வளர்ப்பு மகள்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6969
அந்தக் கொலை வழக்கு விசாரணையின் கடைசி நாள் அது. பிரபலமான அந்த வழக்கைப் பார்ப்பதற்காக நீதிமன்றத்தில் நிறைய மக்கள் கூடியிருந்தார்கள்.
குற்றம் சாட்டப்பட்டவன் செய்த குற்றத்தை நிரூபிப்பதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் இரண்டு மணி நேரம் தன்னுடைய வாக்கு சாதுர்யத்தைக் காட்டிப் போராடினார்.
குற்றம் சாட்டப்பட்ட மனிதன் குற்றம் செய்தவனா, இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக பெருமதிப்பிற்குரிய நீதிபதி ஜுரிமார்களுக்கு அரை மணிநேரம் அனுமதித்தார். அவர்கள் தங்களுக்குள் கலந்து பேசுவதற்காக பக்கத்திலிருந்த அறைக்குள் போனார்கள்.
ஜுரிமார்கள் மீண்டும் வந்து கூடினார்கள். குற்றம் சாட்டப்பட்ட மனிதன் கொலை செய்தது உண்மைதான் என்று அவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.
நீதிபதி தீர்ப்பு சொல்வதற்காக வழக்கை அடுத்த நாளுக்கு மாற்றி வைத்தார். இரண்டு போலீஸ்காரர்கள் குற்றம் சாட்டப்பட்ட சங்கரனைக் கையில் விலங்கு மாட்டி குற்றவாளிக் கூண்டைவிட்டு வெளியில் இறக்கி, அவனைத் திரும்பவும் சிறைக்குக் கொண்டு சென்றார்கள்.
"அதோ போறான்ல, அவன்தான் கொலை செய்த ஆளு. குறைஞ்சது பத்து தடவையாவது அவனைத் தூக்குல தொங்க விட்டாத்தான் நல்லா இருக்கும்." “சின்ன பொண்ணைக் கொலை செய்த அந்த மகாபாவியை உயிரோட தோலை உரிச்சு நெருப்பில போட்டு பொசுக்கணும்"- இப்படி அங்கு குழுமியிருந்த ஒவ்வொருவரும் மனதில் பயங்கர கோபத்துடன் குற்றம் சாட்டப்பட்ட ஆளைப் பார்த்துப் பேசினார்கள்.
நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதைப் பார்க்க வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் வேட்டி மட்டும் கட்டியிருந்த கிராமத்து மனிதர்கள். சாதாரண ஒரு சிறு கிராமமான பதியனூரை உலகமெங்கும் தெரிய வைத்த கொலை வழக்கு அது. அப்பிராணி விவசாயிகள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த கிராமத்தில் அதற்கு முன்பு ஒரு கொலைச் சம்பவம் நடந்ததாக இதுவரை யாரும் காதால்கூட கேட்டதில்லை. ஆனால், இப்போது மிகப் பெரிய அந்தக் கொலை வழக்கில் அந்த ஊர்க்காரர்கள் சாட்சி சொல்லவேண்டிய சூழ்நிலை உண்டாகியிருக்கிறது. பதியனூரில் ஒரு பழமையான குடும்பம் 'பாலியாட்டு'. அந்த ஊரின் பெரிய ஜமீந்தார்கள், லட்சாதிபதிகள் அனைவரும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நொடிந்து நொடிந்து, கடைசியில் இப்போது 'ராவ்பகதூர் ராமனுண்ணி' மட்டும்தான் அந்தப் பரம்பரையைச் சேர்ந்த ஒரே ஆணாக இருக்கிறார். ராவ் பகதூர் முன்பு அரசாங்க உத்தியோகத்தில் இருந்து நல்ல வசதியுடன் வாழ்க்கையை நடத்தியவர். ஐந்து மைல் தூரத்திலிருக்கும் பெரும்பாலான வயல்களும் நிலங்களும் தோட்டங்களும் 'பாலியாட்டு' குடும்பத்திற்குச் சொந்தமானவையே.
சாதாரண ஜமீந்தார்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ராவ்பகதூர் ஒரு இரக்க குணம் கொண்ட மனிதராகவும் வறுமையில் உழலும் மக்கள் மீது கருணை கொண்டவராகவும் இருந்தார்.
ராவ்பகதூர் ராமனுண்ணியின் மகள் அம்புஜம் அந்த ஊர்க்காரர்களின் அன்பிற்குரிய பெண்ணாக இருந்தாள். ஒரு வன தேவதையைப் போல அந்தச் சிறுபெண் எல்லா ஏழைமக்கள் வீடுகளுக்கும் செல்வாள். அவளை ராவ்பகதூர் 'என் செல்லக் கண்ணு' என்றுதான் அழைப்பார். அவர் அப்படி அழைப்பதைப் பார்த்து ஊர்க்காரர்கள் எல்லோரும் அவளை அப்படியே அழைக்க ஆரம்பித்தார்கள். 'செல்லக்கண்ணு' அந்த ஊரில் உள்ள எல்லோருக்குமே கண்ணில் தெரியும் லட்சுமியாக இருந்தாள்.
