தேநீர் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 7117
எல்லா நாட்களிலும் அலுவலகத்திலிருந்து வரும்போது, மகன் தன் தந்தைக்குத் தேவையான சுருட்டுகளைக் கொண்டு வருவான். வெள்ளை நிறத்தைக் கொண்ட மேலட்டை போட்ட இரண்டு கட்டு சுருட்டுகள் அவை. பொட்டலத்தை அவிழ்த்து, சுருட்டின் லேபிளைப் பார்த்துக்கொண்டே நாடகத்தனத்துடன் அப்பா சொன்னார்: “நான் உன்னிடம் எவ்வளவு நாட்களாக கூறிக் கொண்டிருக்கிறேன். இந்த இன சுருட்டு வேண்டாம் என்று... இதைப் புகைத்துப் புகைத்து என்னுடைய தொண்டையே கிழிந்து போய்விட்டது. இந்த ஊரில் வேறு சுருட்டு கிடைக்காதா?''
மகனின் முகத்தில் இதுவரை இருந்த சந்தோஷ வெளிப்பாடு திடீரென்று இல்லாமல் போனது. மெதுவான குரலில் அவன் சொன்னான். “அப்பா, வேறு சுருட்டு கொண்டுவரும்படி நீங்கள் சொன்னீர்களா? எனக்கு ஞாபகத்தில் இல்லை...''
“இல்லை... நான் சொல்லவில்லை...'' தன் மகனின் முகத்திலிருந்து கண்களை எடுத்தவாறு அப்பா சொன்னார்: “இந்த விஷயத்தில் இரண்டு முக்கால் காசு லாபம் இருந்தால், இனிமேலும் இதையே கொண்டு வா... கொஞ்சம் கொஞ்சமாக நான் இறந்துவிடுகிறேன். அப்படியென்றால் உங்களுக்கு ஒரு தொல்லை இல்லாமல் போகுமல்லவா?
“அப்பா, உங்களுக்கு இந்த சுருட்டு வேண்டாமென்றால், நான் இப்போதே வேறு சுருட்டு வாங்கி வந்து தருகிறேன்.''
அதைக் காதில் வாங்கிக்கொள்ளாததைப்போல அப்பா தொடர்ந்து சொன்னார்: “நான் கூறுவதைக் கேட்பதற்கு இங்கு யாருக்காவது நேரம் இருக்கிறதா? அப்படியே இல்லையென்றாலும், என்னுடைய சந்தோஷத்தையும் கவலையையும் பற்றித் தெரிந்துகொண்டு உங்களுக்கு என்ன ஆகப் போகிறது? நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ற விஷயம் எனக்கு நன்றாகவே தெரியும்.'' அப்பாவின் குரல் மெலிதானது. யாரிடம் என்றில்லாமல் அப்பா சொன்னார்: “சற்று தூங்கலாமென்று நினைத்தால், நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? கண்களை மூடிவிட்டால், எல்லாவற்றையும் சிறிது நேரம் மறந்துவிடலாம். அந்த நேரத்தில் அழைத்து விழிக்கச் செய்வதற்கு ஆள் வந்துவிடும்.''
அம்மா, மகனிடம் சொன்னாள்: “ஐந்து மணி தாண்டியபிறகுதான் நான் எழுப்பினேன். தேநீர் ஆறி விடாதா? நான் என்ன செய்கிறேனோ, அதெல்லாம் குற்றம்..'' அம்மா ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள்.
அப்பா சொன்னார்: “நீ செய்வது எதுவும் தவறானதே இல்லை. அழுக்கடைந்த ஆடையைச் சலவை செய்து தராததும், சர்க்கரை போடாமல் தேநீர் தருவதும் என்னுடைய குற்றம்தான்.''
“விருப்பப்படும் எல்லாவற்றையும் கூறிக்கொள்ளுங்கள். நான் பொறுத்துக்கொள்கிறேன். எல்லாம் என்னுடைய தலைவிதி. இது இன்றும் நேற்றும் ஆரம்பமான விஷயமில்லையே! என் மனதிற்கு எப்போதாவது நிம்மதி தந்திருக்கிறீர்களா?'' அம்மாவின் கண்கள் திடீரென்று கண்ணீரால் நிறைந்தன.
“நீ சொற்பொழிவு ஆற்றுகிறாயா?'' முடிவடைய இருந்த சுருட்டை தரையில் எறிந்துகொண்டே அப்பா கேட்டார். அம்மா எதுவும் பேசவில்லை. கூறக்கூடாத ஏதோ ஒன்றைக் கூறிவிட்டதைப்போல தரையைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அம்மாவின் அந்த நடவடிக்கை அப்பாவை மேலும் தூண்டிவிட்டது. அப்பா சொன்னார். “நீ எனக்கு முன்னால் நின்றுகொண்டு சொற்பொழிவு செய்துகொண்டிருக்கிறாய். இல்லையா? அதே அளவிற்குத்தான் உங்களுக்கெல்லாம் என்மீது மதிப்பு இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டு உழைத்து, கையும் காலும் தளர்ந்துபோன நிலையில் இருக்கும் எனக்கு முன்னால் நின்றுகொண்டு சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருக்கிறாய். அந்த அளவிற்கு நீ வளரவில்லை. அதை மனதில் வைத்துக்கொள்...''
