நானும் கிராமத்திற்குப் போகவில்லை. நாம் ஒன்றாகச் சேர்ந்து போவோம்.... வா!

உற்சாக குணம் கொண்ட அபூபக்கருடன் சேர்ந்து இருக்கும்போது, நாம் எல்லாவற்றையும் மறந்து விடுவோம். சிறிய மீசையைத் தடவியவாறு அந்த முன்னோக்கி, தள்ளிய நடையும், அந்த வழுக்கைத் தலையும், நகைச்சுவை உணர்வுடன் பேசுவதும், ஆபத்து நிறைந்த சந்திப்புகளின் வழியாக சீட்டியடித்துக் கொண்டு போகக் கூடிய திறமையும்....... என்னையும் வந்து இறுக பற்றிக் கொள்கின்றன. நாங்கள் வேகமாக நடந்து அலுவலகத்திற்குள் நுழைந்தோம்.

மரியாதைக்குரிய ஒரு இடத்தை அலங்கரி, குழந்தை....’ என்று கூறியவாறு அபூபக்கர் எனக்கு அருகில் அமர்ந்தார்.  அவர் கதைகளை விளக்கிக் கூறினார். விஷயம் கொஞ்சம் ஆழமானதுதான். அறுநூறு பேர் பணி நிறுத்தம் செய்கிறார்கள் என்றால், ஆயிரத்து இருநூறு பேராவது பட்டினி கிடக்கிறார்கள் என்று அர்த்தம். முதலாளி அந்த அளவிற்கு வேகமாக கூலியைத் தர மாட்டார் என்ற விஷயம் எனக்கு தெரியும். கறாரான நெறி முறைளைக் கொண்ட மனிதர் அவர். பணம் இல்லாமல் இல்லை. இரக்கம் இல்லாமல் இல்லை. அவர் தேவாலயத்திற்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் பணத்தைச் செலவிட்டிருக்கிறார். அது மட்டுமல்ல – ஒரு முறை அவர், தன் தானமளிக்கும் பழக்கத்தை விளக்கி கூறி விட்டு எனக்கு ஒரு உபதேசத்தையும் செய்தார் : 'ஒரு மனிதன் பணக்காரனாக பிறக்கிறான். ஒரு மனிதன் வறுமையின் பிடியில் சிக்கிக் கிடக்கிறான் – இது யாருடைய குற்றமும் அல்ல. விதி...... நீங்கள் ...... இளைஞர்கள், வெறுமனே துள்ளி பிரயோஜனமேயில்லை.....' அவர் ஒரு சிகரெட்டை எடுத்து எனக்கு தரவும் செய்தார்.

அந்த நிலையில் சூழல் கொஞ்சம் தீவிரத் தன்மை நிறைந்ததுதான். அது ஆழமானதாக ஆனது. வாரங்கள் கடந்தன. ஊர்வலங்கள் ..... சொற்பொழிவுகள் ...... கோஷங்கள்........ ஒரு சிறிய அளவு லத்தி சார்ஜும்......

பகல் முழுவதும் ஓடி திரிய வேண்டும். பலரிடமும் பேசி சமாதானம் நிலவச் செய்ய வேண்டும். பலருக்கும் ஆவேசத்தை அளிக்க வேண்டும். அனைத்தும் முடிந்து இரவில் களைத்துப் போய் பாயில் சென்று விழும்போது, தனிமையுணர்வு நிறைந்த ஒரு இதயத்தின் தேம்பி அழும் சத்தம் மனதிற்குள் நுழைந்து வருகிறது: 'நீங்கள் என்னை மறந்து விட்டீர்களா?'

அந்த இறக்கம் குறைந்த ரவிக்கை, கருப்பு நிற கரை கொண்ட முண்டு ஆகியவற்றின் சுருக்கங்களை நோக்கி என்னுடைய கவலை நிறைந்த கனவின் அம்சங்கள் சுருண்டு சுருண்டு போய்க் கொண்டிருந்தன.

அம்மிணியின் கடிதம் கிடைத்த நாளன்றுதான் முதலாளித்துவத்தின் மீது மிகப்பெரிய கோபம் உண்டானது. நான் சிந்தித்துப் பார்க்கிறேன். வாழ்க்கைகள் எப்படி கட்டப்பட்டு கிடக்கின்றன என்று. நகரத்தில் ஒரு முதலாளி ஒழுங்காக கூலி கொடுக்காத காரணத்தால், எங்கோ கிராமப் புறத்தில் இருக்கும் ஒரு இளம்பெண் வேதனையை அனுபவிக்க வேண்டும். இது மரியாதைக்குரிய செயலா?

அந்த இடது பக்கம் சாய்ந்த எழுத்துக்களின் வரிசைகளின் மூலம்தான் பலவற்றையும் நான் வாசித்தேன். பாவம்!

திடீரென்று உரத்த குரலில் ஒலித்த கோஷங்கள் என்னை சுய உணர்விற்குக் கொண்டு வந்தன. அவர்களுடைய ஊர்வலம் கடந்து போய்க் கொண்டிருந்தது. அறுநூறு மனித ஆன்மாக்கள் ! அவர்களுக்கும் காதலிகள் இருக்கிறார்கள்... மனைவிகள் இருக்கிறார்கள்... அழக் கூடிய குழந்தைகள் இருக்கிறார்கள்.

நான் கீழே இறங்கினேன். அபூபக்கரின் அறையை நோக்கி நடந்தேன். நாங்கள் சிந்திப்பதற்கு பல விஷயங்கள் இருந்தன.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel