தேநீர்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 7116
அப்பாவுக்கு வயதாகிவிட்டது. தலைமுடி முழுவதும் நரைத்துவிட்டது. தொடர்ந்து சவரம் செய்யாமல் இருந்ததால், முகம் முழுவதும் நரைத்த சிறுசிறு உரோமங்கள் காணப்பட்டன. அது முகத்திற்கு ஒரு பரிதாப வெளிப்பாட்டை உண்டாக்கி விட்டிருந்தது. எப்போதும் மெதுவாக, வேதனையைத் தரும் குரலில்தான் அவர் பேசுவார்.
எல்லா நாட்களிலும் மதிய வேளையில் நீண்ட நேரம் படுத்துத் தூங்குவது என்பது அப்பாவின் ஒரு குணமாக இருந்தது. தன் அளவிற்கு வயதைக் கொண்ட- வினோதமான கலைவேலைப்பாடுகள் கொண்ட அந்தக் கட்டிலின் ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தவாறு, பாதி மூடிய கண்களுடன் அப்பா உறங்கிக் கொண்டிருந்தார். மாலை நேரத்தில் பள்ளிக்கூடம் விட்டு, பிள்ளைகள் வந்து ஆரவாரங்கள் உண்டாக்கியபோதுகூட அப்பா கண் விழிக்கவில்லை. இறுதியில் அம்மா சென்று குலுக்கிக் கொண்டே அழைத்தாள்: "மணி ஐந்தை தாண்டிவிட்டது.''
அப்பா உடனடியாகத் தூக்கத்திலிருந்து எழுந்தாலும், கண்களைத் திறக்காமலே அந்த இடத்தில் படுத்திருந்தார். தொடர்ந்து ஒரு சுருட்டைப் பற்ற வைத்தார். மெதுவாகப் புகையை விட்டுக்கொண்டே கூறினார்: "நான் எதுவுமே முடியாமல் உறங்கிவிட்டேன். உடலில் என்ன ஒரு அசதி!''
"தேநீர் கொண்டு வரட்டுமா?'' அம்மா கேட்டாள்.
“ம்...''
“நளினி...'' அம்மா உரத்த குரலில் அழைத்தாள்: “அப்பாவுக்கு தேநீர் கொண்டு வா.''
நளினி ஒரு சிறிய டம்ளரில் தேநீர் கொண்டு வந்தாள். நீளமான கண்களைக் கொண்ட, எப்போதும் சமையலறைக்குள்ளேயே வேலை செய்துகொண்டிருப்பதால் சிவந்துபோன முகத்தைக் கொண்டே ஒரு இளம் பெண் அவள். அவளுடைய ஆடைகள் அழுக்கடைந்துபோய் காணப்பட்டன. அவள் சொன்னாள்: “தேநீர் சூடாக இருக்கு!''
தேநீரின் வெப்பம் குறைந்தவுடன், டம்ளரை எடுத்துக்கொண்டு அம்மா கட்டிலின் அருகில் சென்றாள். கண்களை மூடிக்கொண்டு புகைபிடித்துக் கொண்டிருந்த அப்பா கூறினார்: “அங்கே வை. நான் பருகிக் கொள்கிறேன்.''
அம்மா கதவின்மீது சாய்ந்தவாறு அப்பாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அப்படியே கண்களை மூடிக்கொண்டு புகைபிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பாவின் முகம் மேலும் அதிகமாக கவலையில் மூழ்கிக் காணப்பட்டது. அப்பா இடையில் அவ்வப்போது பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார்.
புகைபிடித்து முடிந்த பிறகும், அப்பா படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை. அம்மா ஞாபகப்படுத்தினாள். “தேநீர் ஆறிப்போய் விடாதா?''
அப்பா கட்டிலிலிருந்து எழுந்தார். அவிழ்ந்துபோன வேட்டியை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தபோது, அம்மா தேநீரை எடுத்துக் கொடுத்தாள். தேநீரை ஒரு மடக்கு குடித்துவிட்டு, டம்ளரை அப்பா மேஜையின்மீது வைத்தார். அம்மா கேட்டாள்: “என்ன?''
“ஒண்ணுமில்லை...''
“இனிப்பு இல்லையா?''
“இருக்கு...''
“பிறகு ஏன் குடிக்கவில்லை?'' அம்மா தேநீர் டம்ளரைப் பார்த்துக்கொண்டே கேட்டாள்: “ரொம்பவும் காட்டமா இருக்கா?''
அப்பா அதற்கு பதில் கூறவில்லை. சாளரத்தின் திரைச்சீலையை விலக்கி, வெளியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். மெல்லிய மழையின் சாரல் விழுந்து கொண்டிருந்த தெரு ஆள் அரவமற்று இருந்தது.
ஒரு கரண்டியைக் கொண்டு தேநீரை ருசி பார்த்தபோது, அம்மாவின் முகம் கோணியது. அம்மா அழைத்தாள்: “நளினி...''
ஈரமான கைகளை பாவாடையில் துடைத்துக்கொண்டே நளினி சமையலறைக்குள்ளிருந்து வந்தாள். அம்மா கேட்டாள்: “நீ இதில் சர்க்கரை போடலையா?''