மகன் சொன்னான்: “அம்மா வேறு தேநீர் உண்டாக்கித் தருவாங்க. அப்பா, நான் உங்களுக்கு பிடித்த இனத்தைச் சேர்ந்த சுருட்டை வாங்கித் தருகிறேன். பிறகு ஏன் அப்பா... கோபப்படுறீங்க?''
அவன் வெளியே போக முயன்றபோது அப்பா தடுத்தார்: “நீ எங்கே போகிறாய்? எனக்கு உங்களுடைய சுருட்டும் வேண்டாம், தேநீரும் வேண்டாம். நான் உங்களிடம் கெஞ்சிக்கொண்டு இருக்க மாட்டேன்டா. வயதாகிவிட்டிருக்கிறது. உழைக்க முடியவில்லை. அப்படிப்பட்ட நிலையில் அப்பா இருக்கிறார் என்ற புரிதல் உங்களுக்கு இருக்கிறதா? அந்தப் புரிதலை மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் சுருட்டு வாங்கித் தரணும். அப்பாவின் மீது கவனம் வைக்கணும். தேவையில்லாமல் நான் கெஞ்சமாட்டேன்டா. எந்தக் காலத்திலும். அப்படியொரு காலம் வந்தால், அதற்குப் பிறகு நீங்கள் யாரும் அப்பாவைப் பார்க்க மாட்டீங்க....'' அப்பாவின் குரல் தடுமாறியது.
“அப்பா, ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க? நாங்கள் உங்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. அப்படிச் செய்திருந்தால், மன்னிக்க அல்லவா செய்யணும்?''
“மன்னிக்கிறேன்டா. மன்னிக்கிறேன். உன்னையெல்லாம் வளர்த்தேன். குடிப்பதற்கு கஞ்சியும் படுக்குறதுக்கு வீடும் இன்றைக்கு உங்களுக்கு இருக்கின்றன. இவற்றைச் சம்பாதிப்பதற்காக நான் ரத்தத்தைச் சாம்பலாக ஆக்கினேன். கடைசியில் இந்த வயதான காலத்தில் என்னை பட்டினி போட்டு படுக்க வைத்துக் கொன்றுவிடணும்னு நீங்கள் விரும்புகிறீர்கள். நான் அதைப் புரிந்துகொண்டு கூறும்போது... மன்னிக்கணும். அப்படித்தானே?''
அப்பாவின் அருகில் சென்று தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு மகன் சொன்னான்.
“அப்பா, உங்களிடம் உண்டான மாற்றங்களை நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய மனதில் என்ன இருக்கிறது? அப்பா, நாங்கள் எப்போதுமே உங்கள்மீது பிரியம் வைத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.''
அப்பா ஒரு நிமிடம் அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, அமைதியான குரலில் சொன்னார். “அப்படியென்றால் இந்தக் கிழவனை நீங்கள் மறக்கவில்லை.'' அப்பா சிரித்தார். “டேய், இந்த மேலோட்டமான பேச்செல்லாம் என்னிடம் வேண்டாம். நீங்கள் செய்துகொண்டிருக்கும் காரியங்கள் ஒவ்வொன்றையும் நான் வெறுமனே பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருப்பேன் என்று நினைத்தீர்களா? அது எந்தச் சமயத்திலும் நடக்காதுடா. என்னுடைய நாக்கிற்கு பலம் இருக்கும்போதெல்லாம் நான் என்னுடைய காரியங்களைக் கூறுவேன். நீங்கள் நினைப்பதையெல்லாம் நான் அனுமதிக்கவும் மாட்டேன். புரியுதா?''
அவன் சொன்னான். “நாங்கள் மேலோட்டமான செயல்கள் என்ன செய்துவிட்டோம்? அப்பா, மனதைத் திறந்து சொல்லுங்க. உங்களின் மனதில் என்னவோ தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.''
“நான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் கூறுவது எதிலும் எந்தவொரு அர்த்தமும் இல்லை. இன்னும் கொஞ்சம் போனால், எனக்கு சுயஉணர்வு இல்லை என்றும், பைத்தியம் பிடித்துவிட்டது என்றும் நீ சொல்லுவாயடா...''
மகன் வாய் திறக்கவில்லை. தன் அன்னையின் சுருக்கங்கள் விழுந்த கன்னங்கள் நனைய ஆரம்பித்திருந்தன. முகத்திலிருந்து நரைத்த ரோமங்களைத் தடவிக்கொண்டே அப்பா தொடர்ந்து சொன்னார்.
“என்னை ஒரு பைத்தியக்காரன் என்று நீங்கள் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள். அதற்குப் பிறகு ஒரு கிழட்டு நாயைப்போல என்னை விரட்டி விட வேண்டுமென்று நினைக்கிறீர்கள். ஊரில் உள்ளவர்கள் கேட்டால், அப்பாவிற்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று கூறலாமென்று நினைக்கிறீர்கள். என்ன மேலோட்டமான பேச்சு?''