வளர்ப்பு மகள் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6975
அதிக நேரம் என்னால் அப்படியே படுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவளை மீண்டும் போய் பார்க்க வேண்டும் என்றொரு ஆசை மனதில் பிறந்தது. கொலை செய்யும் நபர்களுக்கு பொதுவாகவே கொலை நடந்த இடத்தின்பால் ஒரு ஈர்ப்பு கட்டாயம் இருக்கும் என்ற மனரீதியான தத்துவத்தை நான் முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு எண்ணம் எனக்கு உண்டானது.
நான் மெதுவாக நடந்து சென்று பார்த்தேன். இல்லை. எந்தவொரு அசைவுமில்லை. அந்த உடலைத் தொட்டுப் பார்த்தபோது பனிக்கட்டியைப் போல குளிர்ந்து போயிருந்தது. அந்தப் பிணத்தை அப்படியே அங்கு போட்டிருப்பது நல்லதல்ல என்று எனக்குப்பட்டது. அவளை நெரித்துக் கொன்ற அவளின் முண்டை விரித்து அதனால் அவளை நன்றாக மூடினேன். இனிமேல் உள்ளதை போலீஸ்காரர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று மனதிற்குள் தீர்மானித்தவாறு நான் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். போலீஸ்காரர்கள் நிச்சயம் என்னைச் சந்தேகப்பட மாட்டார்கள் என்பது மட்டும் உண்மை.
11- இன்று காலையில் நான் நல்லவனைப் போல நடித்தேன். போலீஸ்காரர்கள் மிகவும் தீவிரமாக விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களால் உண்மையான கொலைகாரனைக் கண்டுபிடிக்க முடியுமா என்ன? அந்தக் கொலைக்குப் பின்னால் எவ்வளவு சுவாரசியமான விஷயங்களெல்லாம் இருக்கின்றன? அவளுடைய நகைப் பெட்டியை யார் எடுத்துச் சென்றது? அது இன்னொரு ரகசியம்.
13- கொலைகாரனைப் பிடிப்பதற்கான ஆதாரங்களைத் தருபவர்களுக்கு 100 ரூபாய் பரிசு தருவதாக நான் விளம்பரம் செய்தேன்.
14- பயங்கரமான கனவுகள் என்னுடைய தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தன. என்னுடைய மெத்தையின் தலைப்பகுதியில் கழுத்தில் ஒரு முண்டு சுற்றப்பட்ட பிணம் எல்லா நேரத்திலும் வந்து நிற்பதைப் போல் நான் உணர்ந்தேன்.
16- நான் படுக்கையறையை மாற்றினேன்.
அக்டோபர் 2- அவர்கள் சங்கரனைக் கைது செய்திருக்கிறார்கள். அது உண்மையிலேயே ஆச்சரியமான ஒரு செய்திதான். சம்பவங்களின்
தொடர்ச்சியில் யாருமே நினைத்திராத ஒரு கட்டம் அது என்பது மட்டும் உண்மை. அதாவது சிறிதும் எதிர்பார்த்திராத ஒரு திருப்பம் அது. விதி என்ற ஒன்று எனக்கு உதவப் போகிறதா? இல்லாவிட்டால் என்னை அழிக்கப் போகிறதா என்பது எனக்கே தெரியவில்லை. ஹா! சங்கரன்- மலைப்பகுதியில் இருக்கும் சங்கரன்- அவன் என்னுடைய மகன். ஆனால், அந்த ரகசியம் யாருக்கும் தெரியாது. இருபது வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டில் வேலைக்காரியாக இருந்த அம்முவிற்கு என் மூலம் பிறந்தவன்தான் அவன். அம்மு கர்ப்பம் தரித்தபோது கல்வேலை செய்யும் வேலுவிற்கு 100 ரூபாய் லஞ்சம் கொடுத்து அவனை அம்முவிற்குத் தாலி கட்ட வைத்தேன். பிரசவமானவுடன் அம்மு இறந்துவிட்டாள். கல்வேலைக்காரன் வேலுவிற்கு மட்டுமே அந்த ரகசியம் தெரியும். ஒரு நாள் இரவும் நானும் வேலுவும் மது அருந்தச் சென்றோம். அவனுக்கு அளவுக்கு அதிகமாக மதுவை நான் ஊற்றிக் கொடுத்தேன். திரும்பி வரும்போது அவனை நான் அடித்துக் கொன்று தெற்குப் பக்கமிருந்த கல் எடுக்கப்பட்ட குழிக்குள் போட்டு மூடினேன். இப்போதுகூட அவனுடைய எலும்புக்கூடு அங்குதான் இருக்கிறது. அந்த ரகசியம் எனக்கு மட்டுமே தெரியும். சங்கரன் சிறு வயதிலேயே ஊரைவிட்டுப் போகாமலிருந்தால், நான் அவனை நன்றாக கவனம் செலுத்தி வளர்த்திருக்கவோ, தத்து எடுக்கவோ செய்திருப்பேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவன் திரும்பி வந்த விஷயம் எனக்குத் தெரியவே தெரியாது.
