Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

தேநீர் - Page 3

Theneer

கைகளால் தன்னுடைய முகத்தைத் தாங்கிக்கொண்டு அம்மா தேம்பித் தேம்பி அழுதாள். அந்த சத்தத்தைக் கேட்டதும், அப்பா தன் தலையை உயர்த்தினார். அம்மாவின் கண்ணீர் அரும்பிய கண்களைப் பார்த்துக்கொண்டே அப்பா கேட்டார். “ஏன் அழுகிறாய்?''

“உன் கண்ணீரைப் பார்த்தோ, உன் மகனின் நியாய வார்த்தைகளைக் கேட்டோ நான் அதிர்ந்து போய்விடமாட்டேன். நீங்கள் கூறுவதைக் கேட்டு அதன்படி நான் வாலை ஆட்டிக்கொண்டிருப்பேன் என்று நினைத்தீர்களா? இது என்னுடைய வீடு. நான் கஷ்டப்பட்டு உழைத்து உண்டாக்கிய வீடு. இங்கு இருப்பவர்கள் நான் கூறியதைப் பின்பற்றி நடக்க வேண்டும். எனக்கு முன்னால் நின்றுகொண்டு சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்கக் கூடாது.''

அம்மா எதுவுமே பேசாமல் கலங்கிப்போன கண்களுடன் தரையையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். மகனும் எதுவும் பேசவில்லை. அவனுடைய எல்லா முயற்சிகளும் வீணாகிவிட்டிருந்தன. முகத்தைத் தடவிக்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த மகனைப் பார்த்து அப்பா கேட்டார்: “என்ன... எதுவும் பேசாமல் இருக்கே? கிழவனை எப்படி வீட்டை விட்டு வெளியேற்றலாம் என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பாய். அப்படியென்றால்... அதற்காக எந்தச் சமயத்திலும் ஆசைப்பட வேண்டாம்டா. நான் இந்த வீட்டில்தான் சாகும்வரை கிடப்பேன். புரியுதா?''

“புரிந்தது....'' தாங்கிக்கொள்ள முடியாமல் மகன் சொன்னான்: “அப்பா, அம்மாவின் கண்ணீரை நீங்க குடிக்கணும்னு நினைக்கிறீங்களா? நாங்கள் ஒரு நாளாவது நிம்மதியாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அப்பா, உங்களுக்கு என்ன வேணும்? மனைவியையும் பிள்ளைகளையும் அடித்து விரட்டிவிட்டு, தனியாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் அப்பா, நீங்க சொல்லுங்க...''

மகன் தன் கைகளைப் பிணைத்து பிசைந்துகொண்டே, அடுத்த நிமிடமே அறையை விட்டு வெளியேறி, படிகளில் இறங்கி இருள் விழுந்திருந்த தெருவின் வழியாக, ஒருபக்கமாக சற்று சாய்ந்து ஒரு தனித்தன்மையுடன் நடந்து சென்றான். அப்பா பாதி எரிந்துவிட்டிருந்த சுருட்டை சாளரத்தின்மீது வைத்துவிட்டு, தன் முகத்திலிருந்த ரோமங்களைத் தடவிக்கொண்டே வாசலில் போய் நின்றார்.

நீண்ட நேரம் தூணின்மீது சாய்ந்தவாறு சிந்தனையில் மூழ்கியிருந்த அப்பா மெதுவாக சாய்வு நாற்காலியை விரித்தார். மேலும் ஒரு சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டு, அதில் படுத்தவாறு நனைந்து போய்விட்டிருந்த விளக்கு கம்பங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். மழை மெதுவாக அதிகமானது. திடீரென்று வாசலில் நீர் அதிகமாக நிறைந்து கொண்டிருந்தது. அந்த நீரில் பெரிய குமிழ்கள் தோன்றிய நிமிடத்திலேயே அழிந்து கொண்டிருந்தன.

மழை முற்றிலும் நின்ற நேரத்தில், மகன் திரும்பி வந்தான். அவனுடைய உடைகள் நனைந்திருந்தன. தலைமுடியிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. சாய்வு நாற்காலியில் சாய்ந்து படுத்திருந்த அப்பாவையோ, கைகளில் முகத்தை வைத்தவாறு குனிந்து அமர்ந்திருந்த அம்மாவையோ பார்க்காததைப்போல, மகன் தன் தலையைக் குனிந்துகொண்டே உள்ளே சென்றான்.

அம்மா சாய்வு நாற்காலியைப் பார்த்தவாறு, தாழ்வான குரலில் கேட்டாள்:

“சாதம் வைக்கட்டுமா?''

“ம்...'' அப்போதும் அப்பா புகை பிடித்துக்கொண்டிருந்தார்.

அவன் நனைந்து போய்விட்டிருந்த ஆடைகளை மாற்றிக்கொண்டு வந்தபோது, அம்மா மேஜையின்மீது உணவை வைத்துக்கொண்டிருந்தாள். தட்டில் சாதத்தைப் பரிமாறுவதற்கு  மத்தியில் கட்டியிருந்த முண்டின் நுனிப்பகுதியால் அம்மா தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். மகன் பாத்திரத்தைப் பார்த்துக்கொண்டே கேட்டான்:

“அம்மா, நீங்க ஏன் அழுறீங்க?''