ராவ்பகதூரின் வளர்ப்பு மகள் தான் அந்த செல்லக்கண்ணு. இந்த உண்மை அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.தனக்கு குழந்தை எதுவும் இல்லாமற் போனதால், ராவ் பகதூர் சிறு குழந்தையாக இருந்தபோதே அவளைத் தத்து எடுத்துக் கொண்டார்.
ஒரு நாள் அதிகாலை வேளையில் பயங்கரமான ஒரு செய்தியைக் கேட்டுத்தான் பதியனூர் மக்களே படுக்கையை விட்டு எழுந்தார்கள். ஊர் மக்களின் அன்பிற்குப் பாத்திரமாக இருந்த அந்தச் 'செல்லக்கண்ணு'வை யாரோ கொலை செய்துவிட்டார்கள். பாலியாட்டு குடும்பத்தைச் சேர்ந்த வேலைக்காரர்கள் அவளுடைய அறை திறந்து கிடந்ததாகவும், அவள் கட்டில் மீது இறந்து கிடந்ததாகவும் சொன்னார்கள். ராவ்பகதூர் தன் நெஞ்சில் அடித்தவாறு அழுது கொண்டே அறைக்குள் வந்து தன் மகளின் இறந்துபோன உடம்பை கட்டிப் பிடித்தவாறு மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார். அடுத்த சில நிமிடங்களில் அவர் அதிகாரிகளுக்கு விஷயத்தைச் சொல்லி அனுப்பினார். போலீஸுக்குத் தகவல் கொடுப்பதற்காக ஆட்கள் சென்றார்கள். போலீஸ்காரர்கள் வந்து பரிசோதித்துப் பார்த்துவிட்டு, ஒரு துணியை அந்தப் பெண்ணின் கழுத்தில் சுற்றி கொலை செய்திருப்பதாகச் சொன்னார்கள். அறையைச் சோதனை செய்ததில் அலமாரியில் இருந்த அந்தப் பெண்ணுக்குச் சொந்தமான சிறு நகைப்பெட்டி காணாமல் போயிருப்பது தெரிந்தது.
அந்தப் பெண்ணின் இறந்துபோன உடலைச் சோதனை செய்த டாக்டர், பெண் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவளை யாரோ பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்று சொன்னார்.
போலீஸ்காரர்கள் எல்லா இடங்களிலும் கொலை செய்த ஆளைத் தேடினார்கள். சந்தேகத்தின் பெயரில் பலரைக் கைது செய்தார்கள். ஆனால், தேவையான ஆதாரங்கள் கிடைக்காததால் அவர்களை விடுவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. கொலைகாரனைப் பிடிப்பதற்கு உதவக்கூடிய ஆதாரத்தைத் தருகின்றவர்களுக்கு நூறு ரூபாய் பரிசாகத் தருவதாக ராவ்பகதூர் அறிவித்தார். அதன் விளைவாகவோ என்னவோ இக்கோரன் என்ற ஒருவன் போலீஸ்காரர்களிடம் சென்று, கொலைச்சம்பவம் நடைபெற்ற நாளன்று இரவு சுமார் ஒரு மணி அளவில் மலைப் பகுதியிலிருக்கும் சங்கரன் பாலியாட்டு வீடு இருக்கும் இடத்தை விட்டு ஓடிப்போகும் போது தான் பார்த்ததாகச் சொன்னான். இக்கோரன் அன்று கிழக்கு சந்தைக்குப் போய்விட்டு திரும்பிவந்து கொண்டிருந்தான்.
அவ்வளவுதான். அடுத்த நிமிடம் போலீஸ்காரர்கள் மலைப்பகுதியில் குடியிருக்கும் சங்கரனைத் தேட ஆரம்பித்தார்கள். சங்கரன் இளம் வயதிலேயே ஊரை விட்டுப் போய் விட்டான். ரங்கூனில் சில வருடங்கள் வசித்து விட்டு, ஊருக்கு வெறும் கையுடன் திரும்பிவந்த மனிதன் அவன். பதியனூரில் தூரத்து சொந்தமென்று இருந்த ஒரு ஆளைத் தவிர, வேறு யாரும் அவனுக்கு இல்லை. பதியனூருக்கு அவன் திரும்பி வந்தே ஒரு மாதம்தான் ஆகிறது. மக்களின் ரசனையோடு ஒத்துப்போகிற ஒரு இளைஞனாக அவன் இருந்தான். ரங்கூனில் உள்ள விசேஷங்களைக் கூறிக்கொண்டு, கண்ணில் படுபவர்களெல்லாம் வாங்கித்தரும் ஓசி தேநீரையும், பீடியையும் அனுபவித்துக் கொண்டு அதற்குமேல் வேறு எந்த இலட்சியமும் இல்லாமல் அவன் தன்னுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான்.
ஆனால், போலீஸ்காரர்களால் சங்கரனைப் பார்க்க முடியவில்லை. அவன் எங்கோ போய்விட்டிருந்தான். அவன் அப்படிச் செய்தது. அவர்களின் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. அவர்கள் ரகசியமாக தேடியதன் விளைவாக சங்கரனை அவர்களால் மட்டனூரில் கைது செய்ய முடிந்தது.