அவள் யோசித்துப் பார்த்தாள். தவறைப் புரிந்துகொண்டதும், முகத்தைக் குனிய வைத்துக்கொண்டு நின்றாள். அவளுடைய முகத்தில் வியர்வைத் துளிகள் காணப்பட்டன. அம்மா சொன்னாள்: “உனக்கு என்ன ஒரு மறதி?''
சமையலறைக்குள் சென்று சர்க்கரை போட்ட தேநீரை திரும்பக் கொண்டு வந்துவிட்டு அம்மா கேட்டாள்: “தேநீர் ஆறிப் போய்விட்டது. நான் சூடு பண்ணட்டுமா?''
“வேண்டாம்...'' சாளரத்தின் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு நின்றிருந்த அப்பா சொன்னார்.
“இதைப் பருகுங்க.''
“நான் பருகிக் கொள்கிறேன் என்று கூறினேன் அல்லவா.'' - அப்பா சுருட்டின் நுனியிலிருந்த சாம்பலைத் தரையில் தட்டிவிட்டார்.
சர்க்கரை போட்ட, ஆற ஆரம்பித்திருந்த தேநீர் மேஜைமீது இருந்தது. மீண்டும் சுருட்டைப் பற்ற வைத்து, சாளரத்தின் அருகில், அப்பா வெளியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். எவ்வளவு வற்புறுத்தியும், அதை அவர் பருகுவதற்குத் தயாராகயில்லை. வற்புறுத்தல் தொடர்ந்தபோது, அப்பா சொன்னார்: “நீ ஏன் என்னைத் தொல்லைப்படுத்துகிறாய்? எனக்கு விருப்பம் இருக்கும்போது நான் குடித்துக் கொள்வேன்.''
“ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறீர்கள்? அவள் சர்க்கரை போட மறந்துவிட்டாளே!'' அம்மா வருத்தத்துடன் சொன்னாள்.
அப்பா எதுவும் கூறவில்லை. தேநீரைக் கையில் எடுத்தவாறு அம்மா சொன்னாள். “இதைக் குடிக்கவில்லையா?''
தேநீரைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு அப்பா சொன்னார்: “மறந்தாச்சா? நீங்கள் இதையெல்லாம் எப்படி மறக்கிறீர்கள்? உங்களுக்கு என்மீது அந்த அளவிற்குத்தான் அக்கறை இருக்கு!'' அப்பா புகையை நாசியின் துவாரங்கள் வழியாக வெளியேவிட்டார். அம்மா எதுவும் பேசாமல் இருக்க, அப்பாவோ தொடர்ந்து சொன்னார்: “சமீபத்தில் சுருட்டு தீர்ந்தவுடன் நான் நூறு முறை சொன்னேன். ஆனால், நீ காதில் வாங்கினாயா? காலையில் டாக்டர் வந்தபோது, ஒரு நாற்றமெடுத்த வேட்டியைக் கொண்டு வந்து என்னை அணியச் சொன்னாய் அல்லவா? இவையெல்லாம் மறதியால் உண்டானவைதான். எல்லா விஷயங்களையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.''
“டாக்டர் திடீரென்று வருவார் என்று நான் நினைக்கவேயில்லை. வரும்போது வேட்டியை எடுத்துத் தருவோம் என்று மனதில் நினைத்திருந்தேன். இவையெல்லாம் அறிந்துகொண்டே செய்யும் செயல்களா?'' அம்மா தலையை குனிந்துகொண்டே சொன்னாள்.
“அனைத்து விஷயங்களும் நீங்கள் தெரிந்துகொண்டே செய்பவைதான். நான் அழுக்கடைந்த வேட்டியை அணிந்துகொண்டு நடந்தால் உங்களுக்கு என்ன? நான் தேநீர் பருகுவதையும் சுருட்டு புகைப்பதையும் செய்யாமல் இருந்தால், அதுவும் உங்களுக்கு லாபம்தான்.''
“இப்படியெல்லாம் பேசாதீங்க....'' அம்மாவின் கண்கள் ஈரமாயின. அம்மாவின் முகத்தில், நரைக்க ஆரம்பித்திருந்த தலைமுடிகள் விழுந்து கிடந்தன. ஏராளமான கவலைகளை மனதில் வைத்துக்கொண்டு நடந்து திரியும் அம்மாவின் கண்கள் ஈரத்தை வெளியே காட்டின.
சிதறிக் கிடந்த தலைமுடியை சரிப்படுத்தி கொண்டு அம்மா சாளரத்தின் வழியாகப் பார்த்தாள். மழை பெய்து ஈரமாகிவிட்டிருந்த தெருவின் வழியாக கையில் கொஞ்சம் தாள்களை வைத்துக்கொண்டு மகன் நடந்துவந்து கொண்டிருந்தான். தன் தந்தையைப்போல ஒரு பக்கமாக சாய்ந்துகொண்டு, ஒரு தனித்துவத்துடன் நடந்துவந்து கொண்டிருந்த மகனை அம்மா பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அம்மா சொன்னாள்: “ரவி வருகிறான்.''
தாள்களை மேஜையின்மீது பத்திரமாக வைத்துவிட்டு, வியர்வையை ஒற்றிக்கொண்டே நடந்து வந்த அவன் சொன்னான்: “அம்மா, தேநீர் தாங்க...'' தன் தந்தையின் அறைக்குள் சென்று ஒரு பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு ரவி சொன்னான்: “அப்பா, உங்களுடைய சுருட்டு...''