11. சங்கரன் சம்பவம் நடந்த நாளன்று இரவு இங்கு வந்ததாக நீதிமன்றத்தில் சொன்னான். அவளுடைய நகைகளைத் திருடுவதற்காக அவன் வந்திருக்க வேண்டும். அந்தக் கொலைச் சம்பவம் நடந்த பிறகு அவன் வந்திருக்கிறான் என்பதை யூகிக்க முடிகிறது.
12. நான் எதற்காக வாழ வேண்டும்? இரண்டு கொலைகளுக்கு காரணமாக இருந்தவன் நான் என்பதை ஒப்புக் கொள்ளவா?
13. ஒரு விஷயத்தை நான் இங்கு சொல்லியாக வேண்டும். மன அமைதியுடன் என்னால் இனிமேல் இந்த வேடத்தில் வாழ்வது என்பது கஷ்டமான ஒரு விஷயமே. நான் எனக்குள் யாருக்குமே தெரியாமல் மறைத்து வைத்த ரகசியங்கள், பாவச் செயல்கள் காலப்போக்கில் இதோ வேரிட்டு முளைத்து உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது. என்னைக் கேவலப்படுத்தி அழிப்பதற்கு முன்பு நானே இறந்துவிட விரும்புகிறேன்.
17. ஆமாம்... வாழ்க்கை என்பது எதற்கு? எல்லாமே பைத்தியக்காரத்தனம்! பைத்தியக்காரத்தனம்! படைத்த கடவுளின் பைத்தியக்காரத்தனத்தால்தான் இந்த உலகமே உண்டாகியிருக்கிறது...
16. சொந்த மனதைப் போல தொந்தரவு தரக்கூடிய வேறொன்று உலகத்தில் இல்லை. எனக்குள் இருந்து என்னை பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் சிந்தனைகளை இனிமேலும் பொறுமையாக என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மரணம்! அந்த நிரந்தர அமைதியை நான் விரும்புகிறேன். அதை நோக்கி நான் என் கைகளை நீட்டுகிறேன். வன்முறையைப் பயன்படுத்தித் தான் நான் என்னுடைய சொத்துக்கள் முழுவதையும் சம்பாதித்திருக்கிறேன். என்னுடைய அனுபவத்திலிருந்து நான் இதைச் சொல்லுகிறேன். தவறான பாதைகளில் போகாமல் தேவைக்கதிகமாக யாராலும் வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க முடியாது. இனிமேல் அப்படிப்பட்ட வன்முறை வழிகளை வாழ்க்கையில் நான் பின்பற்றப் போவதில்லை. தற்கொலை! அது மரணத்தின் அமைதி மீது நான் செய்யும் ஒரு வன்முறையாக இருக்கும்.
17- நேற்று இரவு முழுவதும் நான் அழுது கொண்டேயிருந்தேன். நான் வாழ்க்கையில் இதுவரை செய்த எல்லா பாவச் செயல்களும் திரையை நீக்கிக் கொண்டு என்னை வெறித்துப் பார்க்கின்றன. அந்த காதல் சம்பவமும்தான்... அய்யோ... என்னால் அதற்கு மேல் நினைக்க முடியவில்லை.
18- வாழவும், மரணத்தைத் தழுவவும் முடியாத ஒரு இக்கட்டான நிலையை விட மோசமான ஒன்று வாழ்க்கையில் இருக்கிறதா?
19- இரண்டு மாதங்களாக இரவு நேரங்களில் சிறிதுகூட தூக்கமில்லாமல் என் வாழ்க்கை வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.
21- இப்படி பல பைத்தியக்காரத்தனமான செயல்களையும், பாவங்களையும் நான் வாழ்க்கையில் செய்ததற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி ஆலோசித்துப் பார்த்தபோது ஒரு விஷயம் எனக்கு நன்றாகத் தெரிந்தது. பணவசதி கொண்ட மனிதனாக ஆனபோது, நான் எல்லோருக்கும் கடவுளாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், நான் பிணத்தைத் தின்னும் ஒரு சுடுகாட்டு பிசாசாக காலப்போக்கில் மாறிப் போனேன். ஒரு சாதாரண மனிதன் அனுபவிக்கிற சுகங்களைப் பார்த்து எனக்கு வெறுப்பாக இருந்தது. பணக்காரன் என்ற பைத்தியக்காரத்தனமான நினைப்பு என்னிடம் சதா நேரமும் ஓடிக்கொண்டிருந்ததால், அந்த என் அந்தஸ்தை வைத்து எப்படிப்பட்ட கீழ்த்தரமான செயல்களையும் செய்ய நான் தயாராகி விட்டேன்.