வளர்ப்பு மகள் - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6975
அழகான பெண்கள் எனக்கு சுகம் தரவில்லை. நல்ல உணவு வகைகள்கூட எனக்குச் சுவையாகத் தோன்றவில்லை. எனக்குள் இருந்த ஆர்வம் எல்லைகளைத் தாண்டி தவறான பாதைகளை நோக்கி செல்ல ஆரம்பித்தது. பழுத்த பழங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. அதற்கு மாறாக கெட்டுப்போன பழங்கள், இல்லாவிட்டால் கசக்கக்கூடிய இளம் காய்கள்! பிணம் இல்லாவிட்டால் குழந்தை! குற்றம் செய்ய வேண்டும் என்ற வெறி மனம் முழுக்க தலை கீழான சுக வேட்கை! அவை என்னை மிகவும் பாதித்துவிட்டன. அவற்றைச் செய்வதற்காக நான் மனப்பூர்வமாக ஆசைப்பட்டேன். பிணத்தைத் தின்னும் நாய்களுக்குப் பிடிப்பதைப் போல பணக்காரர்களுக்கும் ஒரு வகை பைத்தியம் பிடிப்பது உண்டு. அந்த பைத்தியக்காரத்தனத்தின் விளைவுகள்தான் என்னுடைய சகலவிதமான கெட்ட செயல்களும். திருந்துவதற்கான வழி சிறிதும் இல்லாமல் நான் முழுமையாகக் கெட்டழிந்து விட்டேன். மரணத்தில் மூழ்கினால் மட்டுமே எனக்கொரு நிம்மதி கிடைக்கும். ஆனால், பணக்காரர்களை ஆக்கிரமிக்கும் இந்தப் பெரிய வியாதியைப் பற்றி உலகத்திற்கு நன்கு தெரிய வைத்த பிறகே நான் மரணத்தைத் தழுவுவேன். என்னுடைய நண்பர்களே, பணக்காரர்களே… முதலாளிமார்களே... அமைதியான மனதுடன் நான் மரணமடைய வேண்டும்.
25- சங்கரன் குற்றவாளி என்று ஒரே குரலில் ஜுரிமார்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அவனை நாளை நீதிபதி தூக்கில் தொங்கவிடச் சொல்லி தீர்ப்பு சொல்லப் போவதும் உறுதி. கடைசி தீர்மானம் எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. நள்ளிரவு தாண்டிவிட்டது. இரண்டு மணி நேரத்தில் நான் இந்த விஷயங்களை எழுதுகிறேன். ஒருவேளை இதுவே என்னுடைய கடைசி எழுத்தாகக்கூட இருக்கலாம். காரணம்- நாளை நீதிமன்றத்திற்குச் சென்று என்னுடைய குற்றங்களை ஒப்புக்கொள்ள நான் தெளிவாகத் தீர்மானித்து விட்டேன். என்னுடைய சொத்துக்கள் முழுவதையும் சங்கரனுக்கு எழுதியும் வைத்துவிட்டேன்.
கடைசியாக இரண்டு வார்த்தைகள் எழுத நான் விரும்புகிறேன். நான் செய்த எத்தனையோ கெட்ட செயல்களில் ஒன்று என் செல்லப் பெண்ணை பலாத்காரம் செய்ததும், அவளைக் கழுத்தை நெரித்துக் கொன்றதும். அப்படி நான் செய்தது என் குற்றமல்ல. பணக்காரத்தனம்தான் என்னை அப்படியொரு செயலுக்குத் திருப்பிவிட்டது; அந்தச் செயலை என்னைச் செய்ய வைத்தது. அனுபவிப்பதற்கு உலகத்தில் வேறு சுகங்களே இல்லை என்ற நிலை உண்டாகும்போது, இயற்கைக்கு விரோதமான சுகங்களைத் தேடி பின்னால் அலைய அநியாய வழிகளில் சம்பாதித்த பணமும், சுயநலப் பாசி பிடித்த குணமும் சம்பந்தப்பட்ட பணக்காரனைத் தூண்டி விடுகின்றன. சட்டமென்ற பாம்பின் விஷத்தை ஒன்றுமில்லாமல் செய்யக்கூடிய பணம் என்ற மருந்து என் கையில் இருக்கும் காலம் வரையில் எப்படிப்பட்ட மோசமான செயல்களைச் செய்யவும் நான் தயங்க மாட்டேன். பணக்காரன், முதலாளி என்று எடுத்துக் கொள்ளும்போது அது நல்லதும் அல்ல, கெட்டதும் அல்ல. எல்லாமே ஒரே வகையில் சேர்ந்ததுதான். அது அதிகமாக இருக்கலாம். இல்லாவிட்டால் குறைவாக இருக்கலாம். அவ்வளவு தான். அழகான உறைக்குள் மறைந்திருக்கும் திருட்டுத்தனம், வஞ்சனை, சுயநலம், பொறாமை, மோசடி- இதுதான் முதலாளி... பணக்காரன். இவனை வளர அனுமதிக்கவே கூடாது. அப்படி அனுமதித்ததால் இவன் சமுதாயத்தின் நல்ல வாழ்க்கைக்குள் வெடி குண்டை மறைத்து வைப்பான். உலகத்தின் வளர்ச்சிக்கு குந்தகம் செய்வான். ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் கேடு நினைப்பான். மானிட ஒழுக்கத்தை அழிக்க நினைப்பான். நாட்டை ஒன்றுமில்லாமல் ஆக்கப் பார்ப்பான். அது மட்டும் உண்மை.
இப்படி ராவ்பகதூரின் சொந்த டைரி சுவாரசியமான பல உண்மைகளையும், தத்துவங்களையும் கொண்டிருந்தது. ஆனால், ஒரு மாதம் கழித்து, ஒரு சுபமுகூர்த்த வேளையில் அவரை கண்ணூர் சிறையில் தூக்கில் தொங்கவிட்டார்கள்.