அம்மா எதுவும் பேசாமல் மேல் துண்டால் கண்களையும் முகத்தையும் அழுத்தித் துடைத்தாள். அம்மாவின் முகம் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் முகத்தைப்போல வெளிறிப் போயிருந்தது. உணவு வைத்து முடித்தவுடன், சாய்வு நாற்காலிக்கு அருகில் போய் நின்றுகொண்டு, மெதுவான குரலில் அம்மா சொன்னாள்: “இந்தக் குளிரில் ஏன் வெளியே படுத்திருக்கீங்க? நான் படுக்கையை விரித்துப் போட்டிருக்கிறேன். கொஞ்சம் சாதம் சாப்பிட்டுவிட்டு, அறையில் போய் படுக்கக்கூடாதா? நாங்கள் செய்தவற்றையெல்லாம் மன்னிச்சிடுங்க. நான் சொல்றதைக் கொஞ்சம் கேட்க மாட்டீங்களா?''

“எனக்கு பசியில்லை...''

“மத்தியானம் ஒரு பிடி சாதம் சாப்பிட்டீங்க... சாயங்காலம் தேநீரையும் குடிக்கவில்லை....''

“எனக்கு சாப்பாடு வேண்டாம்.'' அப்பா சொன்னார். “ரவி சாப்பிட்டுட்டானா! இல்லாவிட்டால், அவனைச் சாப்பிடச் சொல்லு...''

சாயங்காலம் அலுவலகத்திலிருந்து கொண்டு வந்திருந்த பேப்பர் கட்டுகளுக்கு முன்னால் ரவி அமர்ந்திருந்தான். அம்மா சொன்னாள்:

“நீங்க இல்லாமல் அவன் சாப்பிடுவானா? அவன் உங்களை எதிர்பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.''

“ரவி...'' அப்பா அழைத்தார். அவன் கதவுக்கு அருகில் வந்து நின்றான். அப்பா சொன்னார்:

“நீ சாப்பிடு... அப்பாவை எதிர்பார்க்க வேண்டாம். அப்பாவின் தலைவிதி இதுதான்... என்ன செய்வது?''

எதுவுமே கூறாமலிருந்த அவனுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டே அப்பா தொடர்ந்து சொன்னார்: “ஏன் நின்றுகொண்டிருக்கிறாய்? சாப்பாடு ஆறிவிடும். ம்... போ...''

“அப்பா, உங்களுக்கு எதுவும் வேண்டாமா?''

“என்னை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாமென்று சொன்னேன் அல்லவா? நான் எப்போதாவது சாப்பிட்டுக் கொள்கிறேன். நீங்க சாப்பிடுங்க...''

அவனும் அவனுடைய தாயும் உணவு  சாப்பிடச் செல்லவில்லை. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. குளிர்ச்சியான காற்றும் வானத்தின் மூலையில் மின்னலும் இருந்தன. மழைத் துளிகள் காற்று வீசும்போது வாசலில் தெறித்து விழுந்து கொண்டிருந்தன. அப்பா சொன்னார்: “மழையும் காற்றும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் போய் ஏதாவது சாப்பிட்டு, கதவைமூடிப் படுத்துக் கொள்ளுங்கள்.''

“இந்த மழையிலும், காற்றிலும் பட்டினியுடன் வெளியே படுத்துக் கிடந்து, ஏதாவது உடல்நலக் கேட்டை வரவழைத்துக் கொள்ளவேண்டுமா? மற்றவர்களை ஏன் இப்படி சிரமப்படுத்துகிறீர்கள்?''

“நீங்கள் ஏன் என்னை சிரமப்படுத்துகிறீர்கள்?'' அப்பா கேட்டார்: “மழையிலும் வெயிலிலும் கிடந்து நான் பழகிப்போய் விட்டிருக்கிறேன். எனக்கு எந்தவொரு உடல்நலக் கேடும் வராது. அப்படியே வந்தால்கூட, அதில் கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது?''

“நான் ஏதாவது கூறினால், அதன்படி நடக்கக்கூடாது என்ற நிச்சயமான எண்ணம் உங்களுக்கு இருக்கிறது.'' அப்பா முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு சொன்னார்: “நான் பட்டினி கிடக்கிறேன். மழையையும் காற்றையும் அனுபவிக்கிறேன். ஆனால், நான் கூறுவது எதன்படியும் நீங்கள் பின்பற்றி நடக்கவில்லையென்றால்...?''

அம்மா சொன்னாள்: “கூறுவதை நாங்கள் பின்பற்றாமல் இருந்திருக்கிறோமா?''

“அப்படியென்றால், நீங்கள் உள்ளே போய் விளக்கை அணைத்துவிட்டு படுங்க. என்னைப் பற்றி நீங்கள் அதிகமாக எதுவும் சிந்திக்க வேண்டாம். இதெல்லாம் என்னுடைய தலையெழுத்து... நீங்க அதிக காலம் என்னைப் பற்றி சிரமப்பட வேண்டியதிருக்காது. அதிகபட்சம் போனால்- ஐந்தோ ஆறோ மாதங்கள் மட்டுமே கஞ்சியும் சுருட்டும் தர வேண்டியிருக்கும். ஐந்தோ ஆறோ மாதங்கள் மட்டுமே... அதற்குப் பிறகும் நான் சாகவில்லையென்றால், யாருக்கும் தொந்தரவு தராத வகையில் ஏதாவது வழியைக் கண்டுபிடிப்பேன்.'' அப்பாவின் தொண்டை தடுமாறியது.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version