லத்தியும் பூக்களும் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4795
'டேய்...சைத்தான். நீ வந்து விட்டாயா?' என்று இப்போது காதில் விழும் என்று உறுதியாக நினைத்தவாறு நான் படிகளில் ஏறினேன். ஆனால், அது நடக்கவில்லை. அங்கு அமைதி நிலவிக் கொண்டிருந்தது ஒரு கை ஒடிந்த நாற்காலியில் அமர்ந்து சாளரத்தின் வழியாக வானத்தின் முடிவற்ற திசையையே இமையை மூடாமல் என் நண்பர் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த வழுக்கைத் தலையில் இங்குமங்குமாக நின்று கொண்டிருந்த உரோமங்கள் காற்றில் பறந்து கொண்டிருந்தன. நான் தோளில் கையை வைக்கும் வரை, எந்தவொரு அசைவுமில்லை. திடீரென்று அந்த முகம் என்னை நோக்கி உயர்ந்தது. அந்த கண்களைச் சுற்றிலும் ஒரு கறுப்பு. அந்த கண்களுக்கு உள்ளே ஒரு ஆழம்...
'என்ன மிஸ்டர்... சிந்தனை?'
'நானா?' சிறிது பதைபதைப்புடன் அவர் கூறினார்: 'நானா? ஏய்... எதுவும் சிந்திக்கவில்லை.' அவர் தன் கையிலிருந்த ஒரு தாள் சுருளை மேஜையின் மீது வைத்தார்.
'இது என்ன?' என்று கேட்டவாறு நான் அந்த தாளை எடுத்தேன்.
'அதுவா? அது பரவாயில்லை' - அபூபக்கர் கூறினார்.
நான் புரட்டிப் பார்த்தேன். அடியில் ஆயிஷா என்ற கையெழுத்தைப் பார்த்ததும், அபூபக்கரின் வீட்டிலிருந்து வந்திருக்கும் கடிதம் என்பது புரிந்தது. நான் மடித்து கொடுத்தேன்.
'வேண்டாம் ... வாசி ... பகவத்கீதையைப் போல வாசி...' அவர் உதட்டால் சிரித்தார். கண்ணில் அப்போதும் அந்த ஆழமான நீல நிறம் இருந்தது. வற்புறுத்தி கூறியவுடன், நான் அதை வாசித்துப் பார்த்தேன். அந்த கிராமத்துப் பெண்ணான உம்மா, செத்து வீங்கிய தவளையைப் போன்ற எழுத்தில் இவ்வாறு எழுதியிருந்தாள்: 'மகன் எப்போதும் கேட்கிறான்... வாப்பா எங்கே அம்மா என்று... இப்படிப் போனால் அதிக காலம் நான் இருக்க மாட்டேன். உங்களுடைய மாநாடெல்லாம் முடிஞ்சு வர்றப்போ, என் கல்லறையைத்தான் பார்ப்பீங்க...'
நான் கடிதத்தை வாசித்து திருப்பிக் கொடுத்தேன். மனதிற்குள் ஏதோவொரு வேதனை கடந்து சென்றது. ஒரு குழந்தை அபூபக்கர் அவனுடைய உம்மாவின் கழுத்தைக் கட்டிப் பிடித்தவாறு, 'வாப்பாவுக்கு என்ன ஆனது, உம்மா?' என்று கேட்பதை நான் கேட்டேன்.'
அபூபக்கர் என்னை நோக்கி திரும்பியவாறு கேட்டார். 'எல்லாம் புரிந்ததா? அவளுக்கு சமஸ்கிருதத்தில் நல்ல பாண்டித்யம்.' அவர் குலுங்கிக் குலுங்கி சிரித்தார். அப்போதும் கண்ணில் ஆழமான நீல நிறம் இருந்தது.
நான் எதுவும் கூறவில்லை. அவர் பேரமைதியுடன் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தார்.
'அபூபக்கர் ... நீங்கள் நாளை செல்லுங்கள். முடிந்த வரைக்கும் சீக்கிரம் திரும்பி வந்தால் போதும்.'
'டேய் சைத்தான். இந்த அறுநூறு ஆட்கள்?'
நான் எதுவும் கூறவில்லை.
திடீரென்று அவர்களுடைய கோஷ சத்தங்கள் கேட்டன. சூழலை அவை குலுக்கின. அவர்கள் பொதுக் கூட்டம் நடக்கும் இடத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
'நாம் போக வேண்டாமா?'
'பிறகு?'
நாங்கள் வெளியேறி நடந்தோம். ஒரு பத்து அடிகள் நடந்ததும் ஒரு கார் எங்களுக்கு எதிரில் வந்தது. எங்களைப் பார்த்ததும் அது நின்றது. போலீஸ் இன்ஸ்பெக்டர் இறங்கி வந்தார். எங்களுக்கு அரெஸ்ட் வாரண்ட்டைக் காட்டினார். காரில் ஏறும்படி கூறினார்.
நாங்கள் சிறையறைக்குள் தரையில் அமர்ந்திருந்தோம். பேரமைதி... பல வகையான சிந்தனைகள் மனதிற்குள் வேகமாக ஓடின. அபூபக்கரின் கண்ணில் மீண்டும் அந்த ஆழமான நீலநிறம் தோன்றியது. நிமிடங்கள் மெதுவாக கடந்து சென்றன. இன்னும் எவ்வளவு காலம் இந்த சிறையின் அறைக்குள் இருக்க வேண்டியதிருக்கும்? எவ்வளவு ஆட்கள் அந்த லாக்-அப் அறையில் இருந்து சென்றிருப்பார்கள்? இன்னும் எவ்வளவு பேர் இருக்க வேண்டும்? அந்த இருட்டில் இரண்டு இதயங்கள் முடிவற்ற காலத்திற்குள் அந்த வகையில் பயணித்துக் கொண்டிருந்தன - ஆதி மனிதனிலிருந்து இறுதி மனிதன் வரை...
அழுத்தி வைக்கப்பட்ட இதயத்திலிருந்து தேம்பித் தேம்பி அந்த அழுகை மீண்டும் வெளியே வந்தது : 'நீங்கள் என்னை மறந்து விட்டீர்களா?'
'தாமு, நீ என்ன சிந்திக்கிறாய்? உன் பெண்ணைப் பற்றியா?'
'இல்லை ...'
'என் பெண்ணைப் பற்றியா?'
'ஆமாம்...'
'டேய் சைத்தான் ... அவள் 'கப'ருக்குள் (கல்லறை) இருந்தவாறு ஐந்து தடவைகள் தொழுவாள்... என் மீது அன்பு செலுத்துவாள்...
நான் எதுவுமே கூறவில்லை, அப்போதும் கோஷங்கள் மிதந்து வந்து, எங்களுடைய சிறையின் சுவர்களை அதிரச் செய்து கொண்டிருந்தன. அறுநூறு ஆன்மாக்கள் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன!